dimanche 31 décembre 2017

புத்தாண்டு வாழ்த்துகள்!


ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  
ஒன்றே குலமென்றும், தேவன் ஒருவனென்றும்
நன்றே தமிழ்நெறியை நல்கிடுவாய்! - கன்றே..போல்
துள்ளிக் குதித்திடுவாய்! துய்யன்பைப் புத்தாண்டே!
அள்ளி அளித்திடுவாய் ஆழ்ந்து!
  
எல்லா நலமும் இணையட்டும்! என்னீசன்,
அல்லா, இயேசும் அருளட்டும்! - பல்லாண்டு
பாடிப் பசுமை படரட்டும்! வாழ்த்துகிறேன்
கோடி மலர்கள் கொடுத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

vendredi 29 décembre 2017

வெண்பா மேடை - 55




வெண்பா மேடை - 55

கட்டளைக் குறள் வெண்செந்துறை

அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை யாகும். [குறள் வெண்செந்துறையின் இலக்கணத்தை வெண்பா மேடை - 53 ல் காண்க]  இரண்டடியிலும் எழுத்து எண்ணிக்கை ஒன்றி வருவது கட்டளைக் குறள் வெண்செந்துறை எனப்படும். [ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ணுதல் வேண்டும்]

கட்டளைக் குறள் வெண்செந்துறை

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நுாறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணாஅ!உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு!

பெரியாழ்வார் திருமொழி - 1

ஒற்று நீக்கி இருபது எழுத்துகளை மேலுள்ள செந்துறை பெற்றுள்ளதைக் கண்டு மகிழவும்.

1.
கனிபோல் கமழும் இனிய சொற்கள்
அணிபோல்  என்றும் அழகை அளிக்கும்!

அடிக்கு 11 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.

2.
வாய்மை வழியுள் வளரும் மனமே வளமேந்தும்!
துாய்மை நெறியுள் சுடரும் மனமே சுவையேந்தும்!

அடிக்கு 15 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.

3.
பொன்னகை பூண்டு பொலிவதிலும்
   மின்னகை பூண்டு மிளிர்வதிலும்
பன்னகை பூண்டு வருவதிலும்
   புன்னகை யூட்டும் உயரழகு!

அடிக்கு 20 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.

4.
உள்ளொளி ஏற்றி ஓதிடும் நாளில்
   உருவொளி திருவொளி மேவிடுமே!
ஒள்ளொளி உள்ளம் சொல்லொளி ஏந்தி
   அறிவொளி அருளொளி சூடிடுமே!

அடிக்கு 22 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.

5.
எல்லோரும் கற்றிங்கே ஏற்றங் காண
   இன்சட்டம் நன்றாக இயற்ற வேண்டும்!
நல்லோரும் வல்லோரும் நல்கும் வண்ணம்
   நம்நாடு சீரேந்தி நடக்க வேண்டும்!

அடிக்கு 21 எழுத்துகளைப் பெற்ற செய்யுள்.

கட்டளைக் குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத்  தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.12.2017


jeudi 28 décembre 2017

வெண்பா மேடை - 54

வெண்பா மேடை - 54
  
குறள் வெண்செந்துறை
[கழிநெடிலடி]
  
அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை எனப்படும். [குறள் வெண் செந்துறையின் இலக்கணத்தை வெண்பா மேடை - 53 ல் காண்க]
  
கழிநெடிலடியால் வந்த குறள் வெண்செந்துறை
  
1.
அறிவூறும் நுால்கள்பல கற்றாலும்
   அணிப்புகழைத் தலைசூடி நின்றாலும்
நெறியூறும் நுால்கள்பல நெய்தாலும்
   நெஞ்சேங்கச் சிறந்ததுவாம் நல்லொழுக்கம்!
  
2.
முட்டுகின்ற ஊழென்று அயர்தலிலும்
   மூளுகின்ற துயரென்று ஒழிதலிலும்
தட்டுகின்ற தடையென்று ஓய்தலிலும்
   தமிழ்போன்று சிறந்ததுவாம் நல்லுாக்கம்!
  
3.
கோடிச் செல்வத்தைக் கொடுத்திங்குக்
   கும்பிட்டு அருணாடி வாழ்தலிலும்
தேடி யலைந்துமனம் திரிதலிலும்
   தேன்போல் சிறந்ததுவாம் அறனுடைமை!
  
4.
பல்பொருள் தேடிப் படர்வதிலும்
   பயன்பொருள் தந்து தொடர்வதிலும்
வெல்பொருள் நாடி விரைவதிலும்
   சிறந்ததுவாம் வாழ்வில் அன்புடைமை!
  
