samedi 29 mars 2014

கனிவிருத்தம் - பகுதி 3

கலிவிருத்தம் () கனிவிருத்தம்

11.
அன்புக்கும் அளவில்லை! அறிவுக்கும் ஏதெல்லை!
பண்புக்கு நீ..பிள்ளை! பாட்டுக்கு நான்பிள்ளை!
வம்புக்கு வழியில்லை! வந்தாடு பொன்முல்லை!
கும்முக்குக் கன்னங்கள் கொழிக்கின்ற தமிழ்க்கொள்ளை!

12.
கண்ணுக்குள் நடமாடும் கவிப்பெண்ணே! இன்பமெனும்
விண்ணுக்குப் படியமைக்க வேண்டுமடி உன்னுறவு!
எண்ணுக்குள் கூட்டுவதும் பெருக்குவதும் என்னவளே
இன்பத்துள் நாம்காண்போம்! இளமையினை நாம்ஆள்வோம்!

13.
இனியென்ன நான்செய்ய? ஏறுதடி உச்சநிலை!
பனியென்ன நான்செய்ய? படருதடி கனவுநிலை!
கனியென்ன நான்செய்ய? கண்கவரும் அழகுநிலை!
பணியென்ன நான்செய்ய? பைத்தியமாய் ஆனநிலை!

14.
காற்றாகித் தழுவிடுக! கவியாகி இனித்திடுக!
ஊற்றாகிக் குதித்திடுக! உறவாகி இணைந்திடுக!
நாற்றாகி நடம்புரிக! நலமாகி நிலைத்திடுக!
ஈற்றாகி என்கவியில் எந்நாளும் இடம்பெறுக!

15.
நெஞ்சத்துள் நீ..புகுந்த நாள்முதலாய்ப் பெரும்போதை!
மஞ்சத்துள் கிடக்கின்றேன் வஞ்சித்துப் போகாதே!
கொஞ்சத்துள் மாறாத கொள்கைநிறை என்னுள்ளம்!
பஞ்சத்துள் அலைவதுபோல் உன்பார்வைக்கு ஏங்குதடி!

தொடரும்

jeudi 27 mars 2014

கனிவிருத்தம் - பகுதி 2

கலிவிருத்தம் () கனிவிருத்தம்

6.
உன்னழகு மதுகுடித்து இளநெஞ்சம் உளறுவதால்
கண்ணழகு காட்சிகளில் மலர்மஞ்சம் கமழுவதால்
பொன்னழகு சுடா்பட்டுப் புலவனுளம் பொங்குவதால்
என்னழகு முன்னழகோ? என்னவளே நீ..வேண்டும்!

7.
விழிகேட்ட கேள்விக்கு விடைகேட்டு நிற்கின்றேன்
வழிகாட்டும் மன்மதனோ வந்தம்பை எய்துகிறான்!
மொழிகேட்டு மயங்குகிறேன்! மோகத்தால் வாடுகிறேன்!
பழிபோட்டுப் பார்த்தாலும் பதில்எழுத நீ..வேண்டும்!

8.
கள்கொடுக்கும் சுகமடுத்து! கனிகொடுக்கும் சுவையெடுத்து!
சிள்ளிழுக்கும் இசையெடுத்து! சேர்ந்திழுக்கும் விசையெடுத்து!
சொல்லினிக்கும் அடியெடுத்து! சுரந்தினிக்கும் மதுவெடுத்து!
உள்ளிருக்கும் உணர்வெடுத்து ஓதிடவே நீ..வேண்டும்!

9.
பா..நினைத்த வுடன்பாடும் பைந்தமிழின் செல்லமகன்!
நீ..நினைத்த வுடன்ஆடும் நெஞ்சத்தைப் பெற்றமகன்!
வா..நினைத்த வுடன்அருகே! வற்றாத வளமருகே!
தா..நினைத்த வுடன்சுகத்தை! தந்திடுவாய் பொன்னலத்தை!

10.
மண்ணுக்கு மணமுண்டு! மலருக்குள் மதுவுண்டு!
கண்ணுக்குக் கலையுண்டு! கவிதைக்குக் கருவுண்டு!
பெண்ணுக்குப் பேறுண்டு! பெருமைக்குத் தமிழுண்டு!
என்னிடத்தில் நீயுண்டு! உன்னிடத்தில் நானுண்டு! 

