dimanche 6 décembre 2020

விருத்த மேடை - 49


விருத்த மேடை - 49

எண்சீர் விருத்தம் - 1

 காய் +  காய் + காய் + மா
   காய் +  காய் + காய் + மா

 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!

   காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே!

   மதியார்க்கும் மதிப்பவர்க்கும்  மதிகொடுக்கும் மதியே!

நல்லார்க்கும் பொல்லார்க்கம் நடுநின்ற நடுவே!

   நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலஞ்சொடுக்கும் நலமே!

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே!

   என்னரசே! யான்புகலும் இசையும்அணிந் தருளே!

 [வள்ளலார், திருவருட்பா - 575]

 
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

   நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்

   புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்,

காப்பதற்கும் வகையறியீர், கைவிடவும்  மாட்டீர்,

   கவட்டுத்தொல் மரத்திடுக்கில் கால்நுழைத்துக் கொண்டே

ஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கு போல

   அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே!

[பட்டினத்தடிகள்]

 
மோனம் போற்று [பாரதியின் புதிய ஆத்திசூடி]

[மோனம் - மௌனம்]

உள்ளிருக்கும் உன்னுயிரை உணர்ந்திடவே வேண்டின்

   உடலடக்கி உளமடக்கி மோனநிலை ஏற்பாய்!

முள்ளிருக்கும் சொல்லகற்றி நாவடக்கம் கொண்டு

   மூச்சிருக்கும் மொழியிருக்கும், ஞானநிலை கற்பாய்!

கள்ளிருக்கும் சுவையூறும் பேரிறையின் சீரில்

   கட்டுண்டு களிப்பூறும் வானநிலை அறிவாய்!

எள்ளிருக்கும் சிறுவளவும் வாயடக்கம் மேவ

   இனித்திருக்கும் இறையொளியின் கானநிலை காண்பாய்!  

 [பாட்டரசர் கி. பாரதிதாசன்]

முதல்  மூன்று சீர்கள் காய்ச்சீராகும். நான்காம் சீர் மாச்சீராகும். இதுபோன்றே மற்ற  அரையடி அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.11.2020

vendredi 4 décembre 2020

வெண்பா மேடை - 199

 

வெண்பா மேடை - 199

 

மங்கல வெண்பா

 

நுால்களை மங்கலச் சொற்களில் தொடங்க வேண்டுமெனப் பாட்டியல் நுால்கள் உரைக்கும். வெண்பாப் பாட்டியல் இரண்டாம் நுாற்பா 19 மங்கலச் சொற்களைக் காட்டும். 

 

சீர்,எழுத்து, பொன்,பூ, திரு,மணி,நீர், திங்கள்,சொல்

கார்,பரிதி, யானை, கடல்,உலகம், - தேர்,மலை,மா,

கங்கை, நிலம்,பிறவும் காண்,தகைய முன்மொழிக்கு

மங்கலமாம் சொல்லின் வகை!

 

சீர் முதலாக நிலம் ஈறாக எண்ணப்பட்ட பத்தொன்பதும் பிறவும் முதன்மொழி யிடத்தே வரக்கூடிய மங்கலச் சொற்கலாம்.

 

பிறவும் என்றதால் - வாழி, மாலை, சங்கு, தார், கவி, கயல், சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு,  மலர், பழனம், இடபம், செல்வம், ஞாயிறு, புனல், களிறு, அமுதம், புகழ், சீர்த்தி, கீர்த்தி, வேழம், ஆரணம், கடவுள், தீபம், புயல், ஆறு, எழில், மழை, பசுங்கதிர், செஞ்சுடர், பரி, ஆழி, பால், பார்,  ஆகிய சொற்களும் மங்கலச் சொற்களாகும்.

