lundi 31 décembre 2018

நாட்காட்டி!


நாட்காட்டி!
  
காலையில் உன்முன்
கண்கள் திறக்கின்றேன்!
நாட்காட்டியே - நீயே
என் இறைவன்!
  
உன்னை இழந்து
என்னை வளர்க்கிறாய்!
நாட்காட்டியே - நீயே
என் அன்னை!
  
போகாதே என்பாய்!
ஆகாதே என்பாய்!
நாட்காட்டியே - நீயே
என் தந்தை!
  
காலக் கணக்கைக்
தீட்டுகிறாய்!
ஞாலக் கணக்கை
நாட்டுகிறாய்!
நாட்காட்டியே - நீயே
என்..ஆசான்!
  
கண்கள் குளிரக்
காலம் காட்டுகிறாய்!
கவலை போக்கும்
கவிதை ஊட்டுகிறாய்!
நாட்காட்டியே - நீயே
என் காதலி!
  
நல்லன சொல்வாய்!
வல்லன சொல்வாய்!
அல்லன சொல்வாய்!
நாட்காட்டியே - நீயே
என் பாட்டன்!
  
கிழியும் தாள்!
உதிரும் நாள்!
நாட்காட்டியே - நீயே
வாழ்வின் தத்துவம்!

ஒட்டிய உறவு

வெட்டியே ஓடும்!
உயிர்மெய் நிலையை உணர்த்தும்
நாட்காட்டியே - உன்னைப்
போற்றுகிறேன்!
  
முந்நாள் காட்டினாய்!
இந்நாள் காட்டுகிறாய்!
பின்னாள் காட்டுவாய்!
நாட்காட்டியே- நீ
வினைத்தொகையா?
  
தொங்கும் விளக்குகள்!
தொங்கும் விழுதுகள்§
தொங்கும் மாலைகள்!
தொங்கும் நாள்கள்!
மேன்மையைக் காட்டுவன!
  
தொங்கும் நெஞ்சம்!
தொங்கும் கடமை!
தொங்கும் ஆட்சி!
தொங்கும் மாட்சி!
சிறுமையைக் கூட்டுவன!
  
மேனியில்
ஆணி தரித்த
ஞானி...நீ! - வாழ்வின்
ஏணி...நீ!
  
சிலுவை சுமந்த தேவன்
மீண்டும் பிறந்தான்!
நாளைச் சுமந்த
நீயும்
மீண்டும் பிறந்தாய்!
  
காலமே!
உன்னை வணங்குகிறேன்!
ஞாலமே!
நலமுற வேண்டுகிறேன்!
  
நீதியைப் பாடு!
சாதியைச் சாடு! - என்றும்
சோதியைச் சூடு!
  
நரிகளை ஓட்டு!
அரிகளைக் கூட்டு! - குறள்
வரிகளை மீட்டு!
  
மதவெறி நீக்கு!
மதுவெறி போக்கு! - வாழும்
மனனெறி ஆக்கு!
  
ஈனம் ஒழிக!
வானம் பொழிக! - உயர்
ஞானம் மொழிக!
  
நாட்காட்டியே!
உன்னைத் தொழுகின்றேன்!
நற்றமிழ் மணக்க
நாளும் உழுகின்றேன்!
காப்பாய்! - புகழ்
சேர்ப்பாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.12.2018

சிந்துப்பா மேடை - 3


சிந்துப்பா மேடை - 3
  
புலிக்கண்ணி
  
ஈழமெனும் பொன்னாடு!
எங்களுயிர் வாழ்கூடு!
சூழுமுயர் மாவீரர் - புலியே!
தோன்றுபுகழ்ப் பாக்காடு!
  
மண்ணைப் பிடித்தவனை,
வஞ்சம் நிறைந்தவனை,
பெண்ணைக் கெடுத்தவனைப் - புலியே!
பிளந்து புதைத்திடுவோம்!
  
குருதி பெருமழையைக்
கொண்ட தமிழ்நிலமாம்!
பரிதி எழுநிறமாய், - புலியே!
பாயும் படைமறமாம்!
  
பனங்காடு சூழுநிலம்!
பகைவரை ஆடுகளம்!
இனங்காத்த நற்றலைவன்! - புலியே!
என்றும் எமக்கிறைவன்!
  
சுற்றி வளைத்திடவே
சூழ்ந்தபன் னாடுகளைப்
பற்றியிலை ஓரச்சம் - புலியே!
பாவையரைப் பார்..மெச்சும்!
  
கார்த்திகைப் பூமணக்கும்!
கன்னல் தமிழ்மணக்கும்!
பார்..அரும் வீரர்களைப் - புலியே!
பாடி உளஞ்சிலிர்க்கும்!
  
வீர விதைகளையே
விதைத்த தமிழினமாம்!
ஆரப் புகழ்தழுவி, - புலியே!
ஆளுந் தமிழ்நிலமாம்!
  
தாங்கும் விழுதுகளாய்த்
தாயகம் காத்திடுவார்!
துாங்கும் துயின்மனையைப் - புலியே!
தொழுது வணங்கிடுவோம்!
  
வானில் பறந்திடுவாய்!
மார்பில் தவழ்ந்திடுவாய்!
ஊனில் கலந்திடுவாய் - புலியே!
உலகை வலம்வருவாய்!
  
ஆண்ட தமிழ்மரபின்
ஆற்றல் முழங்கிடவே
வேண்டிக் கவிபுனைந்தேன்! - புலியே!
வெற்றிப் பணிபுரிந்தேன்!
  
கிளிக்கண்ணி போன்று, புலியை முன்னிலை கொண்டதால், இது புலிக்கண்ணி ஆனது. பாடலின் கருத்திற்குத் தகுந்தால்போல் மான், மயில், குயில், மலர்.. ஆகியவற்றை முன்னிலையாகக் கொண்டு புதிய வகையைப் பாடித் தமிழுக்கு வளஞ்சேர்ப்போம்.
  
இக்கண்ணி, நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும். ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். [இரண்டாம் அரையடிக்குப் பின் 'புலியே' எனத் தனிச்சொல் வந்துள்ளது. இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்]
  
இந்த வகையில் விரும்பிய ஒன்றை முன்னிலையாக்கி ஐந்து கண்ணிகளைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.12.2018

samedi 29 décembre 2018

காதல் வலி


காதல் வலி
  
ஆசை அனலை மூட்டியவள்!
   அமுதை அள்ளி யூட்டியவள்!
ஓசை இனிக்கும் உயர்தமிழை
   உள்ளம் மகிழ மீட்டியவள்!
மீசை முறுக்கி நான்..காட்ட
   மின்னல் கனவைக் காட்டியவள்!
காசை எண்ணிப் பிரிந்தாளோ?
   கண்கள் உறக்கம் இழந்தனவே!
  
