மாயவன் மகிழும் மார்கழி!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையின்
முப்பது பாக்களின் முதற்சீரை முதலாகக் கொண்டு முப்பது வெண்பாக்களை
அந்தாதியில் பாடியுள்ளேன். இவ்வகையில் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு,
மணவாள மாமுனிகள் "திருவாய்மொழி நுாற்றந்தாதி" அருளிச்செய்தார். எனக்கு
மாலியத்தை ஓதுவித்த அருட்குருநாதர் ஏந்துார்ச் சடேகோப இராமாநுசர் அவர்கள்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குத் "திருவாய்மொழிக் கலம்பகம்" பாடினார்.
காப்பு!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சொல்லேந்திப்
பாடிக் களிக்கப் பசுந்தமிழே! - நாடியே
வந்திடுவாய்! வாழ்த்தி வணங்குகிறேன்! வண்ணமெலாம்
தந்திடுவாய் தாயே தழைத்து!
நுால்
1.
மார்கழி மாதவனே! மாமறை யானவனே!
கார்பொழி மேனியனே! கண்ணனே! - சீர்பொழி
துாயவனே! தொண்டர்தம் நேயவனே! என்றலைமேல்
மாயவனே உன்னடியை வை!
2.
வையத்துப் பேரொளியே! வண்கடலே! வாழ்விலுறும்
ஐயத்தைப் போக்கிடுவாய் ஆரமுதே! - மையூறும்
கண்ணழகாய் மின்னும் கலையழகே! எந்நாளும்
ஒண்டமிழாய் என்னாவில் ஓங்கு!
3.
ஓங்கிப் புகழொளிர, உண்மை யுளமொளிரத்
தாங்கித் தலைமேல் தமிழ்தருவாய்! - வேங்கைவலம்
சேர்த்திடுவாய்! தேனே! திருவே! கவிநடையில்
வார்த்திடுவாய் ஆழி மழை!
4.
ஆழிமழைச் சீர்தருவான்! அன்புமழைத் தேன்தருவான்!
வாழிநுழை யாற்றல் வழங்கிடுவான்! - மேழி
வளர்ந்திட வல்ல வளமருள்வான்! வாழ்வு
மலர்ந்திட மாயனை மன்னு!
5.
மாயனைப் பாடிடுவாய்! மாவுலகைக் கொண்டொளிரும்
வாயனைக் கூடிடுவாய்! மாவழகு - ஆயனைச்
சாற்றி வணங்கிடுவாய்! சால்புடனே உன்மனத்துள்
போற்றி வலம்வருமே புள்!
6.
புள்ளும் இசைத்தன பூபாளம்! என்..தோழி
துள்ளும் விழிதிறவாய்! துாயநீர் - அள்ளி
மிசைத்திடுவாய்! மீட்டி விளையாடி நீயும்
இசைத்திடுவாய் கீசுகீ[சு] என்று!
7.
கீசுகீ சென்று கிலுகிலுக்கும் கைவளையல்!
வாசுகி ஊர்ப்பெண்ணே வந்தெழுவாய்! - கேசவனால்
வாழ்வோம்! அடியார் மனைசேர்வோம்! வாழ்வோங்க
ஆழ்வோம் அவனடிக் கீழ்!
8.
கீழ்வானம் மெல்லக் கிளர்ந்தெழும்! உள்ளத்துள்
ஆழ்வானம் ஆயன் அடிகாட்டும்! - சூழ்புகழ்
ஞானமே மின்னும்! நலமுறக் கண்ணா..தா!
மானமே என்..துா மணி!
9.
துாமணியே! நற்றுழாய் மாமணியே! தொன்மொழிப்
பாமணியே! பண்மணியே! பாரளந்த - தேமணியே!
தண்மையுடன் பாடித் தழைத்த தமிழளித்தேன்!
நுண்மையுடன் நற்றவம் நோற்று!
10.
நோற்றுப் புரிகின்ற நுண்தவம் வேண்டிலேன்
போற்றும் தமிழ்போதும் புண்ணியனே! - சாற்றி
விளிப்பேன்! வியனாழ்வார் மீட்டும் இசையுள்
களிப்பேன் கவிநயம் கற்று!
11.
கற்றுமகிழ் வாழ்வளிப்பாய்! கண்ணா திருவடியைப்
பெற்றுமகிழ் வாழ்வளிப்பாய்! பேரொளியே! - நற்றேன்
நனைந்துருகும் வாழ்வளிப்பாய்! நாரணா உன்மேல்
கனிந்துருகும் நெஞ்சம் கனைத்து!
12.
கனைத்திளங் கன்றழுவும் காட்சிபோல், உன்னை
நினைத்திள நெஞ்சழுவும்! நேயம் - புனைந்திளகும்
கண்ணியா! கட்டழகா! காவியா! என்மனமே
புண்ணியா நீ..வரும் புள்!
13.
புள்ளின்வாய் கீண்டானைப் போற்றிப் பணிந்திட்டால்
கள்ளின்..வாய் கொண்ட களிப்பூறும்! - அள்ளிநமைக்
காக்குமே கண்ணன் கருணையுளம்! பொன்மலரைப்
பூக்குமே உங்கள் புழை!
புழை - வாயில்
14.
உங்கள் புழைவாயில் உண்மையொளி வீசிடுமே!
திங்கள் திருமுகத்துச் செல்வியரே! - மங்கலமே
தந்தாளும் தாமோ தரனை மறந்தாரை
எந்நாளும் துாற்றியே எல்!
15.