தொடரும்

lundi 24 mars 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வரலாறு தந்த வழிகளைக் கண்டுணா்ந்தால்
இரவேது நெஞ்சுள் இயம்பு!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

காற்றின் மகனைக் கனிந்துருகும் வண்ணத்தில்
போற்றிப் படைத்தீா் பொலிந்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

கவி.சோம சுந்தரனார் கற்கண்டு சொல்லால்
புவிசேமப் பாடல் புனைந்தார்! - செவிகண்கள்
இன்பச் சிலிர்ப்பில் இளகினவே! கற்போர்தம்
துன்பம் அனைத்தும் துடைத்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

துன்புற்று வாழும் நெஞ்சே!
    துணிவுற்று வாழ்வை வெல்க!  
இன்புற்று வாழும் வண்ணம்
    இங்குற்ற கவியைக் காண்க!
அன்புற்று வாழும் வாழ்வே
    அவனுற்ற உலகைக் காட்டும்!
வன்பற்றுத் தமிழ்மேல் கொண்டு
    வளமுற்று வாழ்க அம்பாள்!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்

மார்கழித் திங்கள் மணக்கும் பனித்துளியே!
சீா்நெறி தந்தாய் செழித்து!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

படிக்கும் பொழுதே பசியெடுக்கும் வண்ணம்
வடிக்கும் வலையே! வணக்கம்! - துடிப்புடன்
தஞ்சம் அடைந்து சமைத்த உணவெண்ணி
நெஞ்சுள் சுரக்குதே நீா்!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

நம்பிக்கைப் பாடல் நறுங்கவி என்னுள்ளே
தும்பிக்கை செய்யும் துணை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இளமதிப் பாவாய்! இனியதமிழ்ப் பற்றால்
நிலமிதில் நற்போ் நிறுவு! - நலமுற
என்றன் கவிக்கலையை இங்குனக்குத் தந்திடவே
உன்றன்மின் அஞ்சலை ஓது!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இமாவின் உலகம் இனிமை! இனிமை!
உமாதேவி காப்பாள் உனை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்

பேரீசம் சொல்லில் பிறந்த கவிகண்டு
பாரீசு பாரதி பாடுகிறேன்! - மாரியெனச்
சீனி படைக்கின்ற சிந்தனை அத்தனையும்
தேனி படைக்கின்ற தேன்!

22.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!
    சிற்பியென வடித்துள்ள கவிதை கண்டேன்!
பாராளன் என்றாலும் பாவை கண்கள்
    படுத்துகிற பாடுகளைத் தாங்க வேண்டும்!
கூராளன் என்றாலும் கோதை கண்கள்
    கூறுகிற மொழிகேட்டுச் சொக்க வேண்டும்!
காராளன்! கனியாளன்! என்றே போற்றக்
    கவியாளன் ஓங்கிடுக! காதல் வாழ்க!

கைவண்ணம் கண்டு கவிவண்ணம் தீட்டுகிறேன்!
மைவண்ணன் போன்றே மனத்தைப் பறித்ததுவே!
எண்ணும் கருத்துக்கள் எற்ற எழிற்கண்டு
கண்ணும் கமழும் கனிந்து

23.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

ஆசைப் பிடியில் சிக்காதே!
        
அழிவை என்றும் எண்ணாதே!
காசைத் தேடி வாழ்நாளைக்
        
கரைத்துக் கரைத்துத் தேயாதே!
மாசை நீக்க! மண்டியுள
        
மருளைப் போக்க! ஓமென்னும்
ஓசைக் குள்ளே உன்னுயிரை
        
உருகச் செய்க! ஒளிபிறக்கும்!

23.01.2013
-----------------------------------------------------------------------------------------

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 27

நண்பா்களின் வலைப்பூக்களில்

என் கவிப்பூக்கள்

வணக்கம்!