கொடிபோல் சுற்றித் தழுவியவள்!
   குயில்போல் பாடித் தாவியவள்!
செடிபோல் பூத்தே ஆடியவள்!
   தேன்போல் சுவையைச் சூடியவள்!
துடிபோல் கொண்ட இடுப்பழகால்
   துாண்டும் உணர்வை ஏற்றியவள்!
இடிபோல் தாக்கிப் பிரிந்ததுமேன்?
   இதயம் வெந்து கொதிக்கிறதே!
  
கூடிக் களித்த இடமெல்லாம்
   கோடிக் கதைகள் கூறிடுமே!
ஆடிக் களித்த இடமெல்லாம்
   அழகைக் காண அழைத்திடுமே!
பாடிக் களித்த இடமெல்லாம்
   பார்வைக் குள்ளே படர்ந்திடுமே!
தேடிக் களித்த இடமெல்லாம்
   தேள்போல் கொட்டப் பிரிந்ததுமேன்?
  
முயல்போல் ஆட்டம் காட்டியவள்!
   மோகக் கலையைச் சூட்டியவள்!
உயிர்போல் என்னை எண்ணியவள்!
   உலவும் நிலவாய் மின்னியவள்!
பயிர்போல் பசுமை ஏந்தியவள்!
   பாட்டுக் கடலில் நீந்தியவள்!
துயா்மேல் துயரை எனக்கீந்து
   துணிந்து வழியில் பிரிந்ததுமேன்?
  
சொக்கி மார்பில் சாய்ந்தவளாம்!
   துாபம் போன்று மணந்தவளாம்!
எக்கி முத்தம் பதித்தவளாம்!
   இன்பக் கவிகள் இசைத்தவளாம்!
திக்கித் திக்கி மொழிபேசிச்
   சிக்கித் தவிக்கச் செய்தவளாம்!
கொக்கி போட்டு நெஞ்சத்தைக்
   குத்திக் கொல்லும் பிரிவேனோ?
  
செல்லம் என்ற ஒருசொல்லில்
   உள்ளம் ஒன்றி மயங்கிடுவாள்!
வெல்லம் என்றே என்கவியை
   விரும்பி நாளும் சுவைத்திடுவாள்!
அல்லும் பகலும் நினைந்தேங்க
   அமுதை யள்ளி வழங்கிடுவாள்!
இல்லம் இருண்டு பாழாக
   ஏனோ என்னைப் பிரிந்தாளோ?
  
கன..மை கண்கள் கொண்டிடலாம்!
   கார்..மை கூந்தல் பெற்றிடலாம்!
மன..மை ஏற்றல் சரியாமோ?
   மதி..மை ஏற்றல் முறையாமோ?
தனிமைச் சிறையில் வாடுகிறேன்!
   தாகம் தணிய வழியில்லை!
இனிமை தந்த இளங்கொடியாள்
   எங்கே போனாள்? தேடுகிறேன்!
  
காதல் சோலை வாடிடுமே!
   கண்கள் அழகைத் தேடிடுமே!
மோதல் புரிந்து நினைவலைகள்
   மூச்சுக் குழலை முட்டிடுமே!
ஓதல் மறந்து்ம், நினைவிழந்தும்
   உற்ற தமிழின் துணைமறந்தும்,
சாதல் நோக்கி மனமோடும்!
   தடுத்துக் காக்க வருவாளோ?
  
மெய்யும் உயிரும் புணர்கின்ற
   மேன்மை உறவை மறந்தாளோ?
செய்யும் வேள்வி அவள்..உறவே!
   செப்பும் வார்த்தை அவள்..பெயரே!
பெய்யும் மழையால் மண்குளிரும்!
   பேசும் அழகால் கண்குளிரும்!
உய்யும் வழிகள் எனக்குண்டோ?
   உறக்கம் இன்றி வாடுகிறேன்!
  
அவளுக் கென்ன? இல்லத்தில்
   அழகாய் வாழும் அகமுற்றாள்!
துவளும் புழுவாய் என்னெஞ்சம்!
   துயரைத் துளியும் அறிவாளோ?
நுவலும் இப்பா, என்வலியை
   நுாற்றில் ஒன்றை உரைத்திடுமோ?
கவரும் காலன் வருமுன்னே
   கன்னி உறவைப் பெறுவேனோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.12.2018

vendredi 28 décembre 2018

வெண்பா மேடை - 130


வெண்பா மேடை - 130
  
கோதை தொடுத்தமொழி கோல நலங்கொடுக்கும்!
போதை மதுவைப் பொழிந்துாட்டும்! - பாதையெலாம்
சோலை வனங்செழிக்கும்! சோக நிலைபோக்கும்!
மாலை பொழியும் மழை!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கொம்புடை எழுத்துக்கள் - [கெ, ஙெ, செ...],
கொம்புச்சுழி எழுத்துக்கள் [கே, ஙே, சே....]
முன்கொம்பு, பின் கொம்புக்கால் எழுத்துக்கள் [கௌ, ஙௌ, சௌ...]
இரட்டைக்கொம்பு எழுத்துக்கள் [கை, ஙை, சை...]
  
இப்பாடலில் பதினைந்து சீர்களிலும் கொம்புடைய எழுத்துக்கள் ஒன்றோ இரண்டோ... வரவேண்டும். முதல், இடை, கடை, எனச் எங்கேனும் ஓரிடத்தில் வந்தமையலாம். [கொம்புடைய வெண்பா என்னுடைய உருவாக்கம்]
  
விரும்பிய பொருளில் 'கொம்புடைய வெண்பா' ஒன்றினைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து கொம்புடைய வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்

கொம்புடைய வெண்பா!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.12.2018

jeudi 27 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
'வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி'
[நன்னுால்181]
  
இவ்விதியால் 'வாழ்த்துக்கள்', 'எழுத்துக்கள்' வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிக வேண்டுமென நண்பர் உரைக்கின்றார். விளக்கம் தர வேண்டுகிறேன்.
  
பாவலர் அருணாசெல்வம், பிரான்சு
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்
  
'வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி'
[நன்னுால்181]
  
அல்வழிப் புணர்ச்சியில் நெடிற்றொடர், மென்றொடர், இடைத்தொடர், உயிர்த்தொடர், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்னே வல்லினம் இயல்பாகும்.
  