 

மங்கலச் சொல்லின் பொருளைக் குறிக்கும் மற்றொரு சொல்லும் மங்கலச் சொல்லாக ஏற்கலாம். [சீர் - சிறப்பு] [பொன் - பொலம்] [பூ - மலர்] [திங்கள் - நிலவு - மதி] [சொல் - கிளவி - மொழி]

 

இலக்கண விளக்கம் - 771, பன்னிரு பாட்டியல் - 133, 134, நவநீதப் பாட்டியல் - 2, சிதம்பப் பாட்டியல் - 18, தொன்னுால் விளக்கம்  - 285, முத்துவீரியம் - 66, சுவாமிநாதம் - 173, பொருத்த விளக்கம்  - 3 ஆகிய நுால்களில் மங்கலச் சொற்குறித்து நுாற்பாக்கள் உள்ளன.

 

மங்கல வெண்பா

 

நீரோடும் நற்புதுவை! நீடுபுகழ்ச் செந்தமிழின்

தேரோடும் சீர்ப்புதுவை! தென்புதுவை! - பேரோதி

மின்னும் திருப்புதுவை! விஞ்சும் கலைப்புதுவை!

கன்னல் கவியின் கடல்!

 

மங்கல வெண்பாவின் முதல் சொல்லும் ஈற்றுச் சொல்லும் மங்கலச் சொல்லாக அமைய வேண்டும். மேலுள்ள வெண்பா "நீர்" என்ற மங்கலச் சொல்லில் தொடங்கி, "கடல்" என்ற மங்கலச் சொல்லில் நிறைவுற்றது. இரண்டாம் அடியில் நான்கு சீர்களில் ஓரிடத்தில் மங்கலச் சொல் அமைய வேண்டும். மேலுள்ள வெண்பாவின் இரண்டாம் அடியில் "தேர்", "சீர்" என மங்கலச் சொற்கள் வந்தன. மூன்றாம் அடியில் நான்கு சீர்களில் ஓரித்தில் மங்கலச் சொல் வர வேண்டும். மேலுள்ள வெண்பாவில் மூன்றாம் அடியில் "திரு" என்ற மங்கலச் சொல் வந்தது.

 

மங்கல வெண்பாவில் அமங்கலச் சொல்லோ, கருத்தோ வரக்கூடாது.

 

மங்கல நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

04.12.2020


mardi 1 décembre 2020

வெண்பா மேடை - 198

 வெண்பா மேடை - 198

 அமுத வெண்பா!

 அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ ஆகிய 11 எழுத்துக்களை அமுத எழுத்தென்பர். இவ்வெழுத்துக்களைச் சீர்களின் முதலெழுத்தாகக் கொண்டு பாடப்படும் வெண்பா அமுத வெண்பாவாகும். வாழ்த்தும், மங்கலமும், விழுமிய பொருளும் கருவாக அமையும்.

 மேற்கூறிய நான்கு உயிர்களோடு [அ,இ,உ,எ]  புணர்ந்து தோன்றும் உயிர்மெய் எழுத்துக்களும், கம்முதல் வவ்வீறாகக் கூறிய மெய்யெழுத்தினோடு [க்,ச்,த்,ந்,ப,ம,வ,] புணர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்களும் அமுதெழுத்தாகும்.

 கசதப நமவ ஏழொடும் அகரம்

இகரம் உகரம் எகரம் நான்கும்

அமுத எழுத்தென்று அறைந்தனர் புலவர்

 [இலக்கண விளக்கம் 779]

 அஇஉஎ கசதந பமவவும்

அமுத எழுத்து

 [முத்து வீரியம் 71]

 பன்னிரு பாட்டியல் - 23, நவநீதப் பாட்டியல் - 10, சிதம்பப் பாட்டியல் - 4, வெண்பாப் பாட்டியல் - 7, தொன்னுல் விளக்கம் 290, சுவாமிநாதம் - 175, பொருத்த விளக்கம்  - 29 ஆகிய இலக்கண நுால்களில் அமுத எழுத்தைக் குறித்து நுாற்பாக்கள் உள்ளன.

 யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ய், ர், ல், ள், ஃ, மகரக் குறுக்கம்,உயிரளபெடை, ஒற்றளபெடை, ஆகிய எழுத்துக்களை நச்செழுத்தென்று மேற்கூறிய இலக்கண நுால்களில் காண்கிறோம்.  நச்செழுத்தின்றி அமுதவெண்பா அமைதல் சிறப்பு. ய்.ர்,ல்,ள் ஆகிய வர்க்க எழுத்துக்களை நீக்குதல் சிறப்பு. 

