samedi 25 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
விநாயகன் - வினாயகன் இவற்றில் எது சரியா?
  
இளமதி, செர்மனி
--------------------------------------------------------------------------------------------------------------------
  
விநாயகன் என்ற சொல் சமற்கிருதம். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். விநாயகன் என்றால் தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். நாயகன் சொல்லில் தந்நகரமே முதலில் உள்ளது. ஆகையால் விநாயகன் என்பதிலும் அதையே இட்டு எழுதவேண்டும். வடமொழியில் னகரம் இல்லை. அது தமிழுக்குச் சிறப்பெழுத்தாகும். திநம், சிநேகன், அந்நியன் ஆகிய சொற்களைத் - தினம், சினேகன், அன்னியன் என இருசுழி னகரம் இட்டு எழுதவேண்டும்.
  
விநாயகன் - பிள்ளையார், தகையிறை, அறிவன், கலுழன், குரு
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
25.04.2020

mardi 21 avril 2020

ஐகான் இல்லா வெண்பா



வெண்பா மேடை - 177
    
ஐகான் இல்லா வெண்பா
    
ஐகார எழுத்தே இன்றிப் பாடப்படுவது 'ஐகான் இல்லா வெண்பா' எனப்படும்.
    
வண்ணம் வளருதடி! எண்ணம் மலருதடி!
பண்ணும் படருதடி பாமகளே! - நண்ணும்
உணர்வுகளால் உள்ளம் உருகுதடி! காதல்
கனவுகளால் பூக்குதடி கண்!
    
இவ்வாறு அமையும் 'ஐகான் இல்லா வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
21.04.2020

lundi 20 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
பெரும்பான்மையாகச் சிந்தடிகளைப் பெற்றுவருவதால் சிந்துப்பா என்று பெயர்வந்ததா?
  
பாவலர் தென்றல், சென்னை
  
-----------------------------------------------------------------------------------------------------------------------
  
சிந்துப்பாவின் ஓரடி இரட்டை எண்ணிக்கைச் சீர்களைப் பெற்றுவரும். 8, 12, 16, 20, 24.... என ஓரடியில் சீர்கள் அமையும். 8 சீர்களுக்குக் குறைவாகச் சிந்தடி அமையாது.
  
இரண்டடி அளவொத்து வருவது சிந்து என வீரசோழியம் உரைக்கிறது.
  
மேவும் குறள், சிந்தொடு, திரிபாதி, வெண்பாத், திலதம்,
மேவும் விருத்தம், சவலை, என்றேழும் இனிஅவற்றுள்
தாவும் இலக்கணம் தப்பிடில் ஆங்கவை தம்பெயரால்
பாவும் நிலையுடைப் போலியும் என்றறி பத்தியமே.
[வீரசோழியம் யாப்பு 20]
  
எழுசீர் அடி இரண்டால் குறள்ஆகும், இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம், அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி, நான்குஅடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்ததாய் நடுவே தனிச்சொல் வருமே.
[வீரசோழியம் யாப்பு 21]
  
2 அடி 7 சீராய் வருவது குறள்,
2 அடி அளவொத்து வருவது சிந்து,
3 அடி அளவொத்து வருவது திரிபாதி,
4 அடி 15 சீராய் நடுவே தனிச்சொல் பெற்று வருவது வெண்பா.
  
நெஞ்சு பெறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
அஞ்சியஞ்சிச் சாவார் - இவ[ர்]
அஞ்சாத பொருளில்லை அவனியி லே!
[மகாகவி பாரதியார்]
  
நொண்டிச் சிந்து என்னும் நாட்டுப்புறப் பாடல்வகையில் இது ஒரு கண்ணி. ஓரடியில் எட்டுச் சீர்கள் இருக்கும். 'நெஞ்சு' என்பது முதல் 'விட்டால்' என்பது வரையில் ஓரடி. 'அஞ்சி' என்பது முதல் 'அவனியிலே' என்பது வரை இரண்டாம் அடி. [ஒவ்வோர் அடியிலும் நான்கு உயிர்ச்சீர்கள் எட்டு வரும்] அளபெடுத்து 8 சீர்கள் ஓரடியில் உள்ளதைக் கீ்ழ் காண்க.
  