நாடு + செழித்தது = நாடு செழித்தது [நெடிற்றொடர்க் குற்றியலுகரம்]
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது [மென்றொடர்க் குற்றியலுகரம்]
சால்பு + பெருகும் = சால்பு பெருகும் [இடைத்தொடர்க் குற்றியலுகரம்]
கிணறு + சிறிது = கிணறு சிறிது [உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்]
எஃகு + கடிது = எஃகு கடிது [ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்]
  
'வன்றொடர் அல்லன முன்மிகா' என்றதால் அல்வழியில் வன்றொடரில் வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.
  
இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்றிடையில்
மிகாநெடில், உயிர்த்தொடர், முன்மிகா வேற்றுமை
[நன்னுால் 182]
  
வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர், ஆய்தத்தொடர், இடையில் ஒற்று மிகாத நெடிற்றொடர், இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகும்.
  
சால்பு + பெருமை = சால்பு பெருமை [இடைத்தொடர்]
எஃகு + கடுமை = எஃகு கடுமை [ஆய்தத்தொடர்]
நாகு + கால் = நாகு கால் [நெடிற்றொடர்]
வரகு + கதிர் = வரகுகதிர் [உயிர்த்தொடர்]
  
வேற்றுமையில் வன்றொடர் முன்னும், மென்றொடர் முன்னும் வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.
  
குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி
கொக்கு + தலை = கொக்குத்தலை
  
1.
இடைத்தொடர், ஆய்தத்தொடர், நெடிற்றொடர், உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன்னே வேற்றுமையிலும், அல்வழியிலும் வல்லினம் மிகாது.
  
2.
வன்றொடர் முன்னே வேற்றுமையிலும், அல்வழியிலும் வல்லினம் மிகும்.
  
3.
மென்றொடர் முன்னே வேற்றுமையில் வல்லினம் மிகும். அல்வழியில் வல்லினம் மிகாது
  
மேலுள்ள இந்நுாற்பாவால் வாழ்த்துக்கள் என்றுதான் வரவேண்டும் என்பது பிழையாகும். நிலைமொழியாக வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லிருக்க, வருமொழி முன்னே க,ச,த,க பெயர்ச்சொல், வினைச்சொல் வர இருவழியும் வல்லினம் மிகும்.
  
கொக்குப் பறந்தது [எழுவாய்த் தொடர்]
சுக்குத் திப்பிலி [உம்மைத் தொகை]
முறுக்குப் பிழிந்தான் [இரண்டாம் வேற்றுமைத் தொகை]
கொக்குக்கால் [ஆறாம் வேற்றுமைத் தொகை]
  
வன்றொடர்க் குற்றியலுகரவீற்றாயினும் வினைத்தொகையிலும், வினைமுற்றிலும் வல்லினம் மிகாது. [இலக்கணச் சுருக்கும் 105 ஆம் விதி]
  
ஈட்டுபொருள் [வினைத்தொகை]
சாற்றுகவி [வினைத்தொகை]
நடத்து தலைவா [ஏவல் ஒருமை வினைமுற்று]
  
கூவிற்றுக் குயில், குறுந்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வினைமுற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க. [இலக்கணச் சுருக்கும் 105 ஆம் விதி]  
அஃறிணைப் பன்மையை உணர்த்தும் 'கள்' என்னும் இடைச்சொல் புணர்ச்சி ஒரு சொல்லுக்குள் நடக்கும் அகப்புணர்ச்சியாகும். வன்றொடர்ச் சொல்லுடன் 'கள்' விகுதி சேரும் அகப்புணர்ச்சியில் கோப்புகள், வாக்குகள், முத்துகள் என வருதலும் உண்டு. ஓசையைக் கருதி எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என வருதலும் உண்டு. இற்றை இலக்கண வல்லுநர் பலரும் எழுத்துகள் என எழுதுவதே சிறப்பென உரைக்கின்றனர். எழுத்துகள் என்று சொல்லும்பொழுது எழுத்தின் பின் 'கள்' சேரும்பொழுது ஓசை குன்றுவதாக உணருகிறேன். ஓசையை உணர்ந்து இவ்வகப் புணர்ச்சியை ஆளுதல் நெறியாகும்.
  
சங்க இலக்கியங்களில் 'கள்' விகுதி பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை. 'கள்' என்ற சொல் மதுவைக் குறிக்கும் உணவுப் பொருளாகத்தான் கையாளப்பட்டிருக்கிறது. அஃறிணைப் பெயர்கள் 'கள்' விகுதி ஏலாமலே, தாம் கொண்டு முடியும் வினைகளின் வழியே, ஒருமையை, பன்மையை உணர்த்தும் வண்ணம் உள்ளன. [குதிரை வந்தது - ஒருமை] [குதிரை வந்தன - பன்மை]
வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லுடன் மதுவைக் குறிக்கும் கள் என்ற பெயா்ச்சொல் வரும்பொழுது வல்லினம் மிகுத்தே வரும். [தோப்புக்கள் - வேற்றுமை ] [தோப்புகள் - பன்மை]
  
அஃறிணைப் பன்மைக்குரிய 'கள்' விகுதி தொல்காப்பியர் காலத்திலேயே உயர்திணைக்கும் வந்துள்ளது.
  
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே [தொல். 484]
  
'மக்கள்' இது மரூஉப் புணர்ச்சியாகும். மகவு என்னும் பெயர் குழந்தையைக் குறிக்கும். பகுத்தறிவில்லாத குழந்தை அஃறிணையின் பாற்பட்டதே. தொல்காப்பிய மரபியலில் குரங்கினது குட்டிக்கும் மகவு எனப் பெயர் கூறப்பட்டதைக் காணலாம். முதலில் அஃறிணை மரபில் சிறுபிள்ளையைக் குறிக்கவந்த மக்கள் என்னும் பெயர்ச்சொல், பின்னே ஒரு மாந்தனின் மக்களையும், ஓர் ஊர்த்தலைவனின் மக்களான பொதுமக்களையும் குறிக்கத் தலைப்பட்டது என்று கொள்வதற்கு இடமுண்டு.
  
இன்று 'கள்' விகுதி இரு திணையிலும் விகுதிமேல் விகுதியாக வரக் காண்கிறோம். அவை, இவை, எவை, அவர், இவர், எவர், மாந்தர் என்பன பன்மைச் சொற்களே ஆனாலும் அவற்றோடு 'கள்' விகுதியும் சேர்த்து எழுதப்படுகிறது. [ அவைகள், இவர்கள், மாந்தர்கள்]
  
வினைச்சொற்களுக்குப் பன்மைப்பால் குறிக்க அர், ஈர் என்ற விகுதிகள் இருந்தும், அவற்றின் மேலும் விகுதிமேல் விகுதியாகக் 'கள்' விகுதி கொள்ளலாயின. தந்தார், தந்தீர் என்றாலே பன்மை உணர்த்தினும் அவற்றோடு 'கள்' சேர்ந்து 'தந்தார்கள்', 'தந்தீர்கள்' என்றே மக்கள் உரைக்கலாயினர். அவர்கள் வந்தர்கள் என்பதே மரியாதைக்குரிய தொடராக இன்று ஏற்கப்பட்டது.
  
