vendredi 31 mai 2013

வான்மதியே வா..வா..வா..




வான்மதியே வா..வா..வா

எடுப்பு

வான்மதியே என்னருகே வா!வா!வா! - தமிழ்த்
தேன்மழையை நான்பருகத் தா!தா!தா!
                                        (வான்)

தொடுப்பு

மான்விழியே! வடிவழகே! வா!வா!வா! - உன்
தேன்மொழியை நிதமெனக்குத் தா!தா!தா!
                                        (வான்)

முடிப்புகள்

நல்லதமிழ் பேச்சே உன்மூச்சு - இதை
நானறிந்து நாள்கள் பலவாச்சு!
செல்வமென எனக்கு நீயாச்சு - பிறச்
சிந்தனைகள் எனைவிட் டேபோச்சு!
                                        (வான்)

தென்றலைப்போல் மணக்கும் பூங்காற்று  - நீ
செந்தமிழ்போல் இனிக்கும் தேன்ஊற்று!
இன்றளித்த இனிமைக் கேதெல்லை - பாடும்
இளையவளே உனக்(கு)இங்(கு) ஈடில்லை!
                                        (வான்)

30.11.1985
 

mercredi 29 mai 2013

மாங்குயிலே... பூங்குயிலே



மாங்குயிலே... பூங்குயிலே

மல்லிகை மலர்சூடிப் - பாடும்
மாங்குயில் நீவாடி!
பல்லவன் எனைத்தேடித் - கொஞ்சும்
பைங்கிளி நீவாடி!

துள்ளிடும் மானினமே - உன்னால்
தொல்லைகள் தொலைந்திடுமே!
பள்ளியில் முதலிடமே - என்றும்
பரிசுகள் உன்னிடமே!

செங்கனி கன்னந்தான் - உடல்
செந்துர வண்ணந்தான்!
மங்கைநீ அன்னந்தான் - இனிய
மதுநிறை கிண்ணந்தான்!

கவிதரும் கண்மணியே - என்னைக்
கவர்ந்திடும் விண்மணியே!
புவிபுகழ்ப் பெண்மணியே - உள்ளம்
ஓளிர்ந்திடும் பொன்மணியே!

10.01.1987

mardi 28 mai 2013

வா.. வா.. வா ..




வா.. வா.. வா ..

அழகுச் சிலையே வா.. வா.. வா..
அமுத நிலவே வா.. வா.. வா..
பழகு தமிழே வா.. வா.. வா..
பண்பின் ஒளியே வா.. வா.. வா..

அன்பின் உருவே வா.. வா.. வா..
ஆசைக் கனியே வா.. வா.. வா..
இன்பக் கலையே வா.. வா.. வா..
இனிக்கும் மதுவே வா.. வா.. வா..

தென்றற் காற்றே வா.. வா.. வா..
தேனின் சுவையே வா.. வா.. வா..
குன்றாப் புகழே வா.. வா.. வா..
கொஞ்சும் கிளியே வா.. வா.. வா..

08.01.1987

vendredi 24 mai 2013

வேலி உண்டோ?






வேலி உண்டோ?

காற்றுக்கு வேலி உண்டோ? - எழுதும்
       கவிதைக்கு வேலி உண்டோ? - பொங்கும்
ஊற்றுக்கு வேலி உண்டோ? - மொழி
       உணர்வுக்கு வேலி உண்டோ?

நிலவுக்கு வேலி உண்டோ? - காதல்
       நினைவுக்கு வேலி உண்டோ? - காட்டு
மலருக்கு வேலி உண்டோ? - கமழ்
       மணத்திற்கு வேலி உண்டோ?

புகழுக்கு வேலி உண்டோ? - இயற்கை
       பொலிவுக்கு வேலி உண்டோ? - அறிவுச்
சுடருக்கு வேலி உண்டோ? - நாட்டுத்
       தொண்டுக்கு வேலி உண்டோ?

கதிருக்கு வேலி உண்டோ? - நற்
       கருணைக்கு வேலி உண்டோ? - காலை
விடிவுக்கு வேலி உண்டோ? - வியன்
       தமிழுக்கு வேலி உண்டோ?

10-05-2001

காதல் ஆயிரம் [பகுதி - 95]




காதல் ஆயிரம் [பகுதி - 95]

846.
பார்த்தகண் மாறாமல் பார்க்கின்றேன்! பாகாக
வோ்த்தஎன் உள்ளம் விரைந்துருகும்! - சோ்த்தவுன்
கற்பனைக் காட்சிகள் மெய்யாக! கண்மணியே
நற்றுணை செய்வாய் நயந்து!

