கர்த்தர் வெண்பா மாலை
1.
கன்னி மரிபெற்ற கற்பகமே! காதலினால்
பின்னித் தொழுதேன் பிதாமகனே! - மின்னிவரும்
விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயற்படித்துக்
கண்ணீர் கசியும் கமழ்ந்து!
2.
விண்ணின் ஒளியே! விரிகடலே! மென்காற்றே!
பண்ணின் சுவையே! படர்தீயே! - புண்ணியனே!
கண்ணின் மணிபோல் கருத்துள் கலந்தெனக்கு
மண்ணின் மகிழ்வை வழங்கு!
3.
நற்கருணை நாதனின் நன்மலர்த் தாள்பிடித்தால்
பொற்கருணை பூத்துப் புவியோங்கும்! - சொற்கருணை
மேவிச் சுடர்ந்தோங்கும்! மேய்ப்பவனின் சீர்பாடிச்
கூவித் தொழுவோம் குளிர்ந்து!
4.
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்தான்! இங்குள்ள
நாட்டு நரிகளை ஓட்டிடவே! - காட்டுமலர்
நாட்டு நரிகளை ஓட்டிடவே! - காட்டுமலர்
போல்மணக்கும் புண்ணியன்நற் போதனையை நெஞ்சத்துள்
பால்மணக்கும் வண்ணம் படி!
5.
அன்பென்னும் ஆரமுதை அள்ளி அளித்துலகை
இன்புறச் செய்த இறைத்துாதன்! - என்றென்றும்
வான மழையாகி வண்ண வளமாகி
ஞானம் அளிப்பான் நமக்கு!
6.
தொல்லை அகன்றோடத் துாய மனமேவ
எல்லை இலாத எழில்காண - வல்லமைசேர்
சத்திய தேவனின் தங்கத் திருமொழியைப்
எல்லை இலாத எழில்காண - வல்லமைசேர்
சத்திய தேவனின் தங்கத் திருமொழியைப்
புத்தியில் நித்தம் பொறி!
7.
சிலுவைச் சுமைகண்டு சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உலுக்கும்! - பலகையென
ஆணி அடித்தார்! அருட்பூ விளைகின்ற
காணி அழித்தார் கருத்து!
8.
கல்லடி பட்டதும் கள்ளர் பலர்கூடி
முள்ளணி இட்டதும் முன்கண்டாய்! - சொல்லணி
கட்டி அணிவித்தேன் கா்த்தரே! என்வினையை
வெட்டி எடுப்பாய் விரைந்து!
9.
தாலாட்டுப் பாடுகிறேன் தங்கமே! தண்டமிழின்
பாலுாட்டிப் பாடுகிறேன் பார்த்தருள்வாய்! - வாலாட்டிப்
பொல்லா வினைதுள்ளும் பொய்யன் எனக்குள்ளே
எல்லாம் எரிப்பாய் எடுத்து!
10.
தேவன் பிறந்த திருநாளின் வாழ்த்தளித்தேன்!
மேவும் நலமோங்கி மின்னுகவே! - துாவும்
பனியெனத் துாய்மை படருகவே! கன்னல்
கனியெனத் தந்தேன் கவி!
25.12.2014