கள் பின்னொட்டுப் புணர்ச்சி விதிகள்
  
ஓரெழுத்து ஒருமொழிப்பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுத்தே புணரும்.
  
பா + கள் = பாக்கள்
பூ + கள் = பூக்கள்
  
ஓரெழுத்து ஒருமொழி ஐகார உயிர்மெய் எழுத்தின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுவதில்லை.
  
கை + கள் = கைகள்
பை + கள் = பைகள்
  
குறில் நெடில் இணையாய் வரும் ஆகார ஈற்று நிரையசைச் சொற்களின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகும்.
  
விழா + கள் = விழாக்கள்
வினா + கள் = வினாக்கள்
  
ஈரெழுத்து ஒருமொழி முற்றியலுகரத்தின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகும்.
  
தெரு + கள் = தெருக்கள்
கொசு + கள் = கொசுக்கள்
  
இணைக்குறிலாயினும் உகர ஈறு அல்லாத இடங்களில் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
  
அணி + கள் = அணிகள்
கனி + கள் = கனிகள்
  
குறில்மெய் நிலைமொழி ல், ள் ஈற்றின் பின் 'கள்' விகுதி சேரும்போது திரியும். நெடில்மெய் நிலைமொழி ல், ள் பின் 'கள்' விகுதி சேரும்போது இயல்பாகும்.
  
கல் + கள் = கற்கள்
முள் + கள் = முட்கள்
  
கால் + கள் = கால்கள்
நாள் + கள் = நாள்கள்
  
மகர ஈற்றின் பின் 'கள்' விகுதி சேரும்போது மகரம், இன மெல்லெழுத்தாகும்.
  
வரம் + கள் = வரங்கள்
உம் + கள் = உங்கள்
  
மேற்கூறிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுவதில்லை.
  
பண் + கள் = பண்கள்
துாண் + கள் = துாண்கள்
மான் + கள் = மான்கள்
பொய் + கள் = பொய்கள்
சீர் + கள் = சீர்கள்
யாழ் + கள் = யாழ்கள்
மொழி + கள் = மொழிகள்
மலை + கள் = மலைகள்
மரபு + கள் = மரபுகள்
பொருள் + கள் = பொருள்கள்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.12.2018

mercredi 26 décembre 2018

சிந்துப்பா மேடை - 1



சிந்துப்பா மேடை - 1

தமிழ்மொழி இயல் இசை, நாடகம் என்று செழிப்புடன் திகழ்வதால், முத்தமிழாகப் போற்றி மகிழ்கிறோம்.

இயற்றமிழ் என்பது கருத்தை உணர்த்துவதை நோக்கமாக உடையது என்றும், இசைத்தமிழ் என்பது இசையின்பம்  அளித்தலை முதன்மை நோக்கமாக உடையது என்றும், முனைவர் இரா. திருமுருகனார் உரைப்பார். [சிந்துப்பாடல்களில் யாப்பிலக்கணம் பக்கம் - 3]

பேச்சு, உரைநடை, செய்யுள்  ஆகியவை இயற்றமிழாகும். இயற்றமிழ்ப் செய்யுள் இயற்பா எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா. மருட்பா இயற்றமிழைச் சேரும்.

இசைத்தமிழ்ப் பாடல் இசைப்பா எனப்படும். கலிப்பா, பரிபாடல், தாழிசை, விருத்தம், துறை, சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி அகியவை இசைப்பாவாகும்.

இயலும் இசையும் இணைந்து வருவது நாடகத்தமிழாகும்.

இசைப்பாக்களில், தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் பாடப்படுவன என்றும், பண்ணுடனும் தாளத்துடனும் பாடப்படுவன என்றும் இருவகையுண்டு.

சிந்து என்னும் இசைப்பா, இசைத் தாளத்துடன் பாடிப்பாடி இயற்ற வேண்டும். இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுத் தாளத்துடன் நடப்பது சிந்துப்பாவாகும். [சிறுபான்மை நான்கடி பெற்றுவருவதும் உண்டு] 

கிளிக்கண்ணி

நெஞ்சில்  உரமுமின்றி
நோ்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே!
வாய்ச்சொல்லில் வீரரடீ!

[மகாகவி பாரதியார்]

ஓரெதுகையில் அமைந்த இரண்டடிகள் கண்ணி என்று பெயர்பெறும். கிளியே என்ற மகடூஉ முன்னிலை உடைமையால் கிளிக்கண்ணி என்று பெயர்பெற்றது. கிளிக்கண்ணி பலவகை அடிகளாலும் தாள நடைகளாலும் நடக்கும். சீர், தளை வரையறை இல்லை.

பாரதியின் கிளிக்கண்ணியில் நெஞ்சில் - திறமுமின்றி ஓரடியாகும். வஞ்வனை - வீரரடீ மற்றோர் அடியாகும். நெஞ்சில் - வஞ்சனை எதுகையாகும். நெஞ்சில் - நேர்மை, வஞ்சனை - வாய்ச்சொல் மோனையாகும்.

இக்கண்ணி, நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும்.  ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். [இரண்டாம் அரையடிக்குப் பின் கிளியே  - தனிச்சொல் வரும். இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்]

நிரையசைப் பாடல்

பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே!
பாமரர் ஏதறிவார்?

[மகாகவி பாரதியார்]

வாய்ச்சொல் வீரர்!

வாக்குப் பொறுக்கிடவே
வாசல் வலம்வருவார்!
நாக்குப் பலவுடையார் - கிளியே!
நம்மின் தலையறுப்பார்!

வெள்ளை உடையணிந்து
கொள்ளை அடித்திடுவார்!
இல்லை துளியொழுக்கம் - கிளியே!
எங்கே இனம்சிறக்கும்!

வெற்றுப் பயல்கூட்டம்
விழுந்து வணங்கிடுவார்!
சற்றும் இதயமிலார் - கிளியே!
தலைமை நிலையடைந்தார்!

கால்கைப் பிடித்திடுவார்!
கடுகேனும் மானமிலார்!
வேல்கைத் தமிழினத்தைக் - கிளியே!
விற்றுப் பிழைத்திடுவார்!

