samedi 26 janvier 2019

யமக வெண்பா


வெண்பா மேடை - 134
  
யமக வெண்பா
  
தமிழ் நுாலார் மடக்கு என்பதனை வடநுாலார் யமகம் என்றனர். ஓரெழுத்தொருமொழியோ, பல எழுத்தொருமொழியோ செய்யுளில் தொடர்ந்தும் இடையிட்டும், முதலிலோ நடுவிலோ இறுதியிலோ மடங்கி வந்து வேறொரு பொருள் தருமாயின் அவ்வனப்பு மடக்கு என்னும் சொல்லாணியாகும். [மடக்கு - வந்த சொல்லே வருதல்]
  
முதலெழுத்தொன்று மாத்திரம் மாற, ஏனைய எழுத்துக்கள் ஒன்றி மேற்கூறியவாறு மடக்கி வருவது திரிபு மடக்கு எனப்படும்.
  
ஓரடியே, நான்கடியும் மடக்கி வருவது ஏகபாதம் ஆகும். யமக அந்தாதி, திரிபு அந்தாதி, ஏகபாத அந்தாதி எனச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.
  
வெண்பாவின் நான்கடிகளிலும் எதுகையில் ஒரே சொல் மடக்காக வந்து வெவ்வேறு பொருள் பயக்கும் வண்ணம் பாடப்படுவது யமக வெண்பாவாகும். கீழுள்ள வெண்பாவில் 'மெய்' என்ற சொல் 'உண்மை, உடல், உணர்ச்சி, உயிர்' என நான்கு பொருள்களில் வந்துள்ளது.
  
மெய்யை விளக்கிடுவாய்! மேன்மை புகும்வண்ணம்
மெய்யை விளக்கிடுவாய் வேங்கடனே! - பொய்யாடும்
மெய்யை விளக்கிடுவாய்! மேவும் வினையொழிய
மெய்யை விளக்கிடுவாய் வென்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வேங்கடத்தில் வாழும் திருமாலே!
  
எனக்கு உண்மையைத் தெளிவிப்பாய்!
என் உடலைத் துாய்மையாக்கிடுவாய்!
பொய்யுணர்ச்சியைத் துடைப்பத்தால் பெருக்கிடுவாய்!
முன்வினை நீங்க என்னுயிரை விளக்காக இடுவாய்!
  
இவ்வாறு அமைந்த 'யமக வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து யமக வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.01.2019

dimanche 20 janvier 2019

சிலேடை வெண்பா



சிலேடை வெண்பா
  
முத்தும் முல்லையும்
  
பிறப்பிடம் நீங்கும்! பிணைப்புறும்! மூடிச்
சிறப்பிடம் ஓங்கும்!கார் சேரும்! - உறுப்பிடம்
ஒத்தேகும்! துாயநிறம் ஒன்றும்! அணங்கேகும்!
முத்தேகும் முல்லை முழங்கு!
  
முத்து
  
சிப்பியிலிருந்து நீங்கும். மாலையாக இணைக்கப்படும். சிறிய பெட்டியில் வைத்துப் பேழையில் காக்கப்படும். தலையில் அணியும் மணிமுடியில் பதிக்கப்படும். புலவர் பாடும் பாடல்களில் பல்லுக்கு உவமையாகும். வெண்மை நிறம் கொண்டது. பெண்கள் விரும்பி அணியும் சரமாகும்.
  
முல்லை
  
பூத்த இடம்விட்டுப் பறிக்கப்படும். மாலையாக இணைக்கப்படும். இரவில் ஈரத்துணியால் மூடி வைக்கக்கபடும். கூந்தலில் சூடப்படும். புலவர் பாடும் பாடல்களில் பல்லுக்கு உவமையாகும். வெண்மை நிறம் கொண்டது. பெண்கள் விரும்பி ஏற்பார்.
  
எனவே, முத்தின் சிறப்புகளை முல்லையும் ஏற்கும். இரண்டும் இணையென்று முழங்குவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.01.2019

காதல் வாழி!

காதல் வாழி!
  
கட்டி இழுக்கின்றாள் - தன்னுடல்
கட்டில் இழுக்கின்றாள்!
  
கையைக் கட்டி
மயக்குவதேன்? - கண்ணால்
மையைக் கொட்டி
இயக்குவதேன்?
  
கயிறால் கட்டிப்
பிணைப்பதுமேன்! - நீண்ட
கண்ணால் முட்டி
அணைப்பதுமேன்?
  