5.
வாரி வழங்கும் வண்மையிலும்
   மனத்தை அடக்கும் தன்மையிலும்
மாரி வழங்கும் நன்மையிலும்
   மண்ணில் சிறந்தது கொல்லாமை!
  
6.
இறைவன் சீரை உரைத்தலிலும்
   இடுநீர் மண்ணைத் தரித்தலிலும்
மறையோன் மாலை அணிதலிலும்
   வாழ்வில் சிறந்தது மனத்துாய்மை!
  
7.
ஆளும் செல்வம் குவித்தலிலும்
   அருளின் செல்வம் அடைதலிலும்
தாளும் மணக்க எழுதலிலும்
   தன்னுள் சிறந்தது பண்புடைமை!
  
8.
காடென்று மலையென்று குகையென்று
   கண்மூடி ஞானத்தைக் தேடலிலும்
பீடென்று முனியாக வாழ்தலிலும்
   பிறப்பிற்குச் சிறந்ததுவாம் இல்லறமே!
  
9.
கோயில் நலமென்று சுற்றலிலும்
   குளமே வளமென்று குளித்தளிலும்
தாயின் திருத்தாளைத் தொழுதேத்திச்
   சாற்றுவது சிறந்ததுவாம் நன்குணர்க!
  
10.
நன்மார்க்கம் இதுவென்று நாடலிலும்
   பொன்மார்க்கம் இதுவென்று பாடலிலும்
இன்மார்க்கம் இதுவென்று சூடலிலும்
   சன்மார்க்கம் சிறந்ததுவாம் நன்குணர்க!
  
கழிநெடிலடியால் வந்த குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.12.2017

வெண்பா மேடை - 53

வெண்பா மேடை - 53
  
குறள் வெண்செந்துறை
  
அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை எனப்படும். இதற்கு வெள்ளைச் செந்துறை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
  
இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
  
ஓரடியில் நான்கு முதல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரும். [முதலடி 4 சீர்களைப் பெற்று வந்தால் இரண்டாம் அடியும் 4 சீர்களைப் பெறவேண்டும்] [முதலடி 6 சீர்களைப் பெற்று வந்தால் இரண்டாம் அடியும் 6 சிர்களைப் பெறவேண்டும்] இரண்டு அடிகளிலும் சீரின் எண்ணிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.
  
அனைத்துச் சீர்களும், அனைத்துத் தளைகளும் இப்பாட்டில் வரலாம். [பொதுவாகக் கனிச்சீரோ, நான்கசைச் சீரோ இப்பாட்டில் அதிகம் வருவதில்லை] [ ஈரசைச் சீரும், காய்ச்சீரும் அதிகம் வந்துள்ளதைக் காண்கிறோம்.] [ நான்கு சீர் அடிகளை உடைய பாடல்தான் அதிகமாக உள்ளது]
  
நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும். [நான்குக்கு மேல் சீர்கள் வரும் அடியுள் அதன் பாதியில் மோனை அமைவது நன்று]
  
விழுமிய பொருள் என்பது, உயர்ந்த கருத்துகளைப் பாடுவதாம். நாட்டின் உயர்வுக்கும் மனக்கூட்டின் உயர்வுக்கும் உடைய கருத்துகளைத் தீட்டுவதாம். [இழிவுடைய கருத்துகள், சிற்றின்பக் கருத்துகள் இப்பாடலில் வருதல் கூடா]
  
ஒழுகிய ஓசை என்பது, எங்கும் தடையின்றி ஆற்றுநடையாய்ச் செல்வதாம். இனிய ஓசையுடன் அமைவதாம்.
  
அளவடிக் குறள் வெண்செந்துறை
  
1.
மொழியைக் காக்க முன்னே எழுந்து
வழியைப் படைத்து வாழ்வை வெல்க!
  
2.
தலைகொடுத் தேனும் தாய்மொழி காக்க
அலையெனப் பொங்கி அரும்பணி செய்க!
  
3.
கன்னல் தமிழைக் கண்ணெனக் காத்து
மன்னும் புகழை மாண்புறக் காண்க!
  
4.
அன்னைத் தமிழை அகத்துள் பதித்துப்
பொன்னை நிகர்த்த பொலிவைப் பெறுக!
  
5.
பண்டைத் தமிழின் பண்பை யெல்லாம்
மண்டைக் குள்ளே மணக்க வாழ்க!
  
6.
மூத்த தமிழ்த்தாய் மொழிந்த நுால்களைக்
காத்து நெஞ்சம் கனிபோல் கமழ்க!
  
7.
தொண்டு செய்யும் துாய எண்ணம்
நண்ணும் தமிழை நன்றே பயில்க!
  
8.
செம்மைத் தமிழே அம்மை வடிவாம்!
நம்மைக் காக்கும் நாடித் தொழுக!
  