மேடை உரைபொழியும்
வெற்றி மறவரவர்!
ஆடை யணிமணிகள் - கிளியே!
ஆயிரம் கோடியடீ!

மண்ணின் நலமுரைப்பார்!
மக்கள் வளமுரைப்பார்!
கண்ணில் பணப்புதையல் - கிளியே!
காக்கும் செயல்புரிவார்!

அடிபிடி நெஞ்சகரும்
தடியடி வஞ்சகரும்
குடிவெறி கூட்டிடுவார்! - கிளியே!
குறள்நெறி சாய்த்திடுவார்!

ஆட்சி இருக்கையினை
அடைய அணிவகுப்பார்!
மாட்சி அழித்திடுவார் - கிளியே!
மாளாப் பொருளடைவார்!

மன்னரின் ஆட்சியினை
மக்களின் ஆட்சியென
இன்னும்..நீ நம்புவதோ? - கிளியே!
எங்கே..நீ வாழுவதோ?

பொறுக்கித் திரிபவரும்
பொல்லாக் கொடியவரும்
முறுக்கி உலாவருவார் - கிளியே!
நறுக்கி அவர்..அகற்று!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

விரும்பிய பொருளில்  ஐந்து கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.12.2018

சிந்துப்பா மேடை - 2


சிந்துப்பா மேடை - 2
  
கிளிக்கண்ணி
  
விண்மகன் கிளிக்கண்ணி
  
விண்ணின் திருமகனார்
மண்ணில் பிறந்தாரடீ!
கண்ணில் நிறைத்தேனடீ - கிளியே!
பண்ணில் குழைத்தேனடீ!
  
பனிநிறை காலத்திலே
நனிதேவர் வந்தாரடீ!
கனிச்சுவை ஊறுதடீ! - கிளியே!
தனிச்சுவை ஏறுதடீ!
  
அந்தத் தொழுவத்திலே
வந்து சிரித்தாரடீ!
விந்தை விளைத்தாரடீ - கிளியே!
சிந்தை நிலைத்தாரடீ!
  
அன்பைப் பொழிந்திடவே
பண்பர் மலர்ந்தாரடீ!
துன்பம் துடைத்தாரடீ - கிளியே!
இன்பம் படைத்தாரடீ!
  
வேதம் இசைத்திடவே
துாதர் உதித்தாரடீ!
ஓத எழுவோமடீ - கிளியே!
பாதம் பணிவோமடீ!
  
பொல்லா உலகிடையே
நல்லார் நடந்தாரடீ!
கல்லால் துவண்டாரடீ! - கிளியே!
முள்ளால் வதைந்தாரடீ!
  
பாவச் சுமையகற்றத்
தேவர் சுடர்ந்தாரடீ!!
ஏவல் புரிந்தாரடீ - கிளியே!
காவல் தொடர்ந்தாரடீ!
  
நேயம் உரைத்திடவே
ஆயர் அலர்ந்தாரடீ!
தாயாய்த் திகழ்ந்தாரடீ - கிளியே!
ஓயா துழைத்தாரடீ!
  
பேணிப் புவியணைக்க
ஞானி ஒளிர்ந்தாரடீ!
ஆணிச் சிலுவையினைக் - கிளியே!
மேனி தரித்தாரடீ!
  
தேவி திருவயிற்றில்
மேவி எழுந்தாரடீ!
கூவி அழைத்தாரடீ - கிளியே!
ஆவி அளித்தாரடீ!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்தக் கிளிக்கண்ணியில் நான்கு அரையடிகள் ஓரெதுகையில் அமையும். நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும். ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். மூன்றாம் அரையடிக்குப் பின் கிளியே - தனிச்சொல் வரும். இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்
  
இந்த வகையில் விரும்பிய பொருளில் ஐந்து கிளிக் கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.12.2018

samedi 22 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
முடுகு வெண்பா என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.
  
பாவலர் தென்றல், சென்னை
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
சந்த முடுகுடைய வெண்பாவை, முடுகு வெண்பா என்றுரைப்பர். வெண்பாவின் பின்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது பின்முடுகு வெண்பா. வெண்பாவின் முன்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது முன்முடுகு வெண்பா. வெண்பா முழுமையும் பதினைந்து சீர்களும் சந்தத்துடன் நடப்பது முற்று முடுகு வெண்பா.
  
பின்முடுகு வெண்பா
  
சீர்மணக்கும் வாழ்வொளியைச் செல்லும் இடமெல்லாம்
பேர்மணக்கும் மாண்பொளியைப் பெற்றிடவே - தார்மணக்கும்
அத்தனரு ளுற்றதமிழ்! சித்தமொளி யிட்டதமிழ்!
கற்புமரு ளுற்றதமிழ் பற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் முன்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. பின்னிரண்டு அடிகள் 'தத்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் 6 சீர்களும், இறுதிச்சீர் 'தத்த' என்ற சந்தமுடைய உகரவீற்றுச் சீரும் பெற்று வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் பின்முடுகு வெண்பா என்று பெயர். அச்சீர்களின் சந்தம் தானதத்த, தானதன, தாதந்த, தத்தந்த, தந்ததன என்பன போலப் பலவகையாகவும் அமையலாம்.
  
முன்முடுகு வெண்பா
  
மஞ்சமிகு வஞ்சியிடை! தஞ்சமிடு நெஞ்சினிடை!
பஞ்சமிலை! கொஞ்சலிடு வஞ்சமிலை! - இஞ்சி
இடுப்பழகில் ஏங்கி இளைக்கின்றேன்! உன்றன்
உடுப்பழகில் உள்ளம் உடைந்து!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் தனிச்சொல்லும் பின்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. முன்னிரண்டு அடிகளிள் உள்ள 7 சீர்கள் 'தந்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் முன்முடுகு வெண்பா என்று பெயர்.
    
முற்று முடுகு வெண்பா
  
பொன்னொளி மின்னிட அன்புள[ம்] இன்புற,
நன்னெறி தந்திடு[ம்] என்கவி! - நம்மொழி
செம்மொழி! மென்மொழி! வன்மொழி! தென்மொழி
எம்மொழி இங்கிணை எண்?
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
இந்த நேரிசை வெண்பாவின் நான்கடிகள் 'தந்தன' என்ற தந்தத்தில் வந்தன. ஈற்றுச்சீர் 'தந்' எனும் சந்தத்தில் வந்தது. இப்படி அமையும் பாடலுக்குப் முற்று முடுகு வெண்பா என்று பெயர்.
  
