dimanche 31 août 2014

துயரம் கூடுதடி!


துயரம் கூடுதடி

மாலை மயங்கும் நேரமடி - வா..வா
மயிலே மாந்தோப்(பு) ஓரமடி
சோலைக் குயிலும் கூவுதடி - காதல்
சோகம் என்னை மேவுதடி

இன்பக் கனவின் ஏக்கமடி - எனக்கு
இரவில் இல்லை தூக்கமடி
துன்பம் மனதில் கூடுதடி - உன்றன்
துணையை நெஞ்சம் நாடுதடி

நிலவும் வானில் உலவுதடி - காதல்
நினைவில் உள்ளம் இளகுதடி
பலவாய் எண்ணம் நிலவுதடி - உன்னைப்
பார்த்தென் நெஞ்சம் குலவுதடி

08.08.1985

mercredi 27 août 2014

கம்பன் விழா மலர் - 2011



12/11/2011 - 13/11/2011
பத்தாம் ஆண்டு கம்பன் விழா மலர்
கம்பன் கழகம் பிரான்சு
      விருப்பமுடையோர் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

lundi 25 août 2014

தாய் உள்ளம்



'என்றன் தலையின் எழுத்து' என்ற கவிதையைப் பதிவேற்றிய ஐந்தாம் நிமிடத்திலேயே என் இனிய நண்பர் மணிவண்ணன் அவர்கள் தொலைபேசியின் வழியாக என்னை அழைத்தார்! என்ன பதிவிது? ஏன் இப்படி? உடனடியாகப் பதிவை நீக்க வேண்டும் என்று அன்புடன் வாதாடினார். இப்படி அவலச்சுவையுடன் எழுதலாம், தவறன்று! இலக்கியச் சான்றுகளை எடுத்துக் காட்டினேன். சில சொற்களை நீங்கள் நீக்க வேண்டும் என்றார். நண்பரின் அன்பின் மிகுதியை எண்ணி அவர் சொல்லிய வண்ணம் சில சொற்களை மாற்றி அமைத்தேன்.

அடுத்துச் சில நொடிகளில் என் மாணவி இளமதி அவர்கள் அன்புடன் இப்பதிவை நீக்க வேண்டுமெனக் கருத்திட்டார். அவருக்கும் விளக்க அளித்ததேன்.

அடுத்த சில மணி நேரங்களில் ஊமைவிழிகளின் வலைப்பதிவர் பேராசிரியர் கவிச்செல்வர் சோசப் விசி அவர்கள், நான் எழுதிய 'என்றன் தலையின் எழுத்து' வெண்பாக்களின் துயர்நிலை எண்ணி மனம் தாங்காமல் தாயுள்ளம் கொண்டு இன்பச்சுவையும் வீரச்சுவையும் விளைக்கும் வண்ணம் 'உன்றன் தலையின் எழுத்து' என்ற தலைப்பில் பன்னிரண்டு வெண்பாக்களைப் படைத்தார்! கருத்து வளமும் கற்பனை வளமும் நிறைந்த அவ்வெண்பாக்களைப் பன்முறை படித்து இன்புற்றேன். வெண்பா பதினொன்றில்

கண்ணா உனதினிமை காணாதோன் என்கூற?
கண்ட தமிழினிமை போன்றனையோ? – வண்ணமொன்றே
கொண்டிருப்பாய் நீயும்! பல...தமிழில்! அன்றிருந்து
இன்றிருக்கும் எம்மோ டது!

பாட்டின் விளக்கும்

கண்ணா! உன் இனிமையை நான் காணவில்லை. ஆமாம், நீ தமிழ்போல் இனிமையுடையவனோ? கண்ணனே நீ இறைவன் என்ற ஒரு வண்ணத்தைக் கொண்டிருக்கிறாய். உன்னை நாடி வந்தவர்களைக் காப்பாய்! அவ்வளவுதான் நீ! ஆனால் எங்கள் தமிழோ பல வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. எப்போதும் எங்களுடனே இருக்கிறது.

கவித்துவம் என்ற சொல்லுக்கும் பொருளைக் கவிச்செல்வரின் பாக்களில் கண்டு உவந்தேன்! படிப்போர் உள்ளத்துள் நிலையாய் இருக்கும் அந்த வெண்பாக்களையும் அவைகளை உள்வாங்கி நான் எழுதிய பதில் வெண்பாக்களையும் இங்குக் காலத்தின் பதிவாக்குகிறேன்.

உன்றன் தலையின் எழுத்து!

