dimanche 30 juin 2013

காதல் ஆயிரம் [பகுதி - 97]





காதல் ஆயிரம் [பகுதி - 97]
 
861.
முத்தொளிரும்! வானில் முழுமதி வந்தொளிரும்!
கொத்தொளிரும்! முந்தும் கொழுந்தொளிரும்! - சித்தொளிரும்
என்றும் தமிழொளிரும்! என்னவள் பொன்முகத்தால்
நின்றொளிரும் என்கவி நெஞ்சு!

862.
பூமணக்கும்! பொங்கும் புகழ்மணக்கும்! மேடையிலே
நாமணக்கும்! நல்லோர் செயல்மணக்கும்! - காமணக்கும் 
பாமணக்கும்! கன்னல் கனிமணக்கும்! கண்ணே..நீ
வா..மணக்கும் என்றன் மனம்!

863.
தேனினிக்கும்! தெய்வத் தமிழினிக்கும்! நற்கண்ணல்
ஊனினிக்கும்! உண்மை உயர்ந்தினிக்கும்! - தானுணர்ந்து
வானினிக்கும் என்றென்னும் வாழ்வினிக்கும்! நல்லவளே
நானினிக்கும் நற்பதிலை நல்கு!

864.
சீர்ஓங்கும்! செல்வச் சிறப்போங்கும்! நல்லாட்சி
ஊர்ஓங்கும்! அன்பால் உறவோங்கும்! - நீர்ஓங்கப்
பார்ஓங்கும்! மாறாத பற்றோங்கும்! பைங்கொடியே
கூர்ஓங்கும் கண்ணேணோ கூறு?

865.
சின்ன கொடியாடும்! வண்ண மயிலாடும்!
கன்னல் மலர்கள் கமழ்ந்தாடும்! - தென்றலிலே
நாற்றாடும்! கீற்றாடும்! நல்லாள் முகங்கண்டு
கூத்தாடும் உள்ளம் குதித்து!

(தொடரும்)

samedi 29 juin 2013

வேல்விழியாள்




வேல்விழியாள்

வேர்வையைச் சிந்தி உழைக்கும் போது - வண்ண
வேல்விழி பார்த்தால் துயர்தான் ஏது?
பார்வையால் மயக்கம் கொடுக்கும் மாது - இளம்
பாவைபோல் அழகோ யார்மண் மீது?

பூவுடன் சேரும் நாரும் மணக்கும் - உயர்
பொன்னுடன் சேரும் பொருளும் சிறக்கும்!
பாவினில் சேரும் சொல்லும் இனிக்கும் - வாழ்வில்
பற்பல நன்மை அவளால் கிடைக்கும்!

கண்களைக் கவரும் காதல் மதியாம் - என்
கருத்தினைக் கவரும் கவிதைச் சுவையாம்!
பெண்ணினம் வியக்கும் மின்னற் கொடியாம் - நற்
பெருமையைப் படைக்கும் அன்பின் வடிவாம்!

18.07.1982

jeudi 27 juin 2013

வாழ்க பல்லாண்டு!




மணமக்கள் வாழ்க பல்லாண்டு!

வண்ண மலர்வனமும் வாச நறுங்காற்றும்
எண்ணம் அமர்ந்தே எழிலூட்ட! - உண்ணுகவே
இல்லற இன்னமுதைச் சோஃபியும் அர்மானும்!
நல்லறம் காண்கவே நன்கு!

அன்பிற் கனிந்த சிவஅரியும்
     அருளிற் கனிந்த கோமதியும்
இன்பிற் கனிந்து வளர்த்திட்ட
     இனிய செல்வி எழிற்சோஃபி
என்பிற் கனிந்த காதலிலே
     இணையும் செல்வன் நல்அர்மான்
மன்றிற் கனிந்த இந்நாள்போல்
     வாழ்க! வாழ்க! பல்லாண்டே!

பாடும் சின்ன குயிலிசையும்
     படரும் பச்சைக் கிளிமொழியும்
ஆடும் வண்ண மயில்நடமும்
     அமுதும் தேனும் முக்கனியும்
ஈடும் உண்டோ எனவோதும்
     இளமைத் தமிழின் பெருவளமும்
கூடும் சோஃபி நல்அர்மான்
     கொண்டு வாழ்க பல்லாண்டே!

26.06.2013

mercredi 26 juin 2013

கடல் கடந்த கம்பன்




கடல் கடந்த கம்பன்

முன்னைத் தமிழின் புகழ்கூறி
     முப்ப(து) ஆண்டாய்த் தொண்டாற்றும்
சென்னைக் கம்பன் கழகத்தார்
     சீரார் செயலைப் போற்றுகின்றேன்!
என்னை மறந்தே வியக்கின்றேன்
     எல்லாம் கம்பன் திருவருளே!
மன்னும் உலகில் கம்பன்சீர்
     வளர்ந்து செழிக்க வேண்டுகின்றேன்!