'இருளறும் ஒளிபெற இனிதுறும் அருளற'
  
இவ்வாறு, முடுகு அமைகின்ற அடிகளில் வெண்டளை இன்றிச் சிலர் பாடியுள்ளனர். வெண்டளையுடன் முடுகு பெற்று வருவதுதான் சிறப்புடைய முடுகு வெண்பா என்றுணர்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.12.2018

vendredi 21 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
நடுவெழுத்தலங்காரம் என்றால் என்ன?
  
பாவலர் தென்றல், சென்னை.
-------------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
எழுத்துச் சுதகம், எழுத்து வருத்தனம், மாத்திரைச் சுதகம், மாத்திரை வருத்தனம், திரிபாகி, முதலெழுத்தலங்காரம், நடுவெழுத்தலங்காரம், கடையெழுத்தலங்காரம் ஆகியவை சொற்சித்திர கவிதையாகும்.
  
நடுவெழுத்தலங்கரத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
  
நடுவெழுத்தலங்காரம் - 1
  
பாடலில் குறிக்கப் பெறுகின்ற பொருட்களை மூன்றெழுத்துக் கொண்ட சொற்களில் தருவித்து, அவற்றின் நடுவெழுத்துகளை முறையே படிக்கப் பெயர் ஒன்று வரும்வண்ணம் பாடுவது நடுவெழுத்தலங்காரமாகும்.
  
கண்ணன் பெயராகும்! கன்னல் தமிழ்தரும்!
தண்ணீர் உறவாகும்! தண்மணிசேர் - பெண்ணணியாம்!
முற்றம்! சிறப்பு! மொழிந்த பதநடுவே
பற்றுடன் பண்ணரசைப் பார்!
  
கண்ணன் பெயராகும் - கோபால் - நடுவெழுத்து - பா
கன்னல் தமிழ்தரும் - பாட்டு - நடுவெழுத்து - ட்
தண்ணீர் உறவாகும் - ஓடம் - நடுவெழுத்து - ட
பெண்ணணியாம் - ஆரம் - நடுவெழுத்து - ர
முற்றம் - வாசல் - நடுவெழுத்து - ச
சிறப்பு - சீர்மை - நடுவெழுத்து - ர்
  
நடுவெழுத்துகளை இணைத்தால் 'பாட்டரசர்' என்ற பெயர் வருவதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 2
  
ஒரு பாடலில் வரும் சொல் ஒவ்வொன்றுக்கும் உரை மூன்றெழுத்தாக அமைத்து, நடுவெழுத்தெல்லாம் முறையாகச் சேர்ந்து ஒரு பாடலாக வரும்வண்ணம் பாடுவதும் நடுவெழுத்தலங்காரமாகும்.
  
நல்வினை மைந்தன்! நன்மை வேராம்!
நல்லொளி சேர்க்கை! பச்சை நாட்டியம்!
நெஞ்சக் கன்னி இன்னல் நல்கும்
சண்டை முறிதல்! சாரும் ஆசைத்
தொகுதி யனைத்தும் சூளை யிடமே!
இனிமை! மாட்சி! மேன்மை! ஆம்பல்!
கூத்தன் எண்ணம் பாவை கோன்றமிழ்
பூத்து நல்கும்! பொதுமை கண்ட
புண்ணியர் குறளும் பொழிலாய் மணக்கும்!
எண்ணும் நடுவெழுத் தெல்லாம் இணைந்தே!
  
நல்வினை - தவம்
மைந்தன் - பிள்ளை
நன்மை - வளம்
வேர் - மூலம்
சேர்க்கை - கூட்டு
பச்சை - பசுமை
நாட்டியம் - நடம்
நெஞ்சம் - மார்பு
கன்னி - குமரி
இன்னல் - துன்பு
நல்கும் - ஈனும்
சண்டை - அமர்
முறிதல் - முறிவு
சாரும் - மேவும்
ஆசை - காதல்
தொகுதி - பாரம்
அனைத்தும் - யாவும்
சூளை - சுள்ளை
இடமே - களமே
இனிமை - அமுது
மாட்சி - பெருமை
மேன்மை - தகுதி
ஆம்பல் - குமுது
கூத்தன் - சிவன்
எண்ணம் - சிந்தை
பாவை - பதுமை
  
பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், மூன்றெழுத்தில் பொருட்கண்டுணர்ந்த, சொற்களின் நடுவெழுத்துக்களை ஒன்றிணைத்தால் கீழுள்ள குறள் வெண்பா வரும்.
  
வள்ள லருட்சுடர் மன்னு மறிவுதர
வுள்ள முருகு முவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 3
  
இப்பாடலில் ஒவ்வொரு சீரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். [ 3, 5, 7,....] ஒவ்வொரு சீரின் நடுவெழுத்துகளைக் கூட்டிப் படித்தால் ஒரு பாடல் வரவேண்டும். இந்த வகை முன்னோர் இடத்தில் இல்லை. புதிய வகையாக ஏற்போம்.
  
அகவல்
  
புகழை வெல்க! புவியே யுயர
மகளே! அமுதே! வறுமை யகல
அகமே வண்ண அணியை ஏற்க!
முகமே இனிமை! மூவும் சிறுமை!
சுகமே தவமே! தொல்லை மூலம்
நகமே இலையே! ஞாயும் நறுமை
மிகவே வா!வா!வா! வாழ்வு மேவுமே!
  
சீா்களின் நடுவெழுத்துகளைச் சேர்த்துப் படித்தால் வரும் குறள்வெண்பா
  
கல்வி யகமுறுக! கண்ணிற் கனிவுறுக!
வல்ல கலையுறுக வாழ்வு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018

jeudi 20 décembre 2018

வெண்பா மேடை - 129


வெண்பா மேடை - 129
  
நிரல் வெண்பா
  
தொகையாக உள்ள பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக உரைப்பது நிரல் வெண்பாவாகும். திருக்குறளுக்கு உரையெழுதிய 1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிதி, 6. திருமலையர், 7. பரிமேலழகர், 8. மல்லர், 9. கவிப்பெருமாள், 10. காளிங்கர் ஆகியோர்தம் பெயர்களை கீழுள்ள வெண்பா உரைப்பதைப் படித்து மகிழவும்.
  
திருக்குறள் உரையாளர் நிரல் வெண்பா!
  
தருமா், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, திருமலை யர்,பரி மேலழகர்,
மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நுாற்[கு]
எல்லை உரையியற்றி னார். [பழம் பாடல்]
  
எட்டுத்தொகை நிரல் வெண்பா!
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ[று]
ஒத்த பதிற்றுப்பத்[து] ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ[டு] அகம்புறமென்[று]
இத்திறத்த எட்டுத் தொகை.
  
