samedi 29 juin 2019

மிறைக்கவி மேடை - 3மிறைக்கவி மேடை - 3

துாசங்கொளல்
துாசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது.
அத்தி வரதா
கஞ்சி வரதரே காயும் கடுவெயிலுக்
கஞ்சிக் கிடந்தீரோ? நீர்க்குளத்தில் - மஞ்சன..நீர்
ஆட்டக் கரையேறும் அத்தி வரதாவுன்
காட்டா வடிவம்தான் காட்டு!
பாவலர் ஐயப்பன்
கண்ணுறக்கம் தண்குளத்துள் காண்பதுமேன்? பன்னாளாய்
மண்ணுறக்கம் இன்றி வதைகின்றேன்! - விண்ணுறக்கம்
நானுறும்..முன் வேண்டுகிறேன்! நாரணா உன்னுடைய
கானுறும் பூமுகம் காட்டு!

பாவலர் ஐயப்பன் பாடிய பாடலுக்கு நான் பாடிய துாசங்கொளல்.

பிரான்சில் நடைபெறும் யாப்பிலக்க வகுப்பில் மாணவர்களுக்கு மிறைப்பா நடத்தினேன்.  மாணவ மாணவியர் பாடிய வெண்பாவுக்குத் துாசங்கொளல் பாடினேன்.

நாவினிக்க நற்றமிழை நல்கிடுவாய்! வெள்ளிதழ்ப்
பூவிருக்கும் நாயகியே! பொற்கொடியே! - பாவினிக்கும்
சிந்தையுறச் செந்தமிழின் சீர்மகளே! என்றும்..நீ
விந்தையுறை வேதத்தின் வித்து!

பாவலர் கவிப்பாவை
23.06.2019

பாவலர் கவிப்பாவையின் வெண்பா 'நா' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் நிறைவுற்றது.

'து' என்ற எழுத்திலிருந்து மேனோக்கி 'நா' என்ற எழுத்தில் நிறைவுறும் வண்ணம் ஒரு சில நிமிடங்களில்  நான் எழுதிக் காட்டிய வெண்பா.

நானினிக்கப் பாடுகிறேன் நாளெல்லாம் நாரணனே
தேனினிக்கப் பாடுகிறேன் சீர்பெறவே! - வானொலிக்கத்
தங்குபுகழ் மின்னுமே! சந்த நடையேந்திப்
பொங்குதமிழ் மின்னுமே பூத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
23.06.2019

மிறைப்பா மேடை - 1


மிறைப்பா மேடை - 1

கூட சதுர்த்தம்

நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் கூட சதுர்த்தம்.

கூடம் - மறைந்திருப்பது, சதுர்த்தம் - நான்காம் அடி. மறைவாக நான்காம் அடியை உடையதென்பது பொருள்.

பல நுால்கள் கூட சதுர்த்தத்தை, கூட சதுக்கம் என்று குறிப்பிட்டுள்ளன.

பாரதியே போற்றுகிறேன்!

நாட்டுக் குழைத்தாய்! பற்றுடனே
          நம்மின் நற்றேன் நெறிக்குழைத்தாய்!
ஏட்டுக் குழைத்தாய்! பாவையர்தம்
          இழிவைக் கிள்ளிப் போர்தொடுத்தாய்!
வீட்டுக் குழைத்தாய்! பாத்தாயே
          வியக்கப் பார்த்த சாரதியின்
பாட்டுக் குழைத்தாய்! பாரதியே
          பாதம் பற்றிப் போற்றுகிறேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

கருத்துரை: செந்தமிழ் நாட்டுக்கும் பாரத நாட்டுக்கும் உழைத்தாய். தமிழ்த்தாயின் நெறிகள் பரவ உழைத்தாய். நல்ல நுால்களை படைத்திட உழைத்தாய். பெண்ணின் விடுதலைக்கு உழைத்தாய். பரம்பொருள் நல்கும் விண்வீட்டுக்கு உழைத்தாய். பாட்டின் தாயாகிய பைந்தமிழ் வியந்திடவே கண்ணன் புகழ் வீசும் பாட்டுக்குழைத்தாய். மகாகவி பாரதியே உன்றன் பாதங்களைப் பற்றிப் போற்றுகிறேன். 