சடை காட்டிச்
செல்லுவதேன்? - அன்ன
நடை காட்டி
வெல்லுவதேன்?
இடை காட்டிக்
கொல்லுவதேன்? - காதல்
தொடை தீட்டிச்
சொல்லுவதேன்?
  
மயிலோ? - பேசும்
மணிக்கிளியோ?
மலரோ? - இனிய
மதுக்குடமோ?
  
சிறுத்த வயிற்றின்மேல்
பெருத்த மலையுற்றாள்!
கருத்த கண்ணன்தன்
கருத்தில் நிலைபெற்றாள்!
  
மலைகொண்ட
கண்ணனைத் - தவழும்
அலைகொண்ட
வண்ணனை - வெல்லும்
சிலைகொண்ட
நேயனை - மாயக்
கலைகொண்ட
ஆயனை
வலைகொண்ட
பாவை - நெஞ்சுள்
தொளைகொண்ட
பார்வை!
போதை அளிக்கும்!
பாதை மறைக்கும்!
  
வில்லை உடைத்தவனைச் - சின்ன
விழியால் உடைக்கின்றாள்!
வித்தை நடம்புரிந்து - காதல்
மெத்தை படைக்கின்றாள்!
  
உலகை அளந்தவன் - கோதை
உடலை அளக்கின்றான்!
  
அடியளந்தான் - நங்கை
அடியழகில் ஆழ்கின்றான்!
  
அன்று
உரலில் கட்டுண்டான்!
இன்று
உருவில் கட்டுண்டான்!
  
நீல மேனியன் - அவளழகில்
நீந்தும் தோணியன்!
  
நெடியவன் - மீண்டும்
பொடியவன் ஆனதுமேன்?
விடியவன் - அழகின்
அடியவன் ஆனதுமேன்?
    
அன்பெனும் பிடியில்
அகப்பட்டவன் - காதல்
அணங்கின் கைப்பிடில்
அகப்பட்டதேன்?
  
காதல்
கடவுளையும் கட்டும்
கவிதைகளைக் கொட்டும்!
  
காதலைக்
கம்பனும் கண்டான்!
காளிதாசனும் உண்டான்!
கண்ணனும் கொண்டான்!
  
காதல் வாழி!
கன்னல் தமிழ் வாழி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.01.2019

நாடகத் தமிழ்ப் பொங்கல்


வணக்கம்!
  
நாடகத் தமிழ்ப் பொங்கல் திருநாள் வாழ்த்து!
  
கூத்தும் இசையும் குளிர்தமிழ்ச் சொத்தாகும்!
காத்தும் களித்தும் கடன்புரிவோம்! - கோத்தாடி
இன்புறுவோம்! மின்னும் எழிற்புனைவோம்! முத்தமிழ்மேல்
அன்புறுவோம் காதல் அலர்ந்து!
  
மானாட்டம், வண்ண மயிலாட்டம், நீந்துகின்ற
மீனாட்டம், வண்டாம் விழியாட்டம், - தேனுாறும்
பூ..ஆட்டம், பொல்லாப் புலியாட்டம் போட்டிடுவோம்
பா..ஆட்டம் ஓங்கப் படைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.01.2019

இசைத்தமிழ்ப் பொங்கல்


வணக்கம்!
  
இசைத்தமிழ்ப் பொங்கல் திருநாள் வாழ்த்து!
  
யாழிசை மீட்டும் இளங்கொடியாள்! இன்போங்கும்
வாழிசை சூட்டும் வளர்தமிழாள்! - ஏழிசையாள்!
கொஞ்சும் இசைத்தமிழாள்! கூடி வணங்கிடுவோம்!
விஞ்சும் கவிகள் விளைத்து!
  
இசைத்தமிழ்ப் பொங்கல்! இதயத்தை ஈர்க்கும்
விசைத்தமிழ்ப் பொங்கல்!சீர் மீட்டும்! - திசையெட்டும்
போற்றுகின்ற பொங்கல்! புகழ்மேவும்! மெல்லிசையைச்
சாற்றுகின்ற பொங்கல் சமைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
19.01.2019

samedi 19 janvier 2019

இயற்றமிழ்ப் பொங்கல்


இயற்றமிழ்ப் பொங்கல் திருநாள் வாழ்த்து!
  
இயற்றமிழைப் போற்றி இனிக்கின்ற பொங்கல்!
உயிர்..தமிழைப் போற்றி ஒளிரும்! - பயிர்..காக்கும்
ஏருடையோர் போன்றே எழிற்றாய் மொழிகாப்போம்!
சீருடையோர் காண்புகழ் சேர்த்து!
  
