samedi 30 novembre 2024

அம்மானை


 

கலிப்பா மேடை – 62

 

கலித்தாழிசை – 5

 

அம்மானை

 

அம்மானை என்பது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிகையில் அமைந்த எலுமிச்சம்பழம் போன்ற காய்களை எறிந்து அவை கீழே விழாமல் பிடித்து விளையாடும் பெண்கள் விளையாட்டு.

 

அம்மானை ஆடும் போது ஒருத்தி  ஒரு கருத்தைக் கூறுவாள், அடுத்தவள் அதில் ஒரு வினாவை எழுப்புவாள், மூன்றாமவள் விடை கூறுவாள். மூவர் பாடுவதும், இருவர் பாடுவதும், ஒருவரே பாடுவதும் உண்டு.

 

அம்மானைப் பாடல் கலித்தாழிசையில் அமைதலும் உண்டு. வெண்டளை பயின்று வரும்.  முதல் மூன்றடிகள் அளவடியாய், ஈற்றடி எண்சீர் அடியாய் வரும். இரண்டாம் அடி ஈற்றிலும், நான்காம் அடி ஈற்றிலும், அதன் அரையடி ஈற்றிலும் அம்மானை என்ற சொல் அமையும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும். நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீருக்கும் அடுத்த அடி முதற்சீருக்கும் தளைகோடல் கூடாது [வெண்டளை கட்டாயமில்லை], ஆனால் அவ்விடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளை அமையாது.

 

அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.

 

சோழன் புகழ் அம்மானை

 

1.

வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?

ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

துாங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

…… சோழன் புகார்நகரம் பாடலோர் அம்மானை!

 2.

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்யார் அம்மானை?

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்முன் வந்த

கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை!

…… காவலன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

3.

கடவரைகள் ஓரெட்டும் கண்ணிமையா காண

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை?

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக்கு எட்டும்

குடைநிழலில் கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை!

……கொற்றவன்தன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

 

[சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை – 16, 17, 18]

.

பாட்டரரசர் அம்மானை!


1.

சீர்மணக்கப் பாட்டெழுதிச் சிந்தை கவர்கின்ற
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் அம்மானை!
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் நாடுண்டோ?
தார்மணக்கம் கோலுண்டோ? சாற்றுகவே அம்மானை!
……தமிழ்தந்த கோல்கொண்டு தாமாள்வார் அம்மானை!

2.

வெள்ளாடைப் பாட்டரசர் மேடை மணம்வீசம்!

முள்ளோடை மண்கூட முத்தாகும் அம்மானை!
முள்ளோடை மண்கூட முத்தாகும்  நற்றொழில்

ஒள்ளாடை வீணாகி ஓய்வுறுமே அம்மானை?
……ஒண்டமிழர் நுாலாடை ஒளிவீசும் அம்மானை!

3.

வல்ல புகழ்மேவி வாழ்கின்ற பாட்டரசர்

சொல்லச் செவியுருகிச் சொக்கிடுவார் அம்மானை!
சொல்லச் செவியுருகிச் சொக்குவது மாமாயம்

நல்ல செயலாமோ நல்கிடுவாய் அம்மானை?

……நல்லார் நடையழகு சீருரைக்கும் அம்மானை!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
02.07.2022


அம்மானைப் பாடலில் ஈற்றில் வரும் விடைமொழியுள்  இருபொருள்படச் சிலேடை அமைதல் சிறப்பாகும். முப்பொருள் நாற்பொருள்படச் சிலேடை அமைதல் மிகச் சிறப்பாகும். மேலுள்ள பாட்டரசர் அம்மானையில் முதல் பாடலில் [கோல் – பிரம்பு, எழுதுகோல்] இரண்டாம் பாடலில்  [நுாலாடை – ஆடை, நுால்கள்]  மூன்றாம் பாடலில் [நடையழகு – பாட்டின் தொடையழகு, வாழ்வின் ஒழுக்கம்] என  இருபொருள் சிலேடை வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை அம்மானை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.11.2024

samedi 23 novembre 2024

இடைமடக்காய் வந்த கலித்தாழிசை

 


கலிப்பா மேடை – 61

 

கலித்தாழிசை – 4

[இடைமடக்காய் வந்த கலித்தாழிசை]

 

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்

கேள்வரும் போழ்தில் எழால்,வாழி வெண்திங்கள்!

