முனைவர் பூங்குழலி ஆறுமுகப்பெருமாள்
பிறந்தநாள் வாழ்த்து!
கூடைக் கனிகள்
மேடை யுரையில்
கொடுக்கும் முனைவர் பூங்குழலி
கோடை யென்ன
குளிர்தான் என்ன
கொண்ட பணிகள் உயர்வூட்டும்!
ஆடை யழகும்
அணியின் அழகும்
ஆகா வென்றே வியப்பூட்டும்!
வாடைக் காற்றும்
தென்றல் காற்றும்
வாழ்த்துப் பாடும் வாழியவே!
புதுவை மண்ணின்
பொதுமை காக்கப்
பூத்த முனைவர் பூங்குழலி
எதுகை யென்ன
மோனை யென்ன
இனிக்க வினிக்க மொழிபூக்கும்!
மதுவைக் குழைத்து
வடித்த நுால்கள்
மணக்க மணக்கச் நலஞ்சேர்க்கும்!
புதுமைப் பெண்ணாய்ப்
புவியே போற்றப்
புகழே மேவும் வாழியவே!
தேடிச் சென்றும்
ஓடிச் சென்றும்
உதவும் முனைவர் பூங்குழலி
பாடிப் படைத்த
பாட்டுக் குள்ளே
பசுமைத் தமிழே கூத்தாடும்!
சூடிக்
களிக்குஞ் சோலைப் பூக்கள்
சொல்லும் பொருளில் மூத்தாடும்!
கோடி
மகளிர் கொண்ட அவையுள்
கோல நிலவாய் வாழியவே!
பிறந்த
நாளில் சிறந்த வாழ்த்தைச்
சேர்க்கும் முனைவர் பூங்குழலி
திறந்த மனமும்
செம்மைக் குணமும்
சீர்கள் பெருக வழிகாட்டும்!
கறந்த பால்போல்
கன்னல் தேன்போல்
கால மெல்லாம் சுவையூட்டும்!
நிறைந்த புகழும்
நிலைத்த பேரும்
நிலமே வாழ்த்தும் வாழியவே!
அண்ணா வென்றே
யென்னை யழைக்கும்
அருமை முனைவர் பூங்குழலி
கண்,நா, மூக்குச்
செவிகள் யாவும்
கம்பன் தமிழில் வளங்காணும்!
கண்ணா வென்றே
கருணை வேண்டிக்
கமழும் வாழ்வு கலைபூணும்!
பண்,நா கொண்ட
பாட்டின் அரசன்
பல்லாண்[டு] உரைத்தேன் வாழியவே!
பாட்டரசர் கி.
பாரதிதாசன்
12.11.2024