[பாரதம் பாடிய பெருந்தேவனார்]
  
பத்துப்பாட்டு நிரல் வெண்பா
  
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடைக் கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து [பழம் பாடல்]
  
1. திருமுருகாற்றுப்படை , 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை,
4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை,
8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடு கடாம்
  
பதினெண் கீழ்க்கணக்கு நிரல் வெண்பா
  
நாலடி நான்மணி நானாற்ப[து] ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலை,சொல் காஞ்சியுடன், ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு! [பழம் பாடல்]
  
1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நுாற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடு, 13.ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. கைந்நிலை, 17. முதுமொழிக்காஞ்சி, 18 ஏலாதி
  
ஐங்குறுநூறு பாடியவர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
மருதமோ ரம்போகி நெய்தல மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தைப் பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - பேயனார்
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
பாலை - ஓதலாந்தையார்.
  
கலித்தொகை பாடியோர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்,
கல்விவலார் கண்ட கலி. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - சோழன் நல்லுருத்திரனார்
மருதம் - மருதனிள நாகனார்
நெய்தல் - நல்லந்துவனார்
பாலை - பெருங்கடுங்கோ.
  
பரிபாடலில் உள்ள பாடல் எண்ணிகையை உரைக்கும் நிரல் வெண்பா!
  
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம். [பழம் பாடல்]
  
திருமால்லுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடுகாளுக்கு (காளிக்கு) 1, வையைக்கு 26, மதுரைக்கு 4.
  
அகத்திணை நிலையை உணர்த்தும் நிரல் வெண்பா!
  
போக்கெலாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி யூட லணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல்
புல்லுங் கவிமுறைக் கொப்பு. [பழம் பாடல்]
  
ஆழ்வார் பன்னிருவர் பெயர்களின் நிரல் வெண்பா
பொய்கையார், பூதத்தார், பொற்பேயார், பூம்மழிசை,
மெய்மதுரர், நம்மாழ்வார் வெல்சேரர் - துய்பட்டர்,
மின்னாண்டாள், நற்றொண்டர், இன்பாணர், வன்கலியர்
பன்னிருவர் என்றே பகர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
காப்பிய நிரல் வெண்பா
சிந்தா மணி,சீர் திகழ்சிலம்பு, மேகலை,
பந்த வளையா பதி,கேசி, - சிந்தையுறும்
சூளா மணி,நீலம், துாயுதய நாகமைந்தர்
ஆளும் யசோதரம் ஆம்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஐம்பெருங்காப்பியம்
1. சீவக சிந்தாமணி, 2. சிலப்பதிகாரம், 3. மணிமேகலை, 4. வளையாபதி, 5. குண்டலகேசி
  
ஐஞ்சிறுகாப்பியம்
1. சூளாமணி, 2. நீலகேசி, 3. உதய குமார காவியம், யசோதர காவியம், 5. நாக குமார காவியம்
  
இவ்வாறு அமைந்த 'நிரல் வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நிரல் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.12.2018

mercredi 12 décembre 2018

யாரோ என்னை வரவேற்பார்?


பாட்டரசர் கி. பாரதிதாசனின் மாமியாருமாகிய,
திருமதி குணசுந்தரி பாரதிதாசனின் அன்னையுமாகிய
திருமதி பட்டம்மாள் குப்புச்சாமி அவர்களின் நல்லு
இறையடியில் ஆழ்ந்து நிறைவுற வேண்டுகிறோம்.
  
யாரோ என்னை வரவேற்பார்?
  
பூமி மீது நான்..ஏற்கப்
   பூப்போல் பெண்ணை அளித்தனையே!
சாமி யிடத்தில் எமக்காகத்
   தண்ட மிட்டுத் தொழுதனையே!
சேமித்[து] எமக்குக் கொடுத்தனையே!
   தேவி வடிவே! திருவிளக்கே!
மாமி.. மாமி.. உன்மருகன்
   மனமே உடைந்து துடிக்கின்றேன்!
  
பொல்லாக் கணவன் நிலையெண்ணிப்
   பொறுத்த உள்ளம் அடைத்ததுவோ?
எல்லாத் துயரும் எமக்காக
   ஏற்ற இதயம் உடைந்ததுவோ?
சொல்லா தெங்குச் சென்றாயோ?
   துாய வடிவே! சுடர்விளக்கே!
கல்லாய் மருகன் நிற்கின்றேன்!
   கண்ணீர்க் கடலில் தவிக்கின்றேன்!
  
கண்ணில் இருக்கும் உன்னுருவம்!
   கருத்தில் இருக்கும் உன்சொற்கள்!
மண்ணில் இருக்கும் உன்பெருமை!
   மலரில் இருக்கும் உன்னிதயம்!
பண்ணில் இருக்கும் உன்மென்மை!
   பண்பில் இருக்கும் உன்வாழ்வு!
விண்ணில் இருக்கும் உன்மாட்சி!
   விழியின் இமைபோல் காப்பாயே!
  
ஒருசொல் உரைக்க நான்..எண்ணி
   உன்றன் வரவை எதிர்ப்பார்த்தேன்!
திருச்சொல் கேட்ட செவிக்குள்ளே
   தேள்சொல் ஏனோ பிரிந்தாயோ?
இருசொல் பேசும் வழக்கில்லை!
   எதிர்சொல் வீசும் முறையில்லை!
அருஞ்சொல் இனிமேல் யார்தருவார்?
   அகமே உடைந்து துவள்கின்றேன்!
  
பட்டு வருமே! பட்டென்று
   பறந்து விடுமே! என்றுன்னைக்
கொட்டும் நகைப்பில் உரைக்கின்ற
   கோல மருகன் குலைகின்றேன்!
எட்டுத் திக்கும் உனைப்போன்றே
   யார்தாம் வருவார் துணைசெய்ய!
கட்டுக் கடங்கா வெள்ளமெனக்
   கண்ணீர் பெருகிக் கரைகின்றேன்!
  
ஆண்டு முடிவைக் கொண்டாட
   அருமை மருகன் வரமாட்டான்,
நீண்டு துயரில் கிடந்தாயோ?
   நினைவாம் நெருப்பில் வெந்தாயோ?
கூண்டுக் கிளிப்போல் வதைந்தாயோ?
   குன்றிக் குன்றி வளைந்தாயோ?
மீண்டும் மீண்டும் அடிதொழுதேன்!
   விரைந்து என்னைப் பொறுத்தருளே!
  
ஆண்டு பிறந்த முதல்..நாளில்
   அழகாய் வாழ்த்து மழைபொழிவாய்!
வேண்டும் வரங்கள் யாம்பெறவே
   விழிகள் சிந்தி வணங்கிடுவாய்!
யாண்டும் வந்து நலஞ்சேர்ப்பாய்!
   இன்னல் நீங்க வழிசொல்வாய்!
கூண்டும் விழுந்த நிலையுற்றோம்!
   துாணும் விழுந்த துயருற்றோம்!
  