இவ்விருத்தத்தின் நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஏனைய மூன்றடிகளுள்ளும் ஆங்காங்கே மறைந்துள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.06.2019

மிறைப்பா மேடை - 2


மிறைப்பா மேடை - 2
 
விசித்திர அகவல்
 
ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.
 
குறள் வெண்பா
 
குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!
 
இக்குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் கீழ்க்கண்ட விசித்திர அகவலின் ஓவ்வோர் அடியின் ஈறறில் அமைந்துள்ளதைக் காணலாம்.
 
அன்னைத் தமிழின் அமுதைப் பருகு
மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு
முன்னே மொழியைத் முனைந்து காத்த
தன்னே ரில்லாத் தமிழன் நாம
மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல
தாதும் மணக்கும் தகையன்! தீரா
ஆசை கவிமேல்! ஆக்கம் வாழ்க!
மீசைக் கவிமேல் மேவும் உணர்வைக்
காட்டும் நெஞ்சன்! கண்ணியன் என்கோ!
சூட்டும் மின்னிதழ்த் துாயன்! கால
மூட்டும் சீரை உடையன்! அருவி
போலத் தண்மைப் பொழிலன் தந்த
கோல இதழ்கள் கூட்டும் நற்புகழ்!
பாடும் புலவர் நாடும் நட்பி
லாடும் மனத்தன்! அருங்கணி வரையன்!
படங்கள் யாவும் பட்டாய் மின்னு
முடைமை கற்றவன்! ஊக்கம் பின்னும்
தன்மை பெற்றவன்! மாட்சி தழைத்த
வன்மை உற்றவன்! வாழும் பூமி
சுற்றும் செயலாய்த் தொண்டே சூழ
நற்றமிழ் காப்பவன்! நன்றே தமிழமி
னுற்ற பெருமையை ஓதி மகிழ்ந்தேன்!
உலகை உவக்கும் ஒப்பில் தேவா!
நலமே நண்பன் நாளும் இங்காழ்
வண்ணம் செய்க! வளமே பொழிக!
எண்ணம் என்றும் இன்பங் குழைத்த
தாகம் தணித்த தகையுடை இன்மழை
யாக வேண்டும்! அருளைக் கொடுத்துத்
தமிழமிழ் வாழ்வைத் தாங்கியே உயர்த்து!
உமதுயிர்த் தமிழை ஓங்கியே சாற்று!
எல்லாம் அறிந்த அல்லா அழகைச்
சொல்லி, அகவல் அடிகளில் தோன்றும்
ஈற்றாம் எழுத்தைப் போற்றிப் படித்தால்
சாற்றிய நற்குறள் ஊற்றெனத் துள்ளும்!
விசித்திர அகவல் வேண்டி விளைத்தேன்!
பசியுறு புலமைப் பான்மை தெரிக்கவே!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.06.2019

dimanche 16 juin 2019

காதைகரப்பு

காதைகரப்பு
 
வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத்தேயே இருக்குமாறு பாடப்படும் பாடல் காதைகரப்பாகும். ஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம்மாறி மறைந்திருத்தல் என மாறனலங்காரமும் வீரசோழியமும் இதன் இலக்கணத்தைக் கூறுகின்றன. மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று. [மிறைக்கவி என்றால் சித்திர கவி என்று பொருள்]
 
காதை கரப்பது காதை கரப்பே
[மாறனலங்காரம் 289]
 
இவ்வாறு அமையும் பாடலைக் 'கரந்துறை செய்யுள்' என்று, தண்டியலங்காரமும், முத்துவீரியமும், இலக்கண விளக்கமும் கூறுகின்றன.
  
கரந்துறை செய்யுளுக்கும் காதை கரப்பிற்கும் உள்ள வேறுபாடு:
  
இவ்விரண்டின்கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்ற எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமை யிருப்பினும், முன்னையது இறுதி எழுத்தின் அயலெழுத்திலிருந்து ஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக்கொள்ளப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். காதைகரப்பாவது பாட்டின் முதற்கண் இருந்தே எவ்வித வரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக் கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். [காதை - கவி] [கரப்பு - மறைத்தல்]
 
கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!
 