1.
விந்தை புரிகின்ற சிந்தை விதிசெய்ய
நொந்த மொழிநூற்கும் நுண்புலவன்எந்நாளும்
அன்றில் தமிழ்விட் டகலாது வாழ்வதுவே
உன்றன் தலையின் எழுத்து!

2.
கண்ணில் கலந்தவளைக் காதல் மொழிந்தவளை
மண்ணிலறி வூட்டி மகிழ்ந்தவளைஎண்ணமெலாம்
என்றும் தொழுதேத்த ஏக்கம் மிகக்கொண்ட(து)
உன்றன் தலையின் எழுத்து!

3.
பள்ளிப் படையாகிப் போனார் பெருவேந்தர்!
கொள்ளிவாய்ப் பட்டுதிர்ந்தோர் கோடியுளர்! – தெள்ளுதமிழ்
என்றும் வழங்கிடவே நின்றன் புகழ்நிறுத்தல்
உன்றன் தலையின் எழுத்து!

4.
கல்வி மணக்காதோ கற்கண்டுச் சொற்சுவையில்?
எல்லா மினிதமிழில் ஆகட்டும்! – அல்லாமல்
கொன்று விடமுயல்வோர் கோறல்அதுவன்றோ
உன்றன் தலையின் எழுத்து

5.
அண்ணன் அவன்தம்பி அன்னை அருந்தந்தை
மண்ணில் தமிழையெவர் மாசுறுத்த? – புண்ணாயின்
நன்று! குணப்படுத்து!‘ அன்றேல்அழியென்றல்
உன்றன் தலையின் எழுத்து!

6.
உண்மை அறியா உறவெதற்கு? காணார்க்குக்
கண்மை இழுத்துவிடுங் கோடெதற்கு? – அண்மைவாழ்
கன்றாதல் தாய்தமிழின் காதல் நிதம்பருகல்
உன்றன் தலையின் எழுத்து!

7.
உடனிருந்து காக்க உயிர்த்துணையாய் உள்ளீர்
நடமிடுமே நந்தமிழ் நன்றாய்! – “கடன்பட்டேன்
என்றன் மகவிற்கே“, என்று தமிழ்சொல்லல்
உன்றன் தலையின் எழுத்து!

8.
சோற்றுக்கு வாழ்ந்துடல் வீழுங் கொடும்புன்மைச்
சேற்றுக்குள் நீவீழ மாட்டாதேவேற்றுமொழி
நின்று தமிழழிக்க நின்மார் பதைத்தாங்கல்
உன்றன் தலையின் எழுத்து!

9
நம்பி! வருகவென நற்றாய் அழைத்திருக்க
வெம்பி உளம்சோர வீழுவையோ? – அம்புலியும்
குன்றும்! ஒளிவேண்டிக் கூடவரும் இன்றமிழே
உன்றன் தலையின் எழுத்து!

10.
ஓரடி சொல்உடனே ஓரா யிரம்வெண்பா
ஓராது செய்யவலான் உள்ளனெனத்தீராது
கன்னல் தமிழினித்துக் காதல் புரிவதுதான்
உன்றன் தலையின் எழுத்து!

11.
கண்ணா உனதினிமை காணாதோன் என்கூற?
கண்ட தமிழினிமை போன்றனையோ? – வண்ணமொன்றே
கொண்டிருப்பாய் நீயும்! பல...தமிழில்! அன்றிருந்து
இன்றிருக்கும் எம்மோ டது!

12.
வெஞ்சமர் செங்குருதி கொஞ்சுதமிழ் கேவியழ
மஞ்சத் துறங்கும் மறத்தமிழர்நெஞ்சிறங்கப்
பஞ்சமிலா செஞ்சொல் படைக்கின்றாய் நின்பணிதான்
பஞ்சிற் கனலின் பொறி

பேராசிரியர் 
கவிச்செல்வர் சோசப் விசி
23.08.2014
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 

அன்பால் மலர்ந்த வெண்பா
 
1.
அன்னைத் தமிழோடு அடியேன் உயிர்கலந்து
என்னை மறந்தே எழுதுகிறேன்! - முன்னைப்
பிறப்பின் பயனென்பேன்! பெற்றஎன் பெற்றோர்
சிறப்பின் பயனென்பேன் தேர்ந்து!

2.
கண்ணில் கலந்தவளை! காதல் பொழிந்தவளை!
பண்ணில் படைத்துப் பரவுகிறேன்! - மண்ணில்
முதன்மொழி நம்மொழியே! முத்தாய் மிளிரும்
அதன்னெறி காப்பேன் அகத்து!

