vendredi 26 août 2016
jeudi 25 août 2016
வினா விடை வெண்பா
வினா விடை
வெண்பா -1
நீதி யறிந்த நெடுங்கவியே! வாழ்வழிக்கும்
சாதிப் பிரிவுமேன் சாற்றுகவே? - ஆதியிலே
உண்டு கொழுத்திடவே நண்டுத் தமிழர்களைக்
கண்டு பிரிதார் கணித்து!
வெண்பாவின் முதல் ஏழு சீர்களில் வினாவைத் தொடுக்க
வேண்டும். எட்டாம் சீரிலிருந்து பதினைந்தாம் சீருக்குள் விடை அமையவேண்டும்.
மகடூஉ முன்னிலை சிறப்புடையது.
வினா விடை
வெண்பா -2
நான்குவகை யென்பார்! நறும்பூ வினையென்பார்!
ஊன்றுபுகழ் வாணர் உயிரென்பார்! - தோன்றுமெழில்
மேவிடத் தேயும்!விண் பேர்!புலவர் கூடுமிடம்!
பாவலர் பாவரங்கம் பார்!
வெண்பாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் பதில்களைச்
சேர்த்தால் இறுதி வினாவிற்கு விடையாக வரவேண்டும்.
நான்கு வகை - பா
நறும்பூ வினை - அலர்
கவிவாணரின் உயிர் - பா
தேயும் கருவி - அரம்
விண்ணின் பேர் - கம்
பா + அலர் + பா + அரம் + கம்
புலவர் கூடும் இடம் - பாவலர் பாவரங்கம்
வினா விடை
வெண்பா - 3
கக்கக்கக் கக்கக்கக் கக்கு!
ஈற்றில் விழியின்பேர்! ஏற்றசளி செய்யும்பேர்!
மாற்றிப் பலதுண்டை வார்க்கும்பேர் - சாற்றிடுமே
இக்கூட் டெலும்பின்பேர்! ஏந்துசிரிப் புற்றபேர்!
கக்கக்கக் கக்கக்கக் கக்கு!
கக்க்க்(கு)அக்(கு) அக்கக் கக்(கு) அக்கு!
ஈற்றில் உள்ள அக்கு - விழியை அக்கு என்றுரைப்பர்
கக்கு - கக்குதல், இருமுதல்
அக்கக் - அக்கக்காய்ப் பிரித்தல்
அக்கு - எலும்பு
கக்கக்கு - கக்கக்கெனும் சிரித்தற்குறிப்பு
வினா விடை
வெண்பா - 4
கண்ணே! கனிமொழியே! கண்கவரும் தேவதையே!
பெண்ணே! பெயரென்ன? பெற்றநகர் என்ன?
பழமைக் கெதிராகும்! ஈறுகெடும்! பாய்ந்து
செழுமைச் சிறப்பூட்டும் கையாற்றின் முன்னெழுத்து!
சாதிப் பெயராம்! தமிழில் வினாவாகும்!
ஓதும் புறநகரை! உண்மைப் பெயரொளிரத்
தங்கத்தில் சேரும்! சரமாகக் கோத்தாடும்!
தங்கு நலம்நல்கும் தாமரையாள்! நம்நாட்டில்
வார இதழாய் வருகின்ற பெண்ணவள்!
ஊரும் பெயரும் உணர்!
பழமைக் கெதிராகும் ஈறுகெடும் - புதுமை - புது
கையற்றின் முன்னெழுத்து - வைகை - வை
சாதிப் பெயராகும் - முதலி
தமிழில் வினாவாகும் - யார்
ஓதும் புறநகரை - பேட்டை
சரமாகக் கோத்தாடும் - முத்து
தாமரையாள் - லட்சுமி
வார இதழ் - தேவி
விடையாக வந்த சொற்களைச் சோத்தால் காதலன் கேட்ட கேள்விக்கு
விடை கிடைக்கும்.
புதுவை முதலியார்பேட்டை முத்துலட்சுமி தேவி
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016
சதுரங்க சித்திர கவி ஓங்கார நாயகன்
ஓங்கார
நாயகன்
ஓதுமறை
ஐங்கரனே! வா!நாவோங் கொண்டமிழை
ஏதுகுறை
யின்றித்தா! என்னுயிருள் - மோதுமலை
வீழ்கவே!
