jeudi 31 décembre 2015

தமிழண்ணல் கையறுநிலை
முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து
நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ்
அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக்
கண்ணீர்க் கடலெனக் காண்!

ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத்
தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா
நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து
பாடுகுயில் தேடும் பறந்து!

ஆழ்ந்த உரையளித்துத் தாழ்ந்த நிலைதுடைத்துச்
சூழ்ந்த பகையொழித்துத் தொண்டீந்தார்! - வீழ்ந்துயிர்
அக்கக்காய் ஆகிடவே அய்அய்யோ எங்குற்றார்?
இக்கெட்டில் வாடும் இனம்!

அயற்சொல் அகற்றிடுவீர்! அந்தமிழ் நம்மின்
உயிர்கொள் எனவுரை ஓர்ந்தார்! - உயர்வனைத்தும்
தந்த தமிழண்ணல்! எந்த உலகுற்றார்?
சிந்தை அழுமே சிதைந்து!

தாய்மொழிக் கல்வி தழைத்திட வேண்டியே
ஓய்வின்றி நாளும் உழைத்தவர்! - சாய்வின்றி
வாழும் வழியளித்த வள்ளல் பிரிந்ததுமேன்?
சூழும் இருளே தொடர்ந்து!

கோயில் தலமெங்கும் கோலத் தமிழ்மணக்க
வாயில் வடித்த தமிழண்ணல்! - சேயவரைத்
தாயிங்குத் தேடுகிறாள்! போயுள்ள ஊரெதுவோ?
வாயிங்குக் கத்தும் வறண்டு!

உண்ணா துறங்கா துழைத்தவர்! எந்நாளும்
மண்ணார் மடமையை மாய்த்தவர்! - திண்ணமுடன்
இன்னும் பல..பகைவர் இங்குள்ளார்! ஏன்பிரிந்தார்?
மன்னும் துயரால் மனம்!

அண்ணல் பிரிவாலே இன்னல் பலகோடி
நண்ணும் நமதினமே! நற்றாயே! - திண்ணமுடன்
பொன்னை நிகர்த்தகவி பூத்தவர் போனதுமேன்?  
என்னையினிக் காப்பார் எவர்?

பொன்னுால் அடைந்திடும் பூந்தமிழ் வாணரை!
நன்னுால் அடைந்திடும் நாவலரை! - தொன்னுால்
அடைந்திடும் துாயவரை! அண்ணலே நானிங்[கு]
அடைந்திடும் பாதை அறை!

பண்கள் அடைந்திடும் பாவலரை! பைந்தமிழ்
எண்கள் அடைந்திடும் ஏற்றவரை! - மண்ணுலகில்
நானெவரை நாடிடுவேன்? அண்ணலே மீள்பிறக்க
வானவரை வேண்டும் மனம்!

31.01.2015

samedi 26 décembre 2015

கர்த்தர் திருத்தாலாட்டு!
கர்த்தர் திருத்தாலாட்டு!
(கலித்தாழிசை)

கண்ணே! மணியே! கமழும் மலர்க்காடே!
விண்ணே! ஒளியே! விளைந்த பசும்வயலே!
மண்ணே மணக்க வரம்தரும் மாமறையே!
தண்ணே தழைக்கும் தவமகனே தாலேலோ!
   தமிழாய் இனிக்கும் தவமகனே தாலேலோ!

அன்பின் சுரப்பே! அருட்கடலே! ஆண்டளிக்கும்
இன்பின் சுரப்பே! இறைமகனே! என்மனத்
தொண்டின் சுரப்பே! சுடர்வடிவே! மேன்மைதரும்
பண்பின் சுரப்பே! பரம்பொருளே தாலேலோ!
   பசுந்தமிழ் ஊற்றே! பரம்பொருளே தாலேலோ!

ஓலைக் குடிற்பிறந்த ஒப்பில் மறையவனே!
காலைக் கதிரே! கனிந்த கனிக்குலையே!
சோலை புகுந்துவரும் துாய மணக்காற்றே!
பாலை நிகர்த்த பசுஞ்சுவையே தாலேலோ!
   படர்தமிழ் நல்கும் பசுஞ்சுவையே தாலேலோ!

விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயல்புரிந்தாய்!
கண்மீன் களிக்கக் கலையென நீ..மலர்ந்தாய்!
பெண்ணின் துயரகற்றிப் பேணும் நலமளித்தாய்!
பண்மீன் எனக்குள் படைத்தவனே தாலேலோ!
   பைந்தமிழ்த் தேனைப் படைத்தவனே தாலேலோ!

