jeudi 27 avril 2017

கவியரசர் - பகுதி

கவியரசு கண்ணதாசன் விழா [ பகுதி - 3]
கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
 
நிறைவு கவிதை
 
வட்டிக் கணக்கெழுதி வாழ்க்கை நடத்துகின்ற
செட்டியார் குடும்பத்தின் சீரொங்க வந்தகவி!
பட்டியெனும் தொட்டியெலாம் பாட்டு மணவீசக்
கட்டு மலராகக் கவிதைகளைத் தந்தகவி!
கொட்டும் மழையாகக் கோலத் தமிழ்மொழியை
இட்டு மகிழ்ந்திடவே இங்குதித்த வல்லகவி!
 
துட்டுக்குப் பாடியதும் மெட்டுக்குப் பாடியதும்
பொட்டுச் சுடராகப் பொலியும் திரையுலகில்!
 
எட்டுத் திசைகொண்ட இயற்கையெழில் கைவிரல்
கட்டுக்கு வந்து கவியாகி ஒளிவீசும்! [10]
 
பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் கவிதைகளும்
கட்டித் தயிருண்ட கண்ணன் கவிதைகளும்
எட்டிநமைப் போக்காமல் இன்பம் அளித்தனவே!
 
புட்டிதரும் போதையில் புரண்டு கிடந்தாலும்
குட்டிதரும் போதையில் கூடிக் கிடந்தாலும்
பட்ட சுகம்யாவும் பாட்டாக மலர்ந்துவரும்!
கெட்ட மனத்திற்குக் கொட்டியே புத்திதரும்!
 
முட்டும் பகைவரும் முத்தையா பாட்டுக்குச்
சட்டென்[று] அடங்கிச் சரண்புகுந்து சுவைத்திடுவார்!
 
கட்டில் குமரிக்கும் தொட்டில் குழைந்தைக்கும் [20]
அட்டில் அமுதாக அளித்திட்ட அரும்பாக்கள்
சுட்டபொன் னாகச் சுடரேந்தி மின்னினவே!
 
பட்டியின் காட்டானும் பட்டணத்து மாந்தனும்
பட்டதுயர் போக்கும் மருந்தாகும் பசும்பாக்கள்!
 
சட்டியே சுட்டதுவும் கைநழுவி விட்டதுவும்
ஒட்டியே உறவாடி உணர்வூட்டும் வாழ்வுக்கு!
பட்டை அடித்தவனும் பட்டை அடித்தவனும்
மொட்டை அடித்தவனும் கொட்டை தரித்தவனும்
சட்டை இழந்தவனும் சந்தி சிரிச்சவனும்
மட்டையென வாகி மயங்கிக் கிடப்பாரே! [30]
 
ஒட்டுத் துணியோ[டு] உழல்கின்ற ஏழைக்கும்
பட்டுத் துணிமேல் படுத்துறங்கும் செல்வர்க்கும்
ஒட்டி உறவாடக் கவிதைகளைத் தந்தவனே!
 
பெட்டிக் கடைக்காரர்! பேரிக்காக் கடைக்காரர்!
தட்டிக் கடைக்காரர்! தங்கக் கடைக்காரர்!
மட்டிக் கடைக்காரர்! மணக்கும் மலர்க்காரர்!
சட்டிக் கடைக்காரர்! சாறு கடைக்காரர்!
வட்டிக் கடைக்காரர்! வளையல் கடைக்காரர்!
வெட்டும் கடைக்காரர்! ஒட்டும் கடைக்காரர்!
தட்டும் கடைக்காரர்! முட்டும் கடைக்காரர்! [40]
பட்டுக் கடைக்காரர்! பொட்டுக் கடைக்காரர்!
தட்டுக் கடைக்காரர்! தகரக் கடைக்காரர்!
கட்டி உறவாடும் காதல் சுகமாகத்
தட்டிச் சுவைக்கின்ற தமிழிசையைத் தந்தவனே!
 
எட்டி உதைத்தவனும் இன்னல் கொடுத்தவனும்
தொட்டுச் சுவைக்கின்ற இன்னிசையை ஈந்தவனே!
 
சிட்டுக் குருவிக்கும் சிங்கார மயிலுக்கும்
அட்டிகை போல்தமிழை அணிந்து மகிழ்ந்தவனே!
 
கிட்டிய செல்வத்தை விட்டுத் தொலைத்தாலும்
கட்டிய கவியோடு களித்திங்கு வாழ்ந்தவனே! [50]
 
பட்டம் பதிவிக்கே சுற்றும் உலகத்தின்
கொட்டம் அடங்கிடவே கூவிக் கொதித்தவனே!
 
திட்டம் அறியாமல் திரிகின்ற என்றனுக்குச்
சட்டம்உன் வரலாறு! தாழ்ந்து பணிகின்றேன்!
 
வட்டமெனும் மேடையிலும் வானளந்த மேடையிலும்
கொட்டும் மலர்மழையில் கோலப் புகழ்மழையில்
கட்டுமென் பாக்கள் களித்தாட வேண்டுகிறேன்!
எட்டுத் திசைகளிலும் என்கவியைப் போற்றிடவே
பட்டுப் பளபளப்பைப் பழங்கொண்ட நல்லினிப்பை
இட்டு மகிழ்வாய் எனக்கு! [60]
 
அன்பரசி கவிதையைக் குறித்து
குருவாம் என்றன் கொழுத்த கால்களைத்
திருவாய் எண்ணித் தியானம் செய்து
தொட்டுத் தொழுது கூட்டிய கவிதை
பட்டுக் கவிதை! பசுந்தேன் கவிதை!
ஆனால்
மாலின் அடியை மனத்தால் வணங்கு!
ஆளின் அடியை ஆழ்ந்து வணங்கும்
காலம் இனிமேல் கனவிலும் வேண்டாம்!
ஞாலம் துாற்ற நம்மண் ஆளும்
அரசியல் தலைவர் அனுதினம் அனுதினம்
வளைந்து வளைந்து வடிவை இழந்தார்!
குனிந்து குனிந்து குள்ளம் ஆனார்!
இனிமேல் தமிழர் யாருடைப் பாதமும்
வணங்கா திருக்க வகையாய்ச் சட்டம்
இனமுயர் வண்ணம் இயற்ற வேண்டும்!
புன்மை நீங்கிப் வன்மை அடைய
என்றன் மொழியை ஏற்பாய் பெண்ணே!
 
