lundi 28 octobre 2013

கம்பனில் ஒளிர்வது - பகுதி 2




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது

[கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி]
[பிரான்சு கம்பன் விழாத் தலைமைக கவிதை]

கவிஞர்களைக் கவிபாட அழைத்தல்!

கருணை ஒளியைப் பாடிடவே
     கவிஞர் அருணா வந்துள்ளார்!
அருணை ஈசன் இவரிடத்தில்
     அழகுத் தமிழைத் தந்துள்ளான்!
சுருணை யாகக் கவிபிறக்கும்!
     சுடரும் கதிராய்த் தமிழ்சிறக்கும்!
பெருமை மேவ அழைக்கின்றேன்
     அருமைத் கவிகள் அளித்திடவே!

அருணா செல்வப் பெண்மணியே! - கொடுப்பாய்
அமுதை அளிக்கும் இன்கனியே!
கருணை கரனின் திருவருளால் - என்றும்
கமழும் உன்றன் தமிழ்கவியே!
பாடுக! கவிமலர் சூடுக!

-------------------------------------------------------------------------------------------

கடமை ஒளியைப் பாடிடவே
     கவிஞர் தணிகா வந்திடுக!
மடமை இருளை கிழித்திடவே
     மாண்பாய்க் கவிகள் தந்திடுக!
உடைமை என்ன? உயர்வென்ன?
     உரிமை என்ன? உரைத்திடுக!
தடையை உடைத்துப் பாய்கின்ற
     தண்ணீர் போன்று தமிழ்மொழிக!

தணிகா வருகவே! - மின்னும்
அணியாய் கவிகள் தருகவே!

-------------------------------------------------------------------------------------------

திங்கள் போன்றே ஒளிர்கின்ற
     தேனாம் காதல் காட்சிகளை
இங்கே பாட வருகின்றார்
     இனிய சரோசா நற்கவிஞர்!
சங்கே முழங்கு! எனச்சொல்லிச்
     சபைக்கே இவரை அழைக்கின்றேன்!
தங்கு தடைகள் தாமின்றித்
     தமிழைத் தரவே வாழ்த்துகிறேன்!

இனிய சரோசா நற்கவிஞர்!
இவர் எழுதும் கவிதையைப்
புது..ரோசா என்பார் தமிழ்அறிஞர்!
எழுகவே! தேன்மழை பொழிகவே!

-------------------------------------------------------------------------------------------

கற்பின் ஒளியைப் வீசிடவே
     கவிஞர் தேவ ராசரை,நான்
நட்பின் சீரால் அழைக்கின்றேன்
     நல்ல கவிகள் நவின்றிடவே!
முத்தின் வெண்மை இவர்உள்ளம்!
     முற்றல் கனியோ இவர்சொல்லும்!
சற்றென்(று) எழுந்து கவிதுள்ளும்!
     சாற்றும் கருத்தோ நமைவெல்லும்!

வல்ல தேவராசர் கவிராயர்
வருக! வருக! வருகவே!
நல்ல தேனடையைத் தமிழ்நேயர்
உண்ண தருக! தருகவே!

-------------------------------------------------------------------------------------------

14.09.2013 (தொடரும்)

dimanche 27 octobre 2013

கம்பனில் ஒளி்ர்வது - பகுதி 1




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)
பிரான்சு கம்பன் விழாத் தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்!

உலகம் பிறந்த பொழுதினிலே
     உதித்த மொழியே! உயர்தமிழே!
திலகம் ஆக எனக்குள்ளே
     திகழும் அழகே! செந்தேனே!
கலகம் நிறைந்த பாதையினைக்
     கழுவும் கவியாய் எனைச்செய்க!
குலவும் அன்பே! என்தாயே!
     குறைகள் பொறுத்துக் காப்பாயே!

இறை வணக்கம்!

வில்லும் சொல்லும் விளையாடும்
     விந்தை அழகா! வியன்இராமா!
கல்லும் உன்னால் உயிர்பெற்றுக்
     கதைத்த செயல்போல், என்கால்கள்
செல்லும் பாதை கவிபாடச்
     செய்தால் என்ன? என்னரசே!
வெல்லும் வண்ணம் என்..நாவில்
     துள்ளும் தமிழைத் தந்தருளே!

கம்பன் வணக்கம்!

கம்பன் என்றன் கருத்தமர்ந்து
     கவிதைக் காதல் புரிகின்றான்!
வம்பன் என்றன் வாயடக்கி
     மழையோல் தமிழைப் பொழிகின்றான்!
செம்பொன் போன்றே ஒளிர்கின்றான்!
     சிந்தை முழுதும் நிறைகின்றான்!
நம்பன் என்றே நல்லடியை
     நாளும் தொழுது மகிழ்கின்றேன்!

