jeudi 24 septembre 2020

வெண்பா மேடை - 190


 வெண்பா மேடை - 190
  
பாவாடை தன்னில் பருவநயம் சிந்திவரத்
தாவாமல் தாவும் தளிர்ச்சிட்டு! - பூவாகி
ஆடிக் குலுங்கி அடையாளம் மாறியினி
மூடி மறைப்பாள் முகம்!
  
[கவிப்பேரரசு வைரமுத்து. வைகறை மேகங்கள், பக்கம் - 46]
  

 தத்தித் தவழ்ந்திடுவாள்! தங்கத்தேர் போல்வருவாள்!
புத்தி மயக்கிடுவாள்! பூவிழியாள்! - சித்தமதில்
ஆடிக் களித்திடுவாள்! அப்பூச்சி காட்டியவள்
மூடி மறைப்பாள் முகம்!
  
அப்பூச்சி - விளையாட்டு

   
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"மூடி மறைப்பாள் முகம்" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
24.09.2020

கம்பன் விழா 2020

 


lundi 21 septembre 2020

கம்பன்் விழா



கம்பன் கழகம் - பிரான்சு நடத்தும்
19 ஆம் ஆண்டு
கம்பன் விழா
  
நாள்
27.09.2020
ஞாயிறு மாலை 4.00 மணிக்கு
  
இடம்
Le Gymnase Victor Hugo
Rue Auguste Renoir
95140 Garges les Gonesse
France
  
அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

mercredi 16 septembre 2020

கண்ணன்... மணிவண்ணன்...

 


கண்ணன்... மணிவண்ணன்...
  
எனையாளும் வில்லழகன் - தொன்மை
இசையாளும் சொல்லழகன்!
மனையாளும் நல்லழகன் - முன்னை
மறையாளும் மல்லழகன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
திருமலையில் வாழ்ந்திடுவான் - தண்மை
தருமலையில் ஆழ்ந்திடுவான்!
அருங்கலையில் சூழ்ந்திடுவான் - உண்மைப்
பெருநிலையில் சேர்ந்திடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
புள்ளமர்ந்து வந்திடுவான் - ஞானப்

பொன்னளந்து தந்திடுவான்!
உள்ளமர்ந்து மின்னிடுவான் - வான
உறவளந்து பின்னிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பண்ணளந்து மீட்டிடுவான் - இந்தப்
பாரளந்து காட்டிடுவான்!
பண்பளந்து ஊட்டிடுவான் - வந்த
பகையளந்து ஓட்டிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
வீடருளும் ஓரரசன் - தங்கும்
பீடருளும் பேரரசன்!
ஏடருளும் சீரரசன் - பொங்கும்
இனிப்பருளும் தேரரசன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.09.2020


dimanche 13 septembre 2020

விருத்த மேடை

 

 
எழுசீர் விருத்தம் - 7
  
நெடிலீற்று மா + நேரசையில் தொடங்கும் சீர் + மற்றச் சீர்கள் வெண்டளையில் அமையும்.
  
தேனே, கரும்பே இவ்விரு சொற்களும் நெடிலெழுத்தை ஈற்றாக உடைய மாச்சீர்கள். இவை நெடிலீற்று மா எனப்படும். [மின்னேர் என்ற சொல்லில் ஈற்றில் வரும் நெடிலொற்றும் நெடிலீற்று மாவாகக் கொள்ளவேண்டும்]
  
தன்னே ராயிரம் பிள்ளைக ளோடு
   தளர்நடை யிட்டு வருவான்,
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டொரு
   புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை
   துஞ்சவாய் வைத்த பிரானே!
அன்னே! உன்னை யறிந்துகொண் டேன்உனக்
   கஞ்சுவன் அம்மம் தரவே!
  
[பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து -1]
  
இவ்விருத்தம் நேரசையில் தொடங்கினால் 19 எழுத்துக்களைப் பெறும். நிரையசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களைப் பெறும்.
  
முதல் சீர் நெடிலீற்று மா வரவேண்டும். இரண்டாம் சீர் நேரசையில் தொடங்க வேண்டும் [நேரொன்றிய ஆசிரியத்தளை அங்கு அமைய வேண்டும்] அதை அடுத்து ஏழாம் சீர்வரை வெண்டளை பயின்று வரவேண்டும் [கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய இருசீர்கள் இவ்விருத்தத்தில் வருவதில்லை] ஏழாம் சீர் மாச்சீராக அமையும்.
  
மெல்லத் தெரிந்துசொல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நன்றே சொல்க! நயமுறும் வண்ணம்
   நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றே சொல்க! இனமொழி ஓங்கும்
   எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றே சொல்க! வியன்றமிழ் மேன்மையை
   மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றே சொல்க! செழும்புகழ் மேடையில்
   சீர்களை மெல்ல அளந்து!
  
[பாட்டரரசர் கி. பாரதிதாசன்]
    
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
   
ஆய்வுரை
  
இவ்விருத்தம் அடியின் முதலிரு சீர்கள் நேரொன்றிய ஆசிரியத்தளையைப் பெற்றாலும், நெடிலை ஈற்றாக உடைய முதல்சீர் அளபெடுத்துக் காய்ச்சீராக ஒலிக்கும். முதல்சீர் அளபெடுப்பதால் அடி முழுமையும் வெண்டளை அமையும்.
  
நன்றேஎ சொல்க! நயமுறும் வண்ணம்
   நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றேஎ சொல்க! இனமொழி ஓங்கும்
   எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றேஎ சொல்க! வியன்றமிழ் மேன்மையை
   மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றேஎ சொல்க! செழும்புகழ் மேடையில்
   சீர்களை மெல்ல அளந்து!
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.08.2020