ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]
[கட்டளைத் கலித்துறை - நேரிசை வெண்பா]
ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதுபோல் ஒரு செய்யுளுக்குள் மற்றுமொரு செய்யுள் இருப்பது ஒன்றில் ஒன்று என்னும் சொற்சித்திரமாம். இவ்வகையை மிறைப்பாவென முன்னோர் வழங்கினர்.
ஒரு பாடலில் இருந்து பகுத்து வந்த மற்றப் பாடலும் எதுகை, மோனை, தளை, புணர்ச்சி, பொருள், யாப்புநெறி யாவும் சிறப்புடன் இருக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் நேரிசை வெண்பா வந்துள்ளதைக் காண்க.
கட்டளைத் கலித்துறை
சின்ன முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற் கன்னமதில்
என்ன கலையோ?சீர் மின்னி மயக்கும் இறையழகோ?
மன்னர் மரபோ? இயக்குமென் பேரன் எழில்வளமோ?
கன்னல் தமிழோ? கவிதை யமுதோ? களித்தனனே!
நேரிசை வெண்பா
சின்ன
முயலோ? சிரிக்கும் சிலையோ?பொற்
கன்னமதில் என்ன கலையோ?சீர் - மின்னி
மயக்கும் இறையழகோ? மன்னர் மரபோ!
இயக்குமென் பேரன் எழில்!
கட்டளைத் துலித்துறை இலக்கணம்
ஐந்து சீர்களுடைய நான்கடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும்.
முதல் நான்கு சீர்கள் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
ஐந்தாம் சீர் விளங்காயாக இருக்க வேண்டும். [கருவிளங்காய், கூவிளங்காய்]
பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டு.
ஒன்று ஐந்தாம் சீர்களில் மோனை அமையவேண்டும்.
நேரசையால் தொடங்கும் பாடல் அடிதோறும் ஒற்று நீக்கி 16 எழுத்தும், நிரையசையால் தொடங்கும் பாடல் 17 எழுத்தும் கொண்டிருக்கும்.
பாட்டரசர்
கி. பாரதிதாசன்,
15.07.2022