விழாத் தலைவர் வணக்கம்!

இந்த விழாவின் நற்றலைமை
     ஏற்ற புலவர்! இன்மனத்தர்!
சந்தக் கவிதைக் கற்கண்டைத்
     தந்த கவிஞர்! தமிழ்த்தொண்டர்!
சொந்தம் வாணி தாசர்க்கு!
     தூய கலிய பெருமானார்!
கந்தம் கமழும் மலர்தூவிக்
     கால்கள் பற்றி வணங்குகிறேன்!

அருட்செல்வர் சோசப் வணக்கம்

ஆழ்வார் அருளால் அரும்சோசப்
     அளித்த அமுதை உண்டவர்கள்
ஏழ்பார் உய்யும் வழிகாண்பார்!
     எந்தை இராமன் திருவழகில்
வீழ்வார்! விழிகள் தாம்பணித்து
     வினைகள் அறுத்தே உயர்வடைவார்!
ஊழ்..பார் பறக்கும்! திருத்தொண்டர்
     ஒளிரும் அடியை வணங்குகிறேன்!

முனைவர் பர்வீன் சுல்தானா வணக்கம்

சர்ரென்(று) ஓடும் ஊர்தியிலே
    தமிழை எந்தி வந்துள்ளார்!
பெர்லின் நாட்டின் அழகாகப்
    பர்வீன் சுல்தான்! வணங்குகிறேன்!
ஊர்ரென்(று) இங்கே இருப்பவர்கள்
    உயர்ந்த அடிகள் தாம்கேட்டுச்
சொர்ரென்(று) இறங்கும் மழைபோலச்
    சூட்டி மகிழ்வீர் கையொலியே!

அவை வணக்கம்!

சீறும் சிறுத்தை அடங்கிடுமோ?
    சிலிர்க்கும் சிங்கம் அடங்கிடுமோ?
கூறும் சொற்கள் தாம்கேட்டு
    கூவும் குயிலும் அடங்கிடுமோ?
ஏறும் புலியும் அடங்கிடுமோ?
    இறைவன் விளையாட்டு அடங்கிடுமோ?
ஆறும் கடலும் பொங்குவதை
    ஆ..ஊ.. என்றால் அடங்கிடுமோ?

ஊறும் உணர்வில் தமிழேந்தி
     உட்கார்ந் துள்ள அன்பர்களே!
மாறும் மனத்தை ஓர்நிலையில்
     மடக்கி வைத்த நண்பர்களே!
ஈறு வரையில் இங்கமர்ந்தே
     இன்பத் தமிழைச் சுவைப்பவரே!
வேறு நினைவு துளியின்றி
     வேண்டி உம்முன் அடங்குகிறேன்!

கம்பன் கவியில் ஒளிர்கின்ற
     கருணை, காதல், கடமையினை
எம்மண் காக்கும் எழில்கற்பை
     இங்கே பாட அழைக்கின்றேன்!
இம்மண் உணரும் வண்ணத்தில்
     இனிய தமிழைத் தந்திடவே!
சம்மென் றிருக்கும் இவர்கவிகள்
     சற்றே கூர்ந்து கேட்டிடுவீர்!

14.09.2013 [தொடரும்]

samedi 26 octobre 2013

கம்பன் புகழ்!





கம்பன் புகழ்!

தந்தையின் சொல்லினைத் தன்னுயிர் என்றான்
தனயன் இராமபிரான்! - கூனி
மந்தரை சூழ்ச்சியால் கைகேயி வார்த்தையால்
மன்னவன் காடுறைந்தான்!

அண்ணனும் தம்பியும் அன்பைப் பொழிந்திடும்
அற்புதக் காவியமாம் - அது
கன்னித் தமிழினில் கண்டெனத் தீட்டிய
கம்பனின் ஓவியமாம்!

கருணைக் கடலெனக் காணும் இராமனின்
காலடி கள்சுமந்தான் - உயர்
பரதனைப் போன்றொரு பண்புடைச் செல்வனைப்
பாவியத் துள்படைத்தான்!

சிற்றன்னை செய்த சிறப்பில்லாச் செய்கையால்
சீர்ராமன் காடடைந்தான் - நாளும்
உற்ற துணையாய் இலக்குவன் நின்றே
உயர்நிலை தானடைந்தான்!

சனகனின் கண்மணி சானகி தேவியின்
சால்பினை என்னென்பேன் - அவள்
கனவிலும் கூடக் கமழும் திருராமன்
காட்சியும் நன்றென்பேன்!

பெருமை இழந்தான் பிறன்மனை நோக்கிப்
பெரியோன் இராவணன்தான் - போற்றும்
அருமைக் கதையை அழகாய்ப் படைத்தான்
அருங்கம்ப நாடனவன்!