9.
இன்பத் தமிழே அன்பின் விதையாம்
என்றும் எங்கும் ஏத்திப் புகழ்க!
  
10.
பற்றுடன் தமிழைப் பாடிக் களித்துப்
பொற்றுடன் ஆக்கம் போற்றிப் புனைக!
  
அளவடியால் வந்த குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.12.2017

samedi 23 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 3


சித்திர கவிதை

[வெண்டளைக் கலிவிருத்தம்!]
  
கம்பன் வாழி!
  
சந்தம் கமழ்ந்திடும் கம்பன் தமிழாம்!
சொந்தமும் சூழ்ந்திடும் தோழா..நீ வா..கற்போம்!
முந்தும்பண் இன்பிடும்! நம்மொழி நாம்காக்க!
கந்திகமழ் சொக்கா! முழுதெம் இனம்வாழ்க!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'டு' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'கம்பன் வாழி' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் ஒவ்வொரு அடியும் 19 எழுத்துகளைப் பெறும். மொத்தம் 76 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் 22.12.2017
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம் - 3

jeudi 21 décembre 2017

நான்காரைச் சக்கரம் - 3



சித்திர கவிதை
நான்காரைச் சக்கரம் - 3

இது நான்கு ஆராய், நடுவே 'மே' என்னும் எழுத்து நிற்க, ஒவ்வொரு ஆரையின் மேலும் மூன்று எழுத்துகள் நிற்க, சுற்று வட்டத்தில் இருபத்தெட்டேழுத்துகள் பொருந்தப் பாடப்படும் கவியாகும்.

அறுபத்து நான்கு எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் நாற்பத்தோர் எழுத்துகளாகச் சுருங்கும்.

சந்த அறுசீர் விருத்தம்

மேடு நாடு கூட்டும் கண்ணா! நாவு பாடுமே!
மேடு பாவு நாட்டும் கண்ணா! தேனு கூடுமே!
மேடு கூனு தேற்றும் கண்ணா! தாரு சூடுமே!
மேடு சூரு தாக்கும் கண்ணா கூடு நாடுமே!

செய்யுளுரை

கண்ணா! மேன்மையுடைய உன் நாட்டினை எனக்குக் கூட்டுவாய். உன்னாட்டினை என்..நாப் புகழ்ந்து பாடி மகிழும்.  

கண்ணா! உலகம் போற்றும் உயர்ந்த பாடல்களை எனக்கு அளிப்பாய். நீ அளிக்கும் பாடல்களில் கன்னல் ஊறி என்றென்றும் இனிக்கும்.  

கண்ணா! பாவச் சுமையால் மிக வளைந்துள்ள என்னுயிரைக் குணப்படுத்துவாய். மணக்கின்ற மாலையை என்னெஞ்சம் சூடிக் களிக்கும்.

கண்ணா! மிகவும் கூடியுள்ள என்மன அச்சத்தை நீக்குவாய். எப்பிறப்பிலும் என்னுயிர்க்கூடு உன்னையே நாடி வரும். 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017

ஆறாரைச் சக்கரம் - 2




சித்திர கவிதை

ஆறாரைச் சக்கரம் - 2

தாயே துணை!
[கட்டளைக் கலித்துறை]

சுற்றித் திரிகின்றோம் தாயே,யே கும்வழி துன்பணிந்தே!
முற்றி மனத்துக்குள் தீயே,யே தும்சொல்லா மூண்டெரியும்!
பற்றி மெமைக்காப்பாய் நீ!யேணைப் பிள்ளை பசியறிவாய்!
சுற்றும்முன் பாவ பழிவந்தே! கண்ணெம்மேல் துய்தருளே!

இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே யே என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஒன்பதொன்பது எழுத்தாய்க் குறட்டின்மேல் தாயே நீயே துணை என்ற சொற்கள் தோன்றச் சுற்று வட்டத்தில்  இருபத்து நான்கு எழுத்துகள் நின்று நிறைவுறும்.

செய்யுளில் வரும் 93 எழுத்துகள் சித்திரத்தில்  85 ஆக அமையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம்





சித்திர கவிதை
ஆறாரைச் சக்கரம்

பாடுகிறேன் பைந்தமிழே! பாரிதில் பீடுடவும்!
நாடுகிறேன் நற்றமிழே! நன்மலர் - தேடி..மார்
சூடுகிறேன் சொற்றமிழே! துாயவுன் பொற்கையாற்
பாடுநாள் சூடும்சீர் பற்று!

அறுபத்தொன்பது எழுத்துகளைப் பெற்ற நேரிசை வெண்பா, சக்கரத்தில் எழுதுங்கால் அறுபத்தோர் எழுத்துகளைப் பெறும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017