 அமுத எழுத்துக்களைக் சீரின் முதல் எழுத்தாகக் கொண்டும், நச்செழுத்து இன்றியும் அமுத வெண்பா அமைய வேண்டும்.

 அமுத வெண்பா!

பண்ணைப் படைக்கப் பறந்தே..வா! வண்ணமுடன்

மண்ணைப் படைக்க மணந்தே..வா! - தண்டமிழே!

பற்றே..தா! பண்பைப் பழுத்தே..தா! நற்றவத்தைக்

கற்றே கமழுமென் கண்!

வெண்பாவின் 15 சீர்களும் அமுத எழுத்தில்  தொடங்க வேண்டும்,

[அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ]

வெண்பாவில் வரக்கூடாத எழுத்துக்கள்

ய், ய, யா, யி, யீ,...................யௌ

ர், ர ரா, ரி, ரீ, ய், ...................ரௌ

ல், ல, லா, லி, லீ,...................லௌ

ள், ள, ளா, ளி, ளீ,...................ளௌ

ஃ, மகரக் குறுக்கம், உயிரளபெடை, ஒற்றளபெடை.

 அமுத நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]


 பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.12.2020

vendredi 27 novembre 2020

விருத்த மேடை - 48

 


விருத்த மேடை - 48

 

எண்சீர் விருத்தம் - 1

 

காய் +  காய் + மா + தேமா
   காய் +  காய் + மா + தேமா

 

வயலுக்குப் பெருமையதன் விளைவி னாலே

   மரத்திற்குப் பெருமையதன் கனிக ளாலே

குயிலுக்குப் பெருமையதன் குரலி னாலே

   குறளுக்குப் பெருமையதன்  பொருளி னாலே

மயிலுக்குப் பெருமையதன் தோகை யாலே

   மலருக்குப் பெருமையதன் மணத்தி னாலே

செயலுக்குப் பெருமைநன் னெறிக ளாலே!

   செல்வர்க்குப் பெருமையவர் கொடையி னாலே!

 

கலைமாமணி

கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை - 4


மோனம் போற்று [பாரதியின் புதிய ஆத்திசூடி]

[மோனம் - மௌனம்]

 

சீரொளியைச் சூட்டுகின்ற குறளைக் கற்பாய்!

   சிந்தனையைச் தீட்டுகின்ற தமிழைக் காப்பாய்!

பாரொளியை மூட்டுகின்ற பருதி யாகப்

   பண்பொளியை ஊட்டுகின்ற அறிவைச் சேர்ப்பாய்!

பேரொளியைக் காட்டுகின்ற மோனம் ஏற்பாய்!

   பெருவெளியைக் கூட்டுகின்ற ஞானம் நுாற்பாய்!

மார்பொளியை நாட்டுகின்ற அருளும் அன்பும்

   மறையொலியை மீட்டுகின்ற வழியாம் காண்பாய்!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

காய் வருகின்ற இடங்களில் தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் கருவிளங்காய் என எந்தக் காய்ச்சீரும் வரலாம். மா வருகின்ற இடங்களில் தேமாவும் புளிமாவும் வரலாம். 4, 8 ஆம் சீர்களில் தேமா மட்டுமே வரவேண்டும்.  நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

இலக்கணக் குறிப்பு

 

காயிரண்டு மாவொன்று தேமா வொன்று

கலந்தவடி யிரட்டுமதன் விகற்பங் காணே!

 

[விருத்தப்பாவியல் பக்கம் 18]

         
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.11.2020

samedi 21 novembre 2020

கண்ணீர்க் கவிதை

இராமேசு என்ற பாற்கரன்
12.08.1969 - 18.11.2020
  
கண்ணீர்க் கவிதை
  
உறவே பிரிந்ததுமேன்? உள்ளம் உடைந்திங்[கு]
இரவே இறங்கியது! ஏன்இக் - கரவே..சொல்?
தாங்காத் துயரளித்தாய்! தக்க செயலிதுவோ?
துாங்கா[து] உறைந்தோம் துடித்து!
  