அரக்க இனத்தை அனுமனை விட்டே
அழிக்கக் கதைபடைத்தான் - இராமன்
இரக்க மனத்தால், இலங்கையின் வேந்தனை
இன்று போ.... என்றுரைத்தான்!

அசோக வனத்தில் மிதிலையின் செல்வி,தன்
அய்யனை நோக்கிநின்றாள் - அங்கு
விசுவாசத் தோடு திரிசடை என்பாள்
விரும்பிப் பணிபுரிந்தாள்!

காரிருள் தோற்றமும் காலனின் ஆற்றலும்
காணும் நிலத்தவனாம்! - குகன்
பார்புகழ் ராமன்பால் பக்தியை வைத்துப்
படகை விடுத்தவனாம்!

மூத்த மனைவி எனும்பெயர் பெற்றவள்
மூப்பிலாக் கோசலையாள் - அவள்
பூத்த மலராய்ப் பொலியும் இராமனைப்
பூமியில் பெற்றவளாம்!

மாய மிகுமானாய் வந்தவன் மாரீசன்
வாழும் அறமுரைத்தான் - கொடும்
பேயர் அரக்கர் குலத்தில் உதித்தும்
பெருமையால் தானுயர்ந்தான்!

இன்னும் பலரும் இராமக் கதையில்
இருக்க இடங்கொடுத்தான் - கம்பன்
கன்னல் தமிழினில் வண்ணங் கமழக்
களிக்கக் கவிபடைத்தான்!

மானை விரும்பிய மங்கையாம் சீதை
மனைதனைத் தாண்டிவிட்டாள் - இராமன்
தேனாய் இனித்த திருமகள் தேவியைத்
தீயுள் புகவிட்டான்!

செஞ்சோற்றுக் காகச் சிரசையும் தந்தவன்
சீர்மிகு கும்பகர்ணன் - எதற்கும்
அஞ்சாத வீரன்! அறவழி யாளன்!
அவன்புகழ் பாடுவமே!

ஆர்ப்பரித் தாள்அந்தச் சூர்பண கைதான்
அறவழி தான்மறந்தாள் - காம
வார்ப்பட மாகியே மூக்கறு பட்டுமே
வஞ்சகி தான்குலைந்தாள்!

முன்னவ னான இராவணன் செய்கை
முறையில்லை என்றுரைத்தான் - அயோத்தி
மன்னவன் பக்கமே வீடணன் நின்றதால்
மாப்புகழ் தானடைந்தான்!

எல்லாக் கலையிலும் ஏற்ற மடைந்தவன்
ஏந்தல் அனுமன்தான்! - அவனைச்
சொல்லினில் செல்வனாய்த் தோதாய்ப் படைத்தான்
சுடர்மிகு கம்பன்தான்!

தக்க அறவுரை தந்தைக்கு உரைத்தனன்
தன்னுயிர் தந்தனனே - வீரம்
மிக்கதோர் நல்மேக நாதன் புகழை
வியந்துநாம் போற்றுவமே!

அறநெறி யாவும் திருக்குறள் போலே
அழகுறத் தான்பொழிந்தான் - கம்பன்
உறவுகள் யாவும் உயர்அன்பி னாலே
ஒழுகிடத் தான்மொழிந்தான்!

கற்பனை யோடும் பொருட்சுவை யோடும்
கவிநயம் கண்டிடலாம்! - கம்பன்
நற்றமிழ்த் தேனாம் நனிமிகு பாக்கள்
நலம்பெற உண்டிடலாம்!

கம்பனைப் போலொரு கற்பனை கொஞ்சிடும்
காப்பியம் தந்தவர்யார்? - அதில்
பம்பும் உவமைகள் பாங்காய்ப் படத்திடப்
பாக்கள் படைத்தவர்யார்?

கம்பன் புகழினைக் கண்டங்கள் தாண்டியே
காணும் இனியவிழா - இங்கு
நம்மின் தமிழர்கள் நற்றமிழ் போற்றவே
நாடும் இராமன்விழா!

செந்தமிழ் ஒன்றையே சிந்தையில் கொண்டிடும்
சீரிய அன்பர்களே - பிழைக்க
வந்த இடத்திலும் வண்டமிழ் போற்றினீர்
வாயார வாழ்த்துகிறேன்!

நான்பெற்ற ஆற்றலை நற்றமிழ் மேடையில்
நன்றெனக் காட்டுகிறேன் - கம்பன்
தேன்கவி பாயவே சீர்பணி செய்யவே
செந்தமிழ் தீட்டுகிறேன்!

பிரான்சு கம்பன் விழா 14.09.2013