கேள்வரும் போழ்தில் எழாதாய்க் குறாலியரோ

நீள்வரி நாகத்து எயிறே, வாழி வெண்திங்கள்!

 

[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]

 

எண்ணங்கள் கூத்தாடும்! இன்பத்தைப் பூத்தாடும்!

வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும்! என்செய்வேன்?    

வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும் நள்ளிரவில்

உண்ணுங்..கள் போதையினை

….......................உள்ளாவி உற்றாடும் என்செய்வேன்?

 

[பாட்டரசர்]

 

இவை வெண்டளையால் அமைந்த நான்கடிப் பாடல். ஒரே பொருள்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் தம்முள் ஒத்து இடைமடக்காய் வந்த கலித்தாழிசையாகும். முதல் மூன்றடிகளில் நான்கு சீர்கள். ஈற்றடியில் ஐந்து சீர்கள். நான்கடியும் ஓரெதுகை. சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை.

 

இடையில் உள்ள இரண்டடிகள் அடியின் தொடக்கத்தில் மடக்குப் பெற்றன. மேலுள்ள முதல் பாடலில் இடையில் உள்ள இரண்டு அடிகளில்  ‘கேள்வரும் போழ்தில்’ என்ற இருசீர்கள் அடியின் தொடக்கத்தில் மடக்காக வந்தன. இரண்டாம் பாடலில் ‘வண்ணங்கள் பல்கோடி வார்த்தாடும்’ என்ற சீர்கள் மடக்காக வந்தன.

 

இரண்டாம் அடியின் ஈற்றுச்சீரும் நான்காம் அடியின் ஈற்றுச்சீரும் மடக்காக அமைந்தன. முதல் பாடலில் ‘வெண்திங்கள்’ என்ற சீர் மடக்காக வந்தது. இரண்டாம் பாடலில் ‘என்செய்வேன்’ என்ற சீர் மடக்காக வந்தது. 

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

22.11.2024

vendredi 15 novembre 2024

கலியொத்தாழிசை - 2

 


கலிப்மேடை - 60

கலித்தாழிசை – 3

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.

 

கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்பர்.

கலியொத்தாழிசை - 2

வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை


1.

செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்

பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

2.

முத்தேவர் தேவை முகிலுார்தி முன்னான

புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

3.

அங்கற் பசுங்கன் றளித்தருளும் தில்லைவனப்

பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

 

[சிதம்பரச் செய்யுட் கோவை]

 

1.

கொய்தினை காத்தும், குளவி அடுக்கத்தெம்

பொய்தல் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

2.

ஆய்வினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

3.

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்

குன்றச் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

 

[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]

 

1.

சாதிவெறிப் பித்தேந்திச் சண்டையிடும் இவ்வுலகம்

நீதிநெறி நெஞ்சேந்தி நிம்மதியாய் வாழ்வுபெறல் எந்நாளோ?

2.

பொல்லாச் சமயவெறிப் போர்நடத்தும் இவ்வுலகம்

எல்லாம் ஒருநிலையே என்றெண்ணி வாழ்வுபெறல் எந்நாளோ?

3.

மண்பறித்துக் கூத்தாடும்! புண்ணரித்த இவ்வுலகம்

கண்பறித்துக் கூத்தாடும்! காப்புரிமை வாழ்வுபெறல் எந்நாளோ?

 

[பாட்டரசர்]

 

1.

பண்ணெழிலால் பாட்டரசன் பார்புகழைப் பெற்றாலும்

கண்ணெழிலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

2.

சீர்க்குழலால் பாட்டரசன் பேரின்பம் பெற்றாலும்

கார்க்குழலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 3.

வேலழகால் பாட்டரசன் வெற்றிகளைப் பெற்றாலும்

காலழகால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 

[பாட்டரசர்]

 

இவை வெண்டளையால் அமைந்த ஈரடிப் பாடல்கள்.  ஒரே பொருள்மேல் மூன்றடிக்கி வந்த கலியொத்தாழிசை. முதல் அடியில் நான்கு சீர்கள். இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள். இரண்டடியும் ஓரெதுகை. சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை. மூன்று பாடல்களிலும் ஈற்றில் மடக்கமையும்.

