jeudi 4 février 2016

அருட்பெருஞ்சோதி


அருட்பெருஞ்சோதி

அருட்பெருஞ் சோதி! அருட்பெருஞ் சோதி!
அருட்பெருஞ் சோதியடி! - நம்
இருட்பெரும் நெஞ்சின் மருளை அகற்ற
எழுதிய நீதியடி!

தனிப்பெரும் நுாலினைத் தந்த கருணையைத்
தங்கமே பாடிடுக! - நாம்
இனிப்புறும் வண்ணம் எழுதிய பாக்களை
என்றுமே சூடிடுக!

அன்பே இறைவன் அமுத நெறியினை
அள்ளி அளித்தவராம்! - நல்
இன்பே தமிழாம் எனக்கவி ஆற்றில்
இறங்கிக் குளித்தவராம்!

ஆடும் பயிர்கொடி வாடும் நிலையினால்
அல்லல் அடைந்தவராம்! - இந்
நாடு மடமையை நண்ணிட நன்மனம்  
நாளும் உடைந்தவராம்!

எல்லா உயிருள் இறைவன் இருப்பதை
எண்ணி மகிழ்ந்தவராம்! - இங்குக்
கொல்லா நெறியினைக் கோல அருளினைக்
கொண்டு திகழ்ந்தவராம்!

பசிப்பிணி போக்கியே பாழிடர் நீக்கியே
பக்தியை ஊட்டியவர்! - நற்
பசுதரும் பாலெனப் பண்பொளிர் பாதையைப்
பாருக்குக் காட்டியவர்!

கண்மூடிச் செய்கைகள் மண்மூடிப் போகிடப்
பண்..பாடித் தந்தவராம்! - இங்கு
எண்கோடி ஆண்டுகள் இப்புவி செய்..தவம்
தென்திசை வந்தவராம்!

சாதி சமயத்தைச் சாத்திரக் குப்பையை
மோதி மிதித்தாரே! - மண்ணில்
நீதி நிலைத்திடத் சோதி அளித்திட
நேயர் உதித்தாரே!

சந்தக் கவிகளைத் தந்த அடிகளைச்
சிந்தை பதித்திடுவோம்! - மீண்டும்
வந்து பிறவா வழியுற வள்ளலை
மண்டி துதித்திடுவோம்!

ஏழு திரைகளை இட்டவர் காட்டிய
இன்னிலை கண்டிடுவோம்! - அங்கு
ஆழும் அழகினை ஆய்ந்து தெளிந்திட
ஆரமு துண்டிடுவோம்!

வெள்ளை உடையினில் விந்தை புரிந்தவர்!
வேண்டித் தொழுகின்றேன்! - மனப்
பிள்ளை இழிவுறும் கொள்ளைப் பிழைகளில்
பின்னி அழுகின்றேன்!

ஆசை பெருக்கினில் ஆடிய ஆட்டங்கள்
ஆயிரம் ஆயிரமே! - ஓம்
ஓசை உளத்தினில் ஒன்றிக் கமழ்ந்திட
ஊழ்வினை போய்விடுமே!

சன்மார்க்கம் கண்டு சமத்துவம் கொண்டு
தரணியை வாழ்வித்தார்! - கொடும்
துன்மார்க்கம் போக்கியே பொன்மார்க்கம் போற்றியே
தொண்டினைச் சூழ்வித்தார்!

தனித்திரு என்றார்! பசித்திரு என்றார்!
விழித்திரு என்றாரே! - வாழ்வு
இனித்திட வைத்தே எனதுயிர்க் கூட்டுக்குள்
என்றுமே நின்றாரே!

30.01.2016