காவியத் தாயின் மைந்தன்!
  கமழ்ந்திடும் காதல் மன்னன்!
ஓவியம் போன்றே பாக்கள்
  ஒளிர்ந்திடத் தந்த தாசன்!
மேவிய புகழை இங்கு
  மீட்டிய சுமதி வாழ்க!
பாவியப் பெண்கள் போன்று
  பார்புகழ் பெற்று வாழ்க!
 
மலர்வாணி கவிதையைக் குறித்து
 
முன்தலை முழுமதி! பின்தலை பேரரண்!
உன்தலை ஆசைக்கு அளவும் உண்டோ?
என்றன் தலையை வைரம் என்றாய்!
மின்னும் வைரமாய் எண்ணிப் பல்லோர்
என்றன் தலையை ஏலம் கேட்பார்!
நன்றே பெருத்த நற்றலை என்பதால்
ஏலம் விட்டே ஏறும் பணத்தால்
கோலம் கொள்வாள் என்குண சுந்தரி!
 
வாணி நீ.என் எழுத்தாணி ஆனால்
காணிப் பயிர்போல் கவிதை செழிக்கும்!
கலைமகள் நீ.என் கைப்பொருள் ஆனால்
அலைகடல் கூட என்கை அடங்குமே!
 
திருச்சுழி ஏந்தும் கையன்
  தேமலர்த் தாள்கள் போற்றி
அரும்மொழிப் பாடல் தந்த
  அணிமலர் வாணி வாழ்க!
பெரும்பொழில் தமிழைப் பேணிப்
  பீடுயர் வாழ்வைக் காண்க!
வரும்வழி வாழ்த்துப் பாட
  வளர்புகழ் பெற்றே வாழ்க!
 
அருணாசெல்வம் கவிதையைக் குறித்து!
 
தலைவா உன்றன் தலையை வாரித்
கலையாய்க் சீவச் கமழ்முடி இல்லை!
என்றன் மீதே என்ன கோபம்?
ஒன்றும் இல்லா மண்டை என்றே
இன்று பல்லோர் முன்னே சொன்னாய்!
அன்பில் சிறந்த அருமைக் கவியாய்
உன்னை எங்கும் உரைத்து மகிழ்வேன்!
இன்றேன் மாற்றம்? ஒன்றும் அறியேன்?
 
சீவி விட்டே சிரிக்கும் செயலும்,
ஏவி விட்டே ஏய்க்கும் செயலும்,
ஆவி விட்டே அடிக்கும் செயலும்,
தாவித் தாவித் தாண்டும் செயலும்,
கூவிக் கூவிக் குழப்பும் செயலும்,
அறியா என்றனுக்[கு] அழகை ஏந்தி
நெறியாய்த் சீவ நீள்முடி இல்லை!
ஊன முடிகள் உதிர்ந்து போயின!
ஞான முடியை நற்றமிழ் தந்தாள்!
பாட்டின் அரசாய்ப் பாராண் டிங்கே
யாப்பின் முடியை ஏந்துமென் தலையே!
 
வண்ணம் மின்னும் தமிழேந்தி
  வடிவாய் மின்னும் நடையேந்திக்
கண்ண தாசன் கவிதைகளின்
  கடமை அழகை வடித்திட்டார்!
உண்ணும் தேனார் சுளையாக
  உரைத்த கவிகள் இனித்தனவே!
எண்ணம் மின்னும் கவியருணா
  இன்பத் தமிழ்போல் வாழியவே!
 
கவிப்பாவை கவிதையைக் குறித்து!
 
என்றன் நெஞ்சைத் திறந்திட்டால்
  இன்பத் தமிழே இருக்குமென
அன்பின் நிறைவால் கவிபாடி
  அடியேன் உயிரைக் குளிர்வித்தாய்!
என்புள் ஓடும் குருதிக்கே
  உன்றன் பாடல் உரமூட்டும்!
நன்றே யாப்புக் கலைகற்று
  நாடு போற்ற வாழியவே!
 
கம்பன் இடத்தில் கவியரசர்
  காதல் கொண்டு வாழ்ந்ததையும்!
செம்பொன் இராமன் சீரடியைச்
  செப்பி நாளும் மகிழ்ந்ததையும்
இம்மண் உணரும் வண்ணத்தில்
  இசைத்த பாவை வாழியவே!
அம்மன் அருளால் தமிழ்ச்செல்வம்
  அடைந்து வாழ்க பல்லாண்டே!
 
வாழி! வாழி! வாழி
 
கவியரசர் நற்புகழைப் படைத்தோர் வாழி!
  காதுக்குள் கவியமுதைக் கொண்டோர் வாழி!
புவியரசர் போன்றிங்குத் தமிழைக் காக்கப்
  பொற்புடனே பணியாற்றும் தொண்டர் வாழி!
சுவையரசு செய்கின்ற கவியை, வண்ணச்
  சுடர்விழியால் பேசுகின்ற பெண்கள் வாழி!
தவமரசு செய்கின்ற தமிழ்த்தாய் வாழி!
  தழைத்தோங்கித் தமிழனத்தார் வாழி! வாழி!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.04.2015

mardi 25 avril 2017

கவியரசர் - பகுதி 2


கவியரசு கண்ணதாசன் விழா - பகுதி 2
கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
 
கண்ணனைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு மலர்வாணியை அழைத்தல்!
 
தமிழேந்திக் தகைவாணி
பேத்தி வருகவே!
அழகேந்தி அணியேந்தி
அடிகள் தருகவே!
 
களிபூட்டும் இசைகொண்டு
கவிதை பொழிகவே!
குளிரூட்டும் மொழிகொண்டு
கோலம் இடுகவே!
 
எழிலேந்தும் நடைகொண்டு
இனிமை சூடுக!
பொழிலேந்தும் மணங்கொண்டு
புதுமை நாடுக!
 
குயில்கூட்டம்! கிளிக்கூட்டம்
கூவப் பாடுக!
மயில்கூட்டம்! மான்கூட்டம்
மகிழ ஆடுக!
 
நலம்மேவி வளம்மேவி
பாக்கள் கொஞ்சுமே!
மலர்வாணி.. மது..வா..நீ
வாழ்த்தும் நெஞ்சமே!
 
கலைவாணி! கவிவாணி!
கவிதை சொல்கவே!
மலைவாணி அருள்கொண்டு
மன்றம் வெல்கவே!
 
கண்ணனிடம் கவிதாசன்
கண்ட பற்றினை!
வண்ணமுடன் வகைபாடி
உண்க பொற்பினை!
 
வாணி எழுகவே - தமிழ்த்
தோணி விடுகவே!
  
--------------------------------------------------------------------------
   
காதலைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு அன்பரசியை அழைத்தல்!
 