நிரையோங்க வேண்டும்! நினைவோங்க வேண்டும்!
விரையோங்க வேண்டும் விளைந்து! - மரையாய்
உரையோங்க வேண்டும்! உயர்தமிழால் இந்தத்
தரையோங்க வேண்டும் தழைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.01.2019

jeudi 17 janvier 2019

காணும் பொங்கல் வாழ்த்து


காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
  
சீர்காணும் பொங்கல்! சிறப்போங்கும் சான்றோரை
ஊர்காணும் பொங்கல்! உயர்பொங்கல்! - வேர்காணும்
நற்கனியாய்க் கன்னல் நலப்பொங்கல்! இந்நாளைப்
பொற்கனியாய்ப் போற்றிப் புகழ்!
  
பெரியோரின் வாழ்த்தினைப் பெற்றிடும் பொங்கல்!
அருளோரின் அன்பூறும் பொங்கல்! - பொருளோரின்
வண்மையொளிர் பொங்கல்! வளர்பொங்கல்! பாடுகவே
தண்மையொளிர் வண்ணம் தழைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.01.2019

mercredi 16 janvier 2019

மாட்டுப் பொங்கல் வாழ்த்து


வணக்கம்!
  
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
  
துள்ளிப் பறந்துவரும் தோழன்! தமிழ்மறத்தை
அள்ளிப் பறந்துவரும் ஆணேறன்! - உள்ளியே
போற்றிடுவோம் சீர்மாட்டுப் பொங்கலை! தொன்மரபைச்
சாற்றிடுவோம் இன்பம் தழைத்து!
  
காளையின் வன்மையைக் காட்டும் திருநாளை
மூளையின் ஆழத்தில் முன்பதிவோம்! - பாளையின்
நல்விரிப்பாய் உண்மகிழ்வோம்! நற்றமிழ் பூத்தாடும்
சொல்விரிப்பாய் காண்போம் பயன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.01.2019

mardi 15 janvier 2019

உழவனுக்கு முதல் வணக்கம்!


உழவனுக்கு முதல் வணக்கம்!
  
உழவுக்கு முதன்மாலை!
உவந்தாடும் இந்நாளை!
அழகுக்கே அழகென்று போற்று! - உழவன்
அடிதொட்டுப் புவிசுற்றும் சாற்று!
  
தோள்மீது படையேந்தி,
தொண்டாற்றும் நடையேந்தி,
தாள்மீது சேறேந்தி உழுவான்! - உழவன்
தாயென்று வயல்தன்னைத் தொழுவான்!
  
கதிர்பூத்து வருமுன்னே
காகங்கள் எழுமுன்னே
கதிர்காக்க வயல்நோக்கி விரைவான்! - உழவன்
கரங்கொண்டே உலகத்தை வரைவான்!
  
தமிழூட்டும் கண்டாக,
தாயாற்றும் தொண்டாக,
அமிழ்துாட்டும் மண்போற்றி வாழ்வான்! - உழவன்
அவனிக்குத் தலையாகி ஆள்வான்!
  
வன்காளை துணைகொண்டு,
வற்றாத அணைகொண்டு,
இன்காளை பண்பாடிச் செல்வான்! - உழவன்
இருள்வாழ்வைப் போராடி வெல்வான்!
  
காய்கின்ற ஊழ்..கண்டு,
கால்பங்கு கூழ்..உண்டு,
பாய்கின்ற நீர்கட்டி விதைப்பான்! - உழவன்
படர்கின்ற சீர்கட்டி படைப்பான்!
  
உயிர்சிந்தும் செந்நீரில்,
உடல்சிந்தும் முந்நீரில்,
பயிர்முந்தும் உழைப்பேந்தி நிற்பான்! - உழவன்
பண்பாட்டை விழிப்பேந்திக் கற்பான்!
  
நடுவானில் ஒளிவிஞ்சும்!
நரம்பேறி வலிவிஞ்சும்!
இடுமேரில் உழுகாளை போகும்! - உழவன்
இனங்கொண்ட நிரைகாத்து வாழும்!
  
காளைக்குப் பேரிட்டு,
கழனிக்குச் சீரிட்டு,
நாளைக்குப் புகழிட்டு நடப்பான்! - உழவன்
நற்றோளில் உலகத்தைச் சுமப்பான்!
  