நெஞ்ஞ்சுபெ றுக்குதில்லை யேஎஎஎ எஎ-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்ல்ல்ல்!
அஞ்ஞ்சியஞ் சிஇச்சாஅ வாஅஅஅ அஅர் - இவ[ர்]
அஞ்ஞசாத பொருளில்லை அவனியி லேஎஎஎ!
  
நீட்டங்களை அளபெடைகளாக எழுதினால் எல்லா இடங்களிலும் எழுத்துக்கள் காணப்பட்டுப் பார்த்துப் பாடுவதற்குக் குழப்பமாக இருப்பதால், நீட்டங்களைப் புள்ளியாக எழுதும் முறையுண்டு.
  
நெஞ்.சுபெ றுக்குதில்லை யே... ..-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்...
அஞ்.சியஞ் சி.ச்சா. வா... ..ர்-இவ[ர்]
அஞ்.சாத பொருளில்லை அவனியி லே...
  
எனவே, சிந்து என்பது இரண்டு சமமான அடிகள் ஓர் எதுகை பெற்று வரும் பாடலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
20.02.2020

ஐகான் வெண்பா



வெண்பா மேடை - 176
  
ஐகான் வெண்பா
  
[ஐ, கை, ஙை, சை, ஞை, டை, தை...... னை ஆகியவை ஐகார எழுத்துக்கள்] வெண்பாவின் ஒவ்வொரு சீரிலும் ஐகார எழுத்தைப் பெற்று வருவது 'ஐகான் வெண்பா' எனப்படும்.
  
செம்மைத் திருமலையைச் சேர்ந்தடைவாய்! நற்புகழை
இம்மை மறுமை இசைத்தோங்கும்! - வெம்மைத்
துயரைத் துடைக்கும்! துணையளிக்கும்! சீர்மைப்
பெயரைப் படைக்கும் பிணைந்து!
  
இவ்வாறு அமையும் 'ஐகான் வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.04.2020

dimanche 19 avril 2020

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
  
காதல் குளம்
  
இயற்கை எழுதிய
காதல் காவியம்!
  
இறைவன் வடித்த
இன்ப ஓவியம்!
  
காதல் கோட்டையின்
திருவாயில்!
  
மண்மகளின்
இதயம்!
  
காமன் கட்டிய
காதல் குளம்!
  
காதல் தேவதை
நீராடும்
மரகதப் பொய்கை!
  
காதலால்
மலை உருகியதோ?
  
காதல்
உயிர் இயற்கை!
  
காதலால்
கல்லுக்குள் - பார்
ஈரம்!
சொல்லுக்குள் - பா
வாரம்!
  
புவிமகள்
இதயக் காதலைக்
காட்டுகிறள்!
  
இக்குளம்
அன்பின் ஊற்று!
அமுதத்சுனை!
  
மண்ணின் போர்
சிகப்பு நிறம்!
கண்ணின் போர்
பச்சை நிறம்!
அதனால்
பசலை படர்ந்ததோ?
  
இயற்கையே தெய்வம்!
பச்சை மாமலைபோல்
மேனி!
அன்பின் சுரப்பே - இக்
கேணி!
  
மையோ? மரகதமோ?
கம்பன் பாட்டு!
இக்கருத்து
இந்தக் குளத்திற்கும்
பொருந்தும்!
  
காதல் குளம்!
கண்டு பெருகியது - என்
கவிதை வளம்!
  
இந்தக் குளத்தைப்போல்
கண்ணே - என்
காதல் நிலையானது! - உன்
கட்டழகைக் கண்டு
நெஞ்சம் சிலையானது!
  
காதல் குளத்தில்
குளிப்போம் வாடி!
களிப்போம் கூடி! - கவி
படைப்போம் கோடி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
19.04.2020

mardi 14 avril 2020

சித்திரை ஆண்டை நீக்கு!



