jeudi 27 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 12 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 12]


மான்போன்று பார்க்கின்றாள்! மதுவை அள்ளி
     மலா்போன்று சோ்க்கின்றாள்! நீந்தும் வண்ண
மீன்போன்று என்னடத்தில் ஆட்டம் காட்டி
     வேல்போன்று பாய்கின்றாள்! நினைவில் என்றும்
தேன்போன்று சுவைக்கின்றாள்! இரவில் ஏக்கத்
     தீ..போன்று கொதிக்கின்றாள்! குழலில் ஓடும்
பேன்போன்று அவள்தலையின் மணத்தில் வாழும்
     பேறொன்று கிடைத்தாலும் போதும்! போதும்!! 56

எப்படியும் அவளோடு சேர வேண்டும்!
     என்னதடை வந்தாலும் எதிர்க்க வேண்டும்!
இப்படியும் ஒருநெஞ்சம் காதல் பாடி
     ஏங்கியதை இவ்வுலகம் ஏத்த வேண்டும்!
அப்படியும் அவளின்றி முடிந்தால் வாழ்வு
     அடுத்துவரும் பிறவியிலும் தொடர வேண்டும்!
தப்படியும் தவறடியும் இல்லா தோதும்
     தமிழடியான் தந்தகவி நிலைக்க வேண்டும்! 57

மலைத்தேனீ சேகரித்த தேனை, வண்ண
     மலா்மங்கை வாய்மலரும் சொற்கள் நல்கும்!
கலைத்தேனீ நானாகிக் காதல் கன்னி
     கட்டழகைப் பருகுவதால் வாழ்நாள் பல்கும்!
தலைத்தேனீ கூடியதும் இறப்பை ஏற்கும்!
     தமிழ்த்தேனீ கூடியதும் கவிதை பூக்கும்!
கொலைத்தேனீ பார்வையினால் என்னை மெல்லக்
     கொல்கின்ற கோகுலமே! கோபம் நீக்கு! 58

நீ..அங்கே! நான்...இங்கே! காதல் நெஞ்சின்
     நினைவலையைத் தடுப்பார் யாரோ? கண்ணே
வா..அங்கே என்றென்னை அழைக்கும் நெஞ்சம்!
     மலா்மஞ்சச் சுகக்கனவில் மனங்கள் கொஞ்சும்!
தா..அங்கே இருந்தபடி முத்தம் ஒன்று!
     தானாக எனக்குள்ளே இன்பம் பாயும்!
பா..அங்கே மழையாகப் பொழியும் வண்ணம்
     பாடுகிறேன் விருத்தங்கள்! குளிர்க உள்ளம்! 59

அணுஅணுவாய் அவளழகைச் சுவைத்த நெஞ்சுள்
     அலைஅலையாய் தொடா்ந்துவரும் ஆசை! ஏக்கம்!
கணுகணுவாய்ச் சுவைதேங்கி கமழும் எண்ணம்
     கனிகனியாய்க் கற்பனைகள் காட்டும் வண்ணம்!
அணைஅணையாய்க் கட்டுகின்ற உறுதி யாவும்
     அவளழகைக் கண்டவுடன் துாளாய்த் போகும்!
கணைகணையாய் வீசுகின்ற கண்கள் காணக்
     கரைபிரண்டு ஓடிவரும் கவிதை வெள்ளம்! 60
                                      (தொடரும்)

6 commentaires:

  1. நெஞ்சை அள்ளுகிறது எண்சீர் விருத்தம்.(சரிதானே ஐயா!)
    //பேன்போன்று அவள்தலையின் மணத்தில் வாழும்
    பேறொன்று கிடைத்தாலும் போதும்! போதும்!! //
    புதிய கற்பனை.அருமை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்பனை மின்னும் கருத்துக்கள் வந்தாடிப்
      பற்றினை ஊட்டும் படி!

      Supprimer
  2. ஆஹா... வரிகள் போலவே படமும் மிகவும் அழகு...

    நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அடிகள் அனைத்தும் அமுதமலர் ஆடும்
      கொடிகள்! மணக்கும் குவிந்து!

      Supprimer

  3. சித்துப் புாிகின்ற சிங்காரச் சொல்தொடுத்துப்
    பித்து அளிக்கின்ற பேரழகா! - முத்து
    மணிச்சரமாய்! முல்லை மலர்ச்சரமாய்! இன்ப
    அணிச்சரமாய்த் தந்தாய் அழகு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனிமையில் நின்றேன்! தனதந்த பாடி
      இனிமையைக் கொண்டேன்! இன்பங் - கனிய
      அணிபல மின்னும் அருந்தமிழ்த் தாயைப்
      பணியெனக் காப்பேன் பணிந்து!

      Supprimer