 

முதல் பாடலில் ‘புகழ்மினோ வம்மின் புலவீர்காள்’ என்றும், இரண்டாம் பாடலில் ‘சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்’ என்றும், மூன்றாம் பாடலில் ‘வாழ்வுபெறல் எந்நாளோ’ என்றும்  நான்காம் பாடலில் ‘வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!’ என்றும் மடக்கு அமைந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.11.2024

mardi 12 novembre 2024

முனைவர் பூங்குழலி பெருமாள்

 


முனைவர் பூங்குழலி ஆறுமுகப்பெருமாள்

பிறந்தநாள் வாழ்த்து!

 

கூடைக் கனிகள் மேடை யுரையில்

  கொடுக்கும் முனைவர் பூங்குழலி

கோடை யென்ன குளிர்தான் என்ன

        கொண்ட பணிகள் உயர்வூட்டும்!

ஆடை யழகும் அணியின் அழகும்

        ஆகா வென்றே வியப்பூட்டும்!

வாடைக் காற்றும் தென்றல் காற்றும்

        வாழ்த்துப் பாடும் வாழியவே!

 

புதுவை மண்ணின் பொதுமை காக்கப்

        பூத்த முனைவர் பூங்குழலி

எதுகை யென்ன மோனை யென்ன

        இனிக்க வினிக்க மொழிபூக்கும்!

மதுவைக் குழைத்து வடித்த நுால்கள்

        மணக்க மணக்கச் நலஞ்சேர்க்கும்!   

புதுமைப் பெண்ணாய்ப் புவியே போற்றப்

        புகழே மேவும் வாழியவே!

 

தேடிச் சென்றும் ஓடிச் சென்றும்

        உதவும் முனைவர் பூங்குழலி

பாடிப் படைத்த பாட்டுக் குள்ளே

        பசுமைத் தமிழே கூத்தாடும்!

சூடிக் களிக்குஞ் சோலைப் பூக்கள்

        சொல்லும் பொருளில் மூத்தாடும்!

கோடி மகளிர் கொண்ட அவையுள்

        கோல நிலவாய் வாழியவே!

 

பிறந்த நாளில் சிறந்த வாழ்த்தைச்

        சேர்க்கும் முனைவர் பூங்குழலி

திறந்த மனமும் செம்மைக் குணமும்

        சீர்கள் பெருக வழிகாட்டும்!

கறந்த பால்போல் கன்னல் தேன்போல்

        கால மெல்லாம் சுவையூட்டும்!

நிறைந்த புகழும் நிலைத்த பேரும்

        நிலமே வாழ்த்தும் வாழியவே!

 

அண்ணா வென்றே யென்னை யழைக்கும்

        அருமை முனைவர் பூங்குழலி

கண்,நா, மூக்குச் செவிகள் யாவும்

        கம்பன் தமிழில் வளங்காணும்!

கண்ணா வென்றே கருணை வேண்டிக்

        கமழும் வாழ்வு கலைபூணும்!

பண்,நா கொண்ட பாட்டின் அரசன்

        பல்லாண்[டு] உரைத்தேன் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

12.11.2024

samedi 9 novembre 2024

கலியொத்தாழிசை - 1

 


கலிப்மேடை - 59

கலித்தாழிசை - 2

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.  

 

கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்பர்.

 

கலியொத்தாழிசை - 1

வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை

 

திருநாள் ஒருகேடா?

 

1.

ஈழ உடன்பிறப்பின் இன்னல்களைக் கண்டும்தன்

வாழ்வே பெரிதென்று  வாய்மூடிக் கொண்டிருப்பான்!

கோழையாய் வல்லாரைக் கும்பிட்டு வாழ்ந்திடுவான்!

தாழ்பிறவி யாம்அவற்குத் தைந்நாள் ஒருகேடா?

……தன்மானம் இல்லாற்குத் தைந்நாள் ஒருகேடா?

2.

பட்டமே யென்று பறப்பான்! பதிவியென்றால்

கட்டித் தழுவியெவன் காலும் பிடித்திடுவான்

எட்டாப் பரிசுகளுக் கேங்கும் அவனுடைய

திட்டமிலா வாழ்வில் திருநாள் ஒருகேடா?