இளமையின் பொங்கல் இயம்பிய சொற்கள்
வளமையைக் காட்டும் வழி!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

என்றன் வலையில் இசைத்த கருத்துக்கள்
என்றும் இருக்கும் இனித்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

நகரத்தை நோக்கி நகா்ந்த கவிதை
சிகரத்தை நோக்கும் சிறப்பு!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

மக்கள் தலைவா்!இங்கு ஏழைஎளி யோர்உற்ற
சிக்கல் ஒழித்தார் சிறந்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

குன்றிக் கிடந்தாலும் கூடவே நின்றுழலும்
நன்றி மறவாத நாய்!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்

பாக்கள் ஆயிரம் சொல்லுகிற - பாடல்
பூக்கள் மணக்கும் பூஞச்சோலை!
ஈக்கள் போன்றே என்எண்ணம் - அமா்ந்து
இன்தேன் பருகும் இக்காலை!

நம்மினம் வாழ நவின்ற கவிபடித்துச்
செம்மனம் கொண்டேன் செழித்து!

மைவண்ணம் கண்டேன்! இளமதியே உன்னுடைய
கைவண்ணம் கண்டேன் கமழ்ந்து!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

எத்தனை நாள்கள் வாழ்கை!
    இயம்பிய கதையைக் கண்டேன்!
முத்தென மின்னும் சொற்கள்!
    மூச்சியில் கலக்கக் கண்டேன்!
புத்தனைப் போன்றே சென்கள்
    புகன்றதை எண்ணிப் பார்த்தேன்!
இத்தனைக் காலம் வீணோ!
    எதிர்வரும் வினாடி வாழ்வு!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

நுால்களின் காட்சியை நோக்கிக் களிப்பதுவே
நாள்களில் பெற்றநன் னாள்!

17.01.2013

-----------------------------------------------------------------------------------

வணக்கம்!

வேலு சாமி! முனிசாமி!
    வேறு சாமி பலருள்ளார்!
மாலு சாமி காலடியில்
    மகிந்து வாழும் தொண்டருள்ளார்!
ஆளு சாமி என்றுரைக்கும்
    ஆண்ட புளுகு காரருள்ளார்!
கேளு சாமி! கேளு!பாடல்
    துாளு சாமி! துாளுசாமி !

17.01.2013

-----------------------------------------------------------------------------------
 
dimanche 23 mars 2014

சொல்லோவியம் - [பகுதி - 10]

சொல்லோவியம்

91.
சிவப்புநிறச் சட்டையில
சிந்தனையைச் சிதைக்கிரியே!
தவத்துநிறை தண்டமிழைத்
தழைத்திடவே விதைக்கிரியே!

92.
கறுப்புநிறச் சட்டையில
கருத்தாக நடக்கிரியே!
பொறுப்பாக நம்முடைய
பொருத்தத்தைப் படிக்கிரியே!

93.
ஒத்தையடிப் பாதையில
புத்துலகைக் காட்டியவன்!
சத்தியமா என்னழகைத்
தானுறுஞ்சும் அட்டையவன்!

94.
மல்லாட்ட பொறுக்கையில
மல்லுகட்டும் என்..ராசா!
நல்லாத்தான் பேசற ..நீ
நாணமுறும் இவ்ரோசா!

95.
களைவெட்டும் காலையிலே
கண்ணடிக்கும் நற்கள்ளா!
சுளைசொட்டும் கவிமொழியால்
தூளானேன் நான்..எள்ளா!

96.
வயலாடும் வரப்பினிலே
வம்பாடும் வல்லவனே!
கயலாடும் கண்ணோடு
கவிபேசும் பல்லவனே!

97.
பெண்ணழகைப் பேசுங்கவி
மின்னிடுமே ஓவியமாய்!
மண்ணழகு வாய்த்திடவே
மணந்திடுமே காவியமாய்!

98.
பண்பாளா உனைப்பாட
பண்கோடி வேண்டுமடா!
கண்ணாளா உனைக்காணக்
கண்கோடி வேண்டுமடா!

99.
கண்கவரும் ஆணழகா!
கவிசொல்லும் தேனழகா!
உன்னோடு சேர்ந்தமுதல்
ஒளிர்கின்றேன் நானழகா!

100.
என்மண்ணின் மணமாக
எழுதிவைத்த கவிநூறு!
என்கண்ணின் ஒளியாக
இருக்கின்ற தமிழ்ப்பேறு!