jeudi 21 mai 2020

தனிச்சொல் இலாவணி


தனிச்சொல் பெற்று வந்த இலாவணி

நாட்டினிலே ஏழ்மையினைக் கூட்டுகிற ஆட்சியினை
நாமெழுந்து நீக்குவதும் என்றோ என்றோ...? - நம்மின்
வீட்டினிலே நல்லறிவு மீட்டுகிற கல்விமுறை
மேவிவரத் துன்பொழியும் அன்றோ அன்றோ...!
 
சாதிவெறி கூடுவதேன்? மோதிமதம் ஆடுவதேன்?
சாக்கடையோ இவ்வுலகு சாற்று சாற்று...? - ஆளும்
நீதிநெறி கொல்லுகிற சூதுமனக் காரர்களை
நீயிணைந்து போர்தொடுத்து மாற்று மாற்று!
 
வாக்குப்பெறப் பற்பொருளை ஊக்கமுடன் நல்குவதேன்?
வள்ளலென நல்லமனம் கொண்டு கொண்டு...! - பொய்யாய்
நாக்குநலப் பேச்சிருக்கும்! தேக்குநிதி யூட்டிருக்கும்!
நாலுதலை வாழ்முறைக்குக் கண்டு கண்டு...!
 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
21.05.2020.samedi 16 mai 2020

இலாவணி


இலாவணி

உழவனும் உழத்தியும் பாடும் வண்ணம் இந்த இலாவணிக்  கண்ணிகள் அமைந்துள்ளன.  ஒவ்வொரு கண்ணியிலும் முதலடி உழவனின் கேள்வியாக அமைகிறது. உழத்தியின் பதிலாக இரண்டாமடி தொடர்கிறது.

1.
சோலையெழில் பூத்தொளிரும் சேலையெழில்  கொண்டவளே
துாயமொழி ஒன்றெடுத்துச் சொல்லு சொல்லு...!
காலைமுதல் மாலைவரை காளையுனைக் காணுகிறேன்
கட்டுடனே கையடக்கி நில்லு நில்லு...!

2.
ஏர்நடத்தும் நீர்வயலில் போர்நடத்தும் பூங்குயிலே
ஈட்டுகிறாய் எப்பொழுதும் வெற்றி வெற்றி...!
வேர்பழுத்த வாசமெனச் சீர்பழுத்த வாயழகா
வீசுவதேன் பொய்யுரைகள் சுற்றிச் சுற்றி...!

3.
சின்னஇடை பின்னவர, அன்னனடை மின்னிவர,
சில்லெனவே ஏறுதடி போதை போதை...!
என்னவொரு பொய்நடிப்பு! என்னதொட உன்னுடிப்பு!
இவ்வகையில் நீயுமொரு மேதை மேதை!

4.
நாற்றுநடும் நல்லவளே! ஏற்றுமெனைக் கூத்துமிட
நல்லதொரு சொல்லெடுத்துப் பாடு பாடு...!
ஆற்றுநடை ஆணழகா! சாற்றுமொழி ஏறலையோ?
அத்தைவரும் நேரமடா ஓடு ஓடு...!

5.
கட்டழகு காரிகையே! தொட்டழகு நேயமுறக்
கண்ணடித்துப் பூங்கணையை ஏவு ஏவு...!
மொட்டழகு சீர்படைத்துப் பட்டழகு காட்டுவதேன்
மோகநிலை விட்டிடமே தாவு தாவு...!

6.
ஏற்றமிடும் ஏந்திழையே! காற்றுமிடும் வேதனையை
ஆற்றிடவே அன்புமொழி பேசு பேசு...!
ஆற்றலுடன் ஆசைகளைச் சாற்றுகின்ற பைத்தியமே!
நாற்றெடுத்து மூலையிலே வீசு வீசு...!

7.
கள்ளளிக்கும் கண்ணழகி! முள்ளளிக்கும் செயலகற்றிக்
காதலுறம் நல்லுறவைக் காட்டு காட்டு...!
நெல்லடிக்கும் நேரமிது மல்லடிக்கும் வீணகற்றி
நெஞ்சொழுகும் ஆசைகளை ஓட்டு ஓட்டு...!

8.
ஆலமரத் துாஞ்சலிலே கோலமுடன் ஆடிடவே
அத்தமகச் சித்திரமே வாடி வாடி...!
பாலமுத உன்மொழியைக் கேளவொரு நாழியிலை
பார்..எனக்கு வேலைபல கோடி கோடி...!