……திருந்தாதான் வாழ்வில் திருநாள் ஒருகேடா?

 

3.

மானமே இன்றி வடமொழியில் போற்றிசெய்வான்!

ஆனவரை தாய்த்தமிழில் ஆங்கிலத்தைப் பெய்திடுவான்! 

தேனின் இனிதான செந்தமிழுக்கே கூற்றாகிப்

போன அவனுக்குப் பொங்கல் ஒருகேடா?

……புழுப்பிறவி யாம்அவற்குப் பொங்கல் ஒருகேடா?

[முனைவர் இரா. திருமுருகனார்]

 

எனைவிட்டுப் பிரிந்ததுமேன்?

 

1.

கண்ணே! கனிச்சாறே! கற்கண்டுக் காவியமே!

மண்ணே மணக்கின்ற மல்லிகையே! மாங்கனியே!

பண்ணே படைக்கின்ற பாட்டரசன் வாடுகிறேன்!

பெண்ணே எனைவிட்டுப் போனதுமேன்?

……பெருந்துயரை இங்கிட்டுப் போனதுமேன்?

2.

வாசமிகு வண்டமிழே! வண்ணமிகு மாமகளே!

நேசமிகு நேரிழையே! நெஞ்சமிகு பேரழகே!

பாசமிகு பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!

மோசமிகு வாழ்விட்டுப் போனதுமேன்?

……மோகமிகு தீயிட்டுப் போனதுமேன்?

3.

சீர்போற்றும் வாழ்வளித்தாய்! சிந்தனையாம் தேனளித்தாய்!

ஊர்போற்றும் மாண்பளித்தாய்! உள்ளொளியாய் நீயிருந்தாய்!

பார்போற்றும் பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!

பேர்போற்றும் வாழ்விட்டுப் போனதுமேன்?

……கார்மூட்டும் துன்பிட்டுப் போனதுமேன்?

[பாட்டரசர்]

 

இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான். நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

என்னாசிரியர் முனைவர் இரா. திருமுருகனார் பாடலில் முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எட்டுச் சீர்களைக் கொண்டது. என் பாடலில் நான்காம் அடி ஆறு சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும்.   

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

09.11.2024

dimanche 3 novembre 2024

மரபுமாமணி அருணாசெல்வம்

 



                             மரபுமாமணி அருணாசெல்வம்

பிறந்தநாள் வாழ்த்து!


அருணா செல்வம் அகவை நன்னாள்

      அருமைத் தமிழே மலர்பொழிவாய்!

கருணா கரனே! கங்கை யரனே!

      காத்தே என்றும் புகழ்பொழிவாய்!

இரு..நா முந்நா எனக்குத் தந்தே

      இன்றேன் வாழ்த்து மழைபொழிவாய்!

வரு..மாச் சீர்போல் வாழ்க்கை இனிக்க

      வடிமேல் முருகா அருள்பொழிவாய்!

 

அண்ணல் இராமன் அரங்கம் போற்ற

      அல்லும் பகலுங் கவிபாடிக்

கண்ணன் மீதுங் கம்பன் மீதுங்

      காதல் கொண்டு விளையாடி

எண்ணம் யாவும் எழுதுந் தொழிலில்

      என்றும் நிறுத்தி அணிசூடி

வண்ணம் மின்ன அருணா செல்வம்

      வாழ்க வாழ்க பல்லாண்டு!

 

கண்ணைக் கவரும் கலையைக் கற்றுக்

      கட்டி முடித்த சித்திரநுால் 

மண்ணை யறிந்து மரபை யுணர்ந்து

      வடித்த முன்னை மின்னணிநுால்

விண்ணைத் தவழும் தண்மை நிலவாய்

      மின்னும் நாவல் சிறுகதைநுால்

பண்ணை யாளும் பாட்டின் அரசன்

      படித்தேன்! வியந்தேன்! வாழ்த்துகிறேன்!

 

தேடித் தேடி நுால்கள் வாங்கித்

      தேவன் அருளால் தினங்கற்றே!

ஓடி யோடி உதவும் நெஞ்சுள்

      ஒளிரும் அன்னைத் தமிழ்ப்பற்றே!