3.
பள்ளிப் படிப்பென்ன? பட்டம் நிறைந்தென்ன?
அள்ளி அளிக்கும் அறிவென்ன? - தெள்ளுதமிழ்ப்
பற்றிலா வாழ்வு பயன்தருமோ? என்பாக்கள்
நற்பலா நல்கும் நலம்!

4.
கற்கண்டு சொல்லுண்டாம்! கன்னல் கவியுண்டாம்!
நற்றொண்டு மின்னும் நடையுண்டாம்! - விற்கொண்டு
பொல்லாப் பகைவரைப் போக்கும் திறமுண்டாம்!
எல்லாம் தமிழின் இயல்பு!

5.
அண்ணனெனத் தம்பியென அன்பு மழைபொழிந்து
வண்ணத் தமிழ்வளர்க்கும் வாணர்களைத் - திண்ணமுடன்
நான்பெற்றேன்! நல்லோர் உறவுற்றேன்! மென்கவலை
ஏன்பெற்றேன் தாயே இயம்பு?

6.
தாயின் அணைப்பில் தவழ்ந்து வளர்கின்ற
சேயின் திறமை செழித்தோங்கும்! - வாயினில்
உண்மை குடியிருக்கும்! தண்மை மனமிருக்கும்!
வண்மை வளமிருக்கும் வாழ்த்து!

7.
உடனிருந்து காத்திடுவாள்! ஓங்கிவரும் ஊழின்
வடமறுந்து போகவழி வார்ப்பாள்! - மடல்விரிந்த
தாழை மணக்கும் தனித்தமிழாள்! தந்திடுவாள்
வாழை வழங்கும் வளம்!

8.
கன்னல் தமிழில் கலக்கின்ற நஞ்சிதரும்
இன்னல் உணரா திருக்கின்றோம்! - மின்னலெனப்
பாய்கின்றேன் வன்பகைவர் பல்லுடைக்க! எந்நொடியும்
ஆய்கின்றேன் அந்தமிழில் ஆழ்ந்து!

9.
அன்னை அருந்தமிழாள் அன்புடன் என்தலையில்
முன்னைச் சிறப்பின் முடியணிந்தாள்! - குன்றா
இனமானம் கொண்டோங்க என்னைப் படைத்தாள்!
மனமாளும் கொள்கை மணம்!

10.
ஓரடி கேட்டே உயர்தமிழை நான்வணங்கச்
சீரடி அத்தனையும் சேர்த்தளித்தாள்! - வேரடி
யாக விளங்கும் வலிமை எனக்கீந்தாள்!
தாகம் தணித்தாள் தழைத்து!

11.
கண்ணன் தரும்சுவையைக் கன்னித் தமிழ்மிஞ்சும்!
எண்ணம் பறக்குமே எத்திசையும்! - வண்ணமுடன்
சந்தங்கள் வந்தாடும்! சிந்துவுடன் சித்திரமும்
சொந்தங்கள் ஆகின சூழ்ந்து!

12.
ஆசு கவியென்றே அன்பர் எனையழைக்க
பேசும் மொழியாவும் பேரின்பம்! - மாசிடும்
தீய பகைவரைத் தேடியழைத்து அக்கக்காய்
காய விடுவேன் கவிழ்த்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
25.08.2014

vendredi 22 août 2014

என்றன் தலையின் எழுத்து!





என்றன் தலையின் எழுத்து!

1.
எந்தச் செயலும் இனிக்கின்ற வண்ணத்தில்
இந்தப் பிறப்பில் எனக்கில்லை! - வந்துழற்றும்
உன்றன் செயற்குறித்து ஓதிப் பயனென்ன?
என்றன் தலையின் எழுத்து!

2.
கண்ணில் கமழ்ந்தவள்! காதல் பொழிந்தவள்!
அண்ணா எனஅங்[கு] அழைத்தாளே! - புண்ணாகி
இன்னும் இருக்கிறது என்மனத்துள் கொல்வலி!
என்றன் தலையின் எழுத்து!

3.
பள்ளிப் பருவத்தைப் பாழ்படப் பண்ணியதும்!
துள்ளித் திரிந்ததுவும்! துன்பத்தை - அள்ளியே
இன்னும் இழிவதுவும்! இன்னல் விளைப்பதுவும்
என்றன் தலையின் எழுத்து!

4.
கல்வி மணக்கும் கருத்தில்லை! தாமரைச்
செல்வி மணக்கும் செழிப்பில்லை! - சொல்லிமகிழ்
இன்ப இடமில்லை! ஏற்ற நெறியில்லை!
என்றன் தலையின் எழுத்து!