திருவள்ளுவர் ஆண்டைப் போற்று!

சித்திரை ஆண்டை நீக்கிச்
   செந்தமிழ் ஆண்டை ஏற்போம்!
நித்திரை இன்னும் ஏனோ?
   நிறைந்துள பகையை வெல்க!   
இத்தரை எங்கும் தீயர்  
   இழிவினை செய்வார்! தோழா!
முத்திரை யிட்டே சொன்னேன்
   முதன்மொழி தமிழே ஆகும்!

வள்ளுவர் ஆண்டைப் போற்று!
   வண்டமிழ்ப் புகழைச் சாற்று!
கிள்ளுவர் போக்கை மாற்று!
   கிளர்ந்தெழும் பணிகள் ஆற்று!
அள்ளுவர் நம்மின் செத்தை
   அரியென நிற்பாய் காத்து!
துள்ளுவர் பகைவர்! மோதித்
   துரத்தியே இடுவாய் கூத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.04.2020

முப்பொருள் அணி வெண்பா!


வெண்பா மேடை - 169
  
முப்பொருள் அணி வெண்பா!
  
ஒரு சொல் முப்பொருள் தரும் வண்ணம் அடைமொழியுடன் அமைவது முப்பொருள் அணி வெண்பாவாகும்.
  
கோலத் தமிழரசே! 'கோல்'எனில் என்னென்பாய்?
காலம் வடிக்கும் கவிக்கோலும், - ஞாலம்
படிக்கும்..செங் கோலும், பிடிக்கும்..கைக் கோலும்,
படைக்கும் தமிழைப் பருகு!
  
கோல் : எழுதுகோல், செங்கோல், ஊன்றுகோல்.
  
இவ்வாறு அமையும் 'முப்பொருள் அணி வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.04.2020

lundi 13 avril 2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
பழனி, பழநி எது சரியானது?
  
பாவலர் தென்றல், சென்னை.
  
---------------------------------------------------------------------------------------------------------------------------
  
பழனி என்ற சொல்லே சரியானது. இவ்வூரைப் பொதினி என்றும் [பொன்னுடை நெடுநகர்ப் பொதினி - அகநானுாறு - 61] ஆவிநன்குடி என்றும் [ஆவி நன்குடி அசைதலும் உரியன் - திருமுருகாற்றுப்படை - 176] இலக்கியங்களில் காண்கிறோம்.
  
பொதினி என்ற பெயர் பழனி என்று மருவியிருக்க வேண்டும். பொதினியில் உள்ள றன்னகரமே அப்பெயருக்குரியது. மாம்பழக் கதையை அடிப்படையாகக் கொண்டு, முருகனைப் 'பழம் நீ' என்று அழைத்ததால் பழநி என்று எழுதுகின்றனர். பழனி என்பதே இலக்கிய வழக்கென முனைவர் இரா. திருமுருகனார் உரைக்கின்றார். [இலக்கணம் இனிக்கிறது பக்கம் 82]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
13.02.2020.

இருபொருள் அணி வெண்பா


வெண்பா மேடை - 168
  
இருபொருள் அணி வெண்பா
  
ஒரு சொல் இரு பொருள்கள் தரும் வண்ணம் அடைமொழியுடன் அமைவது இருபொருள் அணி வெண்பாவாகும்.
  
வெல்லும் கவியே! விலங்கென்றால் என்னென்பாய்?
கல்லும் நிறைந்த கடிமலை - செல்லா
விலங்காகும்! கொல்லும் வினைமிருகம் செல்லும்
விலங்காகும் என்றே விளம்பு!
  
விலங்கு என்ற சொல்லுக்கு மிருகம் என்றும், மலை என்றும் பொருள் உண்டு. பொதுவாக விலங்கு என்றால் எதைக் குறிக்கிறது என்று சொல்ல முடியாது. அசையும் விலங்கு என்றால் மிருகம் என்று சொல்லலாம். அசையா விலங்கென்றால் மலை என்று கூறிவிடலாம். அசையும் அசையா என்ற அடைமொழிகளைக் கொண்டு அத்தொடர் குறிக்கும் பொருளைத் தெளிவாக அறியலாம். மேலுள்ள வெண்பாவில் செல்லும் விலங்கு மிருகம் என்றும், சொல்லா விலங்கு மலை என்றும் பாடியுள்ளேன். இலக்கிய உலகிற்கு இவ்வகை என்றன் புதிய படைப்பாதகும்.
  