உன்னருளால் மேவிய காதலின்
சூழ்கவே
துாய தொடர்பு!
பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து
நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை
ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும்
விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக
அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும்
சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில்
குதிரை "ட" அமைப்பில் தாண்டிச் செல்லும்)
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
25.08.2016
சதுரங்க சித்திரகவி ஓம் நமோ நாராயணா
சித்திரகவி
ஓம் நமோ நாராயணா!
கண்ணா!என் மன்னா!செம் மண்ணிட்ட மோகமுகா!
வண்ணா!தா மோதரா! மாமலரா! - தொண்டுளம்
தாங்கிடத் துாயவனே தாராய்நா மம்!நலமே
ஓங்கிட நல்வழி ஊட்டு!
பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில் குதிரை "ட" அமைப்பில் தாண்டிச் செல்லும்)
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016
lundi 22 août 2016
ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]
ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]
ஒரு பாடலை நான்காகப் பகிர்தல்
எண்சீர் விருத்தம்!
கற்கண்டுக் காரிகையே! ஞாலம் போற்றும்
நற்றொண்டு செய்கின்றாய்!
காலம் போற்றும்!
சொற்கொண்டு பாடுகிறேன்! கோலப் பெண்ணே!
விற்கொண்ட விழியழகே! வேலன்
காப்பான்!
பற்றுண்டு! பணிவுண்டு! நெஞ்சக் கூட்டில்!
பொற்புண்டு! புகழுண்டு! கொஞ்சும்
பாட்டில்!
கற்புண்டு! கனிவுண்டு! விஞ்சும் இன்பம்!
வற்புண்டு காதலிலே! தஞ்சம்
நானே!
1. வஞ்சித்துறை
கற்கண்டுக் காரிகையே!
நற்றொண்டு செய்கின்றாய்!
சொற்கொண்டு பாடுகிறேன்!
விற்கொண்ட விழியழகே!
2. வஞ்சித்துறை
ஞாலம் போற்றும்
காலம் போற்றும்
கோலப் பெண்ணே!
வேலன் காப்பான்!
3. வஞ்சித்துறை
பற்றுண்டு! பணிவுண்டு!
பொற்புண்டு! புகழுண்டு!
கற்புண்டு! கனிவுண்டு!
வற்புண்டு காதலிலே!
4. வஞ்சித்துறை
நெஞ்சக் கூட்டில்!
கொஞ்சும் பாட்டில்!
விஞ்சும் இன்பம்!
தஞ்சம் நானே!
இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள்
பயப்பதன்றி, அதுவே நான்கு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016
ஒன்றில் இரண்டு!
ஒன்றில் இரண்டு
(ஒரே
பாடலை இரண்டாகப் பகிர்தல்)
கலிவிருத்தம்!
அருந்தமிழ் மின்னும் அழகுடை
ஆக்கம்!
பெருந்புகழ் ஈட்டும்! பழச்சுவை
பேணும்!
வருந்துயர் போக்கும்! வழிந்திடும்
இன்பம்!
தருங்கவி யாவும் தழைத்திடும்
வாழ்வே!
வஞ்சித் துறை 1
அருந்தமிழ் மின்னும்
பெருந்புகழ் ஈட்டும்!
வருந்துயர் போக்கும்!
தருங்கவி யாவும்!
வஞ்சித் துறை 1
அழகுடை ஆக்கம்!
பழச்சுவை பேணும்!
வழிந்திடும் இன்பம்!
தழைத்திடும் வாழ்வே!
இலக்கணக் குறிப்பு
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே இரண்டு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தரவேண்டும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016
samedi 20 août 2016
ஒன்றில் மூன்று!
ஒன்றில் மூன்று!
[ ஒரே பாடலை மூன்றாகப் பகிர்தல்]
[ ஒரே பாடலை மூன்றாகப் பகிர்தல்]
கட்டளைக் கலித்துறை
தனித்தமிழ்த் தந்தை! தகைத்தமிழ்
கற்போம்! தழைக்குமன்பு!