5.
அண்ணன் எனச்சொல்லித் தம்பி எனச்சொல்லி
எண்ணம் இனிக்கும் உறவில்லை! - கொண்டுழற்றித்
துன்னும் துயரைத் துடைக்கும் துணிவில்லை!
என்றன் தலையின் எழுத்து!

6.
உண்மை உறவின்றி உள்ளம் உடைந்தேனே!
தண்மைக் குணமின்றித் தாழ்ந்தேனே! - வெண்மையாய்ப்
பின்னும் கவிகள் பெருமை பெருக்கிடுமோ?
என்றன் தலையின் எழுத்து!

7.
உடனிருந்து காத்தே உயிரறுக்கும் நண்பர்!
கடனிருந்து மேலும் களிப்பு! - குடமிருக்கும்
சின்னநீர் போன்று குதித்தாடும் செய்கைகள்!
என்றன் தலையின் எழுத்து!

8.
சோற்றுக்கு வாழ்வைச் சொருகுவதோ? துன்களைபோல்
நாற்றுக்குள் வாழ்வை நடத்துவதோ? - மாற்றின்றி
இன்னிசை வீணையை எட்டி எறிவதுவோ?
என்றன் தலையின் எழுத்து!

9
நம்பி இருந்தஎனை நாசம் புரிந்ததுவும்!
வெம்பி அழுதெனை வென்றதுவும்! - தும்பிபோல்
துன்பக் கயிற்றில் துடித்ததுவும்! அத்தனையும்
என்றன் தலையின் எழுத்து!

10.
ஓரடி ஏறினால் ஒன்ப[து] அடிசறுக்கும்!
சீரடி யாவும் சிரித்தோடும்! - ஈரடி
மின்னும் வியன்குறளை நான்மேவ ஏன்தடையோ?
என்றன் தலையின் எழுத்து!

11.
யார்குடியைக் கொன்றேனோ? எப்படி வாழ்ந்தேனோ?
ஊர்ப்பொருளைத் தின்றேனோ? உண்மையின் - போ்கெடுக்க
முன்பு பிறந்தேனோ? அன்பை அழித்தேனோ?
என்றன் தலையின் எழுத்து!

12.
கண்ணா! கருணைப் பெருங்கடலே! என்னழுக்கை
வண்ணான் வெளுப்பதுபோல் வந்தகற்று! - எண்ணத்துள்
அன்பு சுரக்கும் அழகூட்டு! மாற்றுகவே
என்றன் தலையின் எழுத்து!

22.08.2014

mardi 19 août 2014

உணவும் பெயரும்



உண்ணும் உணவும்  உயர்தமிழ்ப் பெயரும்


அல்வா            : களினி, தேம்பசை, இன்களி, தீம்பசை
கேசரி              : செழும்பம், பழும்பம்
வரிக்கை (பொரை)  : வறக்கை
புரூட் சூசு          : பழச்சாறு, கனிச்சாறு,
குருமா             : கூட்டாணம்
சப்பாத்தி           : கோந்தடை
பச்சி               : தோய்ச்சி, மாவேச்சி
பிரட் (ரொட்டி)      : மெத்தப்பம், செவப்பம்
புரோட்டா          : புரியடை
கூல்டிரிங்சு         : குளிர்குடிப்பு தண்குடிப்பு
சாம்பார்            : பருப்புக்குழம்பு, மென்குழம்பு
நூடுல்சு            : இழைமா
ரச்க்               : வறைச்சில்
ஐசு                : பனிகம்
ஐசுகிரீம்            : பனிக்குழைவு, பனிப்பாகு
கோன் ஐசுகிரீம்     : கூம்புப் பனிப்பாகு
சோடா             : காலகம், உப்பகம்,
கிச்சடி             : காய்ச்சோறு, காய்மா
சட்னி              : அரைப்பம், துவையல்
சாங்கிரி (சிலேபி)   : முறுக்கினி
ரோசு மில்க்        : முளரிப்பால், செம்பனிப்பால்
கேக்               : கட்டிகை,
சமுதா             : கறிப்பொதி,
பாயசம்            : பாற்கன்னல், கண்ணமுது
பிஸ்கட்            : ஈரட்டி, மாச்சில், முறுவட்டி
போண்டா          : உழுந்தை
பஃப்               : புடைச்சி
பன்                : மெதுவன்
லட்டு              : கோளினி
கலர்               : வண்ணீர்
காபி               : குளம்பி
புரூட் சாலட்       : பழக்கூட்டு, கனிக்கணம்
புரூட் ஐசு          : கனிச்சாறு
டீ                  : தேநீர்
ஆம்லெட்          : முட்டையடை
குலோப் சாம்       : தேங்கோளி
குளுக்கோசு        : மாச் சக்கரை
சாக்லெட்           : பழுப்பினியம், காவிக்கண்டு, கருங்காவிக் கண்டு
சிவிங்கம்          : சவைப்பயின், தீஞ்சுவை
ரைசு               : அரிசி
சாம்               : பாகு

(தனித்தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள
மொழியறிஞர் ப. அருளி படைத்த
"இவை தமிழல்ல" என்ற அகராதியைக் கற்குமாறு வேண்டுகிறேன்.