9.
வேர்பிடித்து  ஓங்குதடி மார்பிடித்த உன்னினைவு
வேண்டுவரம் தந்திடுவாய் கண்ணே கண்ணே...!
கார்பிடித்து வான்பொழியும்! நார்பிடித்துத் தேர்நகரும்!
கால்பிடித்துப் பேசுவதோ மண்ணே மண்ணே...!

10.
கெண்டைவிழி துள்ளுதடி! தண்டையொலி கிள்ளுதடி!
கேணியிடம் வந்திடுவாய் தேனே தேனே...!
மண்டைவெறி உற்றதுமேன் அண்டைநிலை அறியாமல்
மாமா.நீ ஏங்குவது வீணே வீணே...!

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
12.05.2020.

mardi 12 mai 2020

இலாவணி  சிந்துப்பா மேடை - 9
 
இலாவணி
 
புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு "டேப்" எனும் ஒருவகைத் தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவார். ஒரு புலவரின் வினாவுக்கு எதிரே உள்ள புலவர் விடை சொல்வதாக இந்நிகழ்ச்சி அமையும். [சக்கரவர்த்தி திருமகன் திரைப்படத்தில், புரட்சித் தலைவரும், என் எச். கிருட்டினனும் பாடும் பாடல் காட்சி இவ்வகையைச் சற்றே ஒத்திருக்கும்]
 
அடி: ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண்சீரடி.
சீர் : நான்மை நடையது.
இயைபு : அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத்தொடை அமைவது இதன் தனியியல்பு.
 
ஏட்டினிலே வீரத்தமிழ் தீட்டிவைத்துப் பாவரசன்
என்றபுகழ் பெற்றவனும் யாருயா ரு...?
நாட்டுரிமை வேட்டினிய பாட்டினிலே போர்தொடுத்த
நல்லகவி பாரதியாம் பேருபே ரு...!
 
[கலைமாமணி, கவிஞர் தே. சனார்த்தனன்]
 
ஒரடி எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். [ 'ஏட்டினிலே' என்பது முதல் 'யாரு' என்பது வரையில் ஓரடி]
 
முதல் 6 சீர்களில் ஒவ்வொன்றிலும் 4 சிந்தசைகள் வரவேண்டும். [நான்கு எழுத்துக்கள்] [ஏட்/டி/னி/லே - நான்கசை உள்ளசைக் காண்க] சிந்துப்பா அசைகள் இரண்டு. அவை, குறிலசை, நெடிலசை எனப்படும்.
 
குறிலசை
 
தனிக் குறில் [அ] [க]
 
நெடிலசை
 
தனி நெடில் [ஆ] [கா]
குறில் ஒற்று [அல்] [கல்]
நெடில் ஒற்று [ஆல்] [கால்]
 
7, 8 ஆம் சீர்கள் அடுக்குத்தொடராக அமையும். [யாருயாரு - பேருபேரு] 8 ஆம் சீரில் ஓரசையுடன் இசை நீட்டம்பெறும். இசை நீட்டத்தைப் புள்ளியிட்டுக் காட்டியுள்ளேன்.
[யா.ருயா ரு...] [பே.ருபே ரு...]
 
முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனைபெறும் [ஏட்டினிலே - என்றபுகழ்]
 
முன் அரையடியில் பொழிப்பெதுகை அமையும் [ஏட்டினிலே - தீட்டிவைத்து] [நாட்டுரிமை - பாட்டினிலே]
 
இப்படி வரும் இரண்டடிகள் ஓரெதுகையில் அமைய வேண்டும். [ஏட்டினிலே - நாட்டுரிமை]
 
இரண்டு அடிகளிலும் இறுதிச்சீர்கள் இயைபு பெறவேண்டும் [யாருயாரு - பேருபேரு]
  
இதுவே இலாவணியின் ஒரு கண்ணியாகும்.
 
விரும்பிய பொருளில் 'இலாவணி'யில் முக்கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
12.05.2020.

dimanche 10 mai 2020

கண்ணன் காப்பு

கண்ணன் காப்புஇறையருளும் குருவருளும் இதயங் கொண்டேன்!
  எல்லோரும் ஏத்துகின்ற ஏற்றங் கண்டேன்!
நிறையருளும் தமிழ்த்தாயை நெஞ்சம் உற்றேன்!
  நீடுபுகழ் மணக்கின்ற நிலையைக் கற்றேன்!
மறையருளும் சீராய்ந்து வாய்மை போற்றி
  மதியருளும் நன்னெறியால் வளமே பெற்றேன்!
குறைதிரளும் போக்கின்றிக் கோலக் கண்ணன்
  குணமருளும் திருவடியே இந்நுால் காப்பு!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.05.2020samedi 9 mai 2020