இவ்வாறு அமையும் 'இருபொருள் அணி வெண்பா' ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.04.2020

dimanche 12 avril 2020

பதினான்கு சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 167
  
பதினான்கு சொல் எழிலணி வெண்பா!
  
பதினான்கு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது பதினான்கு சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
வாழூர்என்? வந்ததுமென்? வாங்குவதென்? விற்பதுமென்?
ஊழருள்என்? உன்பணியென்? ஒண்கலமென்? - சூழொலியென்?
வெண்ணுருள்என்? விண்ணிலையென்? வட்டமென்? கொள்மருந்தென்?
உண்சுவையென்?தாளென்? 'உறை'!
  
வெண்பாவில் உள்ள பதினான்கு வினாக்களுக்குக் 'உறை' என்ற ஒரு விடை வந்தது. ஊர், துன்பம், போர்வை, பொன், பெருமை, பாலிடுபிரை, வெங்கலம், சிறப்பு, ஆயுதவுறை, மழை, கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம், மருந்து, காரம், மேலுறை... ஆகிய பொருள்களை மேலுள்ள வெண்பாவில் உறை என்ற சொல் பெற்றுள்ளது.
  
1. நீங்கள் வாழும் ஊர் எது? - உறையூர்.
2. இங்கு வந்ததும் ஏன்? - துன்பத்தால் வந்தேன்.
3. வாங்கும் பொருள் என்ன - போர்வை.
4. விற்கும் பொருள் என்ன - பொன்.
5. வாழ்ந்த ஊழ்நிலை எவ்வாறு - பெருமையாக வாழ்ந்தேன்.
6. உங்கள் தொழில் என்ன - பாலில் பிரையிட்டு விற்கும் தொழில்.
7. இந்தப் பாத்திரம் என்ன - வெங்கலம்.
8. பாத்திரம் நன்றாக உள்ளதா? - சிறப்பாக உள்ளது.
9. இந்த வெண்மையான குழாய் என்ன? - ஆயதவுறை.
10. காலநிலை என்ன - மழைக்காலம்.
11. வண்டியில் உள்ள வட்டம் என்ன? - கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம்.
12. உனக்குத் தேவையான மருந்து என்ன? நீரினால் உண்டான நோயைத் தீர்க்கும் மருந்து
13. உண்ணும் சுவை என்ன? - காரம்.
14. இந்தத் தாள் என்ன - நுாலுக்கு மேலுறை போடும் தாள்.
  
இவ்வாறு பதினான்கு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.04.2020

பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 166
  
பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா!
  
பன்னிரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வருவதாகப் பாடுவது பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
ஏழுருபென்? வாழிடமென்? ஏனமர்ந்தாய்? ஏகிடமென்?
கீழும்,பின் னும்,வழியும் சூழ்பெயரென்? - தாழகமென்?
வன்வாயில், பக்கம்,இடம் நன்முடிவு காண்பெயரென்?
கன்னல்மொழி காட்டும் கடை!
  
வெண்பாவில் உள்ள பன்னிரண்டு வினாக்களுக்குக் 'கடை' என்ற ஒரு விடை வந்தது.
  
