சொல்லோவியம்
11.
கிணற்றுக்குள் குளிக்குமெனைக்
கீரியெனப் பார்த்தவனே!
கணத்துக்குள் பலவகையாய்க்
கற்பனையைச் சேர்த்தவனே!
12.
நீர்பாயும் தொட்டிக்குள்
சீர்பாயச் செய்தவனே!
கார்பாயும் கூந்தலுக்குள்
கவிதைபல நெய்தவனே!
13.
செங்கரும்புத் தோட்டத்தில்
தேன்விருந்து உண்டவனே!
இங்கரும்பு மலர்ந்தாட
இசைபாடி நின்றவனே!
14.
கள்ளிறக்கும் காலையிலே
கண்மயங்க வைத்தவனே!
உள்ளிருக்கும் உணர்வுகளை
உடையாகத் தைத்தவனே!
15.
செவ்வாழைத் தோப்புக்குள்
சிரித்தாடி நின்றவனே!
சவ்வாது மங்கையெனைத்
தந்திரமாய் வென்றவனே!
16.
சவுக்கமரத் தோப்புக்குள்
சவுரியமாய் இடமிருக்கு!
செவத்தநிறக் காளையெனச்
சீறிவந்த நினைவிருக்கு!
17.
பூவரசம் பூத்திருக்கு!
புதுச்சேவல் கூத்திருக்கு!
பாவரசே உனையெண்ணிப்
பாவைமனம் காத்திருக்கு!
18.
தூக்கணாம் கூடாகத்
தொங்குதடா என்னாசை!
தாக்குகின்ற கனவுகளைத்
தருகுதடா உன்மீசை!
19.
கண்ணான கட்டழகா!
காவிரியின் சிட்டழகா!
பெண்ணான என்னுயிரைப்
பிழிகின்ற பேரழகா!
20.
பொன்னான என்வாழ்வு
பொலிகின்ற நிலைவேண்டும்!
என்னாளும் நீ..வேண்டும்!
இனிக்கின்ற தமிழ்வேண்டும்!
(தொடரும்)