ஆனந்தக் களிப்பு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

கண்ணன் என் காதலன்!
[ஆனந்தக் களிப்பு]
 
நல்லிசை மீட்டிடும் கண்ணா! - காதல்
  நற்கவி தீட்டிடும் பொற்புடை மன்னா!
சொல்லிசை யூட்டிடும் பொன்னா! - நெஞ்சம்
  சொர்க்கமே ஈட்டிடும் உன்பெயர் சொன்னா!
     [நல்லிசை]
 
மாமலை யாண்டிடும் மாயா! - மார்பில்
  மங்கையைப் பூண்டிடும் பொங்கெழில் துாயா!
பூமலை காத்திடும் நேயா! - வண்ணப்
  புன்னகை பூத்திடும் இன்மது வாயா!
     [நல்லிசை]
 
விண்ணொளி சூட்டிடும் திருவே! - உன்றன்
  கண்ணொளி ஓட்டிடும் புண்ணெறி யிருளே!
மண்ணொளி நாட்டிடும் உருவே! - பாடும்
  பண்ணொலி காட்டிடும் பாவையென் உறவே!
     [நல்லிசை]
 
வேங்கடம் போற்றிடும் வீரா! - நெஞ்ச
  வேதனை மாற்றிடும் சாதனை மாறா!
தேங்கனி ஏற்றிடும் தீரா! - என்னைத்
  தேற்றிடும் சாற்றிடும் காத்திடும் சீரா!
     [நல்லிசை]
 
மின்மணி மாலைகள் கொண்டாய்! - வாச
  வெண்பனிச் சோலைகள் விண்மணி கண்டாய்!
நன்மணிச் சேலைகள் தந்தாய்! - இந்தப்
  பெண்மணி வேலைகள் இன்புற வந்தாய்!
     [நல்லிசை]

பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.05.2020

mardi 5 mai 2020

ஓரடி நொண்டிச் சிந்து!

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஓரடி நொண்டிச் சிந்து!
 
பெரும்பாலும் நொண்டிச்சிந்து ஈரடிக் கண்ணிகளாக வரும். சிறுபான்மை நாலடிக் கண்ணிகளும், அருகி ஓரடிக் கண்ணிகளும் வருதல் உண்டு.
 
1.
வீட்டறையில் வாடுநிலை யேன்... -.?நோய்வந்து
வெந்துதினம் துன்பநிலை முந்துவது மேன்...?
 
2..
முற்றொடிக்கி மேவுதுயர் ஏன்... - .?வந்தெம்மை
மூட்டுவலி மூச்சுவலி வாட்டுவது மேன்...?
 
3.
பிள்ளைகளின் ஆட்டமிலை யே... - ..!நாளும்
கொள்ளையிடும் நோய்க்கொடுமை எல்லையிலை யே...!
 
4.
வேலையிலை சோறுமிலை யே... -..!கொல்லும்
வேதனையை ஓட்டவொரு பாதையிலை யே!
 
5.
காத்தருளும் எம்முயிர்ஈ சா... - .உன்மலர்க்
கால்பிடித்தோம் நோயகற்றும் பால்கொடுப்பா யே...!
 
[பாட்டரசர்]
 
நொண்டிச்சிந்துவின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை - 6, 7 ஆம் பகுதிகளில் விரிவாகக் கண்டோம். இங்கு ஓரடியின் இலக்கணத்தைச் சுருக்கமாகக் காண்போம்.
 
ஓரடிக்கு எட்டுச் சீர்கள் வரவேண்டும்.
 
அடியின் பிற்பாதிகளில் பொழிப்பெதுகை அமைய வேண்டும்.
 
அடியின் ஒவ்வொரு சீரில் நான்கு அசை இருக்கும். [இப்பாடல் நான்மை நடைக்குரியது]
 
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
 
ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீராக வரும் தனிச்சொல் மூவசைச் சீராக வரும். சிறுபான்மை நாலசையும், ஈரசையும், அருகி ஓரசையும் பெறும். இவ்விடங்களில், மூன்றாம் சீரின் ஈற்றசை நீண்டு நான்காம் சீரும் நாலசையைப் பெற்றொலிக்கும்.
 
விரும்பிய பொருளில் ' ஓரடி நொண்டிச் சிந்து' ஐந்து பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
05.05.2020.

dimanche 3 mai 2020

கேட்டலும் கிளத்தலும்


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கேட்டலும் கிளத்தலும்
 
மொழி ஈற்று மகரத்தின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்?
 