1. எழனுருபு என்ன? - கடை
2. எங்கு வாழ்கிறாய்? - ஊர் எல்லையில் வாழ்கிறேன்.
3. ஏன் அமர்ந்துவிட்டாய்? - சோர்வாக உள்ளதால் அமர்ந்தேன்.
4. எங்குச் செல்கின்றாய்? - அங்காடி செல்கிறேன்..
5. கீழ் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
6. பின் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
7. வழி என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
8. தாழ்ந்தவனின் பெயர் என்ன? - கடையன்
9. கதவின் வேறு பெயர் என்ன? - கடை
10. பக்கம் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
11. இடம் என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
12. முடிவு என்ற சொல்லின் வேறு பெயர் என்ன? - கடை
  
ஏழனுருபு, எல்லை, சோர்வு, அங்காடி, கீழ், பின், வழி, தாழ்ந்தவன், வாயில், பக்கம், இடம், முடிவு எனப் பன்னிரண்டு பெயர்களையும் கடையென்ற சொல் தாங்கிவந்தது.
  
இவ்வாறு பன்னிரண்டு சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.04.2020

samedi 11 avril 2020

பத்துச்சொல் எழிலணி வெண்பா!


வெண்பா மேடை - 165
  
பத்துச்சொல் எழிலணி வெண்பா!
  
பத்து வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது பத்துச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொய்யுரையும், சேர்தளையும், புண்ணோயும், நல்வன்மை
மெய்யுரையும், சேர்வினையும், மேவரணும், - உய்விடமும்
மூடுதலும், பந்தியும், மூட்டையும்,காண் பேரென்ன?
கூடுதலும் 'கட்டு'எனக் கூறு!
  
வெண்பாவில் வந்த பத்து வினாக்களுக்குக் 'கட்டு' என்ற ஒரு விடை வந்தது.
  
1. பொய்யுரை - பொய்யாகக் கதையைக் கட்டிச் சொல்லுதல்
2. தளை - இணைத்தல், சேர்தல் [கட்டுதல்]
3. நோய் - பிணி [கட்டு]
4. வன்மை மெய்யுரை - உடவுறுதி [ உடற்கட்டு]
5. சேர்வினை - தழுவுதல், மணஞ்செய்தல், [கட்டி அணைத்தல்]
6. மேவு அரண் - அணை, காவல் [கட்டு]
7. உய்விடம் - வீட்டின் பகுதி [ சமையற்கட்டு]
8. மூடுதல் - கடையைக் கட்டு
9. பந்தி - ஒழுங்கு [கட்டுப்பாடு]
10. மூட்டை - கட்டு
  
இவ்வாறு பத்துச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.04.2020

எட்டுச்சொல் எழிலணி வெண்பா



வெண்பா மேடை - 164
  
எட்டுச்சொல் எழிலணி வெண்பா
  
எட்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது எட்டுச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொங்குலையும் பொன்புடமும் பூதியும் ஓங்கவதேன்?
சங்கொலியும் வேயிசையும் புண்தழலும் - இங்குறும்
மெய்வினையென்? சூடணைய மாட விளக்கணையச்
செய்வினையென்? ஊதுதல் தீர்ப்பு!
  
மேலுள்ள வெண்பாவில் எட்டு வினாக்களுக்குக் 'ஊதுதல்' என்ற ஒரு விடை வந்தது. ஊதுதலால் அடுப்பு எரிகிறது, பொன்புடம் ஏற்கிறது, பூதி [பலுான்] காற்றை ஏற்கிறது. வெண்சங்கை ஊதுதலால் பேரொலி கேட்கிறது. வேய்ங்குழலை ஊதுதலால் இன்னிசை கமழ்கிறது. தழற்புண் வலியை வாயால் ஊதிப் துயர்குறைப்பார். கொதிக்கின்ற தேநீரை, வெந்நீரை ஊதி ஊதிக் குடிப்பார். மாடத்தில் எரிகின்ற விளக்கை வாயால் ஊதுவதாலும் அணையும்.
  
இவ்வாறு எட்டுச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.04.2020

ஆறுசொல் எழிலணி வெண்பா


ஆறுசொல் எழிலணி வெண்பா
  
ஆறு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது ஆறுசொல் எழிலணி வெண்பாவாகும்.
  
திருமால் அணியென்ன? தேரின் அடியென்ன?
பெருமால் பெயரென்ன? முந்நீர் - இருப்பென்ன?
சுற்றுவடி வென்ன? சுழன்றுவாழ் கோளென்ன?
பற்றுமடி சக்கரம் பார்!
  