கனித்தமிழ் நேயர்! வகைத்தமிழ்
கற்போம்! கழிக்குமின்னல்!
நனிதமிழ்ச் சித்தர்! நகைத்தமிழ்
கற்போம்! அழைக்குமுச்சம்!
புனைதமிழ் கற்போம்! புகழ்த்தமிழ்
கற்போம்! இழைக்குமின்பே!
1 . வஞ்சித்துறை
தனித்தமிழ்த் தந்தை!
கனித்தமிழ் நேயர்!
நனிதமிழ்ச் சித்தர்!
புனைதமிழ் கற்போம்!
2. வஞ்சித்துறை
தகைத்தமிழ் கற்போம்!
வகைத்தமிழ் கற்போம்!
நகைத்தமிழ் கற்போம்!
புகழ்த்தமிழ் கற்போம்!
3. வஞ்சித்துறை
தழைக்கும் அன்பு!
கழிக்கும் இன்னல்!
அழைக்கும் உச்சம்!
இழைக்கும் இன்பே!
இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள்
பயப்பதன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.08.2016
வல்லின வெண்பா!
வல்லின வெண்பா!
கத்து கடற்போற்றி! காற்றுத் தகைபோற்றி!
சித்துடைப் பூப்போற்றி! சித்தத்திற் - தித்தித்த
பாப்போற்றி! பற்றறுப் பா..போற்றி! பாட்டுடைக்
கோப்போற்றி! சற்புத்தி கூட்டு!
மெல்லின வெண்பா!
மண்ணும்..நீ! மாணம்..நீ! நோன்மை..நீ!ஞானம்..நீ!
நண்ணும் மணமும்..நீ! நன்மை..நீ - நுண்மை..நீ!
மன்னன்..நீ! முன்னை..நீ! மாமலை மின்னுமென்
நன்மணி..நீ! நாமம் நம!
இடையின வெண்பா!
வல்ல வழியை விளைய வருவாயா!
வெல்லு வழியாய் விரிவாயா! - வில்லாய்
விரைவாயா! வீழா விழியரு ளாயா!
வரைவாயா வாழைவள வாழ்வு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.08.2016
mardi 9 août 2016
சிவலிங்க பந்தம்
சிவலிங்க பந்தம்
அன்பே! மிகுசுவை யே!ஆடும் நல்லரசே!
என்நல மே!பொழி லே!வளமே! இன்பவருள்
பொற்பே! சிறுமை புகுவதோ? பற்றறுக்க
நற்சிவ மே!வழி நல்கு!
சித்திரத்தில் படிக்கும் முறை
அடிப்பகுதியின் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து
வலமாகவும் மாறி மாறி எழுத்துகள் அமைந்திருக்கும். பாடலின் இறுதி அடி சித்திரத்தின்
நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகச் செங்குத்துக் கோட்டில் அமைந்திருக்கும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.08.2016
lundi 8 août 2016
சிலேடை வெண்பா
சி
1.
தமிழும் திருமாலும்!
அடிதேடி அன்பர் அணிவகுப்பார்! மின்னும்
முடிசூடிக் காணமுன் நிற்பார்! - படி..பாடித்
தொண்டர் பயனுறுவார்! துாய தமிழ்மொழியைத்
கொண்டல் திருமாலைக் கூறு!
2.
தமிழும் தாயும்!
என்னை உலகில் எழிலுறச் செய்தவள்!
பொன்னை நிகர்த்தபுகழ் பூத்தவள்! - முன்னைப்
பயனென வந்தவள்! பாட்டளித்த தாயும்
துயரறு தண்டமிழும் சொல்லு!
3.
தமிழும் மதுவும்!
போதை கொடுக்கும்! புகுந்து மனத்துள்ளே
கோதை கொடுக்கும் குளிரூட்டும்! - பாதையெங்கும்
பாடிக் கிடக்கும்! பசுந்தமிழால் உண்மதுவால்
ஆடிக் கிடக்கும் அகம்!
4.