பாடி ப் பாடிப் படைத்த ஆக்கம்

      பாரில் வெல்லும் புகழ்பெற்றே!

கோடி கோடிப் புலமை கொண்டே

      அருணா செல்வம் வாழியவே!

 

பாட்டின் அரசன் பண்பின் தாசன்

      பகன்ற நெறியைப் பற்றுடனே

நாட்டின் மக்கள் நன்றே வாழ

      நற்றொண் டாற்றும் பொற்புடனே

காட்டின் மலர்கள் கமழும் வளமாய்க்

      கவிகள் பாடும் வளமுடனே

ஆட்டம் ஆடும் கூத்தன் அருளால்

      அருணா செல்வம் வாழியவே! [5]

 

பாட்டடரசர் கி. பாரதிதாசன்

03.11.2024

samedi 2 novembre 2024

பாவலர்மணி வெற்றிச்செல்வி

 


பாவலர்மணி வெற்றிச்செல்வி
பிறந்தநாள் வாழ்த்து!

 

திருவுங் குருவும் அருள்செய்யத்

   தீட்டுங் கவிகள் தேனொழுகப்

பெருகும் அன்பு மனங்கமழப்

   பெருமை யாவும் மனைசேர

உருகும் மெழுகாய் உளந்திகழ

   உலகுக் குதவும் நெறியாள

விருதும் புகழும் வந்தொளிரும்

   வெற்றிச் செல்வி வாழியவே! 

 

வன்மை ஈழ மண்பற்றும்

   வண்ணத் தமிழின் பண்பற்றும்

நன்மை யெல்லாம் இனங்காண

   நாளும் வணங்கும் விண்பற்றும்

தொன்மை மரபை நன்காய்ந்து

   தொடர்ந்து கற்றும் துணிவுற்றும்

மென்மைக் குரலுங் கொண்டொளிரும்

   வெற்றிச் செல்வி வாழியவே!

 

வான்..மை மேகப் பொழிவாக

   வாழ்க்கை சிறக்கும்! ஈடில்லாக்

கோன்மைத் தலைவர் திருவுருவைக்

   கிழக்காய் எண்ணி உளந்துதிக்கும்!

தேன்..மை யூற்றி எழுத்தெல்லாம்

   தித்தித் திருக்கும்! திறம்படைக்கும்!

மேன்மை யாவும் வந்தொளிரும்

   வெற்றிச் செல்வி வாழியவே! 

 

பிள்ளை யாக மனங்கொண்டு

   பிறந்த வீட்டின் குணங்கொண்டு

கிள்ளை யாக எழில்கொண்டு

   கீர்த்தி மணக்குஞ் செயல்கொண்டு

கொள்ளை யாகத் தமிழ்கொண்டு

   கோயி லாகக் குடிகொண்டு

வெள்ளை நாட்டில் பேர்கொண்டு

   வெற்றிச் செல்வி வாழியவே!

 

பேரன் பேத்தி புடைசூழப்

   பெரியோர் வாழ்த்துத் தினஞ்சூடக்

கீரன் போன்று திறங்கூடக்

   கிணறாய் என்றும் மதியூறத்

தீரன் போன்று கொள்கையிலே

   திண்மை கொண்டு நடைபோட

வீரன் போன்று குளங்காத்து

   வெற்றிச் செல்வி வாழியவே! 

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

02.11.2024

கலித்தாழிசை - 1

 


கலிப்மேடை - 58

கலித்தாழிசை - 1

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந் தளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையே

[யாப்பருங்கல விரித்தி – 87]

 

அடிவரையறை சீர்வரையறை இன்றிக் கடையடி நீண்டு வருவது கலித்தாழிசையாகும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்றும், ஒன்றாயும் இரண்டாயும் மூன்றின் மிக்கும், மூன்றாய்ப் பொருள் வேறாயும் வருவனவற்றைக் கலித்தாழிசை என்றும் பெயர் வேறுபடுத்திச் சொல்வாரும் உளர்.

