ஏக்கம் நுாறு [பகுதி - 3]
கவிக்குள்ளே கமழ்கின்ற காதல் பூக்கள்
கவிக்குள்ளே கமழ்கின்ற காதல் பூக்கள்
காலமெல்லாம்
மணங்கொடுக்கும்! வாழும் இந்தப்
புவிக்குள்ளே இருப்பதையே மறந்து
விட்டுப்
பொன்வானில்
உடல்மிதக்கும்! போதைச் சொற்கள்
செவிக்குள்ளே சுழன்றடித்து மீண்டும்
மீண்டும்
செந்தேனாம்
மழையளிக்கும்! மாதே! இன்பச்
சுவைக்குள்ளே நான்முழுகிச் சுவா்க்கம்
காணச்
சுடா்விழியே
ஒருபார்வை பார்த்தால் என்ன? 11
கோபத்தைக்
கொட்டுவதேன்? கொஞ்சிப் பேசும்
கோவையிதழ் கொளுத்துவதேன்? வாடப் பொல்லாச்
சாபத்தை
அளிப்பதுமேன்? தாழ்ந்து குன்றச்
சந்தியிலே விடுத்ததுமேன்? நம்பி நின்றேன்
துாபத்தைப் போட்டதுபோல்
நெஞ்சுக் குள்ளே
துயரலைகள் அடிப்பதுமேன்? தெய்வக் காதல்
தீபத்தைச்
சாய்த்ததுமேன்? தேவி உன்றன்
திருவிழியின் அருளெங்கே? தேடு கின்றேன்! 12
தாமரைக்கா
டொன்றுதரையில் நடை பயின்று
தவழ்ந்துவரும் காட்சியடி! சந்தம் சிந்தும்
பாமரைக்கா
டொன்றுபக்கம் வந்து, காதல்
படமெடுக்கும் மாட்சியடி! பாடும் சீா்கள்
நாமரைக்கா
டென்றுசொல்லும் வண்ணம் பூத்து
நறுமணத்தை வீசுதடி! வியந்து நின்றேன்!
ஓ..மரைக்கா
டிங்குவந்த தேனோ? என்றன்
உயிர்கலந்த ஊா்வசியே! உறவே! வாழ்வே! 13
கோடையிலே
வாடுகின்ற கொடியைப் போன்று
கோகுலமே உனையெண்ணி உள்ளம் ஏங்கும்!
மேடையிலே
நீயிசைக்கும் பாடல் கேட்டு
மேனியெங்கும் புல்லரிக்கும்! இனிமை கூசும்!
கூடையிலே
நிறைந்துள்ள கனிகள் தோற்கும்
குளிர்ந்தவிழி கொடுக்கின்ற சுவைகள் கோடி!
பாடையிலே
போனாலும் உன்னை யெண்ணிப்
பறந்துவரும் என்னாவி! தொடரும் காதல்! 14
பற்கோடிக் கவிதைகளைப் படைத்த போதும்
பாவையவள் மலா்ப்பாத அழகே வெல்லும்!
விற்கோடி விழிக்குள்ளே வைத்தார் யாரோ?
விந்தைமிகு விளையாட்டுக்கு எல்லை ஏது?
பொற்கோடி குவித்ததுபோல் மின்னும் மேனி!
பொழிலொன்று நடைபயின்று மயக்கும் காட்சி!
சொற்கோடித்
தவமிருக்கும் உன்னைப் பாட!
துாயவளே! என்னுயிரே! கருணை காட்டு! 15
தொடரும்
சொற்சிலம்பமாடி, கருத்தினை செம்மையாய் மனதினில் பதிய வைத்து, ஏக்கப்பெருமூச்சு விடும் காளையரை இன்னமும் ஏக்கம் கொள்ள வைக்கின்றீர்கள் கவியரசரே!
RépondreSupprimerஇனிய கருத்துரைக்கு நன்றி! நனறி!!
Supprimerசொற்சிலம் பாடும் வண்ணம்
சுடா்விழிப் பார்வை மின்னும்!
நற்சிலம் பூட்டும் காதல்
நானவள் அழகில் தோய்ந்தேன்!
பொற்சிலம் பூட்டும் சந்தம்
புலவனைப் புரட்டும்! வாட்டும்!!
வெற்சிலம் பாடும் என்னை
வென்றவள் அவளே என்பேன்!
அழகான வரிகள் ஐயா...
RépondreSupprimerநன்றி நவின்றேன்
Supprimerஅழகு வரிகள் அவள்தந்த சொத்து!
பழகு தமிழ்நிகா் பாவை! - ஒழுகுநற்
பண்பின் இருப்பிடம்! பண்சுரக்கும் பெண்ணவள்
அன்பின் இருப்பிடம் ஆடு!
என்னா கவிதை சார்
RépondreSupprimerஎன்னா வரிகள்..
அற்புதம் அற்புதம்
சிட்டுக் குருவிக்குச் செப்பினேன் நன்றிகள்
Supprimerஎன்னா என்றே அவள்என்னை
ஏற இறங்க நோக்குகிறாள்!
கன்னா பின்னா என்றென்னுள்
காதல் பூக்கள் மலா்ந்தனவே!
பொன்னா? பூவா? புத்தமுதா?
புலமை பொலியும் பேரழகு!
சொன்னா கேட்டா உளஞ்சொக்கும்!
சொர்க்கம் தெரியும்! அப்பப்பா!
RépondreSupprimerபொங்கும் உணா்வுகளை இங்கே இசைத்துள்ளீா்!
எங்கள் மனங்கள் இளகினவே! - எங்கிருந்து
கொண்டுணா்ந்தீா்! கொஞ்சும் குளிர்க்கவியே! எப்படித்தான்
கண்டுணர்ந்தீர் காதல் கலை?
Supprimerவணக்கம்!
கற்றுத் தெளிவதோ காதல் கலை?தானே
உற்றுயிர் பின்னி உவப்பதுவே! - நற்றமிழில்
தந்த விருத்தங்கள் தந்த உயா்வுற்றால்
வந்த பிறப்போ வளம்!