எல்லே எனவிளித்த இன்கவி யாண்டாளின்
சொல்லே மணக்கும்! சுவையளிக்கும்! - அல்லே
அழிக்கும்! அணியிழையே! அச்சுதன்..நம் வாழ்வை
எழுப்பும் எழில்..நா யகன்!
16.
நாயகனாய் என்னுள் நடமிடுவான்! பெற்றுகந்த
தாயகமாய்த் தாங்கித் தகைதருவான்! - வாயழகு
கண்மயக்கும்! போற்றிக் களித்திடுவோம்! தந்திடுவான்
பண்மணக்கும் நல்..அம் பரம்!
அம் - அழகு
பரம் - விண்ணுலகம்
17.
அம்பரமே மின்னும் அணியரங்கா! காக்கின்ற
செம்பரமே! மின்னும் சிறப்பீய்வாய்! - நம்பியென
உள்ளொளியை நானேற்க உத்தமனே! எந்நொடியும்
ஒள்ளொளியை என்மனத்துள் உந்து!
அம்பரம் - ஆடை
18.
உந்தும் உடலடக்கி, ஓடும் உளமடக்கி,
முந்தும் வினையடக்கி முன்வந்தேன்! - நந்தா!
நலமோங்க நல்லருளை நல்கிடுவாய்! என்றன்
குலமோங்க முத்திரை குத்து!
19.
குத்தும் வலிபோக, குற்றும் வினைபோக,
பித்தும் பிணியும் பிணைந்தோட, - கொத்துமலர்
சூடுகிறேன் துாயவனே! சுந்தரனே! உள்ளொன்றிப்
பாடுகிறேன் வெண்பா..முப் பத்து!
20.
முப்பத்து மூவரை முன்படைத்தாய்! நம்மாழ்வார்
பப்பத்து முண்டாய் பரம்பொருளே! - எப்பொழுதும்
பொன்னுள் மணியெனவே, பூவுள் மணமெனவே,
என்னுள் திருவொளி ஏற்று!
21.
ஏற்ற பிறப்பை எழின்மேவச் செய்திடுமே!
ஆற்ற லளித்திடுமே! ஆரமுத - வூற்றினைச்
சாந்தமென ஈந்திடுமே! சார்ங்கனே! கவ்வுமே
காந்தமென உன்றன்..அங் கண்!
22.
அங்கண் மரையோ? அருட்கடலோ? ஆரமுதோ?
எங்கண் உறுமெழிலோ! இன்றேனோ? - பொங்கு..கவி
தந்தளித்தாய்! ஆயர்தமைத் தாங்கக் குடையாக
வந்தெடுத்தாய் மாரி மலை!
23
மாரி மலைதவழும்! வண்டு மலர்தவழும்!
தாரில் மணந்தவழும்! நீ..வரும் - தேரினிலே
சூழ்ந்தருள் சீர்தவழும்! என்னுயிர்..உன் தாள்தவழும்!
ஆழ்ந்தருள் அன்புடன் அன்று!
24.
அன்று சிலையொடித்தாய்! ஆயர் அருமனைச்
சென்று தயிர்குடித்தாய்! செற்றாரை - வென்று
பயனோங்கச் செய்தாய்! பசும்பற்ப நாபா!
உயிரோங்கத் தாராய் ஒருங்கு!
ஒருங்கு - முழுமை, அடக்கம்
25.
ஒருத்தி உருகுகிறாள்! உள்ளோருத்தி உள்ளம்
வருத்தி உளறுகிறாள்! மாயா! - திருத்தியெமை
ஆண்டள்ளி ஈவாய் அமுதை! அரங்கா!உன்
மாண்பள்ளி வார்க்குதே மால்!
மால் - ஆசை, மயக்கம், காமம்
26.
மாலே! மணிவண்ணா! மாயமலர்க் கண்ணா!உன்
காலே பிடித்தாழ்வார் கண்டுரைத்த - நுாலே
மாண்வீசும்! மாதுறை மாமார்பா! என்னிடத்தில்
வீண்பேசும் கூடாரை வெல்!
27.
கூடாரை வெல்லும் குலமளிப்பாய்! உன்புகழ்
பாடாரைப் நீக்கிப் பயனளிப்பாய்! - வாடாமல்
மண்ணுாறத் தண்ணளிப்பாய்! மாமன்னா! என்னை..நீ
கண்ணுாறப் பாலாய்க் கற!
கண் - அறிவு
கற - கறத்தல்
28.
கறவைகள் பால்சுரக்கும், காதலினால் வண்ணப்
பறவைகள் பாடிப் பறக்கும் - உறவை..யாம்
உற்று மனமகிழ்வோம்! ஊர்வலமாய்ப் பாடுவோம்!
சிற்றஞ் சிறுகாலே சென்று!
29.
சிற்றஞ் சிறுகாலே சென்றுமனம் வேங்கடனைப்
பற்றும்! பணிந்துருகும்! பண்ணிசைக்கும்! - முற்றிப்
படுமளவு தேனுாறும்! பார்த்தன்அன் புக்கே
கடுகளவு வங்கக் கடல்!
30.
வங்கக் கடலழகா! வண்ணத் தமிழழகா!
சிங்க முகத்தழகா! சீராளா! - செங்கண்ணா!
தந்தழகாய்ச் சூழ்க தகையாவும்! மாமாயா!
வந்தழகாய் வாழ்க..என் மார்பு!
நுாற்பயன்
சங்காழிக் கையனைச் சாற்றும் அருட்டமிழை
இங்கோதி நாம்வாழ்வோம்! இல்லத்துள் - பொங்குவளம்
பூக்கும்! புகழ்சேர்க்கும்! பொன்னுலகப் பேறளிக்கும்!
காக்கும் இனத்தைக் கமழ்ந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
05.12.2020