வண்ணம் மின்னும் அன்பரசி
எண்ணம் மின்னும் பொன்போலே!
கண்கள் மின்னும் கலையரசி
கவிதை மின்னும் விண்போலே!
 
சீர்கள் மின்னும் அருளரசி
செப்பும் கவிகள் தேனாகும்!
தார்கள் மின்னும் தமிழரசி
சாற்றும் நெறிகள் வானாகும்!
 
சிரிப்பு மின்னும் முகத்தரசி
சிந்தை யாப்பின் மலர்த்தோட்டம்!
வரிப்பூ மின்னும் வடிவரசி
வார்த்தை மேவும் மயிற்கூட்டம்!
 
மரபு மின்னும் மாண்பரசி
மனமே தமிழின் வீடாகும்!
பரிவு மின்னும் பெண்ணரசி
பக்திக்[கு] எதுதான் ஈடாகும்?
 
காதல் மின்னும் கவியரசைக்
கணிக்க இங்கே வந்திடுக!
ஊதல் மின்னும் இசைகூட்டி
ஓங்கும் தமிழைத் தந்திடுக!
 
அன்பரசி எழுகவே! - தமிழ்வயலை
நன்றாக உழுகவே!
     
--------------------------------------------------------------------------
  
கம்பனைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு கவிப்பாவையை அழைத்தல்!
 
கவிப்பாவைப் பெயர்கொண்டு கனிப்பாவை மொழிகொண்டு
கமழ்கின்ற மணமேந்தி வாராய்!
சுவைப்பாவை தமிழ்தந்த சுடர்ப்பாவை நெஞ்சேந்திச்
துயர்நீக்கும் அமுதேந்தித் தாராய்!
 
அருட்பாவைத் தினமுண்டும் அணிப்பாவை எழில்கொண்டும்
ஆள்கின்ற அறமேந்தி வாராய்!
திருப்பாவைத் தமிழுண்டு திருமாலின் அடிகண்டு
திரள்கின்ற அறிவேந்தித் தாராய்!
 
அன்பேந்தி அருளேந்திப் பண்பேந்திப் பணிவேந்தி
அழகேந்தும் அகமேந்தி வாராய்!
என்றென்றும் தமிழேந்தி ஈடில்லாக் குறளேந்தி
இன்பூறும் இசையேந்தித் தாராய்!
 
கம்பன்நற் றாள்பற்றி நம்கண்ண தாசன்தன்
கவிபாடப் பெண்ணே..நீ வாராய்!
இம்மன்றம் எழுந்தாடி இருகைகள் தாம்தட்ட
இன்பத்தேன் தரும்பாக்கள் தாராய்!
 
கவிப்பாவை வருகவே! - தமிழைச்
செவிப்பாறை உருகத் தருகவே!
 
-------------------------------------------------------------------------- 
 
கடமையைப் போற்றிய கவியரசரைப்
பாடவருமாறு அருணாசெல்வத்தை அழைத்தல்!
 
அருணா செல்வம்! திருநா மீதே
அன்னை நடந்திடுவாள் - தமிழ்
அன்னை நடந்திடுவாள்!
கருணா கரனின் கருணை யாலே
கவிதை சுரந்திடுவாள் - மதுக்
கவிதை சுரந்திடுவாள்!
 
என்றன் இடத்தில் மின்னும் தமிழை
ஏற்றுப் படித்தவராம்! - தமிழைப்
போற்றிக் குடித்தவராம்!
என்றும் தமிழின் கன்னல் நெறியை
ஏந்திக் களித்தவராம்! - தமிழில்
நீந்திக் குளித்தவராம்!
 
கதைகள் யாவும் புதையல் போன்று
கற்க இனித்திடுமே! - தமிழ்ப்
பற்றை அளித்திடுமே!
எதையும் இங்கே விதைபோல் இட்டே
ஏற்றம் கொடுத்திடுமே! - மன
ஊக்கம் தொடுத்திடுமே!
 
கண்ண தாசன் கொண்ட கடமை
காட்ட அழைக்கின்றேன் - கவி
சூட்ட அழைக்கின்றேன்!
எண்ண யாவும் வண்ண மேந்தி
இசைக்க அழைக்கின்றேன் - அவையை
அசத்த அழைக்கின்றேன்!
 
அருணா செல்வம் எழுகவே - தமிழ்ச்
செல்வம் பொழிகவே!
 
தொடரும்....
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.04.2015

lundi 24 avril 2017

கவியரசர் - பகுதி 1

கவியரசு கண்ணதாசன் விழா கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
 
திருமால் வணக்கம்!
 
கண்ணா! உன்றன் தாள்தொழுது
  கவிதைக் கதவைத் திறக்கின்றேன்!
வண்ணான் போன்றே இவ்வுலகின்
  மாசை அகற்ற அருள்தருவாய்!
தண்ணீர் மீது படுத்தவனே!
  தமிழின் மீது தவழ்ந்திடுவாய்!
கண்ணீர் மல்கி வேண்டுகிறேன்
  விண்ணீர் போன்றே தமிழ்பொழிவாய்!
 
தமிழ்த்தாய் வணக்கம்

வண்ணத் தமிழே! வானமுதே!
  வடிவாய் மின்னும் பேரழகே!
மண்ணில் பிறந்த முதன்மொழியே!
  மணக்கும் மலரே! மதுக்கனியே!
கண்ண தாசன் புகழ்பாடக்
  கவிஞன் உன்னை அழைக்கின்றேன்!
எண்ணம் மணக்கும் எழுத்துகளை
  என்..நா அமர்ந்து பொழிவாயே!
 
அவையோர் வணக்கம்

சந்தம் கொஞ்சும் தமிழ்நாடித்
  தஞ்சம் புகுந்த பெரியோரே!
பந்தம் கொஞ்சும் பைந்தமிழைப்
  பருகப் புகந்த பாவையரே!
முந்தும் பற்றால் முத்தமிழை
  மொழிய புகுந்த சான்றோரே!
உந்தும் அன்பால் என்னெஞ்சம்
  உரைக்கும் வணக்கம் ஏற்பீரே!
 
முன்னிலை வணக்கம்!
முன்னிலையை ஏற்றுள்ள என்றன் நண்பர்
  மூளைக்குள் திரைப்பாடல் யாவும் மின்னும்!
தன்னிலையை வளர்கின்ற காலந் தன்னில்
  தமிழ்நிலையை வளர்த்திடவே வாழு கின்றார்!
என்னிலையை நன்குணர்ந்தார்! என்றன் தோள்போல்
  இருந்தென்றும் செயலாற்றும் அன்பே கொண்டார்!
பொன்னிலையை இம்மன்றம் காண வேண்டிப்
  பொறுப்போடு தொண்டாற்றும் சிவனார் வாழ்க!
 