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
[திருக்குறள் - 1101]
 
என்ற குறளிலுள்ள எழுத்துக்கள் எல்லாம் ஆங்காங்கு வருமாறு அமைந்து குறள் மறைந்து கிடப்பதைக் காண்க
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.04.2017

கரந்துறை செய்யுள்

கரந்துறை செய்யுள்
 
ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்றுச் சீரில் ஈற்றெழுத்தின் அயல் எழுத்தில் தொடங்கி எதிரேறாக ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் பாடலின் முதற்சீரின் இரண்டாம் எழுத்துவரை படிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்து மறைந்துறைவது கரந்துறை செய்யுளாம் என்று மாறனலங்காரமும் வீரசோழியமும் கூறுகின்றன்.
 
பாடலின் ஈற்றுச் சொல்லின் அயற்சொல்லின் ஈற்றிலிருந்து ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் பாடலின் முதற்சொல்வரை படிக்கப் பிறிதொரு செய்யுள் தோன்றுவது 'கரந்துறை செய்யுள்' என்று உரையாசிரியர் சிலர் உரைக்கின்றனர்.
 
இவ்வாறு அமையும் பாடலைக் 'காதை கரப்பு' என்று, தண்டியலங்காரமும், முத்துவீரியமும், இலக்கண விளக்கமும் கூறுகின்றன.
 
முதலொரு செய்யுள் முடித்ததன் ஈற்றின்
பதமதன் இறுதியிற் பயிலெழுத் துத்தொடுத்து
இடையிடை யிட்டெதி ரேறாய் முதலயல்
அடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.
 
[மாறனலங்காரம் 288]
 
சிந்தியல் வெண்பா!
 
வேதா! குழையா! மகிழ்வுமிகு தன்னேமி
தாதாநீ! மாதாநீ! நானலையா மல்லலகு
தேவே! தருந்திறனேன் தேசு!
 
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
 
கருத்துரை: வேதம் உரைக்கும் பரம்பொருளே! புல்லாங்குழலை உடையவனே! துயரொழித்து இன்பம் தரும் சக்கரத்தைக் கொண்டவனே. நீ எனக்குத் தந்தையாவாய், தாயுமாவாய். நான் அலையாமல் என்னுடைய குற்றத்தை நீக்கும் இறைவனே! தருவாய் திறனுடையோன் பெற்ற ஒளியை.
 
குழை - துளையுடைய கருவி,
நேமி - சக்கரம்,
தாதா - தந்தை
அலகு - குற்றம்,
தேசு - ஒளி.
 
மேலுள்ள சிந்தியல் வெண்பாவில் ஈற்றிலிருந்து ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படித்தால், கீழுள்ள குறள் வெண்பா தோன்றும்.
 
குறள் வெண்பா
 
தேனே! திருவே! குலமலை நாதா!நீ
தானே தமிழ்மழை தா! [பாட்டரசர்]
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.06.2019

lundi 10 juin 2019

திருமாலின் தோற்றம்


வெண்பாவின் முதல் ஏழுசீர்களில் திருமாலின் தோற்றம்
 
மீனாமை ஏனமரி மின்குறள் கோடரியன்
வானம்பன் மாராமன் கண்கற்கி - தேனாகி
என்பாட்டில் வந்த இறையவனை, நெஞ்சமெனும்
பொன்னேட்டில் இட்டேன் பொலிந்து!
 
மீன் - மச்சம்
ஆமை - கூர்மம்
ஏனம் - வராகம்
அரி - சிங்கம்
குறள் - வாமனன்
கோடரியன் - கோடரியை ஏந்திய பரசுராமன்
வானம்பன் - வலிமையுடைய வில்லம்பை உடைய இராமன்
மாராமன் - கண்ணனுக்கு அண்ணனாகிய பலராமன்
கண் - கண்ணன்
கற்கி - குதிரை முகமுடைய தோற்றம்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.06.2019

dimanche 9 juin 2019

தினமும் திருநாளே!


தினமும் திருநாளே!
 
வண்ணத் தைம்மகள்
  வரவை வாழ்த்திடும்
   மன்றம் வாழியவே!
எண்ணம் இனித்திடும்
  எழிலார் கவிதையை
   ஏற்போர் வாழியவே!
கண்கள் கமழ்ந்திடக்
  கலைசேர் காட்சிகள்
   கணித்தார் வாழியவே!
பெண்கள் மகிழ்ந்திடப்
  பேணும் இவ்விழாப்
   பெருமை வாழியவே!
 