ஓராழி சாய்தோடும்!
உழுமாடு பாய்ந்தோடும்!
வேராடிச் சூழ்துன்பம் ஓடும்! - உழவன்
வீட்டுக்குள் நற்காதல் பாடும்!
  
வயல்தேடிக் கால்போகும்!
மனைதேடித் தோள்போகும்!
இயல்தேடி இசைதேடிப் பேசும்! - உழவன்
இடந்தேடிக் குளிர்காற்று வீசும்!
  
என்னினிய ஏரோட்டி!
இவ்வுலகின் தேரோட்டி!
தன்னுடலில் ஓரடை கொண்டு - உழவன்
தரணிக்குச் புரிகின்றான் தொண்டு!
  
நீரில்லை! நிழலில்லை!
நீதிக்கும் இடமில்லை!
சீரில்லை! சிறப்பில்லை வீட்டில்! - உழவன்
செழித்தோங்க வழியில்லை நாட்டில்!
  
நீருக்கும் தடையிட்டு,
நெஞ்சுக்கும் அடையிட்டு,
பேருக்குச் செயலிட்ட போக்கு! - தமிழா!
பிணிநீங்கப் போரிட்டுத் தாக்கு!
  
புலிபோல நின்றோமே!
புயல்போலச் சென்றோமே!
எலிபோல இன்றுன்னை எண்ணல் - தமிழா!
இருள்கொண்டு தாழ்கின்ற இன்னல்!
  
மண்காய்து போனாலும்,
கண்காய்ந்து போனாலும்,
புண்பாய்ந்து செய்கின்ற ஆட்சி! - சுடும்
புகைபாய்ந்து சூழ்கின்ற காட்சி!
  
எங்கெங்கும் கையூட்டு!
எந்நாளும் பொய்யூட்டு!
இங்கங்கும் அவர்போடும் வேடம்! - தீயர்
இழிவோட நீயேற்று சூடம்!
  
நரியாளும் காடாகி,
நரகாளும் நாடாகி,
கரியாளும் அயலாட்சி ஓட்டு! - தமிழா!
கவியாளும் தமிழாட்சி நாட்டு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.01.2019

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து


தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
  
பொங்கலோ பொங்கல்! புவிபோற்றும் நற்பொங்கல்!
திங்களோ திங்கள்! தமிழ்த்திங்கள்! - சங்கெடுத்[து]
ஊதுகவே! என்..தோழா! ஓங்குதமிழ்ப் புத்தாண்டை
ஓதுகவே உள்ளம் உவந்து!
  
வான்போல் கொடைக்கை, மலர்போல் கமழ்நெஞ்சம்,
தேன்போல் சுவைக்கும் செழுந்செய்கை, - கான்போல்
தழைக்கும் தகைவாழ்வு தாராய்..புத் தாண்டே!
கொழிக்கும் புகழைக் குவித்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.01.2019

lundi 14 janvier 2019

போகி நன்னாள் வாழ்த்து!


வணக்கம்!
  
போகி நன்னாள் வாழ்த்து!
  
எங்கும் முழங்கிடுவோம் இன்பத் தமிழ்மொழியை!
தங்கும் நலமிடுவோம் சால்புடனே! - பொங்கும்
நெருப்பிட்டுக் கூத்திடுவோம்! நெஞ்சம் ஒளிரும்
கருத்திட்டுப் பூத்திடுவோம் காத்து!
  
சன்மார்க்கம் கண்டிடவும், தங்கத் தமிழ்நெறியின்
பொன்மார்க்கம் கொண்டிடவும், பூவுலகே - நன்மார்க்கம்
ஆகி நடந்திடவும், அன்பமுதை எந்நாளும்
போகி ஒளிநாளே பொங்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.01.2019

vendredi 11 janvier 2019

மும்முற மொழிதல்


மும்முற மொழிதல்
  
எழுதுகோலும் கண்ணும் வாளும்
  
கூருண்டாம்! கொண்ட குகையுண்டாம்! குத்துகின்ற
போருண்டாம்! பூத்த பொலிவுண்டாம்! - நீருண்டாம்!
ஆளுண்டாம்! தாள்காண் அழகுண்டாம்! கோல்..முன்னே
நீளுண்ட வாள்,கண் நிகர்!
  
ஆள் - ஆட்செய்கை, அரசு.
  
எழுதுகோல்
  
கூா்மை கொண்டிருக்கும். மூடியால் மூடியிருக்கும். எழுத்துப்போர் நடத்தும். மலர்ச்சியை நல்கும். நீர் போன்ற மையை ஏற்கும். அது எழுதிய எழுத்து உலகில் நிலைத்திருக்கும் [எழுத்து ஆற்றலால் ஆட்சி அடைந்தவர் உள்ளார்] தாளில் எழுதும்போது அழகேந்தும்.
  