சக்கரம் : திருமால் திருக்கை ஆழி, தேரின் உருளை, மலை, கடல், வட்டம், பூமி
  
பெருமால் : பெரியமலை
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள ஆறு வினாக்களுக்குக் 'சக்கரம்' என்ற ஒரு விடை வந்தது. திருமாலின் கைகளில் சங்கும் சக்கரமும் உள்ளன. தேர் சக்கரங்களைக் கொண்டுள்ளது. மலையின் வேறுபெயர் சக்கரம். ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்றும் சேர்ந்தது கடல். சுற்றுகின்ற வடிவம் வட்டம். பூமியைச் சக்கரம் என்றும் உரைப்பர். பெண்ணே இந்த ஆறு பெயர்களைச் சக்கரம் என்ற ஒருபெயர் ஏற்பதைப் பார்.
  
இவ்வாறு ஆறுசொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.04.2020

samedi 4 avril 2020

குரு பரம்பரை


திருமால் நெறி காத்த குருமரபினர்
  
காப்பு
  
மாலியல் வார்த்த மதியொளிர் மாமரபை
நுாலியல் ஓங்க நுவன்றிடுவாய்! - வேலியல்
மின்னும் வியன்றமிழே! என்னுள் இருந்தழகாய்ப்
பொன்னும் மணியும் பொழி!
  
1. பெரிய பெருமாள்
  
விண்ணுலகை மண்ணுலகை வித்திட்ட வைகுந்தன்!
பண்ணுலகைச் சூடும் பரந்தாமன்! - தண்ணுலகை
ஆளும் பெரிய பெருமான் அணியடியை
நாளும் மனமே நவில்!
  
2. பெரிய தாயார்
  
மாலவன் மார்பில் மணமிடுவாள்! காக்கின்ற
ஞாலவன் போன்று நலமிடுவாள்! - பாலவள்!
பிள்ளைதுயர் போக்கும் பெரிய பிராட்டியாள்!
கொல்லைமலர் இட்டுபுகழ் கூறு!
  
3. சேனைமுதலியார்
  
ஓங்குபுகழ் சேனையர்கோன் ஒள்ளடிகள் போற்றிடுவோம்!
தேங்குபுகழ் வாழ்வில் திளைத்திடுவோம்! - தாங்குபுகழ்
சீரரங்கைச் சேர்ந்திடுவோம்! சிந்தை செழித்திடுவோம்!
ஓரரங்கை உள்ளம் உணர்ந்து!
  
4. நம்மாழ்வார்
  
இருநிதியாய் வந்துதித்தார் இன்றமிழ் மாறர்!
குருநிதியாய்க் கோடிநலம் ஈந்தார்! - பெருநிதியாய்
வந்த..திரு வாய்மொழியார்! இந்த வுலகுய்ய
தந்த..திரு நல்கும் தகை!
  
5. நாதமுனிகள்
  
ஆழ்வார் தமிழமுதை அள்ளி நமக்கீந்தார்!
வாழ்வார் அடியார் மனத்துள்ளே! - சூழ்புகழ்
நாத முனியார் நறுமலர்த்தாள் பற்றிடுவோம்!
ஏத மினியே[து] இயம்பு?
  
6. உய்யக்கொண்டார்
  
குருமொழி யேற்றுக் குலவுதமிழ் காத்தார்!
திருமொழிச் சீர்பரவச் செய்தார்! - அருண்மொழி
கொண்டல்! உலகுய்யக் கொண்டார் திருவடியின்
தண்டம் தருமே தவம்!
  
7. மணக்கால்நம்பி
  
நாதமுனி கொண்டமனம் நாட்டியவர்! உய்யவரின்
பாதமணி என்றுளம் பற்றியவர்! - சீதமணி
நெஞ்சர்! நிறைமணக்கால் நம்பியார்! பொன்னடியில்
தஞ்சம் அடியேன் தலை!
  
