samedi 15 septembre 2012

நல்லதமிழ் [ பகுதி - 8 ]



பழனி - பழநி

பழனி என்பதே சரியான சொல். பழம் நி என்று புராண அடிப்படையில் பிரித்துப் பொருள் கொள்ளும் சிலர் பழநி  என்று எழுதுகின்றனர். அறுவெறுப்பு என்பது பிழை. அருவருப்பு என்பதே சரி. கத்திரித்தான் என்பது பிழை. கத்தரித்தான் என்பதே சரி. வருகை புரிந்தார் எனல் வேண்டா. வந்தார் என்பதே போதும். சிறிது நாள் சென்று வா எனல் வேண்டா. சில நாள் சென்று வா என்க.  

எனது மகன் - என் மகன்

எனது மகன் என்பது பிழை. என் மகன், எனக்கு மகன், என்னுடைய மகன் என்பன சரி. ஏழ்மை என்பது பிழை. ஏழைமை என்பதே சரி. அடகுக் கடை என்பது பிழை, அடைவுக் கடை என்பதே சரி.

நிறை - நிரை

நிறை, நிரை ஆகிய சொற்கள் பொருள் வேறுபாடு உடையன. நிறை என்னும் சொல்லுக்கு நிறைந்த, முழுமையான என்னும் பொருள்களும், நிரை என்னும் சொல்லுக்கு வரிசை, கூட்டம் என்னும் பொருள்களும் உண்டு. நிறைமதி, ஆநிரை ஆகிய சொற்களைக் காண்க.

வலதுபக்கம் - வலப்பக்கம்

வலது பக்கம், இடது பக்கம் என்று எழுத வேண்டா, வலப்பக்கம், இடப்பக்கம் என்று எழுதுக. முகர்ந்து பார் என்பது பிழை, மோந்து பார் என்பதே சரி. வாசல் எனல் வேண்டா, வாயில் என்று எழுதுக

எண்ணை - எண்ணெய்

எண்ணை என்று எழுதுவது தவறாகும். எள் 10 நெய் ஸ்ரீ எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கும் நெய் என்பது பொருள். எனவே மண்ணெண்ணெய் விளககெண்ணெய் என்று எழுதும்போது எண்ணெய் என்பது ''ழடை'' என்று பொருள்படும் காரணப் பெயர்ப்பொருளை இழந்து விடுகிறது.

நெல்லைக் குத்தினாள் - நெல்லைக் குற்றினாள்

நெல்லைக் குத்தினாள் என்பது தவறு. நெல்லைக் குற்றினாள் என்றும், கையால் முகத்தில் குத்தினான் என்றும் எழுதுக. அடமழை, உடமை ஆகிய சொற்கள் தவறாகும். அடைமழை, உடைமை என எழுதுக.

எல்லாரும் - எல்லோரும்

எல்லாரும் எல்லோரும் என இவ்விரு சொற்களும் சரியானவையே. செய்யுளில் மட்டும் எல்லாரும் என்பது எல்லோரும் என்று வரும். '' ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும் இலக்கணப்படி செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள '''' '''' மாறி வில்லோன் என்றும் தொடியாள் என்பது தொடியோள் என்றும் வரும். உரைநடையில் எல்லாரும் என்று எழுதுவதே சிறப்பு.

எய்தல் - எய்துதல்

இவ்விரு சொற்களைப் பல பிழைபட எழுதுவதைக் காண்கிறேன். எய்தல், எய்துதல் ஆகிய சொற்களைப் பொருள் உணர்ந்து கையாள வேண்டும். எய்தல் என்னும் சொல்லுக்கு அம்பு போன்றவற்றை எய்தல் என்றும், எய்துதல் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை எய்தல் என்றும் பொருள் கொள்ள வேண்டும். இராமன் அம்பை எய்தான். இராமன் காட்டை எய்தினான்.

வினாயகர் - விநாயகர்

வி+நாயகர் = விநாயகர் தமக்குமேல் தலைவன் இல்லாதவர் என்பது பொருள் எனவே விநாயகர் என எழுத வேண்டும்.

உரியது - உரித்தது

உரியது என்பது இந்நூல் அவனுக்கு உரியது என்றும், உரித்தது என்பதை தேங்காய் உரித்தது என்றும் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். நன்றியை உரித்ததாக்குகிறேன் (உரித்தது 10 ஆக்குகிறேன்) என்று எழுதுவதும் பேசுவதும் பிழையாகும். நன்றியை உரித்தாக்குகிறேன் என்பதே சரி.
(தொடரும்)

5 commentaires:

  1. தங்களின் இந்தப்பகுதி மிகவும் பயனுள்ளது, ஐயா.

    தமிழில் பேசும்போதும், எழுதும் போதும், இன்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்களும், எழுத்துப்பிழைகளும் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாததோர் உண்மையே.

    அவ்வாறு தவறேதும் செய்யாமலோ, அல்லது தவறுகளைக் குறைத்துக்கொள்ளவே இந்தப்பகுதி நிச்சயமாகப் பயன்படும்.

    தொடரட்டும் தங்களின் இதுபோன்ற தமிழ்ப்பணிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்/நன்றியுடன்,
    VGK

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழ்நாடி நாளும் வருகின்றீா்!
      எல்லை இலாத இனிப்பு!

      Supprimer

  2. நாளும் படித்து நலமுற்றேன்! தீட்டுகின்ற
    தாளும் மணக்கத் தமிழ்கற்றேன்! - மூளுகின்ற
    எண்ணங்கள் மின்னும் எழில்பெற்றேன்! கம்பனைப்போல்
    வண்ணங்கள் மின்னும் வளர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      வண்ணங்கள் மின்னும் வளர்தமிழை எந்நாளும்
      எண்ணங்கள் மின்ன எழுதுகிறாய்! - பண்..உங்கள்
      சொந்தங்கள் ஆகும்! சுடர்த்தமிழ்ச் சொல்லனைத்தும்
      சந்தங்கள் ஆகும் தழைத்து!

      Supprimer

  3. நாளும் படித்து நலமுற்றேன்! தீட்டுகின்ற
    தாளும் மணக்கத் தமிழ்கற்றேன்! - மூளுகின்ற
    எண்ணங்கள் மின்னும் எழில்பெற்றேன்! கம்பனைப்போல்
    வண்ணங்கள் மின்னும் வளர்ந்து!

    RépondreSupprimer