கண்
  
தாக்கும் தன்மையால் வேல்விழி என்று பெயர்பெறும்[கூர்மை] கண்ணை இமையானது மூடிப் பாதுகாக்கும். காதல் போர் நடத்தும். மலர்விழி என்றும் பொன்விழி என்றும் எழிலேந்தும். கண்ணீரைக் கொண்டிருக்கும். கண்ணழகில் ஆட்பட்டுக் கிடப்போர் உள்ளார். கண் நாணமுற்று மண்ணைப் பார்க்கும்பொழுது பேரழகு கொள்ளும்.
  
வாள்
  
கூா்மை கொண்டிருக்கும். குகைபோன்று உறையிருக்கும். பகைவரைச் சாய்க்கப் போர் செய்யும். பெற்றிபெற்றுச் செழிப்பை வழங்கும். செந்நீரில் நனையும். உலகை வென்று ஆளும். மறவன் வாள் முனையைத் தன் கால் அருகே வைத்து நிற்கின்ற காட்சி அழகளிக்கும்.
  
எனவே, நீள்விழி, நெடுவாள், எழுதுகோல் ஆகியவை ஒன்றுக்கொன்று நிகராகும். [தமிழுலகத்திற்கு 'மும்முற மொழிதல்' நான் தரும் புதிய வகையாகும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
11.01.2019

jeudi 10 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
கலைமகளும் காதலியும்
  
யாழிசைப்பாள்! இன்றமிழ் யாப்பளிப்பாள்! வாயுறையும்
கூழளிப்பாள்! என்னுள் குடியிருப்பாள்! - ஏழிசையும்,
மின்மரையும், அன்னமும், வீணையும் கொண்டிடுவாள்!
இன்மறை ஈந்திடுவாள்! நுாலிடையில் - நின்றிடுவாள்!
பேரழகு வாணியும் சீரழகு காதலியும்
ஓரழகு என்பேன் உவந்து!
  
வாயுறை - திருக்குறள், வாய் உறையும் இனிப்பு.
மரை - தாமரை, மான்.
நுாலிடை - நுாலின் இடையில், மெல்லிய இடை.
இன்மறை - இனிய மறைமொழி, இன்பத்தை மறைத்து.
  
கலைமகள்
  
யாழினை உடையவள். தமிழ் யாப்பினை அளித்தவள். வள்ளுவரின் வாயுறை நுாலமுதை ஊட்டியவள். நெஞ்சுள் வாழ்பவள். ஏழிசையைக் கொடுத்தவள். மின்னும் தாமரையில் அமர்ந்தவள். அன்னத்தை உடையவள். மெல்லிசை வீணையும் பெற்றவள். வேதத்தை உரைத்தவள். எழுதும் நுாலில் நடுநிலையாய் நின்று காப்பவள்.
  
காதலி
  
யாழிசைத்து மகிழ்வளிப்பாள். கவிபாடிக் களிப்பாள். வாயினிக்கக் கன்னல் கூழளிப்பாள். இதயத்துள் இருந்திடுவாள். இசைக்கலையில் வல்லவள். மான்போல் விழியுடையாள். அன்னம்போல் நடையுடையாள். வீணைபோல் வடிவுடையாள். மறைவாக இன்பக் கதைகளை மொழிந்திடுவாள். நுாலிடையாள்.
  
எனவே, பேரழகுடைய கலைமகளும், சீரழகுடைய காதலியும் ஒன்றெனச் சொல்வேன் உள்ளம் உவந்து.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.01.2019

mercredi 9 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
ஆட்சி மன்றமும் மனநோய் மருத்துவ மனையும்
  
காவலுறும்! நற்றலைவர் காப்புறும்! மந்திபோல்
தாவலுறும்! சண்டைக் களமாகும்! - கூவலுறும்!
கூச்சலுறும்! நாவுளறும்! கோலுடையும்! ஆளுமிடம்
காட்சியுறும் பித்திடமாய்க் காண்!
  
ஆட்சி மன்றம்
  
ஆட்சி மன்றத்தில் காவலர் பணிபுரிவார். அவைத்தலைவர் இருப்பார். உறுப்பினர்கள் கட்சி மாறுவார். சண்டை செய்வார். கத்துவார். இரைச்சலிடுவார். உளறுவார். அங்குள்ள பொருள்களை உடைப்பார்.
  
