dimanche 23 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 7 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 7]

பொற்கையால் கிள்ளியெனைச் சென்ற போது
     புடைத்தெழுமே என்னுடலும் உயிரும்! அன்பே
நற்கையால் செய்திட்ட குறும்பால் இந்த
     நறுங்கவிதை பிறக்குதடி! காதல் பாடச்
சொற்கையால் சுரக்கின்ற சுகத்தை யுற்றேன்!
     சொதப்பாமல் சொன்னபடி முத்தம் சூட்டு!
வற்கையால் உனையனைத்து வரமாய் வந்து
     மலா்ந்திட்ட நொடிப்பொழுதை மீண்டும் காட்டு! 31

சிவ்வென்று பாயுதடி! உன்றன் மேனி
     சிவக்குதடி! சொலிக்குதடி! அழகின் ஆட்சி!
குவ்வென்று குதித்திட்ட ஆசை நெஞ்சம்
     கூளிர்ந்திடவே குளிக்குதடி! கொள்ளை இன்பம்!
உவ்வென்று உயிரிசைக்கும் சுருதி என்னுள்
     ஓடுகின்ற குருதியிலே கலக்கும்! இன்னாள்
ஒவ்வொன்றும் மனக்கூட்டில் பதியம் ஆகி
     உணா்வுகளை உசுப்புதடி! கவிதைப் பெண்ணே! 32

நான்எழுதும் கவிதைகளை உணவாய் உண்ணும்
     நற்றவத்துத் தேவதையே! இனிக்கும் இன்பத்
தேன்எழுதும் காவியமே! தென்றல் காற்றே!
     தீராத விளையாட்டைத் தீட்டும் பெண்ணே!
வான்எழுதும் பொன்விடியல் மயக்கும் மாலை
     வண்ணவிழி வடித்தெழுதும் அழகுக் கீடோ?
மான்எழுதும்! மீன்எழுதும் உன்னைக் கண்டு
     மாதே..உன் மலா்முகமே சொர்க்கம் என்று! 33

எந்நொடியும் உன்னினைவே! பார்வை பார்க்கும்
     எத்திசையும் உன்னுருவே! திகட்டா தின்பச்
செந்தமிழும் சந்தனமும் சோ்த்துச் செய்த
     சிந்தைபுகும் பேரழகே! கொடிகள் யாவும்
வந்தொடியும் உன்னுடைய இடையைக் கண்டு!
     வாழ்தொலிரும் நல்லன்னம் நடையைக் கண்டு!
பந்துருளும்! பகையுருளும்! பாவை உன்னால்
     பாவலனின் நெஞ்சுருளும் ஏக்கம் கோடி! 34

எப்பொழுதும் என்னவளை எண்ணி எண்ணி
     என்னிதயம் போதையுறும்! அடிமை போன்று
முப்பொழுதும் இளையவளைப் பாடிப் பாடி
     முழுதெல்லை மோகமுறும்! கனவில் வந்தே
அப்பொழுதும் நீ..புரியும் விந்தை எல்லாம்
     அடியவனைக் கோமாவின் நிலைக்கே தள்ளும்!
இப்பொழுதும் என்னிடத்தில் இரக்கம் இன்றி
     இழிவாகப் பார்ப்பதுமேன்? காதற் பெண்ணே! 35
                                       (தொடரும்)

2 commentaires:


  1. முற்றல் கனியோ? முல்லை மலர்க்காடோ?
    நற்கள் கொடுக்கும் நனிமயக்கோ? - நற்றேன்
    அடையோ? அமுதோ? அரும்மழையோ? காதல்
    உடையோ? உரைப்பாய் உடன்?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அடையென்பேன்! இன்ப அமுதென்பேன்! காதல்
      கடையென்பேன்! கன்னல்மடை என்பேன்! - படையின்
      நடையென்பேன்! நல்வாழ்வு நல்கும் தமிழின்
      கொடையென்பேன் நெஞ்சம் குளிர்ந்து!

      Supprimer