கண்ணீர் பெருகிவர மண்ணின் சுமையுற்றாய்!
புண்ணீர் மனத்தார் புகன்ற மொழிபொறுத்தாய்!
நுண்ணீர் உயிர்முதல் நின்சீர் படைப்பன்றோ?
விண்ணீர் அருளே! வியனரசே தாலேலோ!
   வெல்லுதமிழ்ப் பாகே! வியனரசே தாலேலோ!

கற்பகப் பூவே! கருணைப் பெருங்கடலே!
நற்றவத் தேனே! நலமருள் தந்தையே!
அற்புத சீரே! அமுதுாறும் நற்சுனையே!
பெற்புற என்னுள் புகுந்தனையே தாலேலோ!
   பூந்தமிழாய் மின்னிப் புகுந்தனையே தாலேலோ!

மலைமேல் பொழிந்த மணியுரையை என்னென்பேன்!
அலைமேல் நடந்த அருஞ்செயலை என்னென்பேன்!
கலைமேல் சுரக்கும் கனியமுதை என்னென்பேன்!
தலைமேல் தரித்து வணங்குகிறேன் தாலேலோ!
   தண்டமிழ் பாடி வணங்குகிறேன் தாலேலோ!

முள்ளணி சூடியவா! முல்லை அகத்தழகா!
வள்ளணி ஏற்றுயிர் வாடி வதங்கியவா!
உள்ளணி நானுற உன்றன் திருவடிக்குச்
சொல்லணி சூடித் தொழுகின்றேன் தாலேலோ!
   துாயதமிழ் பாடித் தொழுகின்றேன் தாலேலோ!

சிலுவை சுமந்து..நீ சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உயர்நெறி தந்ததுவே!
வலமை வழிகாண வந்துன்னைப் போற்றுகிறேன்
நிலவை நிகர்த்தவனே! நெஞ்சுருகித் தாலேலோ!
   நீடுதமிழ் போன்றவனே நெஞ்சுருகித் தாலேலோ!

வெள்ளிப் பணம்வேண்டிக் காட்டிக் கொடுத்தவனை
அள்ளி அணைத்த அரும்பெருஞ் சோதியனே!
கொள்ளிப் பிசாசுகளின் கொட்டம் ஒழித்தவனே!
பள்ளி கிடத்தியுனைப் பாடுகிறேன் தாலேலோ!
   பைந்தமிழ்ப் பாரதிநான் பாடுகிறேன் தாலேலோ!

25.12.2015

lundi 14 décembre 2015

குன்றேந்திக் காப்பாய்!
குன்றேந்திக் காப்பாய்!

இன்பம் அளிக்க இறங்கிவரும் நல்லமுதம்
துன்பம் கொடுத்துத் தொடருவதேன்? - அன்றுலகைக்
குன்றெடுத்துக் காத்தவனே! கோகுலத்து நாயகனே!
இன்றெடுத்துக் காப்பாய் எமை!

கொட்டும் மழையென்று கூறுவதால் தேள்போன்று
கொட்டும் துயரைக் கொடுப்பதுவோ? - கட்டின்றி
நீர்புகுந்து ஓங்குவதோ? நின்னைச் சரணடைந்தேன்!
ஊர்புகுந்த ஊழை ஒழி!

தழைத்தோங்கும் தண்மைநலம் தந்துவக்கும் நன்னீர்
இழைத்தோங்கும் பேரின்னல் ஏனோ? - அழைத்தோங்கும்
என்குரல் கேட்காமல் எங்குற்றாய் ஒண்கண்ணா!
உன்னருள் வேண்டும் உடன்!

தாயென வந்து தழைப்பூட்டும் தண்மழை
பேயென ஆட்டம் பிடித்ததுமேன்? - மாயவனே!
ஆநிரை காத்திட அன்று விரைந்தனையே!
பூநிறை துன்பத்தைப் போக்கு!

வள்ளல் மழையின்று வாட்டுவதேன்? எம்மண்ணின்
உள்ளம் உடைத்தே ஒழுகுவதேன்? - வெள்ளத்துள்
இல்லம் முழுகுவதோ? என்றன் எழிற்கண்ணா!
அல்லல் அனைத்தும் அகற்று!

பொல்லார் புகுந்து புரட்டும் அரசியலால்
நில்லா திறங்கும் நெடுமழையே! - நல்லார்
குரல்கேட்(டு) உடன்வரும் கோவிந்தா! எங்கள்
இருளோட்ட வா..வா எழுந்து!

கொள்ளை அடிப்போர் குவிந்துள்ள காரணத்தால்
பிள்ளை மனம்நீங்கிப் பெய்கிறதோ? - வெள்ளத்துள்
பள்ளி கிடக்கும் பரம்பொருளே! எம்துயரை
அள்ளி உடனே அகற்று!

ஓதும் மறையாளர் சூது மனங்கொண்டு
மோதும் உணர்வேந்தி முன்னின்றார்! - போதுமெனப்
பொங்கிப் பொழிந்ததுவே? புட்கொடி நாயகனே!
எங்கள் துயரை எடு!