மனநோய் மருத்துவமனை
  
மனநோய் உள்ளவர்களைக் காத்திடப் பலர் இருப்பார். தலைவராக மருத்துவர் இருந்து காப்பார். மனநோய் கொண்டோர் அங்கும் இங்கும் தாவி ஓடுவார். சண்டை செய்வார். கத்துவார். இரைச்சலிடுவார். உளறுவார். அங்குள்ள பொருள்களை உடைப்பார்.
  
எனவே, ஆட்சி மன்றமும், மனநோய் மருத்துவமனை ஒன்றாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.01.2019

lundi 7 janvier 2019

சிலேடை வெண்பா

சிலேடை வெண்பா
  
நாயும் குரங்கும்
  
வாலாட்டும்! சுற்றிவரும்! கோல்கவ்வும்! ஈக்காட்டும்!
காலெக்கி நிற்கும்! கடித்திழுக்கும்! - மேலேகும்!
ஆரமுறும்! ஆடையுறும், பின்தொடரும், கூண்டடையும்,
பேருமுறும், நாய்,குரங்குப் பீடு!
  
நாய்
  
வாலாட்டித் தன்னுணர்வைக் காட்டும். தன்னையே சுற்றும். நம்மையும் சுற்றும். கோலை வாயால் கவ்வி எடுத்துவரும். வெறியால் ஈயென்று முறைக்கும். இரண்டு கால்களைத் துாக்கி நம் மார்பில் வைத்து நிற்கும், நடக்கும். துணியையும், கறியையும், கடித்திழுக்கும். நம்மேல் பாயும். சில இல்லங்களில் நாய்க்கு, ஆரமும் ஆடையும் அணிவித்து மகிழ்வார்கள். காலை நடைப்பயிற்சியில் நம்முடன் பின் தொடர்ந்துவரும். அதன் கூண்டுக்குள் சென்று படுத்துக்கொள்ளும். பலர் அதனைப் பெயர்வைத்தும் அழைப்பார்கள்.
  
குரங்கு
  
வாலாட்டித் துள்ளும். நடக்கும். சுற்றி ஓடும். மரக்கிளையைப் பற்றித் தாவும். ஈயென்று முறைக்கும். நிமிர்ந்து நடக்கும். தேங்காய் மட்டையைக் கடித்து இழுக்கும். மரமேறும், அந்தரத்தில் பாயும். குரங்காட்டிகள், குரங்கிற்கு ஆரம், ஆடை அணிந்து அழைத்துச் செல்வார். அதற்குப் பெயரிட்டும் அழைப்பார். கண்காட்சியில் கூண்டுக்குள் இருக்கும்.
  
எனவே, நாயும் குரங்கும் ஒப்பாகும். இவ்வெண்பாவில் நாயுக்கும் குரங்கிற்கும் 13 ஒப்புமை வந்தன. எனவே பீடெனப் பாடல் நிறைவுற்றது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.01.2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
கவிவாணரும் குரங்காட்டியும்
  
நுாலேந்திப் பாக்காப்பார்! நோக்கம் உரைத்திடுவார்!
கோலேந்தி வித்தை குவித்திடுவார்! - தோலேந்திச்
செல்வார்! நிலம்சுற்றிச் சீர்சேர்ப்பார்! பாவாணர்
கொள்வார் குரங்காட்டி கூத்து!
  
நுால் - படிக்கும் நுால், கயிறு.
பா - பாடல், கவி.
கவி - குரங்கு.
தோல் - உடம்பு, புகழ்.
  
கவிவாணர்
    
நுால்கள் படைத்துப் பாட்டுக்கலையைக் காத்திடுவார். மேடையில் நற்கருத்தை உரைத்திடுவார். எழுதுகோல் ஏந்திக் கவிதையில் வித்தை காட்டிடுவார். புகழேந்திச் செல்வார். பல இடங்களுக்குச் சென்று கவிபாடிப் பொருள் சேர்ப்பார்.
  
குரங்காட்டி
  
கயிறால் கட்டிக் குரங்கைக் காத்திடுவார். அது என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி உரைத்திடுவார். கோல் தட்டி வித்தைகளைக் காட்டிடுவார். குரங்கைத் துாக்கிச் செல்வார். ஊரைச் சுற்றிவந்து பொருள் சேர்ப்பார்.
  
எனவே, பாவாணரும் குரங்காட்டிபோல் செயல்களைக் கொண்டுள்ளார்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2019

samedi 5 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
பாம்பும் குரங்கு வாலும்!
  