பாவலர் இளமதி, சர்மனி.
 
-------------------------------------------------------------------------------------------
 
மகர வீற்றுப்பெயர் முன் வல்லினம் வர இருவழியும் ஈறுகெட்டு வலி மிகுத்து வரும்.
 
மரம் + கோடு = மரக்கோடு
மரம் + செதில் = மரச்செதிள்
மரம் + தோல் = மரத்தோல்
மரம் + பூ = மரப்பூ
 
மரம் + அடி = மரவடி ['வ்' உடன்படுமெய்]
மரம் + வேர் = மரவேர்
மரம் + யாழ் = மரயாழ்
 
வேற்றுமைக்கண் ஈறுகெட்டு வல்லினம் மிக்கு முடிந்தன. உயிரும், இடையினமும் வர ஈறுகெட்டுப் புணர்ந்தன.
 
வட்டம் + கல் = வட்டக்கல்
வட்டம் + சுனை = வட்டச்சுனை
வட்டம் + தாழி = வட்டத்தாழி
வட்டம் + பாறை = வட்டப்பாறை
 
கமலம் + கண் = கமலக்கண்
 
பவளம் + இதழ் = பவளவிதழ்
பவளம் + வாய் = பவளவாய்
வட்டம் + ஆழி = வட்டவாழி [வ் உடன்படு மெய்]
வட்டம் + வடிவம் = வட்டவடிவம்
 
அல்வழிக்கண் இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் உவமைத் தொகையிலும் ஈறுகெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. உயிரும் இடையினமும் வர ஈறுகெட்டுப் புணர்ந்தன.
 
மகர வீற்றுப்பெயர் முன் இருவழியும் வல்லினம் வர, வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற இன மெல்லெழுத்துத் திரிந்து வரும் இடங்களும் உள்ளன.
 
வேற்றுமை
 
இலவம் + கோடு = இலவங்கோடு
இலவம் + செதிள் = இலவஞ்செதில்
இலவம் + தோல் = இலவந்தோல்
 
அல்வழி
[பண்புத்தெகை, உவமைத்தொகை நீங்கி அல்வழிக்கண் இனமெல்லெழுத்துத் திரிந்து வரும்]
 
மரம் + குறிது = மரங்குறிது
மரம் + சிறிது = மரஞ்சிறிது
மரம் + தீது = மரந்தீது
 
நாம் + கடியம் = நாங்கடியம்
நிலம் + தீ = நிலந்தீ
உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு
உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம்
பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும்
 
இருவழியும் மகர ஈற்றுப் பெயர் முன் பகரம் வரக் கேடும் திரிபும் இன்றி இயல்புமாகும்
 
இளவம் + பூ = இளவம் பூ [வேற்றுமை]
மரம் + பெரிது = மரம் பெரிது [அல்வழி]
 
அல்வழியில் உயிரும், இடையினமும் வர இயல்பாய் புணரும் இடங்களும் உள்ளன.
 
மரம் + அழகியது = மரமழகியது
வடம் + அற்றது = வடமற்றது
மரம் + வலிது = மரம் வலிது
மரம் + யாது = மரம் யாது
வெல்லும் + வில்லி = வெல்லும் வில்லி
ஓடும் + யானை = ஓடும் யானை
அருளும் + யோகி = அருளும் யோகி
  
மேற்றுமைக்கண் மகர வீற்றுப்பெயர் முன் வல்லினம் வர, ஈறுகெட்டு உழழ்ந்துவரும் இடங்களும் சில உள்ளன.
 
குளம் + கரை = குளக்கரை - குளங்கரை
குளம் + சேறு = குளச்சேறு - குளஞ்சேறு
குளம் + தாது = குளத்தாது - குளந்தாது
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.05.2020

samedi 2 mai 2020

கேட்டலும் கிளத்தலும்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 
பெரும் வழக்கு, பெருவழக்கு - இவற்றில் எது சரியா?
மணம் முடிந்தது, மணமுடிந்தது - இவற்றில் எது சரியா?
 
பாவலர் இளமதி, சர்மனி.
 
----------------------------------------------------------------------------------------
 
பெரு என்ற பண்படி, வல்லினத்தின் முன்வரின் இனம் மிகும். [பெருங்கவி, பெருஞ்சால்பு, பெருந்திணை, பெரும்பாடல்]
 
உயிரின் முன்னும் யகரத்தின் முன்னும் முதல் நீளும். [பேராசிரியர், பேர்யானை]
 
மெல்லினத்தின் முன்னும் வகரத்தின் முன்னும் இயல்பாகவே வரும். [பெருநாரை, பெருவிழா]
பெரும்வழக்கு என்பது பிழை, பெருவழக்கு என்பதே சரி.
 
