விருத்த மேடை - 54
எண்சீர் விருத்தம் - 7
கம்பனின் வெண்டளை எண்சீர் விருத்தம்
மேவா தவரில்லை! மேவினரும் இல்லை!
வெளியோ டிருளில்லை! மேல்கீழும் இல்லை!
மூவா தமையில்லை! மூத்தமையும் இல்லை!
முதல்யிடையோ டீறில்லை! முன்னொடுபின் இல்லை!
தேவா!இங் கிவ்வோநின் தொன்றுநிலை என்றால்
சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்
காவா தொழியின் பழிபெரிதோ? அன்றே,
கருங்கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?
[கம்பம், ஆரணிய, சரபங்கன் பிறப்பு நீங்கு - 28]
வானநுால் பயிற்சிகொள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
மண்பிடிக்கப் போரிட்டார்! தந்திரமாய் அன்று
மதம்பரப்பப் போரிட்டார்! சாதியெனும் மாயப்
புண்பிடிக்கப் போரிட்டார்! எல்லையிலே ஓடும்
புனல்பிடிக்கப் போரிட்டார்! ஆசையலை பொங்கிப்
பெண்பிடிக்கப்
போரிட்டார்! இப்புவியில் தம்மின்
பெயர்பிடிக்கப் போரிட்டார்! உண்மையிது! நாளை
விண்பிடிக்கப் போரிடுவார்! என்தமிழா! வான
வெளியறிவைக் கற்றிடுவாய்! தற்காப்புக் கொள்வாய்!
[பாட்டரசர்]
அரையடி தோறும் இறுதியில் [நான்காம் சீர்] தேமாச்சீர் பெற்று, ஏனைய இடங்களில் மா, விளம் காய்ச்சீர்களைப் பெற்று, அடிதோறும் வெண்டளையால் வந்த எண்சீர் விருத்தம் இது. இதில் அரையடிதோறும் மூன்றாம் சீர் காயாகவோ, விளமாகவோ வருவது இப்பாடலின் தனித்தன்மையாகும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.11.2021