கவியரசர் புகழ்!
 
கண்ண தாசன் கவிதை தாசன்
காதல் தாசனடி!
எண்ணம் யாவும் இனிமை ஏந்தி
இசைத்த நேசனடி!
 
திருமால் அடியைத் தினமும் பாடித்
திளைத்த நெஞ்சனடி!
அரும்பால் அமுதை அவனின் பாக்கள்
அளித்து விஞ்சுமடி!
 
கங்கைக் கரையின் கண்ணன் அடியைக்
கண்டு களித்தாண்டி!
தங்கை அண்ணன் அன்பைப் பாடித்
தமிழில் குளித்தாண்டி!
 
புல்லாங் குழலின் புகழைப் போற்றிப்
புவியில் நிலைத்தாண்டி!
எல்லாம் அவனின் இயக்கம் என்றே
ஏற்றம் விளைத்தாண்டி!
 
கம்பன் தமிழில் காதல் கொண்டு
கவிதை புனைந்தாண்டி!
செம்பொன் இராமன் சீதை அடியைத்
தேடி இணைந்தாண்டி!
 
சீதை யழகில் சிந்தை மயங்கிப்
போதை அடைந்தாண்டி!
பாதை யாவும் பரமன் என்றே
பாடிப் பணிந்தாண்டி!
 
காட்டின் அரிமா காணும் ஆட்சி
கதைகள் சொல்லுமடி!
பாட்டின் அரிமா படைத்த பாக்கள்
பாரை வெல்லுமடி!
 
அண்ணன் என்ன? தம்பி என்ன?
கண்ணீர் வடித்தாண்டி!
மண்ணில் உள்ள மடமை கண்டு
வாடித் துடித்தாண்டி!
 
மேடை மணக்கும் மென்மைத் தமிழில்
விந்தை மொழிந்தாண்டி!
ஆடை மணக்கும் அருமைப் பெண்ணின்
அழகைப் பொழிந்தாண்டி!
 
கன்னல் தமிழைக் காத்தே நாளும்
கடமை புரிந்தாண்டி!
இன்னல் பட்ட இடத்தை எல்லாம்
எழுதிக் குவித்தாண்டி!
 
நாட்டின் நிலையை நன்றே பாடி
நன்மை பகன்றாண்டி!
காட்டின் மணமாய்க் கவிகள் தீட்டிக்
கடமை புகன்றாண்டி!
 
மாற்றம் ஒன்றே மாறா தென்று
மாறிக் குதித்தாண்டி!
ஆற்றின் நடையில் அடிகள் பாடிப்
அறிவைப் பதித்தாண்டி!
 
ஞாலம் வெல்லும் கோலத் தமிழை
நன்றே தீட்டியவன்!
காலம் வெல்லும் கவிதை பாடிக்
காதல் மூட்டியவன்!
 
விண்மின் நடுவே வெண்மை நிலவாய்
மேவி மின்னியவன்!
மண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை
வளமாய்ப் பின்னியவன்!
 
தனக்குத் தானே இரங்கல் பாடித்
தந்த கவியரசன்!
இனத்தின் நெஞ்சை என்றும் ஆளும்
ஈடில் புவியரசன்!
 
மனத்தின் வாசம் வனத்தின் வாசம்
வரைந்த கவியரசன்!
இனத்தின் வாசம் இசையின் வாசம்
ஈந்த புவியரசன்!
 
பணத்தின் வாசம் பழியாம் வாசம்
பற்றாக் கவியரசன்!
குணத்தின் வாசம் கோயில் வாசம்
கொண்ட மொழியரசன்!
 
மதுவின் வாசம் மலரின் வாசம்
மகிழ்ந்த கவியரசன்!
பொதுவில் உலகம் பொலிதல் என்றோ?
புகன்ற உரையரசன்!
 
செப்பும் மொழிகள் சீரார் நுாலைச்
செய்த கவியரசன்!
ஒப்பே இன்றி உயர்ந்த கவியால்
ஒளிரும் தமிழரசன்!
 
பாடி யளித்த பாக்கள் யாவும்
பண்டைத் தமிழ்காக்கும்!
கோடிப் புலவர் கூடி மகிழக்
கொஞ்சும் சுவைசேர்க்கும்!
 
தொடரும்....
 
23.04.2015

lundi 17 avril 2017

சித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]


 
திருமால் வணக்கம்!
 
நீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது
நிலைகொண்ட நெடுமாலே வாராய்!
நேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு
நிறைகொண்ட தமிழள்ளித் தாராய்!
கூர்கொண்ட கருக்கொண்டு குளிர்கொண்ட வளங்கொண்டு
குழல்கொண்ட இசையள்ளிச் சேர்ப்பாய்!
குணங்கொண்ட சொற்கொண்டு மணங்கொண்ட நற்செண்டு
குடிகொண்ட அணியள்ளி வார்ப்பாய்!
பார்கொண்ட அடிகொண்டு! பண்கொண்ட உளங்கொண்டு!
பாக்கொண்ட என்மீது வைப்பாய்!
பனிகொண்ட விழிகொண்டு! பழங்கொண்ட மொழிகொண்டு!
பரந்தாமா ஒருபார்வை பார்ப்பாய்!
கார்கொண்ட உருவோனே! கனிகொண்ட அருளோனே!
கவியள்ளி என்நெஞ்சுள் பூப்பாய்!
தார்கொண்ட திருமாலே! சீர்கொண்ட செழுமாலே!
தாள்தொட்டுத் தொழுகின்றேன் காப்பாய்!
 
தமிழ் வணக்கம்!
 
சீர்பூத்த தமிழே..உன் பேர்பூத்த கவிபாடச்
சிங்காரச் சொல்லேந்தி ஆடு!
தேனாறு பாய்ந்தோடத் தீஞ்சோலை பூத்தாடச்
தெம்மாங்கு நடையேந்திப் பாடு!
ஏர்பூத்த நிலமாகக் கார்பூத்த வளமாக
என்மார்பில் அணியள்ளிச் சூடு!
என்னாளும் உன்பிள்ளை பொன்னான புகழ்மேவ
எழிலேந்திப் பூக்கட்டும் ஏடு!
நீர்பூத்த மரையாக நிலம்பூத்த மழையாக
நெஞ்சத்துள் தமிழே..நீ கூடு!
நெறிபூத்த நோக்கோடு நிறைபூத்த வாக்கோடு
நிலையாகத் தரவேண்டும் பீடு!
பார்பூத்த மொழியாவும் பயன்பூத்து நின்றாலும்
பண்பூத்த தமிழே..பூக் காடு!
பாட்டுக்கே அரசாக்கிப் பகையோட்டும் முரசாக்கிப்
பாரிவோடும் இங்கென்னை நாடு!
 