புதுவைப் புலவோர் புலமைக்குப்
     புவியில் இணையாய் ஒன்றுண்டோ?
மதுவைப் போன்று மயக்கும்அவர்
     வடிக்கும் தமிழோ கற்கண்டாம்!
எதுகை, மோனை, இயைபுகளும்
     இருக்கும் பாட்டைச் சுவைத்திங்கே
இதமாய்க் கம்பன் விழாவெடுத்த
     இனிய அன்பா்க்[கு என்வணக்கம்!

அம்மா அப்பா அருமைகளை
     அண்ணன் தம்பி பெருமைகளை
இம்மா நிலத்தின் மாந்தரெலாம்
     இனிதே அறியச் செய்திட்ட
பெம்மா னாகி, ஈடில்லாப்
     பிறவிக் கவிஞன் எனத்திகழும்
கம்பன் அடியைத் தலைமேலே
     காத லாலே சுமக்கின்றேன்!

இடரைப் போக்கும் வழிகளையும்
     இனிதாம் வாழ்வின் நெறிகளையும்
தொடரும் வண்ணம் கம்பனவன்
     துணையாய் நின்றே அளிக்கின்றான்!
கடலைக் கடந்து நம்கம்பன்
     காலம் அறிந்தே வந்ததனால்
உடலும் உயிரும் கம்பனென்றே
     உவந்து நின்றார் உயர்ந்தாரே!

நஞ்சாம் போதைப் பொருட்களையே
     நாளும் கடத்தி வாழ்பவரும்
நெஞ்சைக் கவரும் மணிவகையை
     நிறைய கடத்தி உயர்பவரும்
பஞ்சாயப் பறந்து பலப்பலவும்
     பாரில் கடத்தி மகிழ்பவரும்
கொஞ்சு தமிழைக் கடல்கடந்து
     கொண்டு செல்ல வருவாரோ?

கதையும் நல்ல கற்பனையும்
     காதல் சிறப்பும் கவிநயமும்
நதியாய் ஓடும் சொல்லழகும்
     நலஞ்சேர் தமிழின் அணியென்றே
மதியை வளர்த்து மானுடரின்
     மாண்பை விளக்கிக் காட்டுகின்ற
புதுமை நிறைந்த காவியத்தைப்
     புகன்றே கம்பன் பொலிகின்றான்!

கவிதை யாவும் தித்திக்கக்
     கம்பன் படைத்தான் காவியமே!
புவியோ ரெல்லாம் விருப்பமுடன்
     போற்றிப் போற்றிப் படித்திடுவார்!
சுவைஞர் தம்மை ஆட்கொண்ட
     தூய நூல் ராமாயணமே!
அவையில் உண்மை உரைக்கின்றேன்
     அடியேன் தொழுதல் கம்பனையே!

அயலார் நாட்டில் வாழ்தமிழர்
     அரிதாம் அமிழ்தை அருந்திடவும்
புயலாய்க் கிளம்பித் தாக்குகின்ற
     புல்லர் நெஞ்சம் திருந்திடவும்
இயலாய் இசையாய் எழிற்கூத்தாய்
     இனிக்கும் தமிழைப் பரப்பிடவும்
உயர்வாய்க் கம்பன் காவியமே
     ஒளிரும் அய்யா கடல்கடந்தே!

எங்கும் போரின் முழக்கங்கள்
     எல்லாத் திசையும் வன்முறைகள்
தங்கும் பொல்லா மதவெறியால்
     தவிக்கும் உலகைக் காண்கின்றோம்!
பொங்குந் தமிழில் கம்பனவன்
     புனைந்த கவிகள் யாவிலுமே
மங்கா மனித நேயந்தான்
     மாண்பார் தமிழர் மூச்சாகும்!

அன்பின் ஆழம், அரும்நட்பின்
     ஆற்றல், சூழும் உயர்மாண்பு,
பண்பின் மேன்மை, நற்பணிவால்
     படரும் இனிமை இவையாவும்
இன்பம் கொடுக்கும்! தூயவுளம்
     இடரைத் துடைக்கும்! எனஓதிப்
பொன்னார் கம்ப நாடனவன்
     புகழைச் சேர்த்தான் கடல்கடந்தே!

