இரட்டைக் கும்மி
வாய்ச்சொல் வீரரடி!
நாட்டினில் கையூட்டு வாங்கிடு வான் - அவன்
நன்றாக வீட்டுக்குள் துாங்கிடு வான்oo
நங்கைமேல் பற்றுடன் ஏங்கிடு வான் - சாதி
நாற்றத்தை நெஞ்சுக்குள் தாங்கிடு வான்oo
பாட்டினில் ஒற்றுமை பேசிடு வான் - பொய்யாய்ப்
பாசத்தை மக்கள்மேல் வீசிடு வான்oo
பைந்தமிழ்ச் சொற்றீயை மூட்டுக வே - அந்தப்
பாவியைத் தானிட்டு வாட்டுக வேoo
என்குலம் மேலென்று சொல்லிடு வான் - அவன்
ஏதேதோ பொய்பேசித் துள்ளிடு வான்oo
எல்லோரின் கால்தொட்டுக் கும்மிடு வான் - அவன்
இந்நாட்டை ஊழுக்குள் தள்ளிடு வான்oo
துன்மனம் தானுற்றுச் சுற்றிடு வான் - அவன்
சூதெல்லாம் ஒன்றாக்கிக் கற்றிடு வான்oo
தொல்லினம் இம்மண்ணில் நம்மின மே - அவன்
தோலுறித் தோட்டுவோம் இத்தினமே!
சாதியை வேண்டியே நின்றிடு வான் - நம்முள்
சண்டைகள் மூட்டியே இன்புறு வான்oo
சங்கரா சங்கரா என்றிடு வான் - அவன்
சற்றுமே அன்பின்றிச் சென்றிடு வான்oo
நீதியைச் சாய்த்திங்குக் கொன்றிடுவான் - தீய
நெஞ்சத்தால் ஆட்சியை வென்றிடு வான்oo
நீளும்இத் தீமையைப் போக்கிடு வோம் - தோழி
நேருடைக் காளிபோல் கூத்திடு வோம்oo
எல்லோரும் ஒன்றெனப் பாடுக வே - வாழ்வில்
இன்குறள் நன்னெறி சூடுக வேoo
எத்திக்கும் ஏத்திட முத்தமி ழை - ஓதி
ஈசன்போல் நன்னடம் ஆடுக வேoo
கல்லாமை இல்லாமல் ஓட்டுக வே - இரு
கண்களாய்க் கல்வியைக் கூட்டுக வேoo
கண்ணியம் நற்கடன் கட்டுப்பா டும் - ஓங்கக்
கைகொட்டிச் சிந்திசை மீட்டுக வேoo
பாட்டரசர் கி. பாரதிதாசன்
31.01.2021