அவையோர் வணக்கம்!
 
தேனுாறும் தமிழ்நாடிச் சீரூறும் இசைநாடி
திரண்டிங்கு வந்தோரே வணக்கம்!
சிறப்பூறும் சான்றோரே! செழிப்பூறும் ஆன்றோரே!
செவிமேவி என்பாட்டு மணக்கும்!
மானுாரும் விழிகொண்டு மதுவூறும் மொழிகொண்டு
வந்துள்ள பெண்டீரே வணக்கம்!
மாண்பூறும் என்பாட்டு! மதியூறும் என்பாட்டு!
மழையாக நெஞ்சத்தை நனைக்கும்!
ஊனுாறும் உணர்வேந்தி வானுாரும் ஒளியேந்தி
உவப்பூறும் இளையோரே வணக்கம்!
உயர்வூறும் வண்ணத்தில் ஒலியூறும் என்சந்தம்
உள்ளத்தைத் தாலாட்டி அணைக்கும்!
நானுாறி உண்கின்ற மீனுாறும் குழம்பாக
நல்வாசம் என்பாட்டுக் கொடுக்கும்!
ஞாலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டு
நாள்தோறும் இனமோங்கப் படைக்கும்!
 
நண்பர் வணக்கம்
  
எங்கே தமிழின் ஏற்றம் ஒளிக்கும்
அங்கே வருகை அளிக்கும் அன்பா்க்கு
என்முதல் வணக்கம்! இன்பத் தமிழின்
பண்பில் வாழும் பாவை யர்க்குப்
பாட்டின் அரசன் பகன்றேன் வணக்கம்!
 
வள்ளுவர் கலையகம் வழங்கும் இவ்விழா
உள்ளம் உவக்க ஓங்கி ஒளிர்க!
 
சித்திரை திருநாள் முத்துரை இட்டே
இத்திரை கொண்ட நித்திரை போக்கும்!
 
இயற்கை மணக்கும் இளவேனி திருநாள்
மயக்கம் கொடுத்து மஞ்சம் விரிக்கும்!
 
விழாவை நடத்தும் வெற்றி மனங்களைப்
பலாவைப் பாடைத்துப் பகன்றேன் வணக்கம்!
 
சங்கத் தலைவர்! தமிழுளம் கொண்டவர்!
பொங்குபுகழ் ஓவியர்! எங்களின் நண்பர்!
அண்ணா மலையார்! அன்பு கமழும்
பண்ணார் தமிழில் படைத்தேன் வணக்கம்!
  
முத்துமன நெஞ்சர்! முடியப்ப நாதர்!
கொத்துமலர் தந்து குவித்தேன் வணக்கம்!
   
தலைவர் தசரசன் சால்பைப் போற்றி
அலைபோல் தொடர அளித்தேன் வணக்கம்!
   
குளிர்மன நண்பர்! குணவதி மைந்தன்!
வளமெலாம் காண வடித்தேன் வணக்கம்!
  
மங்கை எலிசாபெத் மகிழ்வுறும் வண்ணம்
அங்கை இணைத்து அளித்தேன் வணக்கம்!
 
என்றன் மாணவி இன்மலர் வாணி
இன்னும் சிறக்க இசைத்தேன் வணக்கம்!
 
உறவாய் உள்ள உயர்நட ராசன்
சிறப்பினை எண்ணிச் செப்பினேன் வணக்கம்!
 
நற்கவிப் பாவை நலமுடன் பாடச்
பொற்புடன் வாழ்த்திப் பொழிந்தேன் வணக்கம்!
 
அன்பின் அரசி அருமைச் சுமதியார்
என்றும் சிறக்க ஈந்தேன் வணக்கம்!
 
அணிபோல் தமிழை ஆக்கி அளிக்கும்
மணியன் செல்வி! என்றன் மாணவி!
எல்லா பேறும் ஏற்று வாழப்
பல்லாண்டு பாடிப் படைத்தேன் வணக்கம்!
 
நாட்டியம் ஆடி நம்மை ஈர்த்துக்
காட்டிய அன்பர்க்குச் கலைசேர் வணக்கம்!
 
என்னைப் போன்றே அன்னைத் தமிழை
நன்றே காக்கும் நல்லார்க்கு வணக்கம்!
 
கம்பன் உறவும் கவிதை உறவும்
இன்மண் செழிக்க இசைத்தேன் வணக்கம்!
 
இருகை தட்டி என்கவி போற்றும்
இரும்புக் கரத்தர்! அரும்பு மனத்தர்
இன்நட ராசர்! என்றன் மாணவர்!
பொன்மனம் மின்னப் பொழிந்தேன் வணக்கம்!
 
நண்பர் கோகுலன் நட்பினைப் போற்றி
பண்புடன் சொன்னேன் பசுமை வணக்கம்!
 
சீர்ப்பணி யாற்றும் சிவஅரி ஐயா
ஈரடி தொட்டே இசைத்தேன் வணக்கம்!
 
தங்கை கணவர் தமிழ வாணர்க்கு
நுங்கைக் கொடுத்து நுவன்றேன் வணக்கம்!
 
ஆதி நண்பர்க்கு ஓதினேன் வணக்கம்!
 
சோதியைப் போற்றும் துாய தோழன்
மல்லன் மகிழ வழங்கினேன் வணக்கம்!
 
வல்ல தமிழால் வணக்கம் உரைத்துக்
கவிதை வானின் கதவைத் திறந்தேன்
செவியுடை அன்பர் செழுந்தமிழ் பருகவே!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.04.2017

dimanche 16 avril 2017

வெண்பா மேடை - 45கரந்துறை வெண்பா

நிறைமொழி சூட்டி நிலமோங்கும் பெண்ணே!
மறைமொழி காட்டிமகிழ் மாதே! - துறைமொழி
யாளே! உயர்மாந்தர் ஏத்தும் பெருமையளே!
நாளே சுடர்விடும் நன்கு!

ஒரு செய்யுளில் மற்றொரு செய்யுள் மறைந்திருப்பது கரந்துறை செய்யுள் என்னும் மிறைக்கவியாகும். [மிறைக்கவி - சித்திரகவி]

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

இந்தக் குறளில் உள்ள அனைத்து சீர்களும் மேலுள்ள வெண்பாவில் மறைந்திருக்கிறது.

கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!

இந்தக்  கரந்துறை வெண்பாவில்

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!

என்ற குறட்பா மறைந்துள்ளது.

குறட்பா ஒன்று மறைந்திருக்கும் வண்ணம் கரந்துறை நேரிசை வெண்பா  பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.04.2017

சித்திரை [பகுதி - 1]

சித்திரைக் கவியரங்கம்
 
சித்திரைப் பெண்ணே! சித்திரைப் பெண்ணே!
சிந்தை புகுந்தவளே!
முத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க
மோகம் புரிந்தவளே!
 
இத்தரை மீதில் என்றமிழ் மக்கள்
என்று இணைவாரோ?
நித்திரை நீங்கி நீள்புகழ் காண
நின்று உழைப்பாரோ?
 
எத்தடை வந்தும் எம்படை வெல்ல
ஏற்றங் கொடுப்பாயே!
அத்திரை கடலாய் அவ்விரி வானாய்
ஆற்றல் அளிப்பாயே!
 
நாட்டைச் சுரண்டும் நரிகளை நாங்கள்
நம்பி இருந்தோமே!
வீட்டை இழந்தும் விதியை நினைந்தும்
வெம்பித் துடித்தோமே!
 
கோட்டை புகுந்தார் கொள்ளை அடித்தார்
கொள்கை துறந்தாரே!
வேட்டை புரிந்த வெறிப்புலி போன்றே
நாட்டை அழித்தாரே!
 
தாய்மொழிப் பற்றைத் தம்மினப் பற்றைத்
தமிழர் இழந்தாரே!
வாய்மொழி யாவும் காய்மொழி யாகி
வரண்டு விழுந்தாரே!
 
உழவரின் வாழ்வு உறுதுயர் நீங்க
உள்ளம் தரித்திடுவாய்!
அழகுடன் காவிரி அணையைத் திறந்து
அல்லல் அகற்றிவாய்!
 
அடிதடிக் குண்டர் ஆட்சியில் ஏறி
ஆடிக் களிக்கின்றார்!
கொடுநரிக் கூட்டர் கொழுப்பிங் கேறிக்
குவிந்து கிடக்கின்றார்!
 
வாக்கிடும் வேலை வந்துறும் காசு
வாழ்வைச் சிதைத்திடுமே!
தாக்கிடும் பகைமுன் தாழ்ந்திடும் நிலையேன்
சால்பைப் புதைத்திடுமே!
 
காலைப் பிடிப்பார்! கயவரைத் தொழுவார்!
காறி உமிழ்ந்திடுவாய்!
மாலைகள் ஏற்க மந்தையாய் நிற்கும்
மடமை எரித்திடுவாய்!
 
காவி அணிந்தே காதல் புரிந்தே
கடவுள் எனச்சொல்வார்!
கூவி அழைத்தே கூடிக் களித்தே
கொலைகள் புரிந்திடுவார்!
 
சாதியின் பிரிவைச் சாத்திரப் பிரிவைத்
தமிழர் தலைக்கொண்டார்!
சோதியின் நெறியைத் துாயவர் வழியைச்
சூடப் பயங்கொண்டார்!
 
மண்ணிதில் மூத்த மாண்புடைத் தமிழர்
மரபை மறப்பதுவோ?
புண்ணதில் புரளும் புழுவெனத் தமிழர்
புழுத்து இழிவதுவோ?
 
செம்மொழித் தாயின் திண்மையைச் செப்பிச்
சீரைப் புகட்டுகவே!
வெம்பழிப் போக்கை வீண்ணுறும் வாழ்வை
வெட்டி விரட்டுகவே!
 
அன்பொளிர் வண்ணம் அறமொளிர் வண்ணம்
அழகை அணிந்திடுவாய்!
இன்பொளிர் வண்ணம்! இசையொளிர் வண்ணம்
ஏற்றம் அளித்திடுவாய்!
 
பண்ணறிவு ஏந்திப் பாடிய பாட்டைப்
பாரில் முழங்கிடுவாய்!
நுண்ணறிவு ஏந்தித் தண்டமிழ் மக்கள்
மின்னப் புகழ்தருவாய்!

இன்னும் வளரும்.....
 
பாட்டின் இலக்கணம்
 
சந்த மாத்திரையில் கணக்கிட்டு எழுதிய இசைப்பாடல்.
 
5+4+5+4+5+7 என்ற சந்த மாத்திரையை ஒவ்வொரு அடியும் பெற்றுள்ளது. ஈரடி ஒரு கண்ணியாகும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். ஈரடியும் இயைபு பெறவேண்டும்.
சீரின் ஈற்றில் உள்ள குறில் 2 மாத்திரையைப் பெறுவதும் உண்டு.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.04.2017

lundi 10 avril 2017

கையறுநிலை

முனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை
 
ஏனோ பிரிந்தனையோ? இங்குப் பிறந்ததும்
வீணோ எனமனம் வெந்தனையோ? - வானோரும்
அந்தமிழை நாடினரோ? அ.அறிவு நம்பியே!

எந்தமுளம் தேடுமுனை இங்கு!
 
ஆழ்ந்த உரையெங்கே? அன்பு மனமேங்கே?
சூழ்ந்த புகழெங்கே? துாய்மையுடன் - வாழ்ந்தவுன்
ஆற்றலறம் எங்கே? அருமறிவு நம்பியே!
கூற்றுவனைக் கொண்டதேன் கூறு
 
கம்பன் கவியாய்ந்தாய்! கன்னல் குறளாய்ந்தாய்!
இம்மண் உவக்க எழுத்தீந்தாய்! - நம்மொழி
ஆள அகங்கொண்டாய்! அ.அறிவு நம்பியே!
மீளாப் பிரிவேன் விரைந்து?
 
இளங்கோ இசையுணர்ந்[து] ஈந்த அரும்நுால்
வளங்கோ வகுத்தவழி வார்க்கும்! - விளக்கமினி
யாரிடம் யாம்பெறுவோம்? அ.அறிவு நம்பியே!
ஓரிடம் உன்னிணை ஓது?
 
எழுத இதழூண்டாம்! ஏற்றபணி யுண்டாம்!
தொழுத கலையுண்டாம்! தொன்மை - மொழிண்டாம்!
எல்லாம் உனைத்தேட, இன்னறிவு நம்பியே!
சொல்லாமல் சென்றாய் துணிந்து!