சென்னைக் கம்பன் விழா - 2004

mardi 25 juin 2013

கலைமகளே




கலைமகளே

எடுப்பு

காவிரிக் கரையில் காத்திருந்தேன் - என்
காதலி யைஎதிர் பார்த்திருந்தேன்!
                                            (காவிரி)
தொடுப்பு

பூவிரிந் தாடப் பூத்திருந்தேன் - மலர்
பூங்கொடி சூடக் கோர்த்திருந்தேன்!
                                            (காவிரி)

முடிப்புகள்

முத்தாம் நிலவு வந்ததடி - காதல்
மோகம் மனதில் உந்துதடி!
அத்தான் ஆசை பெருகுதடி - கலை
அழகைக் காண உருகுதடி!
                                            (காவிரி)
இன்றும் என்றும் இளையவளே - இங்கு
என்னைக் கவர்ந்த கலைமகளே!
என்றும் எனக்கே உரியவளே - பே
ரின்பப் பொழுதில் பெரியவளே!
                                            (காவிரி)

22.05.1980
 

lundi 24 juin 2013

மாவீரர் மறைவாரோ?





மாவீரா் மறைவாரோ?

நாவீரம் படைத்தவர்கள் நடிங்கி ஓட
     நரிமனத்துக் கொடியவர்கள் கொட்டம் வீழ
தாவீரம் என்றோதித் தமிழை வாழ்த்தித்
     தம்தலைவர் வழியேற்றுப் போர் புரிந்த
மாவீரர் மறைவாரோ? தமிழர் நெஞ்சுள்
     மறமூட்டி ஒளிர்கின்றார்! அவர்தம் சீரைப்
பாவீரப் பாவலரே பாடிப் பாடிப்
     பைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர்!

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றாய்க் கூடிப்
     புகழ்கொண்ட மாவீரர் மேன்மை போற்றி
உளம்நிறைந்த அஞ்சலியைச் செலுத்து கின்றார்!
     உலகுக்குத் தமிழ்நெறியை ஓது கின்றார்!
பலம்நிறைந்த போர்மறவர் கொள்கை ஏற்றுப்
     பறைசாற்றி முழங்குவதால் ஈழம் பூக்கும்!
வளம்நிறைந்த நல்வாழ்வைத் தமிழர் காண
     வழிவகுத்த தமிழ்த்தலைவர் வாழ்க! வாழ்க!!

மண்ணுரிமை மொழியுரிமை இழந்து விட்டால்
     வரலாற்றில் இடமின்றி மறைந்து போவோம்!
பெண்ணுரிமை பறிக்கின்ற அரசு, பொல்லாப்
     பேயுலவும் காடாக இருளே சூழும்!
முன்னுரிமை பெற்றவரைக் கீழே தள்ளி
     முதுகொடிக்க நினைத்திட்ட பகைவர் வீழ,
தன்னுரிமைப் போர்தொடுத்த தமிழன் என்று
     சான்றோர்கள் உரைக்கின்றார்! வெற்றி காண்போம்!

பனைமரத்துக் காடெல்லாம் நினைவில் ஆட,
     படரன்பு நட்புகளை எண்ணி வாட,
எனைமறந்து நிற்கின்றேன்! காலஞ் செய்த
     இழிவுகளை மாய்த்திடவே கடமை யெண்ணி
அணைதிறந்து பாய்தோடும் வெள்ளம் போன்றே
     அணிதிரண்டு போராடி ஒளி கொடுத்தார்
மனஞ்சிறந்த மாவீரர் தாள்கள் தம்மை
     மதியேந்தி வணங்கிடுவோம் வாரீர்! வாரீர்!

வளர்ந்துவரும் சமுதாயம் சிறந்து நிற்க,
     வன்கவிநான் உழைத்திடுவேன்! நன்மை செய்வேன்!
தளர்ந்துவரும் இளைஞர்தம் உள்ளம் தேடிச்
     சால்புகளை விளைத்திடுவேன்! தீமை சாய்த்து
மலர்ந்துவரும் பொதுவுடைமை மணக்கும் வண்ணம்
     மதியொளியை வீசிடுவேன்! வயலில் நன்றே
விளைந்துவரும் பயிருக்கு உரத்தைப் போன்று
     விளங்கிடுவேன் தமிழுயர! தாயே காப்பாய்!


(மாவீரா் நினைவு மலர் - 2003 பிரான்சு)  
     

dimanche 23 juin 2013

பாவேந்தர் என்றே பகர்!




பாவேந்தர் என்றே பகர்!

கற்பனை ஊற்றெடுத்துக் கன்னல் கவிபடைத்து
நற்றமிழ் காத்து நலங்கொடுத்தார்! - பற்றுடன்
கூவி நமையழைத்துக் கொள்கை விளைத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

குன்றா இனமானம் கொண்டு தமிழ்மக்கள்
நன்றே வளமுற நற்றமிழை - கன்னலென
நாவினிக்கத் தந்தவர் நற்புதுவை தான்பெற்ற
பாவேந்தர் என்றே பகர்!