அன்பே இறையவன்!
  அமுதே தமிழ்மொழி!
   ஆடி மகிழ்ந்திடுக!
இன்பே குறள்நெறி!
  எழிலே அதன்வழி!
   ஏத்தி உயர்ந்திடுக!
ஒன்றே குலமென
  ஒருவன் திருவென
   ஓதி உவந்திடுக!
நன்றே நடையுறு!
  நல்லோர் மொழியுறு!
   நாளும் திருநாளே!
 
அருளை அணிந்திடு!
  அன்பை அளித்திடு!
   அகமே அழகேந்தும்!
பெருளை உரைத்திடு!
  புலமை படைத்திடு!
   புவியே புகழேந்தும்!
தெருளைக் கொடுத்திடு!
  திறனைப் புகுத்திடு!
   சீரே நமையேந்தும்!
இருளை எரித்திடு!
  இனிமை இசைத்திடு!
  என்றும் திருநாளே!
 
நம்மின் செம்மொழி!
  நல்கும் நன்னெறி!
   நாடிப் பயின்றிடுக!
இம்மண் முன்மொழி!
  ஈடில் தென்மொழி!
   எங்கும் இயம்பிடுக!
செம்பொன் திருமுறை!
  செந்தேன் நிறையடை!
   சீர்மை முழங்கிடுக!
எம்மின் கவிநடை
  இளைய பெண்ணடை!
   என்றும் திருநாளே!
 
பாரோர் பயனுறப்
  பண்பை விளைத்திடு!
   பாடும் சீர்பெறுவாய்!
ஊரோர் உயர்வுற
  ஓடி உழைத்திடு!
   ஓங்கும் பேர்பெறுவாய்!
நேரோர் நெகிழ்வுற
  நேயம் பொழிந்திடு!
   நெஞ்சத் தார்பெறுவாய்!
ஏரோர் இனிப்புற
  ஏற்றம் அளித்திடு!
   என்றும் திருநாளே!
 
பாப்போல் சுவைமொழி
  பண்போல் இசைமனம்
   படைபோல் காத்திடுமே!
பூப்போல் கமழ்நெறி
  பொன்போல் பொலிசெயல்
   புகழ்மேல் புகழ்தருமே!
காப்போல் செழிப்புறும்
  கனிபோல் இனிப்புறும்
   கடமை கண்ணியமே!
ஆப்போல் பயனிடும்!
  அணிபோல் அழகுறும்!
   அமுதத் திருநாளே!
 
காக்கும் நல்லறம்!
  கல்வி பெருவரம்!
   கன்னல் ஊட்டிடுமே!
பூக்கும் இல்லறம்!
  புனிதர் சொல்லுரம்!
   புதையல் காட்டிடுமே!
ஊக்கும் தமிழ்மறம்
  உயிர்சேர் மலர்ச்சரம்!
   உலகே போற்றிடுமே!
ஆக்கும் தனித்திறம்!
  அளிக்கும் சீரிடம்!
   ஆடும் திருநாளே!
 
ஓங்கும் ஒற்றுமை!
  உம்மின் நற்றுணை!
   உற்றே அரணுறுவாய்!
தாங்கும் விழுதெனத்
  தாயைத் தந்தையைச்
   சார்ந்து வளமுறுவாய்!
ஏங்கும் ஏழையர்
  இனிமை அடைந்திட
   இயங்கி நலந்தருவாய்!
வீங்கும் பகையினை
  வெல்லும் இசையினை
   மீட்டல் திருநாளே!
 
உண்மை உயர்பொருள்!
  உரிமை நம்முயிர்!
   ஓதி உணர்த்திடுக!
தண்மைத் தமிழ்மொழி!
  சாற்றும் நல்வழி!
   தலைமேல் தரித்திடுக!
வண்மைக் குணமுற
  வெண்மை மனமுற
   வாழ்வை வடித்திடுக!
பெண்மை உயர்ந்திடப்
  பீடும் நிறைந்திடப்
   பெருகும் திருநாளே!
 
என்றும் மகிழ்வுடன்
  இருக்கும் வழிகளை
   எண்ணிக் கவிச்செய்தேன்!
நன்றும் நடையென
  நாட்டோர் நவின்றிட
   நற்றேன் மழைபெய்தேன்!
குன்றும் மனமெழக்
  கோலத் தமிழினைக்
   கூட்டிப் புகழ்நெய்தேன்!
இன்[று]உம் செவிகளில்
  என்றன் நன்றியை
   இட்டேன் திருநாளே!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
08.06.2019

dimanche 2 juin 2019

படமும் பாட்டும்


படமும் பாட்டும்
 
நெடியவனை நீள்விழியால் அளந்தாள்!
 