தமிழும் மலரும்!
மணம்சூட்டும்! கன்னல் மதுவளிக்கும்! மாண்பார்
குணங்காட்டும்! கொஞ்சுமொழி கூட்டும்! - மனஞ்சாற்றும்
கற்பனைக்குக் காதல் கலையூட்டும்! இன்றமிழும்
பொற்புடைய பூவும் பொலிந்து!
5.
தமிழும் தோப்பும்!
மாவும் புளியும் விளமும் வளங்கொடுக்கப்
பூவும் கனியும் பொலிந்திருக்கக் - கூவும்
குயிலும்! மயிலும்! குலவிமகிழ் தோப்பும்
உயர்தமிழும் ஒன்றென ஓது!
6.
தமிழும் கடலும்!
எண்ணிலாச் செல்வம்! இயம்பிடாப் பேரழகு!
மண்ணெலாம் வாழ வழங்குவளம்! - மின்னணிகள்
சூடும்! இனிய அலைதொடரும்! நற்கடலும்
பாடும் தமிழும் பகர்!
7.
தமிழும் வள்ளளும்!
வாரி வழங்கும் வளமிருக்கும்! வான்கொண்ட
மாரி வழங்கும் மகிழ்விருக்கும்! - சீரணிகள்
பூண்டு புகழொளிரும்! பூந்தமிழும் வள்ளலும்
ஆண்டு சிறப்பொளிரும் ஆடு!
8.
தமிழும் வானும்
எல்லை யிலாவிரிவோ[டு] என்றும் இருப்பனவாம்!
கொல்லை மலர்க்கூட்டம் கொண்டனவாம்! - நல்ல
மதியொளிர வாய்த்தனவாம்! வானும் தமிழும்
அதிமதுர ஞானமாம் ஆடு!
9.
தமிழும் முக்கனியும்!
மூன்று சுவையிருக்கும்! மூவாப் புகழிருக்கும்!
ஆன்றோர் உரையுள் அமர்ந்திருக்கும்! - சான்றோர்தம்
மன்றில் நிறைந்திருக்கும்! மாத்தமிழும் முக்கனியும்
என்றும் இருக்கும் இனித்து!
10.
தமிழும் மரமும்!
பூவுண்டு! வண்ணப் பொலிவுண்டு! காயுண்டு!
நாவுண்ண நற்றேன் கனியுண்டு! - மேவும்
நிழலுண்டு! வன்மரமும் நீள்தமிழும் ஒன்றும்
அழகுண்டு செம்மை அடர்ந்து!
11.
தமிழும் மழையும்!
பொழிந்தின்பம் மூட்டும்! புகழ்ப்புலவன் என்மேல்
வழிந்தின்பம் ஊட்டும்! வளத்தை - வழங்கும்!
அமுதென்று பேரேற்கும்! தண்மை அளிக்கும்!
தமிழ்மொழியும் வான்மழையும் சாற்று!
12.
தமிழும் ஆவும்!
அசைபோடும்! துள்ளியடி போடும்! தொடையால்
நசையூறும்! நற்றமிழும் ஆவும் - இசைந்தழகாய்ப்
பாலுாட்டும்! என்றும் பயனுட்டும்! சீர்முந்தி
வாலாட்டும் இன்பம் வடித்து!
mercredi 3 août 2016
தோ்ப்பந்தம்
தேர்ப்பந்தம்
மண்விண்ணு காத்திடுவாய்! மாதவா! சொல்லழகா!
எண்ணம் செழிப்புறவே என்றனச்சு தா!அருள்..தா!
பண்புருவைத் தந்தெனைத்திண் ணார்வண்ணா! இன்பண்ணா!
கண்ணா! திருச்செல்வா!
காண்!
தேர்ப்பந்தம் படிக்கும்
முறை: வலது சக்கரத்திலிருந்து மேலேறி, இடது சக்கரத்திலிறங்கி மேலேறி, இடவலமாகச் சுற்றிச்சுற்றி
மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் பாடல் சரியாக வரும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
02.08.2016
mardi 2 août 2016
lundi 1 août 2016
Inscription à :
Articles (Atom)