ஈரெழுத்து வெண்பா
கண்ணிக் கிணைகாண்! கணைக்கிணைகாண்! கிண்கிணிகாண்!
கிண்ணிக் கிணைகாண்! கெக்கலிகாண்! - கண்ணிகாண்!
கண்ணுக் கணிகிணைகாண்! காணிகாண்! கேணிகாண்!
கண்ணே!கொக் கிக்கிணைக் காண்!
இதன்கண் ககரமும் ணகரமும் ஆகிய இரண்டு எழுத்துகளே வந்துள்ளன.
கண்ணி - பூங்கொத்து, பாட்டு
கணை - அம்பு
கிண்கிணி - காற்சதங்கை
கிண்ணி - கிண்ணம்
கெக்கலி
கிணை - உடுக்கை
காணி - வயல்
கேணி - கிணறு
வெண்பா விளக்கம்
மலருக்கும் அம்புக்கும் இணையான கண்கள். சலங்கை அணிந்த கால்கள். மின்னும் கிண்ணத்துக்கு இணையான கன்னங்கள். இவைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. பாடல்களை அளிக்கின்றன! கண்ணுக்கு அழகுட்டும் துடியிடையும், காணிபோல் விரிந்த கண்ணும், கேணிபோல் ஆழமான கண்ணும் கொக்கிபோல் என்னைக் கோத்து இழுப்பதைக் காண்க.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.09.2018