அய்யா வணக்கம் என்பாயே!
   அழகாய் அழைத்துச் செல்வாயே!
செய்யாப் பணிகள் ஒன்றுண்டோ?
   சேவைக்[கு] என்றே வந்தாயோ?
பெய்யா நிலமாய்த் துயர்மேவப்
   பிழைகள் என்ன யாம்செய்தோம்?
மெய்யா இறைவன்? புலம்புகிறேன்!
   மீண்டும் உன்னைக் காண்பேனா?
  
வீட்டைத் தேடி அலைந்தனையே!
   விண்ணில் மின்னும் குறையில்லா
வீட்டை நாடி அடைந்தனையோ?
   மீளாத் துன்பம் அளித்தனையே!
ஓட்டை உடலில், இதயத்தில்
   ஓட்டம் குன்றிக் கிடைந்தனையே!
"சேட்டை செய்வார்" என்பாயே
   செப்ப மறந்து சென்றதுமேன்?
  
பிள்ளை செயலை நினைத்தாயோ?
   பெண்ணின் வாழ்வை நினைத்தாயோ?
கொள்ளை புரியும் உலகத்தின்
   கொடுமை கண்டு பதைத்தாயோ?
தொல்லை தந்த உறவுகளால்
   துவண்டு நெஞ்சம் துடித்தாயோ?
எல்லை கடந்து சென்றதுமேன்?
   இதயம் வெடிக்கச் செய்ததுமேன்?
    
மாமி சொன்ன சொல்லாலோ,
   மனைவி சொன்ன மொழியாலே,
பூமி சொன்ன உரையாலோ,
   பொல்லார் சொன்ன பழியாலோ,
நேமி போகும் போக்காலோ,
   நேயம் அற்ற கூற்றாலோ,
சாமி இடத்தை நாடினையோ?
   தரணி வெறுத்தே ஓடினையோ?
    
நாளும் புரிந்த பயனெண்ணி
   நட்பும் உறவும் உனைத்தேடும்!
மூளும் வினையை நீக்கிடவே
   முன்னே உன்றன் நினைவுவரும்!
தோளும் புடைக்கப் பெருஞ்சுமையைத்
   துாக்கி என்முன் நீ..செல்வாய்!
மாளும் சுமையை ஏன்..தந்தாய்?
   மாமன் தங்கை அழுகின்றோம்!
    
நுாறு வருடம் பேசுவதை
   நோவா[து] ஐம்ப[து] ஆண்டுகளில்
கூறும் உன்வாய் மூடியதேன்?
   கூடும் உறவை வாட்டியதேன்?
மாறும் காலம் என்றனையே!
   மாயம் ஆக மறைந்தனையே!
தேறும் வழிகள் தெரியலையே!
   தேம்பும் நெஞ்சம் அடங்கலையே!
  
அம்மா அப்பா தேடிடுவார்!
   அண்ணன் தம்பி நாடிடுவார்!
இம்மா நிலத்தில் உன்தங்கை
   என்றும் எண்ணி வாடிடுவாள்!
சும்மா கூட உனக்குள்ளே
   சூதும் வாதும் இலையென்பேன்!
பெம்மான் விருப்பம் கொண்டதனால்
   பிறப்பை முடித்துக் கொண்டாயோ?
  
வண்டி ஓட்டும் உன்..கைகள்
   மாயன் இடத்தில் சரண்புகுமே!
சண்டி செய்யும் பேர்களையே
   தாக்கும் வீரம் படைபுகுமே!
நொண்டி செல்லும் வாழ்க்கையினை
   நோக்கி இதயம் அரண்தருமே!
தொண்டில் இருக்கும் நான்..இங்குத்
   தோழா எங்குச் செல்வேனோ?
  