நீண்டிருக்கும்! கோல்சுற்றும்! தீயேற்கும்! மண்தழுவும்!
துாண்டவெழும்! கண்டாய்ச் சுருள்கொள்ளும்! - வேண்டி
அதைத்தொட வாலுதவும்! நல்லிருக்கை யாகும்!
முதைப்பாம்பும் வாலும் மொழி!
  
பாம்பு
    
பாம்பு நீளமாய் இருக்கும். மரக்கிளையில் சுற்றித் தொங்கும். இறந்தபின் நெருப்பிட்டுக் கொளுத்தபடும். நிலத்தைத் தழுவித் செல்லும். நாம் அதைக் துாண்டினால் தலை துாக்கும். கூடையில் சுருண்டு கிடக்கும். வாலைப் பிடித்துத் துாக்குவார். அரங்கன் பள்ளியுறும் இருக்கை ஆகுமாம்.
  
வால்
  
குரங்கு வால் நீளமாக இருக்கும். மரக்கிளையில் சுற்றித் தொங்கும். இராமயாணத்தில் குரங்கு வாலில் தீயிட்டனர். குரங்கு வால் நிலத்தைத் தழுவிக்கிடக்கும். வாலைத் தொட்டால் புடைத்தெழும். சுருண்டும் இருக்கும். வாலைத் தொட்டுப் பார்ப்போம். இராவணன் முன் அனுமன் அமர, அதன்வால் இருக்கையாய் ஆனதாம்.
    
அதனால் மறைந்து வாழும் பாம்பும், குரங்கு வாலும் ஒப்பாகும் என்றே மொழிந்திடுவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.01.2019

சிலேடை வெண்பா!


சிலேடை வெண்பா!
  
திருமாலும் யானையும்!
  
அடிகண்[டு] உயர்வோம்! உருக்கண்டும் ஆழ்வோம்!
கொடிகொண்டு செல்லும்!நற் கோயில் - குடிகொள்ளும்!
போர்கண்டு காக்கும்! மதங்கொள்ளும்! நுால்போற்றும்!
கார்கொண்ட மால்,யானை காண்!
  
திருமால்
  
திருமாலின் மலரடியைப் பிடித்துப் உயர்வை அடைவோம். அவன் உருவழகில் மயங்கி நிற்போம். கொடியேந்தி ஆள்பவன். கோயிலில் குடிகொண்டவன் . பாரதப்போர் கண்டு பாண்டவர்களைக் காத்தவன். வைணவ மதம் முன்னிறையாகப் போற்றி வணங்கும். கீதையும், ஆழ்வார் பாக்களும் அவன் புகழை இசைக்கின்றன. கறுப்பு நிறம் கொண்டவன்.
  
யானை
  
யானையின் கால்மேல் ஏறி அதன்மேல் அமரவேண்டும். அதன் உருவைக் கண்டு வியப்புறுவோம். மன்னனின் கொடியை ஏந்திச் செல்லும். கோயில்களில் இருக்கும். போர்க்களம் கண்டு நாட்டைக் காக்கும். மதம் பிடிக்கும். யானை முகத்தானை நுால்கள் காப்பாகக் கொள்ளும். கருநிறம் ஏற்கும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.01.2019

காலை வெண்பா


திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 21
05.01.2019
  
சோலை மணக்கட்டும் சொல்லும் கவிதைக்குள்!
மாலை மணக்கட்டும் வன்மனத்துள்! - காலையெழும்
வானம் மணக்கட்டும்! வாழ்விக்கும் வண்டமிழே!
ஞானம் மணக்கட்டும் நன்கு!
  
சௌமியன் தந்திட்ட தண்டமிழ் நன்னுாலை
நேமியன் நல்லருளால் நெஞ்சுறவே, - பூமியில்
உன்னினம் ஓங்கி உயர்ந்திடவே, ஒண்டமிழே!
பொன்னினப் பாக்கள் பொழி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

vendredi 4 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
திருமாலும் மேகமும்
  
கருமைநிற முண்டாம்! கடலுற வுண்டாம்!
பெருமைநிறை யுண்டாம்!நீர் பேணும் - அருளுண்டாம்!
பேசுபுகழ்த் துாதுண்டாம்! எங்குமுளப் பேருண்டாம்!
வாசமால், மேகம் வழங்கு!
  
