jeudi 6 septembre 2012

நல்லதமிழ் [பகுதி - 1]




கிருட்டிணன் - கிருட்டினன்

            மேலுள்ள சொற்களில் எது பிழையானது? எது சரியானது? 'க்ருஷ்ண' என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் ''கிருட்டினன்'' என்று எழுதுவதே மரபு. வடவெழுத்தோடு எழுதுவோர் கிருஷ்ணன் என்று முச்சுழி போடுவர். ''கர்ணன்'' என்பது தமிழிற் கன்னன் என்றே வரும். முத்துக்கிருட்டினன், கோபாலகிருட்டின பாரதி என்ற வழக்குகளைக் காண்க. கருநாகத்தைக் குறிக்கும் ''க்ருஷ்ணசர்ப்பம்'' தமிழில் கிருட்டினசர்ப்பம் என்றும், ''க்ருஷ்ணவேணி' என்பது கிருட்டினவேணி என எழுதப்படும் (கன்னன் - கர்ணன் ) ( கண்ணன் - திருமால்)

கற்புரம் - கற்பூரம் - கருப்பூரம்

            கற்புரம் என்று எழுதுவது தவறாகும்.  ''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ'' என்று ஆண்டாள் திருமாலைப் போற்றிப் பாடுகிறாள். ''கற்பூரம் நாறும் கலைசையே'' கலைசைச் சிலேடை வெண்பாவில் இத்தொடர் உள்ளது. கருப்பூரம் என்றும் கற்பூரம் என்றும் எழுதுவது சரியே. ஆனால் கருப்பூரம் என்று எழுதுவதே நன்று.

சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

            சுவரில் எழுதாதே என்று எழுதுவதே சரியான தொடா,; (சுவர் - இல் - சுவரில்) சுவற்றில் என்று எழுதினால் வறண்டுபோன இடத்தில் என்பது பொருளாகும்.

ஒரு ஆடு - ஓர் ஆடு

            ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில், வருமொழியில் உயிரெழுத்துக்களும் யகர ஆகாரமும் முதலாகிய சொற்கள் வந்தால், ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாகும். ''ரு'' என்பதன் கண் உள்ள உகரம் கெட ஒரு என்பது ஓர் என்று ஆகும்
           
            'அதனிலை உயிர்க்கும் யாவரு காலை
            முதனிலை ஒகரம் ஆகும்மே
            ரகரத்து உகரம் துவரக் கெடுமே'
                                    (தொல் . . 479)

எனவே ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற்போல்வனவே வழா நிலையாம் .

பன்னிரு ஆழ்வார்கள் - ஆழ்வார்கள் பன்னிருவர்

            பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல வருவன யாவும் வழூஉத் தொடர்களாம். உயர்திணைப் பெயர்களுக்குப் பின்னே எண் பெயர்கள் வர வேண்டும். ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற்போல வருவன வழா நிலையாம்.

ஓர் அரசன் - அரசன் ஒருவன்

            ஒரு என்ற சொல்  உயிரெழுத்துக்களுக்கு முன்னும், யகர ஆகாரம் முன்னும், ஓர் என்று ஆகுமெனக் கண்டோம், இக்கருத்தின்படி ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற் போல்வனவே வழா நிலையாம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது வழுஉத் தொடராகும், அரசன் ஒருவன் எனறு எழுதுவதே வழா நிலையாம்.

பல அரசர் -பலர் அரசர் - அரசர் பலர்

            பல அரசர், சில அரசர் என்றாற்போல வருவனவற்றை பலர் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்பர் உரையாசிரியர்கள். எனவே இவற்றையும் அரசர் பலா,; அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.
                                                                                                                                           (தொடரும்)

4 commentaires:

  1. இதை வாசிக்கத் தொடங்குகிறேன் ஆசிரியரே.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழமுதை நன்கு பருகிடுக!
      வல்லமை மேவும் மதி!

      Supprimer

  2. நல்ல தமிழ்தொகுத்து நல்கும் நறுந்தோழா!
    வல்ல புலமையை வாழ்த்துகிறேன்! - வெல்லமெனத்
    தந்த பதிவினைச் சிந்தை தரித்திட்டேன்
    சொந்தமென நாளும் சுவைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பிழையின்றிப் பாட பெருந்தமிழ் தந்தேன்!
      குழையின்றி கற்றுக் குளிர்க! - விழைநிதிங்கு
      வந்தவுனை அன்பால் வரவேற்றேன்! பாவென்று
      தந்தவுனைத் தாங்கும் தமிழ்!

      Supprimer