நாடு கேட்கப் பாடுபவன்
   காடு கேட்கக் கதறுகிறேன்!
கூடு விட்டுப் புரிந்தாலும்
   கொடுத்த நலனை மறப்பேனா?
தேடு பொருளை உறவுக்கே
   சூடும் உன்போல் யார்உள்ளார்?
வாடும் வாடும் நட்புலகம்
   வார்த்தை இன்றிக் குமுறுகிறேன்!
  
உறையும் குளிர்ச்சி அறைக்குள்ளே
   உவந்து வேலை புரிந்தாயே!
மறையும் பொழுதில் குளிர்பெட்டி
   வா..வா என்றே அழைத்ததுவோ?
குறையும் நிறையும் தெளிந்தவனே!
   குடும்ப நிலையை மறந்ததுமேன்?
கரையும் எங்கள் துயர்க்கண்கள்!
   கருத்துள் நிலைத்த பாற்கரனே!
  
உன் பிரிவால் வாடும்
பாட்டரசன்
18.11.2020

samedi 24 octobre 2020

இலக்கண வகுப்பு

 


மாறன் பிறந்தான்

 


பேரன் புகழ்மாறனுக்குத் தாத்தாவின் வாழ்த்துப்பா

மாறன் பிறந்தான்
[கண்ணன் பிறந்தான் என்ற மெட்டு]

மாறன் பிறந்தான் - புகழ்
மாறன் பிறந்தான் - இன்ப
மாமழை பொழியுதடி...

வீரன் பிறந்தான் - தமிழ்
வீரன் பிறந்தான் - இந்த
மேதினி மகிழுதடி...
            [மாறன்]

காலை அழகோ - புதுச்
சோலை அழகோ
மாலை மணமோ - அறச்
சாலைக் குணமோ

ஆடும் மயிலோ - தமிழ்
பாடும் குயிலோ - நெஞ்சம்
சூடும் மலரோ - இங்கே
ஈடும் உளதோ?

தேனைக் குடித்தேன் - இன்ப
வானைப் படித்தேன் - பாடி
மானை வடித்தேன் - கண்ணில்
மீனைப் பிடித்தேன்!
            [மாறன்]

பாலின் சுவையோ - கவி
நுாலின் சுவையோ?
வேலின் படையோ - திரு
மாலின் நடையோ?

வீசும் குளிரோ - கொஞ்சிப்
பேசும் தளிரோ? - மெல்லக்
கூசுஞ் சிலிர்ப்போ - வண்ணம்
பூசுங் களிப்போ?

காலைப் பிடித்தேன் - அவன்
கையைப் பிடித்தேன்! - வெற்றித்
தோளை வியந்தேன் - இந்த
நாளை மறந்தேன்!
            [மாறன்]

வான மழையோ - தமிழ்க்
கான மழையோ?
ஞானக் கருவோ - இன
மான வுருவோ?

கற்றுச் சிறப்பான் - புகழ்
பெற்று நிலைப்பான் - கலை
முற்றும் அளிப்பான் - அருள்
உற்றுக் களிப்பான்!

கொஞ்சுங் குரல்..தேன் - பேரன்
பிஞ்சி விரல்..தேன் - மாறன்
நெஞ்சம் மலர்த்..தேன் - தினம்
தஞ்சம் அடைந்தேன்!
            [மாறன்]

பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
24.10.2020

vendredi 23 octobre 2020

வெண்பா மேடை - 194

 


 வெண்பா மேடை - 194

இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி

விட்டசிவ னும்செத்து விட்டானோ? - முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரம்அவ னுக்கன்னாய்!

நெஞ்சமே யஞ்சாதே நீ!

 

[ஓளவையார் தனிப்பாடல்கள்]

பொல்லார் புழுத்திடலாம்! பொய்யார் கொழுத்திடலாம்!

அல்லார் நிலைமை அழுத்திடலாம்! - தொல்லுலகை

வஞ்சமே கூடி வதைத்திடலாம்! போர்தொடுக்க

நெஞ்சமே யஞ்சாதே நீ!

 

அல் - இருள்

அல்லார் - இருள் ஆழ்கின்ற

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

" நெஞ்சமே யஞ்சாதே நீ" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

23.10.2020