கண்களிலே கனல்பிழம்பு
கருத்தினிலே கூரீட்டி
கொண்டுநடை போட்டவனும் யாரு? – அவன்
பண்டுபுகழ்ப் பாரதிஎன் றோது!
முண்டாசுப் பாகையுடன்
தொண்டாற்றி வாழ்ந்தவனைக்
கொண்டாடிப் போற்றும்என் நெஞ்சம்! - அவனுள்
ஒன்றாகித் தமிழ்மகளைக் கொஞ்சும்!
நெஞ்சினிலே உரமேற,
கொஞ்சுதமிழச் சீா்பாட
அஞ்சாமல் கவிபடைத்த புலவன்! - வாழ்வில்
துஞ்சாமல் பகைஎதிர்த்த தலைவன்!
பாட்டினிலே போர்தொடுத்துப்
பகைவர்களை ஓட்டியவன்,
தீட்டிவைத்த கவியாவும் முத்து!- அன்னை
தீந்தமிழாள் நமக்களித்த சொத்து!
சாதிமத சழக்குகளை
மோதியிங்கு அழித்திட்ட
நீதிநெறிப் பெரும்புலவன் பாட்டு - அது
சோதிதரும் வாழ்வினிலே மீட்டு!
வீட்டுக்குள் பாவையரைப்
பூட்டுவதும் சரிதானோ?
வேட்டுவைத்து முழங்கிய,பா மன்னன்!- அவன்
தீட்டிவைத்த கவி,காப்பான் கண்ணன்!
தேமதுரத் தமிழோசை
தேசமெலாம் பரவிடவே
நாமுழைக்க வேண்டுமெனச் சொல்லி- வைத்தான்
நமையழிக்கும் நரிகளுக்குக் கொள்ளி!
பைந்தமிழின் தேரோட்டி,
பாமரரின் மதிதீட்டி,
தந்தமொழி வீரத்தை ஊட்டும்!- பாட்டின்
சந்தநடை தமிழழகைக் காட்டும்!
கள்கொடுக்கும் போதையினைக்
கண்ணாம்மா கவிகொடுக்கத்
துள்ளிமனம் ஆடுகிறேன் நானே!- தூய
காதலிலே முழுகிநனைந் தேனே!
பெற்றதிரு நாட்டினையும்
உற்றதமிழ் மொழியினையும்
பொற்புடைய தாய்என்று பாடி – சொன்னான்
புத்துலகச் சிந்தனையைச் சூடி