 
ஆழ்ந்த துயருடன்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]


மலைமகளே!
வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]
 
1.
அன்னை உன்னடி
என்னைக் காத்திடும்!
முன்னைப் புண்வினை
தன்னை நீக்கிடும்!
 
2.
மஞ்சள் ஆடையில்
நெஞ்சம் சொக்கிடும்!
கொஞ்சும் புன்னகை
தஞ்சம் நல்கிடும்!
 
3.
செம்மை ஆடையே
வெம்மை போக்கிடும்!
அம்மை பார்வையே
எம்மை தாங்கிடும்!
 
4.
பொன்சேர் ஆடையும்
மின்சேர் மாலையும்
என்சேர் வாழ்வினை
இன்சேர் ஆக்கிடும்!
 
5.
பச்சை ஆடையோ
இச்சை ஈந்திடும்!
பொச்சை என்மனம்
பிச்சை ஏந்திடும்!
 
6.
வஞ்சி மேவிடும்
பஞ்சி ஆடையின்
விஞ்சும் பேரெழில்
நெஞ்சுள் நின்றிடும்!
 
7.
சக்தி உன்னுரு
பக்தி ஊட்டிடும்!
புத்தி கூட்டிடும்!
முத்தி காட்டிடும்!
 
8.
தேவி உன்முகம்
ஆவி ஆழ்ந்திடும்!
காவி ஞானியர்
மேவிக் கூத்திடும்!
 
9.
மண்ணும் உன்னருள்!
விண்ணும் உன்னருள்!
தண்ணும் உன்னருள்!
பண்ணும் உன்னருள்!
 
10.
பாடிச் சாற்றினேன்!
ஆடிப் போற்றினேன்!
தேடி நன்மலர்
கோடி சூட்டினேன்!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.04.2017

வெண்பா மேடை - 44


குறளொளிர் வெண்பா
 
காத்துக் களிக்கின்றான்! காலம் சுழன்றுவரப்
பூத்துக் களிக்கின்றான்! பொற்புடையான்! - மூத்த
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்!
 
என்மேனி சொக்கிடுமே! இன்பக் கலைபயின்று
பொன்மேனி யாகிப் பொலிந்திடுமே! - என்றென்றும்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
 
இன்னல் வராமல் இனிதுறவே காத்திடுவாள்!
கன்னல்மொழி கேட்டுக் களித்திடுவாள்! - மன்னுலகில்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்!
  
வெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் ஒருகுறளின் சிறு விளக்கமும் பின்னிரண்டு அடிகளில் குறட்பாவும் அமைந்திருப்பதுபோல் ஒரு வெண்பா இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.04.2017

mercredi 5 avril 2017

வஞ்சிப்பா - 1

வஞ்சிப்பா மேடை - 1
 
வஞ்சிப்பாவின் பொதுவிலக்கணம்
 
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா. இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா.
 
வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களே இப்பாட்டில் பெரும்பாலும் வரும். நிரையீற்று நாலசைச் சீர்களும் அருகி வரும், சிறுபான்மை மற்றச் சீர்களும் வரும்.
 
வஞ்சிப்பா துாங்கலோசையைப் பெற்று வரும். கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்த ஏந்திசைத் துாங்கலோசை யாகும். கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித் தளையால் அமைந்த அகவல் துாங்கலோசை யாகும். ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகள் கலந்து வருவதும், அவைகளுடன் மற்றத் தளைகள் கலந்து வருவதும் பிரிந்திசைத் துாங்கலோசையாகும். [பெரும்பான்மை ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் வரும்] [அருகியே மற்றத் தளைகள் வரும்]
 
வஞ்சியடிகளுக்குச் சிற்றெல்லை மூன்று அடிகள். பேரெல்லை அளவில்லை. [பாடுவோர் எண்ணப்படி எத்தனை அடிகளையும் பெற்று வரும்]
 
வஞ்சியடிகள் இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற்று வரும்.
 
குறளடி வஞ்சிப்பாவில் மோனை கட்டாயமில்லை. சிந்தடி வஞ்சிப்பாவில் மூன்றாம் சீரில் மோனை அமைதல் மேண்டும் [அல்லது இரண்டாம் சீரில் அமைதல் வேண்டும்]
 
தனிச்சொல், ஈரசையில் அமைவது சிறப்பாகும். [சிறுபான்மை குற்றியலுகரத்தைப் பெற்ற மூவசையும் வரும்]
 
ஆசிரியச் சுரிதகம் என்பது ஆசிரியப்பாவாகும். ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்று அடிகளாகும். வஞ்சிப்பாவில் வரும் ஆசிரியச் சுரிதகம் இரண்டு அடிகளைப் பெறுவதும் உண்டு. பெரும்பான்மை நேரிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [ஈற்றயல் அடி மூன்று சீர்களைப் பெறுவது]. சிறுபான்மை இன்னிசை ஆசிரியச் சுரிதகம் வரும் [அனைத்து அடிகளும் நான்கு சீர்களைப் பெறுவது]. ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும். [இப்பாவில் வெண்பாச் சுரிதகம் வராது]
 
ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா
 
கண்ணன்தரும் கவிதைப்பொழில்
எண்ணந்தனில் இடுமேநலம்!
கண்ணில்தினம் கனவேவரும்!
மண்ணின்மணம் வளமேதரும்!
அண்ணல்மொழி அருளின்மழை!
உண்ணுஞ்சுவை உறையும்நடை!
தமிழேஅவன்! தவமேஅவன்!
அமுதேஅவன்! அணியேஅவன்!
 
என்று [தனிச்சொல்]
 
நெஞ்சம் பாடும்! கொஞ்சி யாடும்!
வஞ்சிப் பாட்டின் வாசம் சூடும்!
மன்னன் தோளை மங்கை
பின்னும் நாளே பிறப்பின் பேறே!
 
மேலுள்ள வஞ்சிப்பா, கனி முன் நிரை வந்த ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்தது. அனைத்து அடிகளிலும் மோனை வரும் வண்ணம் பாடியுள்ளேன். [மோனை கட்டாயமில்லை] [இவ்வஞ்சியடிகளில் இரண்டாம் சீர் கனிச்சீராகவே வந்துள்ளன, அவ்விடங்களில் புளிமாங்காயும், கருவிளங்காயும் வரலாம்] [ நிரையை முதலாக உடைய மற்றச் சீர்களும் அருகி வரலாம்] [அனைத்துச் சீர்களும் புளிமாங்கனியாகவும் கருவிளங்கனியாகவும் இருக்கும் வஞ்சியடிகளே சிறப்புடைய ஏந்திசைத் துாங்கலோலையை நல்கும்]
 
தனிச்சொல் [என்று] ஈரசையைப் பெற்றுள்ளது.
இப்பாடல் நான்கடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்துள்ளது.
 