847.
வெள்ளிக் கிழமை விருந்தாய் இனித்திட
வள்ளி வடித்தால் வளா்கவிதை - பள்ளியில்
துள்ளிக்  குதித்தேன்!   தொடர்ந்து  படித்துநான்
அள்ளிக் குடித்தேன் அமுது!

848.
கண்ணோடு  கண்சோ்ந்து காதல் கவிதீட்டும்!
விண்ணோடு கொஞ்சி விளையாடும்! - பெண்ணழகே
எண்ணங்கள்  ஏங்கிப் பெருகுதடி! இன்பூறும்
வண்ணங்கள் ஓங்கி வளா்ந்து!
         
849.
காதோரம் வந்து கவிபாடு! கண்ணா!உன்
துாதுாறும் சொற்கள் சுகமன்றோ! - மோதி 
மனமேறும் தாகம் மதிமயக்கும்! உன்னால்
தினந்தோறும் திண்டாட்டம் தான்!


850. 
கெண்டை விழியிரண்டும் கிள்ளுதடி! என்னுயிரைக்
கொண்டை மலர்க்காட்சி கொள்ளுதடி! - பெண்ணே!உன் 
தண்டை தரும்இசை சண்டை புரியுதடி! 
மண்டை அறைக்குள் மணந்து! 

(தொடரும்)

jeudi 23 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 94]




காதல் ஆயிரம் [பகுதி - 94]



841.
பெரும்சிற்பி நுட்பமுடன் பெற்ற சிலையே!
கரும்பேந்தி நிற்கும் கலையே! - விருந்தொன்றைக்
கண்டுவக்கும் ஏழையெனக் காதல் கவிஞன்யான்
கொண்டுவக்கும் பூங்குயிலே கொஞ்சு!

842.
தொடுகின்ற காலத்தில் துாயவனே உன்..கை
இடுகின்ற இன்பத்தை ஆ..ஆ..! - மடு..மோதிப்
பாய்ந்தோடும் வெள்ளமெனப் பாய்விரித்து மஞ்சத்தை
ஆய்தோடும் ஆசை அலை!

843.
கூட்டிப் பெருக்குகிறாள்! கொள்ளை அழகாலே
வாட்டி வதைக்குகிறாள்! வண்ணவிழி - காட்டி
மயக்குகிறாள்! பேசி மடக்குகிறாள்! என்னை
இயக்குகிறாள் இன்பம் இசைத்து!

844.
கண்களில் நின்றாடும் காரிகையே! இவ்வுலகப்
பெண்களில் நீ..மின்னும் பேரழகி! -  பண்களில்
உன்னைப் படைக்கின்றேன்! ஊறும் நினைவுகளில்
என்னை மறக்கின்றேன் இங்கு!

845.
குளிர்ஊட்டும் கோதையே! கொஞ்சுதமிழ்  போன்று 
மலா்ஊட்டும் போதையே! வாழ்வை - வளமாக்கும்
வஞ்சியே! இன்கவி மாரியே! உன்னழகில்
நெஞ்சியே ஏங்கும் நெகிழ்ந்து!.

(தொடரும்)

mercredi 22 mai 2013

இன்பம் வீசுமே




இன்பம் வீசுமே


கண்ணும் கண்ணும் பேசுமே - பூங்
காற்றாய் இன்பம் வீசுமே!
எண்ணம் எண்ணம் சேருமே - மன
ஏக்கம் எல்லாம் தீருமே!

இரவும் பகலும் இனிக்குமே - நம்
இளமைச் சூட்டைத் தணிக்குமே!
கரமும் கரமும் இணையுமே - மனம்
களிப்பாம் மழையில் நனையுமே!

கனவும் நினைவும் வளருமே - தேன்
கவிதை தினமும் மலருமே!
மனமும் மனமும் மயங்குமே - ஏதும்
வார்த்தை இன்றித் தயங்குமே!

15.05.1985           

samedi 18 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 93]



காதல் ஆயிரம் [பகுதி - 93]

836.
பார்ப்பதும் இன்பமடி! பாவையுன் கைவிரல்கள்
கோர்ப்பதும் இன்பமடி! பூங்குயிலே! - கூா்விழிகள்
ஈா்ப்பதும் இன்பமடி! ஈடில் கவிதைகளை
வார்ப்பதும் இன்பமடி! வா!