 

கலித்தாழிசை என்ற பெயரே இப்பாடலை இசைப்பா என உணர்த்தும். அடி வரையறை இல்லாமல் இரண்டடி முதல் எத்தனை அடிகளாலும் இப்பாடல் அமையும். ஓரடியில் எத்தனைச் சீர்களும் வரலாம் [நான்கு சீரடிகளே முன்னோர் இலக்கியங்களில் பெரும்பான்மையாக வந்துள்ளன] ஈற்றடி மற்ற அடிகளை விட ஒரு சீர் முதல் பல சீர்கள் மிகுந்து வரும். [ஈற்றடி முன்னடிகளை விட இரட்டிப்பாய் அமைந்த பாடல்களே இலக்கியங்களில் பெரும்பான்மை] மற்ற அடிகள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். இடையடிகிளில் முற்பகுதிகள் மடக்காக வருதலும் உண்டு. வெண்டளையாலும் பிறதளையாலும் இப்பாடல் அமையும்.

 

ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவன எல்லாம் சிறப்புடையக் கலித்தாழிசை எனவும், ஈற்றடி மிக்கு  ஏனையடி ஒவ்வாது வருவன எல்லாம் சிறப்பில்லாக் கலித்தாழிசை எனவும் கூறப்படும்.

 

சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத்தாழிசை, சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித்தாழிசை என்னும் இவற்றைச் சிறப்புடைய தளை ஏழு, சிறப்பில்லாத தளை ஏழு என்ற பதினான்கோடு உறழக் கலித்தாழிசை விரி ஐம்பத்தாறாகும்.

 

கலித்தாழிசை – 1

 

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

 

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே !

……கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே !

[சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை]

 

தேகம் உருகுதடி! தென்றல் கொதிக்குதடி!

தாகம் பெருகுதடி! தாக்கி வதைக்குதடி!

காகம் கரையுதடி! காலை விடிவதுமேன்?  

மோக உணவூட்டும் மூக்கென்ன மூக்கோ?

……முட்டி யெனைச்சாய்க்கும் மூக்கென்ன மூக்கோ?

[பாட்டரசர்]

 

இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான். நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எண்சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின்  முதற்சீருக்கு ஏற்ற மோனை ஐந்தாம் சீரில்வரும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.   இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. [கண்ணே – கண்ணிமைத்து]

 

இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்காக வரும். [கண்ணென்ன கண்ணே] 

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.

 

இலக்கணக்குறிப்பு

 

அடியெனைத் தாகியும் ஒத்துவந்து அளவினில்

கடையடி மிகுவது கலித்தா ழிசையும்

 

[இலக்கண விளக்கம் – 739]

 

அந்தடி மிக்குப் பலசில வாயடி

தந்தமில் ஒன்றிய தாழிசை யாகும்

 

[காக்கை பாடினியார்]

 

அந்தம் அடிமிக்கு அல்லா அடியே

தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே

 

[சிறுகாக்கை பாடினியார்]

 

ஈற்றடி  மிக்களவு ஒத்தன வாகிப்

பலவும் சிலவும் அடியாய் வரினே

கலிப்பா இனத்துத் தாழிசை யாகும்

 

[அவிநயம்]

 

அடிபல ஆகியும் கடையடி சீர்மிகின்

கடிவரை இல்லை கலித்தா ழிசையே

 

[மயேச்சுரம்]

 

அடிவரை யின்றி அளவொத்து அந்தடி நீண்டிசைப்பின்

கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்

 

[யாப்பருங்கலக் காரிகை – 34]

 

ஈரடி யாதி எனைத்தடி யானும்வந்து ஈற்றில்நின்ற

ஓரடி நீளின் கலித்தாழிசை

 

[வீர சோழியம்]

 

கலித்தா ழிசையே கடையடி மிக்குமற்று

அடியெனைத் தாகியும் அளவொத்து ஒவ்வாது

ஒருமூன்று அடுக்கியும் ஒன்றுமாய் வருமே

 

[தொன்னுால் விளக்கம் – 245]

 

இரண்டடி யாய்ஈற்றடி நீண்டு இசைப்பது

கலித்தா ழிசையெக் கருதப் பாடுமே

 

ஒருபொருள் மேல்மூன் றடுக்கி யிரண்டடி

யாக வருவஃது அதன்சிறப் பாகும்

 

[முத்துவீரியம் – 48, 49]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

01.11.2024