பண்பட்டு வாழ்ந்தவர் புண்ணுற்றுப் போனதனால்
விண்கெட்டுத் துன்பம் விளைந்ததுவோ? - கண்கெட்டு
நிற்கின்றோம்! மாதவனே! நின்னிடத்தில் எம்முயிரை
விற்கின்றோம் காப்பாய் விரைந்து!

தொடரும் பெருமழை தொல்லை அகலச்
சுடரும் கதிரொளி சூழச் - படர்பசுமை
எங்கும் செழித்தொங்க என்னுயிர் மாயவனே!
இங்குன் அருளை எழுது!

14.12.2015

mercredi 25 novembre 2015

வெண்பாக் கொத்து


பெண்ணின் பெருந்தக்க யாவுள?

குறள் வெண்பா!
பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மன்னும் மடமை மலர்ந்து?

நேரிசை வெண்பா

பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்போம்!
பண்ணின் இனிய பயனேற்போம்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்போம்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!

இன்னிசை வெண்பா


பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்அருள் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!

பஃறொடை வெண்பா

பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கும்
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வோம்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கவிக்கருத்தைக் காத்திடுவோம்!
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்றே
வளங்கள் மணக்கும் மலர்ந்து!

இலக்கண விளக்கம்

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

09.08.2015

samedi 14 novembre 2015

அடிமுதல் கண்ட குறள்!
 அடிமுதல் கண்ட குறள்!

குறளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக இருக்க வேண்டும்! இரண்டும் வெவ்வேறு பொருளில் வரவேண்டும்!

1.
படித்தேன் அளிக்கின்ற பாவையின் பாட்டைப்
படித்தேன் பறந்த படி!

2.
கண்டுமொழி கொண்டவளே! காதல் கொழிக்குதடி!
வண்டுவிழி வண்ணங்கள் கண்டு!

3.
அடியழகு பெண்ணே! அருந்தமிழ் மின்ன
அடியழகு தந்தா யடி!

4.
கொடியேற்றி ஆடுமவள் கூரழகு! போதை
குடியேற்றி ஆடும் கொடி!

5.
துடியிடைப் பெண்ணின் சுவைநடை பாடிச்
சுடர்கவி நெஞ்சே துடி!

6.
கட்டுமலர் சூடிவரும் காரிகையைக் கண்டே..நீ
மெட்டுமலர் இட்டுகவி கட்டு!

7.
கலையழகே! கண்மணியே! காலம் உணர்ந்து
சிலையழகே! சீற்றம் கலை!

8.
அணையினை மீறி அகத்தாசை பொங்கும்!
இணையெனை ஏந்தி அணை!

9.
அணியொளிர் பெண்ணே! அருஞ்சுவையே! என்னை
மணியொளிர் மார்பில் அணி!

10.
கழையழகு தோள்கள்! கனிமொழியே உன்றன்
குழையழகு கூட்டும் கழை! 

14.11.2015
 

mardi 10 novembre 2015

விளக்கணி விழா வாழ்த்து!
விளக்கணி விழா வாழ்த்து!

எங்கும் தமிழ்நெறி பொங்கிப் பரவட்டும்!
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - மங்கலம்
நல்கட்டும்! வண்ண விளக்கணி நன்னாளே!
பல்கட்டும் நன்மை படர்ந்து!

10.11.2015

jeudi 5 novembre 2015

குறள் வெண்செந்துறை!குறள் வெண்செந்துறை!

1.
பன்மொழி கற்றுப் பயனறும் வாழ்வு
தன்மொழி இலையேல் துன்னிழி வெய்தும்!

2.
ஊழ்வகை என்றே உட்கார்ந் திருந்தால்
வாழ்வகை யாவும் வற்றிப் போகும்!

3.
என்னிறை ஒன்றே ஏற்றம் என்று
வன்னிறை கொண்டால் மண்ணிறை மாயும்!

4.
அன்பின் சிறந்த அரும்பொருள் உலகில்
என்றும் இலையென நன்றே உணர்க!

5.
தாய்மை உலகைத் தாங்கும் சக்தி!
வாய்மை உயிருள் ஓங்கும் சக்தி!

6.
ஆல்போல் தழைக்கும்! அறுகாய்ச் செழிக்கும்!
பால்போல் தூய்மை படைத்த மனமே!

7.
உன்னுள் அறங்கள் ஓங்கி ஒளிர்ந்தால்
பொன்னுள் மணியாய்ப் பொலியும் வாழ்வே!

8.
ஊக்கம் உன்றன் உறவெனக் கொண்டால்
ஆக்கம் உன்றன் அடிதொழும் என்பேன்!