8. ஆளவந்தார்
  
பால்மனம் கொண்டார்! படர்பேதம் வென்றுயர்ந்தார்!
மால்மனம் கொண்டார்! மகிழ்வீந்தார்! - நுால்மனம்
வார்த்தார்! நமைஆள வந்தார்! திருவருளைச்
சேர்த்தார் தமிழில் திளைத்து!
  
9. பெரியநம்பி
  
ஆளவந்தார் சீரை அகங்கொண்டார்! பேரரங்கன்
தாளணிந்தார்! மாமுனிக்குச் சால்பளந்தார்! - தோளணிந்தார்
நல்லருளை! எம்பெரிய நம்பியார்! நன்மனமே
சொல்..அருளை நாளும் சுவைத்து!
  
10. எம்பெருமானார்
  
மாயவன் சீரோங்க, மாயமத வேர்நீங்க,
துாயவன் தொண்டோங்க, துன்பொழிய, - தாயிணையாய்
எங்கள் இராமா நுசர்இங்[கு] உதித்தார்!நற்
திங்கள் திகழ்நலஞ் சேர்த்து!
  
11. எம்பார்
  
அண்ணல் இராமா நுசரின் அடிபணிந்தார்!
எண்ணம் முழுதும் இறையன்பு - கொண்டொளிர்ந்தார்!
எம்பார் திருப்புகழை ஏத்தித் தொழுதிடுவோம்!
நம்..மார் பெறுமே நலம்!
  
12. பட்டர்
  
நற்றிருக் கூர்ச்செல்வர்! நல்லரங்கச் சீர்மைந்தர்!
கற்றிடும் கூர்மதியா்! காத்திடும் - வற்புடையர்!
நற்பட்டா் நாமம் நவின்றிடுவோம்! நல்லுலகின்
பொற்பட்டம் ஏற்போம் பொலிந்து!
 
13. நஞ்சீயர்
  
பெருமாள் திருவடியே பீடருளும் என்றார்!
வரும்..நாள் வளமேற்கும் என்றார்! - அருளார்
திருவாய் மொழியுரை செப்பிய..நஞ் சீயர்!
தருவார் எனக்கும் தமிழ்!
  
14. நம்பிள்ளை
  
விண்ணுலகச் சீட்டளித்தார்! விந்தை யுரையளித்தார்!
மண்ணுலகப் பற்றறுத்தார்! மாலழகில் - கண்மலர்ந்தார்!
தண்ணார் கலிகன்றி தாசர்!நம் பிள்ளையார்
பொன்னார் திருவடி போற்று!
  
15. வடக்குத் திருவீதிப்பிள்ளை
  
குருவருள் பெற்றுக் குளங்கொண்டார்! மாயன்
திருவருள் பெற்றுத் திளைத்தார்! - அருளுரை
செய்தார் வடக்குத் திருவீதிப் பிள்ளையார்!
பெய்தார் மழையெனப் பீடு!
  
16. பிள்ளைலோகாசார்யர்
  
நன்னெறி நுால்களை நல்கியவர்! மாதவனின்
பொன்னடி சூடிப் பொலிந்தவர்! - இன்னருள்
பேரார் உளமுடையர்! பிள்ளைலோ காசார்யர்
சீரார் அடிகளைச் சேர்!
  
17. திருவாய்மொழிப்பிள்ளை
  
திருமலை யாழ்வாரே! சீர்மலை மேவும்
அருணிலை நல்கும் அமுதே! - அரிய
திருவாய் மொழிப்பிள்ளை யே!சிந்தை யோங்கத்
தருவாய் எனக்கும் தமிழ்!
    
18. மணவாள மாமுனிகள்
எந்தை எதிர்ராசன் ஏற்றம் பரவிடவும்,
சிந்தை செழித்திடவும், செந்தமிழில் - அந்தாதி
தந்த மணவாள மாமுனியே! தண்ணருளால்
இந்த உலகை இயக்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.04.2020

vendredi 3 avril 2020

நாற்சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 162
  
நாற்சொல் எழிலணி வெண்பா
  
நான்கு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது நாற்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
பொதுமை வடிப்பதெது? பூமிமேல் ஊன்றி
முதுமை நடப்பதெது? முத்தார் - பதுமையே!
நல்லாட்சி ஏற்பதெது? நன்றே அளப்பதெது?
பல்லாட்சிக் கோலாம் பகர்!
  