மொழியறிஞர் ப. அருளி
தனித்தமிழ் மனை
காளிக்கோயில் தெரு
தமிழூர்
புதுச்சேரி - 605 009

lundi 18 août 2014

கம்பன் இதழ் - 62




கம்பன் 
இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் - 62
15.02.2014
விருப்பமுடையோர் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்

vendredi 15 août 2014

சுதந்தர வெண்பா!





சுதந்தர வெண்பா!

அஞ்சா மறவர் அளித்த தியாகத்தால்
கொஞ்சும் விடுதலையைக் கூடினோம்! - நெஞ்செரிந்து
சொல்கின்றேன்! பெற்ற சுதந்தரத்தை வீண்செய்தீர்!
செல்கின்றேன் சிந்தை சிதைந்து!

சும்மா கிடைத்ததா இந்தச் சுதந்தரம்?
அம்மா! அளத்தல் அரிதன்றோ? - இம்மண்ணை
முற்றும் சுரண்டி முடிக்கின்றார்! நாம்..உரிமை
பெற்ற அடிமைப் பிறப்பு!

சுதந்தரக் காட்சிகளைச் சொல்லி வடிக்கப்
பதங்களைத் தேடிப் பறந்தேன்! - இதமாக
இன்றிருக்கும் இந்தநிலை எய்த உயிர்கோடி
சென்றிருக்கும் மண்ணும் சிவந்து!

வாட்டும் சிறைதனில் வாடியதை எண்ணுவதா?
காட்டில் கிடந்ததைக் காட்டுவதா? - நாட்டினது
வெற்றித் திருநாளைக் கொட்டி முழங்குகிறோம்!
தொற்றித் தொடரும் துயர்!

அன்னியன் ஆட்சி அறுத்தோம்! நமதுயிரில்
பின்னிய மோகம் பிழிந்தோமா? - எம்மண்ணில்
எங்கே தமிழன் இருக்கின்றான்? எவ்விடத்தும்
பொங்கும் பிறமொழி பூத்து!

கையூட்(டு) ஒழிந்திடக் கைப்பூட்டு செய்தோமா?
மையூட்டும் போதையில் மாய்ந்தொழிந்தோம்! - பையூட்டி
வாழும் வகையொழித்தால் வாய்த்த சுதந்தரத்தால்
சூழும் நலங்கள் சுடர்ந்து!

மதுகுடித்(து) ஆடுவதோ? மங்கையரை மேய்ந்து
பொதுவிடத்தில் அய்யய்யோ! பொல்லாத் - சுதந்தரத்தைக்
கொன்று புதைத்துக் கொழிக்கின்றார்! நம்முரிமை
என்று வருமோ இயம்பு?

செக்கில் சிறைப்பட்டுச் சீரிழந்த வ.உ.சி
கக்கித் துவண்ட கதைமறந்தாய்! - நக்கிப்
பொறுக்கும் இழிவுற்றாய்! பொய்சூடி நாட்டை
அறுக்கும் பழியுற்றாய் ஆழ்ந்து!

பிறப்புரிமை என்று சுதந்தரத்தைப் பெற்றோம்!
சிறப்புரிமை என்று செழித்தார்! - அறிவுடைமை
கொன்ற கொடியோர்! கொலைகொள்ளை கொண்டாட்டம்!
வென்ற விடுதலை வீண்!

வெள்ளை உடையணிந்து கொள்ளை அடிக்கின்றார்!
கள்ளைக் கொடுத்துக் கவிழ்க்கின்றார்! - தொள்ளையிடும்
கன்னக்கோல் கண்ணுடையார்! இன்பச் சுதந்தரத்தால்
இன்னும்கேள்... எல்லாம் இழிவு!

15.08.2014

lundi 11 août 2014

கம்பன் இதழ் 61



கம்பன் இதழ் 61
உலகத் தமிழ்த் தந்தை
தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா மலர்

மகளிா் விழா மலா் 2014



29.06.2014
கம்பன் கழகம் மகளிர் அணி நடத்திய
மகளிா் விழா மலர்
விருப்பமுடையோர் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்