பாவலர் இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
வழக்கறிஞர் உயர்பணியைச் செய்துபுகழ் பெற்றும்
வண்டமிழில் கவிபாடும் மரபாசை கொண்டார்!
அழகறிஞர், அருமறிஞர் என்றுநலம் போற்ற,
அன்பறிஞர், அருளறிஞர் என்றுமனம் வாழ்த்த,
உழவறிஞர் ஆய்வெனவே தமிழ்ஓளவை சொன்ன
உயர்நெறியை நன்குணர்ந்து விருத்தங்கள் கண்டார்!
தொழுமறிஞர் வழியேற்றுத் துாயதமிழ் காக்கும்
தொல்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
முற்றறிவு நுால்படித்து முந்துபுகழ் பெற்றும்
முத்தமிழில் ஆற்றலுற முப்பொழுதும் வந்தார்!
பற்றறிவும் பணிவறிவும் படர்ந்துயரும் தீரர்!
பண்பறிவும் பகுத்தறிவும் சுடர்ந்துயரும் வீரர்!
கற்றறிவு வாணர்களைக் கண்ணெனவே யெண்ணிக்
கவியறிவு செழித்திடவே விருத்தங்கள் தந்தார்!
சிற்றறிவு பேரறிவு நிலையாய்ந்து பாடும்
சீர்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
பல்லரங்க நிலைநாடிப் பாடுபுகழ் பெற்றும்
பாட்டெழுதும் பயிலரங்கை உறவெனவே உற்றார்!
மல்லரங்கும் மாண்பரங்கும் வண்ணமுறக் கண்டு,
மதியரங்கும் மனத்தரங்கும் மணங்கமழக் கொண்டு,
சொல்லரங்கு, சுவையரங்குப் பாட்டரங்கம் என்று,
சொக்குமது ஊறிடவே விருத்தங்கள் கற்றார்!
வெல்லரங்கு நுட்பங்கள் மேவுதமிழ் வாணர்!
வியன்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
பன்னுால்கள் கற்றாய்ந்து பயன்வாழ்வைப் பெற்றும்
பண்ணுால்கள் உற்றாய்ந்து நம்னத்தைத் தொட்டார்!
பொன்னுால்கள் இன்னுால்கள் கூறுநெறி சூடிப்
புதுநுால்கள் புகழ்நுால்கள் புலமையுறப் பாடி,
வன்னுால்கள் இவர்நுால்கள் என்றுலகு சொல்ல
வடிவாக வளமாக விருத்தங்கள் இட்டார்!
நன்னுால்கள் ஓதுகின்ற பாதையினை நல்கும்
நறும்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
கைந்நுாறு காக்கின்ற நட்புறவைப் பெற்றும்
கவிநுாறு பூக்கின்ற கலையரங்கைச் சேர்ந்தார்!
தைந்நுாறு தகைநுாறு வந்தனபோல் எண்ணித்
தமிழூறும் படைப்புகளைத் தலையூறப் பின்னி,
ஐந்நுாறு விருத்தங்கள் அமுதெனவே ஈந்தார்!
அருங்கவிதைப் பேருலகில் பாவலராய்ச் சார்ந்தார்!
பைந்நுாறு பொன்னிட்டுப் பாட்டரசன் தந்தேன்
பண்இராம. மீனாட்சி சுந்தரனார் வாழ்க!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.08.2021