837.
உன்குரல் கேட்பதும் இன்பமடி! கற்பனையில்
இன்திரள் காண்பதும் இன்பமடி! - வன்திரள்
மார்பு முடிகோதி மயங்கும் மலா்விழியே!
சோ்ப்பு விதிகளைத் தீட்டு!

838.
பட்டழகு மேனி படபடக்கும்! பாவலன்
தொட்டழகு செய்யும் சுகம்பரவி! - வட்டமுகப்
பொட்டழகு! பூவழகு என்பான்! கரையுமே
கட்டழகு மெல்லக் கனிந்து

839.
காதோரம் தந்த கனிமுத்தம் ஒவ்வென்றும்
மாதோரம் சாய்த்து மகிழ்வூட்டும்! - தீதோரம்
இன்றி எனைஎடுத்தாய்! இன்பக் கவிபடித்தாய்!
குன்றிக் குலவும் குரல்!

840.
கட்டி  அணைத்துக் கவிபாடும் காலத்தில்
எட்டி விலகுவது ஏனடி? -  கட்டழகே
கொட்டிக் கொடுப்பாய்க் குளிர்ந்த இரவினிக்க
ஒட்டிப் படைப்பாய் உறவு

[தொடரும்]

vendredi 17 mai 2013

பூமகள்





பூமகள்

பூமகள் பெயராள் வரும்போது - இங்குப்
பூக்கும் மலரில் மணமேது?
தைமகள் புவியில் வரும்போது - நம்
தமிழர்க் கினிமை வேறேது?

இன்னிசை மீட்டும் இளமாது - அவள்
எழுதும் கவிதைக் கீடேது?
கண்விசை தந்தாள் சுகதூது - அவள்
காதல் பார்வைக்கு இணையேது?

மலர்முகம் கண்டால் மிகசாது - அது
வாட்டும் துயருக்(கு) அளவேது?
நிலவது தேயும் வான்மீது - உன்
நினைவே என்றும் தேயாது!

11.03.1980 

jeudi 16 mai 2013

துணிந்து நில்





துணிந்து நில்

விதிதனை மதியால் வெல்லு! - தமிழ்
வீரனாய்த் துணிந்து நில்லு!
சதிதனை எதிர்த்துக் கொல்லு! - என்றும்
சத்தியம் காக்கும் சொல்லு!

சாதியின் தாழ்வைத் தள்ளு! - எங்கும்
சமத்துவம் கண்டு துள்ளு!
நீதியாம் தராசின் முள்ளு! - கூறும்
நிலைமையை மனத்தில் கொள்ளு!

செந்தமிழ்த் தாயைப் போற்று! - என்றும்
செழிப்புடன் கடமை ஆற்று!
சிந்தையில் மடமை அகற்று - உளம்
சீர்படும் கவிகள் இயற்று!

23.05.1980 

mardi 14 mai 2013

காதல் ஆயிரம் [பகுதி - 92]




 காதல் ஆயிரம் [பகுதி - 92]



831.
வந்ததும் உன்றன் மதுமடல் பார்த்திடவே
உந்திடும் என்றன் உணா்வுகள்! - இந்நிலையை
எண்ணிப் பார்க்காமல் ஏனோ எனஇருத்தல்
பெண்ணின் பெருமையோ பேசு?

832.
நான்பாதி நீபாதி என்பதை நம்பாதே!
ஏன்பாதி? என்முழுதும் நீ..தானே! - கூன்விழுந்து
ஊன்பாதி உற்ற உயிர்பாதி ஆகும்முன்
வான்சோதி பேரழகே வா!

833.
எல்லாம் எனக்கிங்கு நீஆனாய்! ஏன்கோபம்?
கல்லாம் எனக்குன் கலையழகு!  - முள்ளாம்
மொழியை அகற்றிடுக! மோகத்தை ஊட்டும்
விழியைத் திறந்திடுக வே!

834.
சரியென்று   சொன்னேன்! தமிழாக உன்னைச்
சிரியென்று  சொன்னேன்! சிறந்தேன்! - வரியாய்
ஒளிர்கின்ற பல்லழகு! ஓவியமேகாதல்
வளா்கின்ற முத்தம் வழங்கு!

835.
கட்டி அணைத்திட கண்ணா வருகவே!
ஒட்டி உறவாடி உண்கவே! - கட்டில்மேல்
கொட்டிக் கொடுத்த பலகோடி முத்துக்கு
வட்டி கொடுப்பேன் வளா்த்து

(தொடரும்)