வன்னுரலில்
கட்டுண்டான் அன்று!
மென்விரலில்
கட்டுண்டான் இன்று!
 
தலைமை உற்றவன்!
மயக்கும்
தலை.. மை.. உற்றவன்!
 
மாலை மடக்க
மாலை தொடுத்தாள்!
 
கண்ணனின் கைகளைக்
கட்டினாள்!
கண்களை????
 
ஓங்கிய உத்தமனை
ஏங்கிய நேரிழையாள்
வீங்கிய நீள்விழியால்
அளக்கின்றாள்!
 
விழிகள் முட்டின!
நன்றே ஒட்டின!
கவிகள் கட்டின!
 
சீதையின் பார்வை
போதையை ஊட்டும்!
இராமனின் பார்வை
இளமையை வாட்டும்!
 
கண்கள் புரிந்தன
கமழ்..வாய் வினையை!
வாய்கள் புரிந்தன
கருங்கண் வினையை!
 
வில்லேந்தும் வீரன்
விழியேந்தி நிற்கின்றான்!
சொல்லேந்தும் கோதையிடம்
கொக்குமொழி கற்கின்றான்!
 
மலையழகு தோளழகு!
மலையழகு மார்பழகு!
வென்றது எதுவோ?
 
சிலையழகுச் செல்வன்
சிலையழகுச் செல்வி
கலையழகு கொண்டார்!
கவியழகு கண்டார்!
 
நடையழகை, கொடையழகை
வென்றன
இடையழகும்! தொடையழகும்!
 
யுத்தப் படையழகை
வென்றது
முத்தக் கொடையழகு!
 
காலழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கன்னியின் முன்னே
கால் அழகு!
 
தாளழகு - ஆம்..ஆம்
உலகம் - இந்தக்
கண்ணனின் முன்னே
தாள் அழகு!
 
வில்லை வளைப்பான்
என்றோ - அழகாய்
விரைந்து வளைந்தாள்!
எல்லை கடப்பான்
என்றோ - சரத்தால்
இறுகப் பிணைந்தாள்!
 
அடி முடி அறியா
அண்ணல்! - பூங்
கொடியின் - கைப்
பிடிகள் அறிந்தனவே!
 
கொஞ்சும் தமிழால்
குழைத்த கவிதை!
விஞ்சும் காதலை
விளைக்கும்!
கற்போர் மனத்தை
வளைக்கும்!
 
பாட்டழசர் கி. பாரதிதாசன்
02.06.2019

படமும் பாட்டும்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

குழலழகன் குறட்பா!
 
1.
பூங்குழலே! கண்ணன் இதழ்கண்டாய்! பொங்கிமனம்
ஏங்குகிறேன் தாராய் இடம்!
 
2.
வண்ண மயிலிறகே! வாசன் தலைமணத்தை
உண்ண எனக்கும் உதவு!
 
3.
தேனொழுகும் மாலையே! தேவன் திருக்கழுத்தில்
நானொழுகும் நாளை நவில்!
 
4.
முத்து மணிச்சரமே! மோக நிறத்தவனைப்
பற்றும் வழியைப் பகர்!
 
5.
பொன்மார்பில் மின்னுாலே! என்மார்பில் நீ..தவழ
உன்சார்பில் ஓர்வழி ஓது!
 
6.
தலைப்பாவே போற்றுகிறேன்! சாற்றுகவே ஓர்சொல்!
நிலைப்பாயே என்னுள் நிலைத்து!
 
7.
தோள்தவழும் மென்துண்டே! துாயவனின் தாமரைத்
தாள்தவழும் தண்ணெறி சாற்று!
 
8.
பட்டொளி வீசுடையே! பாவை..நான் மன்னவனைத்
தொட்டொளி காணவழி சொல்!
 
9.
மின்னும் அணிமணியே! விந்தைத் திருமாலைப்
பின்னும் வழியென்ன பேசு!
 
10.
குடைகொண்டு காத்தான் குழலழகன்! இன்று
தொடைகொண்டு காத்தான் சுவைத்து!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.06.2019