9.
ஒழுக்கம் உன்றன் உயிரெனக் கொண்டால்
அழுத்தும் துயரம் அடியோ டோடும்!  

10.
விண்ணொளி போன்று விரிநிலை யுற்றுப்
பண்ணொளி மின்னும் பைந்தமிழ் மொழியே!

இலக்கண விளக்கம்!

ஓரடியில் நான்கு சீர்கள் முதல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம்.

மற்றோர் அடியும் அதே அளவு அமைந்திருக்க வேண்டும்.

இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்

நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

சீர்களுக்கள் எந்தத் தளையும், எவ்வகைச் சீரும் வரலாம்.

குறள் வெண் செந்துறை விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்றிருக்க வேண்டம். இவ்வாறு இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவதை வெண்செந்துறை என்று கூறுவர். இதற்கு வெள்ளைச் செந்துறை என்றும் பெயருண்டு.

03.11.2015

jeudi 22 octobre 2015

கலைமகள் வெண்பா!
கலைமகள் வெண்பா!

1.
வெண்டா மரைமணக்க வீற்றிருக்கும் என்தாயே!
வண்டாய்ப் பறந்து வருகின்றேன்! - கண்டாய்க்
கவிபடைக்கச் செய்வாய்! கமழ்குறள் ஏந்திப்
புவிபடைக்கச் செய்வாய் பொலிந்து!

2.
கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் தாயே!
அலைகள் எனத்தொடரும் ஆற்றல் - நிலையாக்கிப்
பொல்லா உலகைப் புரட்டும் எழுத்துாட்டி
எல்லாம் அளிப்பாய் எனக்கு!

3.
இன்னிசை மீட்டும் இதயத்துள் வாழ்பவளே!
என்னசை சீரினிக்க நீ..எழுவாய்! - மின்விசைபோல்
இந்த உலகின் இருளகற்ற என்னாவில்
தந்து மகிழ்வாய் தமிழ்!

4.
கண்ணுள் கமழும் கலைப்பேறே! என்தாயே!
பண்ணுள் படரும் பசுந்தேனே! - எண்ணும்
எழுத்தும் உலகெல்லாம் ஏந்தவழி செய்வாய்!
பழுத்துன் அருளைப் படைத்து!

5.
கற்றோர் உளத்துள் களிக்கின்ற கற்பகமே!
சொற்போர் அவையில் துணையிருப்பாய்! - மற்போர்
வலிமை வழங்கிடுவாய்! வையம் செழிக்கப்
புலமை வழங்கிடுவாய் பூத்து!

6.
வீணை இசைப்பவளே! வெல்லும் மறவனென்
நாணை இழுப்பவளே! நற்றாயே! - ஆணையொன்று
இட்டருள்வாய் எல்லாரும் இவ்வுலகில் ஒன்றென்றே!
தொட்டருள்வாய் ஞானச் சுடர்!

7.
துாய்மை நிறத்தவளே! தொண்டன்என் சொல்லுக்குள்
வாய்மை நிலைக்க வரம்தருவாய்! - தாய்மையொளிர்
அன்பமு துாட்டி அணிசெய்வாய்! இப்புவியை
இன்னமு துாட்டி இயக்கு!

8.
எண்ணுள் எழுத்துள் இருந்து மணப்பவளே!
மண்ணுள் உளமடம் மாய்த்திடுவாய்! - வண்ணப்
பிரிவுகளைப் போக்கிடுவாய்! பீடுடைய சீரின்
விரிவுகளை ஆக்கிடுவாய் வென்று!

9.
பச்சைப் பசுங்கொடியே! பண்பரசி உன்னருளால்
அச்சம் அனைத்தும் அகன்றதுவே! - மிச்சமிலா
வண்ணம் அறிவை வழித்துாட்டு! மண்ணோங்கும்
எண்ணம் எனக்குள் இணைத்து!

10.
கல்விக் கடலே! கலைமகளே! சொற்பொருளைச்
சொல்லித் தருகின்ற சுந்தரியே! - மல்லிகையாய்ப்
பார்மணக்கச் செய்வாய்! பணிகின்றேன்! பாட்டரசின்
சீர்மணக்கச் செய்வாய் செழித்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.10.2015

mercredi 7 octobre 2015

கம்பன் விழா 2015


உலகத் தொல்காப்பிய மன்றம்

உலகத் தொல்காப்பிய மன்றம்
திறப்பு விழாப் புகைப்படங்கள்
பிரான்சு
27.10.2015

mardi 22 septembre 2015

தொல்காப்பிய மன்றம்

உலகத் தொல்காப்பிய மன்றத் திறப்பு விழா அழைப்பிதழ்கம்பன் விழா 2015

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பதினான்காம் ஆண்டுக் கம்பன் விழா