கோல் : எழுதுகோல், ஊன்றுகோல், செங்கோல், அளவுகோல்
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள நான்கு வினாக்களுக்குக் 'கோல்' என்ற ஒரு விடை வந்தது.
  
எழுதுகோல் பொதுமைக் கவிகளை வடிக்கிறது, முதுமையில் ஊன்றுகோல் கொண்டு நடப்பர், செங்கோல் நல்லாட்சி ஏற்கும், அளக்கும் கருவி அளவுகோல், ஒரு சொல் பல பொருள்தரும் பைந்தமிழின் அழகைச் சொல்வாய்.
  
முத்தார் பதுமை மகடூஉ முன்னிலை [சிலைபோன்று அழகுடையவள், முத்து மாலை அணிந்தவள்]
  
இவ்வாறு நாற்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.04.2020

jeudi 2 avril 2020

முச்சொல் எழிலணி வெண்பா


வெண்பா மேடை - 161
  
முச்சொல் எழிலணி வெண்பா
  
மூன்று வினாக்களுக்கு ஒரு விடை வரும்படியாகப் பாடுவது முச்சொல் எழிலணி வெண்பாவாகும்.
  
கடல்மேல் வருவதெது? கற்கும் கவியைச்
சுடர்போல் தருவதெது? துன்பத் - தொடர்போக்க
மேகலை கொண்டதெது? விந்தைக் 'கலம்'என்பேன்
மாமலைக் கோவே மகிழ்ந்து!
  
கலம்: ஓடம், யாப்பருங்கலம், உண்கலம்
  
மேலுள்ள வெண்பாவில் உள்ள மூன்று வினாக்களுக்குக் 'கலம்' என்ற ஒரு விடை வந்தது. இவ்வாறு முச்சொல் எழிலணி வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.04.2020

கொரொனாவை ஒழிப்பாய்!


கொரொனாவை ஒழிப்பாய்!
  
1.
முற்றும் வினைதீர்க்கும் மூத்தவனே! போக்கிடவே
பற்றும் கொரொனாவைப் பார்!
  
2.
வாட்டுதுயர் ஓட்டும் வடிவேலா! வன்கொரொனா
கூட்டுதுயர் நோயைக் கொளுத்து!
  
3.
பயிர்க்கொல்லி நீக்கிப் பயன்தந்தாய்! ஈசா!
உயிர்க்கொல்லி நோயை ஒழி!
  
4.
ஓம்சக்தி தாயே! உயிர்காப்பாய்! உன்னடியை
யாம்புத்தி யுற்றோம் இசைத்து!
  
5.
நீபடைத்துக் காப்பவன், நேமியனே! நன்மருந்தைத்
தாபடைத்து! உன்றாள் சரண்!
  
6.
திருமகளே கண்திறவாய்! திக்கெட்டும் நோய்ஏன்?
அருண்மகளே காப்பாய் அணைத்து!
  
7.
கலைமகளே! கண்ணீர்க் கடல்ஏனோ? கல்வித்
தலைமகளே! நன்வழி தா!
  
8.
தீதை ஒழிக்கும் திருக்காளி! வேண்டுகிறோம்
வாதை அழிக்கும் வரம்!
  
9.
துணையிருக்கும் துர்க்கா! துயர்துடைத்துக் காக்கும்
அணையிருக்கும் வாழ்வை அளி!
  
10.
திருமொழி வேங்கடவா! தீண்டுதுயர் நீங்க
ஒருவழி சொல்வாய் உடன்!
  
11.
ஏழுமலை வாழ்இறைவா! இன்னல் இருள்வந்து
சூழுநிலை! நீயே துணை!
  
12.
துள்ளியுறும் துன்பம் துடைத்திடவே, தொல்லரங்கில்
பள்ளியுறும் பார்த்தனே பார்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.04.2020