திருமால்
  
கருமை நிறத்தவன். பாற்கடலில் துயில்பவன். ஈடிலாப் பெருமையுடையவன். மலையைக் குடையாய்க் கொண்டு மழையைத் தடுத்து அருள் புரிந்தவன். பாண்டவர்க்குத் துாதாய்ச் சென்றவன். எங்கும் நிறைந்தவன்.
  
மேகம்
  
கருமை நிறமுடையது. கடல்நீர் ஆவியாகி மேகமாகிறது. நிலம் வாழ்வதற்கு மழையைத் தருவதால் ஈடிலாப் பெருமையுடையது. நீரைப் பொழிவது. பாவாணர் பலர் மேக துாது பாடியுள்ளனர். எங்கும் நிறைந்துள்ளது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.01.2019

mercredi 2 janvier 2019

வெண்பா மேடை - 131


வெண்பா மேடை - 131
  
மதமில்லா மண்ணும், மனிதமொளிர் சீரும்,
வதமில்லா வாழ்வும், வளமும், - பதமுறவே!
சத்தாண்டு காத்திடவே சங்கத் தமிழ்நெறியில்
புத்தாண்டு பூத்திடவே போற்று!
  
'புத்தாண்டு பூத்திடவே போற்று' இதை, ஈற்றடியாகக் கொண்டு ஒரு வெண்பா பாடுமாறு நட்புடன் வேண்டுகிறேன்
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2019

ஆண்டின் முதனாள்!


ஆண்டின் முதனாள்!
  
முத்தான முதல்..நாள்!
வாழ்வின்
முதலைத் தரும்..நாள்!
  
சுற்றிச் சுற்றி
உழைத்த பூமியின்
வெற்றித் திருநாள்!
  
கால ஏட்டின்
முதல் பக்கம்!
கவிதை படர்கிறது!
கனவு தொடர்கிறது!
  
தொடக்கம் எங்கே?
அடக்கம் அங்கே!
உயர்நெறியை,
உயிர்நெறியை,
உணர்த்தும் ஒளிநாள்!
  
படைப்பின் மாட்சியை,
பரமன் ஆட்சியை,
உரைக்கும் பொன்னாள்!
  
தன்னலத்தால் சுற்றும்
தசைப்பந்து!
தன்னலமின்றிச் சுற்றும்
விசைப்பந்து!
தன்னலம் நீக்கு!
மண்ணலம் நோக்கு!
  
வட்டப் பாதையில்
சட்ட ஒழுங்குடன்
விட்டவர் யாரோ?
இப்புவிதான்
இறைவன் செல்லும் தேரோ?
  
வார முதனாள்
வேலை தொடக்கம்!
மாத முதனாள்
மகிழ்ச்சி கிடைக்கும்!
ஆண்டின் முதனாள்
அருளை உணர்த்தும்!
  
மண் பிறந்த நாளாய், - பள்ளி,
கண் திறந்த நாளாய்,
பெண் மணந்த நாளாய், - பிள்ளைப்
பண் அணிந்த நாளாய்,
இந்நாளை ஏற்பாய்!
நன்னெறியை
எந்நாளும் காப்பாய்!
  
முன் ஆண்டில் முட்டிய
தடைகளை,
உடைக்கும் உறுதியுடன்
படைகளை
உள்ளத்துள் கூட்டு!
உயர்வினை நாட்டு!
  
முடியாமை
நெஞ்சம்
படியாமை
ஏனென்ற கேள்வியிடு!
வெல்லும் வேள்வியிடு!
  
உயிர்க்கருணை
உலகம் செழிக்கும்!
உயிர்க்கொடுமை
உலகை அழிக்கும்!
  
அன்பே
அகிலத்தை இயக்கும் சக்தி!
மனிதம் பூக்கட்டும்!
மண்ணைக் காக்கட்டும்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2019

mardi 1 janvier 2019

புத்தாண்டு வாழ்த்து


வணக்கம்!
    
உலகம் உயர்ந்தேத்தும் புத்தாண்டு வாழ்த்தைக்
குலவும் தமிழால் கொடுத்தேன்! - நிலமெங்கும்
இன்பம் நிறையட்டும்! இன்றேன் பொழியட்டும்!
என்றும் இயற்கை இனித்து!
    
பொங்கும் புகழொளியைப் போற்றிடுவோம்! விண்ணருளால்
எங்கும் அறிமொளியை ஏற்றிடுவோம்! - தங்கு
நலஞ்செய்வோம்! பண்பூறும் நற்கல்வி பூக்கும்
நிலஞ்செய்வோம் அன்பை நிறைந்து!
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.01.2019