ஆசிரியப்பா மேடை - 1
தமிழில் இன்று வழங்கி வரும் பாக்கள் நான்கு. 1. ஆசிரியப்பா, 2, வஞ்சிப்பா, 3. கலிப்பா, வெண்பா.
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். 1. நிலைமண்டில ஆசிரியப்பா, 2. நேரிசை ஆசிரியப்பா, 3. இணைக்குறள் ஆசிரியப்பா, 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா.
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா, 2. சிந்தடி வஞ்சிப்பா.
கலிப்பா நான்கு வகைப்படும். 1. ஒத்தாழிசைக் கலிப்பா. 2. கலிவெண்பாட்டு, 3. கொச்சகக் கலிப்பா, 4. உறழ்கலிப்பா.
ஒத்தாழிசைக் கலிப்பா மூன்று வகைப்படும். 1.நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
கலிவெண்பாட்டு இரண்டு வகைப்படும். 1 வெண்கலிப்பா, 2. கலிவெண்பா.
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். 1. தரவு கொச்சகக் கலிப்பா, 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா, 3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா,
உறழ்கலிப்பா இன்று வழக்கில் இல்லை.
வெண்பா நான்கு வகைப்படும். 1. குறள் வெண்பா. 2. சிந்தியல் வெண்பா, 3. அளவியல் வெண்பா, 4. பஃறொடை வெண்பா.
மருட்பா என்ற வகை முன்னே இருந்தது. இன்று வழக்கில் இல்லை. அது நான்கு வகைப்படும். 1. புறநிலை வாழ்த்து மருட்பா, 2. வாயுறை வாழ்த்து மருட்பா, 3. செவியறிவுறுாஉ மருட்பா, 4. கைக்கிளை மருட்பா.
ஆசிரியப்பாவின் விளக்கம்
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்லப்படும். இதுவே முதலில் தோன்றிய பாவென்று யாப்பறிஞர் உரைப்பார். சங்க காலத்தில் இந்தப் பாவினமே அதிகமாகப் பாடப்பட்டது. அகநானுாறு, புறநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழந்தமிழ் நுால்களெல்லாம் ஆசிரியப்பாவால் ஆனவையாகும்.
சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் கொண்டு நிகழ்வதாலும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக் குறியாகும். ஆசு எனினும் சிறிது எனினும், நுண்ணிது எனினும் ஒக்கும். இதனைப் பாடுதல் எளிமை நோக்கி 'மென்பா' என்பர். இஃது மயில்போல் அகவிக் கூறும் ஓசையுடையது. [இப்பாவை விரைவாக எழுதலாம். எனவே ஆசிரியப்பாவை அவசரப்பா என்றும் உரைப்பர்]
ஆசிரியப்பாவின் இலக்கணம்
ஈசைச்சீர்கள் நான்கும் வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]
அடிதோறும் நான்கு சீர்கள் பெற்று வரும்.
இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.
ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெற்று வரும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்]
மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]
ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. [ஓ, ஈ, ஆய், என், ஐ எனவும் முடிவதுண்டு] நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தில் மட்டுமே முடியும்.
மூவசைச் சீர்கள் அருகி வரும். [தேமாங்காய் புளிமாங்காய் வரலாம்] மற்ற இரு காய்கள் வராமல் இருப்பது நன்று.
கருவிளங்கனி, கூவிளங்கனி வரக்கூடாது [மற்ற இரு கனிகள் வராமல் இருப்பது நன்று]
அகவல் ஓசையைப் பெற்றிருக்க வேண்டும். [ஈரசைச் சீர்களைப் பயன்படுத்தி எழுதினால் அகவல் ஓசை சிறப்பாக அமையும்] நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் விரவி வரும்.
நேரிசை ஆசிரியப்பா
அன்பும் பண்பும் அமைந்த வாழ்வில்
இன்பம் என்றும் இணைந்தே இருக்கும்!
பச்சைப் பசுமை படரும் வயல்போல்
இச்சை யாவும் எழிலே மேவும்!
உயிர்கள் யாவும் ஒன்றே என்ற
உயர்நெறி நெஞ்சுள் ஓங்கி ஒளிரும்!
வடலுார் வள்ளல் வகுத்த
படர்புகழ்ப் பாதை பாரில் வளர்கவே!
[பாட்டரசர்]
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று ஈற்று அயலடி முச்சீராய் வருவது நேரிசை ஆசிரியப்பா ஆகும். ஈற்றயலடியை, எருத்தடி என்று வழங்கப்படும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தால் மட்டுமே முடியும்.
அன்பின் பெருமையை உணர்த்தும் வண்ணம் நேரிசை ஆசிரியப்பா ஒன்றை 12 அடிக்கு மிகாமல் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்