விருத்த மேடை - 96
சந்தக் கலிவிருத்தம் - 13
தனன+தனனதன+தனன+தனனதன
[3+5+3+5 சந்த மாத்திரை]
மலையும் மறிகடலு[ம்] வனமு[ம்] வறுநிலனு[ம்]
உலைவி லமரருறை யுலகு முயர்களொடு
தலையு முடலுமிடை தழுவு தவழ்குருதி
அலையு மரியதொரு திசையு மிலதணுக
[கம்பன், யுத்த. மூலபலவதை - 156]
தனன+தனனதன+தனன+தனனதன என்ற அமைப்புடைய பாடல் இது. முதல் சீரும் மூன்றாம் சீரும் 3 சந்த மாத்திரைகள். இரண்டும் நான்கும் 5 சந்த மாத்திரைகள்.
தனன வருமிடத்தில் தான, தன்ன என்பனவும் வரும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.
பொதுமை நிலைவருக! புலமை யலையெழுக!
புதுமை யொளிதருக! புவியி[ன்] இருளொழிக!
முதுமை யறிவுறுக! மொழியி[ன்] அழகறிக!
பதுமை யடிதொழுக! பசுமை வளமடைக!
[பட்டரசர்]
மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
10.04.2023