வேதியரின் வேதத்தை வேரொடு மாய்க்கும்பா
சாதிமத பேதத்தைச் சாய்க்கும்பா - நீதிதரும்
பாவழங்கிப்  பைந்தமிழைப் பாலூட்டிக் காத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

தொண்டொன்றே நாட்டைத் துலக்கிடும் தொண்டென்று
கண்டதனால் இன்பம் கனிந்தூறத் - தண்டமிழை
நாவேந்திச் சொல்லில் நனிபுரட்சி செய்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

பஞ்சாங்கம் வேண்டாம் பகுத்தறிவு போதுமென்று
துஞ்சாமல் தூயநெறி சொல்லியவர்! - அஞ்சாமல்
பூவேந்திக் கைம்பெண் புதுமணத்தைப் போற்றியவர்!
பாவேந்தர் என்றே பகர்!

சோதியிலே நன்கு சுடர்கின்ற ஆதவன்போல்
ஆதியிலே தோன்றிய அந்தமிழை - நீதியுடன்
மூவேந்தர் காத்ததுபோல் முன்னின்று காத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

தந்தை பெரியாரின் சால்பேற்று நம்மினத்தின்
முந்தை வினையை முடித்தவர் - சிந்தைதனில்
நோவேந்தும் துன்பத்தை நுண்ணறிவால் போக்கியவர்
பாவேந்தர் என்றே பகர்!

தாங்கிடாக் கோடையில் தண்மணக் காற்றாக
ஓங்குதமிழ் நெஞ்சின் உணவாகத் - தேங்குபுகழ்
நாவலர்கள் நாடும் நலமாக நூல்படைத்தார்
பாவேந்தர் என்றே பகர்!

பொதுவுடைமை பூத்துத் தமிழர்தம் வாழ்வில்
புதுநலங்கள் நன்றே பொலிய - மதச்சதியைச்
சாவேந்தச் செய்யத் தளரா துழைத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

புதுமைகள் மேவும் புகழார் நெறியை
மடமைகள் நீங்கும் வழியைக் - கடமையென
மாவேந்தும் பாட்டில் மதுவேந்தித் தந்தவர்
பாவேந்தர் என்றே பகர்!

17.01.1980
 

samedi 22 juin 2013

கவிஞர் தமிழ்ஒளி




கவிஞர் தமிழ்ஒளி
[21.09.1925 - 29.03.1965]

அறமொளிர் நெஞ்சன்! அழகொளிர்பா வாணன்!
திறமொளிர் வல்ல செயலன் - மறவன்
தமிழொளி தந்த தனிப்புகழ்ப் பாக்கள்
அமுதளி ஊற்றாம் அருந்து!

புதுவை பூமியில் பூத்த புகழொளி!
புதுமை படைத்த புலவன் தமிழொளி!
சின்னை யாவும் செங்கேணி யம்மாவும்
நன்னய மாக நல்கிய நன்மகன்!
செம்படை அணியில் சேர்ந்த திருமகன்!
நம்மிடை வாழ்ந்தது நாற்பது ஆண்டே!
தனக்கொரு வீடும் கணக்கொடு வாழ்வும்
கனவிற் கண்ட காட்சியாய்க் கண்டவன்!
பொதுமை மலரப் புதுமை புலர
இதமாய்த் தொண்டுகள் இயல்பாய்ப் புரிந்தவன்!
வந்தவர் வளமாய் வாழும் புதுவையில்
செந்தமிழ்க் கவிகளால் சிந்தை கவர்ந்தவன்!
சின்ன சின்ன கதைகள் தீட்டிப்
பொன்னிகர் பாவியம் பலவும் புனைந்தவன்!
நாட கங்களும் நயமிகு உரைகளும்
நாடிப் படிக்க நமக்குக் கொடுத்தவன்!
இன்பம் என்பதை என்றும் அறியா(து)
துன்பக் கடலைத் துணிந்து கடந்தவன்!
பரந்து விரிந்த பழமை வயலைப்
புரிந்தே ஆங்குப் புதுமை விளைத்தவன்!
சாதி சமயச் சழக்குகள் அனைத்தையும்
மோதி மிதிக்க முனைந்து சென்றவன்!
பாரதி வழியைப் பாவேந்தர் நெறியைக்
கூரறி(வு) ஓங்கக் கொண்டு களித்தவன்!
தோழர் சீவா தூய நட்பினை
ஆழப் பெற்று அருந்தமிழ் வளர்த்தவன்!
அஞ்சா நெஞ்சும் அயரா உழைப்பும்
துஞ்சா நடையும் துணையாய்ப் பெற்றவன்! 
பொதிகை மலையின் பூந்தமிழ்த் தென்றலாய்
இதயம் புகுந்த எங்கள் தமிழொளியே!

15.03.2011