கண்ணே!
[சிறப்புடைய ஒன்றிய வஞ்சித்தளையால் வந்த குறளடி வஞ்சிப்பா]
 
குழலுறும்எழில் குளிர்தருமடி!
ஒழுகிடும்நடை உயிர்புகுமடி!
கயலுறுவிழி கவிதருமடி!
மயலுறுமொழி மதுதருமடி!
தினமொருவுடை திகைதருமடி!
வனமெனவுடல் மணந்தருமடி!
கனிதருஞ்சுவை கரம்தருமடி!
நனிபுகழ்பணி நலந்தருமடி!
மலருறுபதம் மகிழ்தருமடி!
கலையொளிர்உருக் கனவுறுமடி!
நாளும்
உன்னை எண்ணி உருகும்
என்னை அணைத்தே இன்பம் தருகவே!
 
விரும்பிய பொருளில் குறளடி வஞ்சிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
[வஞ்சியடிகள் ஆறு அமையவேண்டும்] [நேரிசைச் சுரிதகம் மூன்றடியில் இருக்க வேண்டும்]
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வஞ்சித்தாழிசைவஞ்சித் தாழிசை
 
[ஒரே பொருளைப் பற்றி மூன்று வஞ்சித்துறைகள் பாடினால் வஞ்சித்தாழிசை ஆகும்]
 
ஈசன் திருவடி! [ தேமா + காய்]
 
1.
தில்லைத் திருக்கூத்தன்
முல்லை அடி..தொழுவாய்!
எல்லை இலாத்துயரம்
இல்லை இனியென்பாய்!
 
2.
சூடும் அரும்வாழ்வை
ஆடும் திருத்தாள்கள்!
பாடும் மனமோங்கி
நாடும் பெரும்வீடே!
 
3.
தேங்கும் வினைதீர்க்கும்
ஓங்கும் திருப்பாதம்!
ஏங்கும் மனமேவ
நீங்கும் தொடர்பிறவி!

---------------------------------------------------------------------------------------------
 
அடிமறி வஞ்சித்தாழிசை!
 
[ஒரு பாட்டின் நான்கு அடிகளை இடம் மாற்றி வைத்தாலும் பொருள் வரும் வண்ணம் அமையவேண்டும்]
 
என்னெஞ்சே! [ தேமா + புளிமாங்காய்]
 
1.
பித்தம் தெளியாதோ?
நித்தம் துயர்ஏனோ?
சித்தம் அறியாதோ?
கத்தும் வலியேனோ?
 
2.
துன்பம் விலகாதோ?
இன்பம் படராதோ?
அன்பும் மலராதோ?
மன்னும் வலியேனோ?
 
3.
நாட்டும் பழியேனோ?
கூட்டும் பகையேனோ?
மூட்டும் வெறியேனோ?
வாட்டும் வலியேனோ?
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

lundi 3 avril 2017

வஞ்சித்துறை - 3

திருமகள்
வஞ்சித்துறை [தேமா + கருவிளம்]
 
1.
பொற்றார் புகழ்மகள்
நற்றார் நறுமனம்
சொற்றார் கவியெனைப்
பற்றா[து] இருப்பதோ?
 
2.
தேனார் திருமகள்
மீனார் வியன்விழி
கானார் கவியெனை
ஏனோ வெறுப்பதோ?
 
3.
மின்னும் மலர்மகள்
மன்னும் பெருவளம்
கன்னல் கவியெனக்[கு]
இன்னல் அளிப்பதோ?
 
4.
சீர்சேர் செழுமகள்
தார்சேர் திருவடி!
பேர்சேர் கவியெனைக்
கார்சேர் விடுப்பதோ?
 
5.
கண்ணன் மனத்தினில்
நண்ணும் நலமகள்!
பண்ணன் எனக்கருள்
ஒண்ண மறுப்பதோ?
 
6.
பூவார் பொழின்மகள்
துாவார் அணிவகை
பாவார் கவியெனை
மேவா[து] இருப்பதோ?
 
7.
எந்தை இறையிடம்
விந்தை பொழிமகள்!
முந்தை வினையனென்
சிந்தை தொழுதிடும்!
 
8.
ஊழின் துயர்பல
சூழும் நிலையிலும்
தாழும் எனதுயிர்
ஆழும் திருவையே!
 
9.
அன்னை நினைவினில்
என்னைக் கரைக்கிறேன்!
பொன்னை நிகர்மனந்
தன்னை அடைகிறேன்!
 
10.
எண்ணம் இனித்திடும்
வண்ணம் வடித்திடும்!
விண்ணின் வியன்மகள்
கண்ணுள் கமழ்கிறாள்!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.04.2017

samedi 1 avril 2017

வஞ்சித்துறை - 3


கலைமகள்
வஞ்சித்துறை [தேமா + புளிமா]
 
1.
பூவில் இருந்தென்
பாவில் அமர்ந்தாய்!
கோவில் எனவென்
நாவில் அமர்ந்தாய்!
 
2.
வெள்ளை மலர்சேர்
கொள்ளை அழகே!
பிள்ளை மனஞ்சேர்
வள்ளை வளமே!
 
3.
தேடும் பொருளை
நாடும் உளத்துள்
பாடும் பொருளைச்
சூடும் அருளே!
 
4.
மீட்டும் இசையை
ஊட்டும் வடிவே!
பாட்டும் நடமும்
கூட்டும் ஒளியே!
 
5.
ஞானம் அளிக்கும்
மோனத் திருவே!
கானம் அளிக்கும்
வானத் தமுதே!
 
6.
ஓங்கும் தவத்துள்
தேங்கும் சுவையே!
ஏங்கும் எனையும்
தாங்கும் அறிவே!
 
7.
புற்கள் படரும்
கற்கள் சுடரும்
சொற்கள் பிறந்து
நற்கள் பொழியும்!
 
8.
எண்மை அளிப்பாய்!
ஒண்மை அளிப்பாய்!
தண்மை அளிப்பாய்!
வண்மை அளிப்பாய்!
 
9.
அண்மை இருந்து
நுண்மை கொடுப்பாய்!
உண்மை சிறக்கும்
திண்மை கொடுப்பாய்!
 
10.
நன்மை வடிக்கும்
தன்மை அளிப்பாய்!
தொன்மைத் தமிழால்
வன்மை அளிப்பாய்!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்