அன்பின் ஊற்று நிற்பதுவோ?
   அருளின் ஊற்று மறைவதுவோ?
பண்பின் ஊற்று மூடுவதோ?
   பாச ஊற்றுத் துார்வதுவோ?
துன்பின் ஊற்றுப் பாய்வதுவோ?
   துணிவின் ஊற்றுக் காய்வதுவோ?
என்பின் ஊற்றுக் குன்றிடவே
   ஏனோ பிரிந்து சென்றாயோ?
  
இல்லம் வருவாய் என..நம்பி
   இருந்து விட்டேன்! ஒருதொண்டும்
சொல்லும் வகையில் செய்யலையே!
   துளியும் நெஞ்சம் ஆறலையே!
செல்லும் பொழுதில் உன்னருகே
   சேர்ந்த உறவில் நான்..இலையே!
கொல்லும் நினைவால் வாடுகிறேன்!
   குற்றம் யாவும் பொறுப்பாயே!
  
மனமே அடைந்த மதிபெல்லாம்
   மருகன் இழந்து நிற்கின்றேன்!
இனிமேல் உன்றன் இல்லத்தில்
   யார்தாம் என்னை வரவேற்பார்?
வனமே வறண்டு காய்வதுபோல்
   மதியே வறண்டு வதைகின்றேன்!
இனமே தேடும்! என்சொல்வேன்?
   எங்கே செல்வேன்? வழியறியேன்!
  
ஆழ்ந்த அழுகையுடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.12.2018


samedi 24 novembre 2018

ஒளியே போற்றி!


ஒளியே போற்றி!
  
1.
அண்ணா மலையின் பேரொளியை
   அகத்துள் ஒளிரத் தொழுதிடுவோம்!
எண்ணா திருந்த சிறப்பெல்லாம்
   ஏற்கும் வாழ்வைச் சமைத்திடுவோம்!
உண்ணா திருந்தே ஒருவேளை
   உள்ளம் ஒன்றித் தவம்புரிவோம்!
பெண்ணா? ஆணா? உருப்பெற்றோன்
   பெருமை யாவும் அளிப்பானே!
  
2.
அருணா சலத்தின் அழகொளியில்
   ஆழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்திடுவோம்!
இரு..நா அரவ அணியானை
   எண்ணி யெண்ணி மகிழ்ந்திடுவோம்!
திரு..நா மலர்ந்து தமிழ்பாடித்
   தேனை யள்ளி அருந்திடுவோம்!
குரு..நா நல்கும் மொழிகேட்டு,
   கொள்கை விளக்கை ஏந்திடுவோம்!
  
3.
அன்பே இறைவன் இருப்பிடமாம்!
   ஆசை யதனின் எதிர்நிலையாம்!
இன்பே யென்று தமிழ்பாடி
   ஏத்தி யிசைத்தல் பெருவாழ்வாம்!
துன்பே கூட்டும் விதியவனைத்
   துாள்துாள் ஆக்கும் இறையொளியாம்!
இன்றே உணர்ந்து மனவீட்டில்
   எழிலாம் விளக்கை ஏற்றுகவே!
  
4.
உண்மை மணக்கும் சித்தரிடம்
   ஓங்கும் ஒளியைப் பெற்றிடலாம்!
பெண்மை மணக்கும் கற்பினிலே
   பேணும் ஒளியைக் கற்றிடலாம்!
வெண்மை மணக்கும் மனத்துக்குள்
   வெல்லும் ஒளியை உற்றிடலாம்!
தண்மை மணக்கும் புவி..காணத்
   தமிழாம் ஒளியை ஏற்றுகவே!
  
5.
சொல்லும் செயலும் ஒன்றானால்
   சுடரும் புகழைச் சூடிடலாம்!
செல்லும் இடத்தில் சிறப்பெய்திச்
   செம்மை வாழ்வை நாடிடலாம்!
அல்லும் பகலும் அருளொளியை
   அகத்துள் ஏற்றித் தொழுதிட்டால்
வெல்லும் ஞான விழிதிறக்கும்!
   விண்ணார் உலகின் வழிதிறக்கும்!
  
6.
உரிமை ஒளியே உலகமெலாம்
   ஓங்கிப் பரவ உழைத்திடுவோம்!
பெருமை ஒளியே செயற்பாட்டில்
   பெருகிப் பரவத் திறம்பெறுவோம்!
அருமை ஒளியே தமிழாகும்!
   அறத்தின் ஒளியே குறளாகும்!
ஒருமை ஒளியே உளமேவ
   ஒளிரும் பொன்போல் நம்முடலே!
  
7.
கண்ணைக் கவரும் கலையொளியே!
   கருத்தைக் கவரும் கவியொளியே!
மண்ணைக் கவரும் மதியொளியே!
   மனத்தைக் கவரும் மாதொளியே!
பெண்ணைக் கவரும் அணியொளியே!
   பிறப்பைக் கவரும் அருளொளியே!
விண்ணைக் கவரும் தமிழொளியே!
   வேண்டு! வேண்டு! மெய்யொளியே!
  
8.
வடலுார் நல்கும் திருவொளியால்
   வளமாய் வளரும் நன்மனிதம்!
உடலுார் உணர்வில் உறுமொளியால்
   உயரும் வாழ்க்கை யெனும்பாதை!
மடலுார் காலைக் கதிரொளியால்
   மலர்ந்து மணக்கும் குளிர்சோலை!
வடமூர் தேரின் அழகொளியால்
   மயங்கி மகிழும் மெய்யுள்ளம்!
  
9.
உலகின் முதலே ஒளியாகும்!
   உயிரின் தன்மை ஒளியாகும்!
நிலவின் வருகை இராப்பொழுதை
   இனிக்கச் செய்யும் ஒளியாகும்!
குலவும் தமிழும் ஒளியாகும்!
   கூத்தன் உருவும் ஒளியாகும்!
நிலமும் செழிக்க எழுகதிரோன்
   நிகரே இல்லா ஒளியாகும்!
  
10.
ஒளியே போற்றி! ஓமென்னும்
   ஒலியே போற்றி! அருளிதயத்
தெளிவே போற்றி! தித்திக்கும்
   தேனே போற்றி! வான்கொண்ட
வெளியே போற்றி! இவ்வுலகின்
   விளைவே போற்றி! வாழ்விக்கும்
வளியே போற்றி! வண்டமிழின்
   வளமே போற்றி! சீர்..போற்றி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்