மகர ஈற்றுமொழி முன் மெல்லினம் வர இருவழியும் ஈறுகெட்டு முடியும்.
 
வேற்றுமை
 
மரம் + ஞாண் = மரஞாண்
மரம் + நுால் = மரநுால்
மரம் + மணி = மரமணி
 
அல்வழி
 
வட்டம் + ஞான்றது = வட்டஞான்றது
வட்டம் + நீண்டது = வட்டநீண்டது
வட்டம் + மாண்டது = வட்டமாண்டது
 
மணம் முடிந்தது என்பது பிழை, மணமுடிந்தது என்பதே சரி.
 
மகர ஈற்றுமொழி முன் இடையினம் வர மேற்றுமையில் ஈறுகெட்டு முடியும். அல்வழியில் உறழ்ச்சியுறும்.
 
வேற்றுமை
 
மரம் + யாழ் = மரயாழ்
மரம் + வேர் = மரவேர்
 
அல்வழி
 
வட்டம் + வலை = வட்டவலை [ஈறுகெட்டு முடிந்தது]
மரம் + வலிது = மரம் வலிது [இயல்பாய் முடிந்தது]
மரம் + யாது = மரம்யாது [இயல்பாய் முடிந்தது]
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.05..2020

vendredi 1 mai 2020

நாலடி நொண்டிச் சிந்து


சிந்துப்பா மேடை - 7
 
நாலடி நொண்டிச் சிந்து
 
பெரும்பாலும் நொண்டிச்சிந்து ஈரடிக் கண்ணிகளாக வரும். சிறுபான்மை நாலடிக் கண்ணிகளும், அருகி ஓரடிக் கண்ணிகளும் வருதல் உண்டு.
 
மண்ணுலகை வாட்டுதுயர் ஏன்... - ..?கண்ணா!
வன்கிருமித் துன்பொழிய இன்றெழுவா யே...!
விண்ணுலகைக் காக்குமரு ளே... -..இங்கு
வீழ்நிலையை மாற்றிமனம் ஆழ்ந்திடுவா யே...!
புண்ணுலகைப் பொய்யுலகைத் தான்... -..போக்கிப்
பொன்னுலகை நெஞ்சமுற நன்கருள்வா யே...!
தண்ணுலகைத் தாங்குமெழி லே... -..!மன்னா
தாக்கிவரும் நோயழியக் காப்பருள்வா யே!
 
[பாட்டரசர்]
 
நொண்டிச் சிந்துவின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை - 6 ஆம் பகுதியில் விரிவாகக் கண்டோம். இங்குச் சுருக்கமாகக் காண்போம்.
 
ஓரடிக்கு எட்டுச் சீர்கள் வரவேண்டும். [எண்சீர் அடிகள் நான்கு ஒரெதுகையில் அமைந்தால் நாலடி நெண்டிச்சிந்தாகும்]
 
மேலுள்ள கண்ணியில் 'மண்ணுலகை' என்பது முதல் 'இன்றெழுவாயே' என்பது வரையில் ஓரடி.
 
ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும். [ம-வ] [வி-வீ] [பு-பொ] [த-தா]
 
அடியின் பிற்பாதிகளில் பொழிப்பெதுகை அமைவது இதன் சிறப்பியல்பு [வன்-இன்] [வீழ்-ஆழ்] [பொன்-நன்] [தாக்-காப்]
 
அடியின் ஒவ்வொரு சீரில் நான்கு அசை இருக்கும். [இப்பாடல் நான்மை நடைக்குரியது]
 
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
 
ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீராக வரும் தனிச்சொல் மூவசைச் சீராக வரும். சிறுபான்மை நாலசையும், ஈரசையும், அருகி ஓரசையும் பெறும். இவ்விடங்களில், மூன்றாம் சீரின் ஈற்றசை நீண்டு நான்காம் சீரும் நாலசையைப் பெற்றொலிக்கும்.
 
இயற்பாவின் அசைகள் வேறு. இசைப்பாவின் அசைகள் வேறு. இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டு பாகுபாடுகள் உள்ளன.
 
குறிலசை
 
தனி உயிர்க் குறில் [அ]
உயிர்மெய் குறில் [க]
 
நெடிலசை
 
உயிர்நெடில் [ஆ]
உயிர்மெய் நெடில் [கா]
உயிர்க்குறில் ஒற்று [அல்]
உயிர்மெய்க்குறில் ஒற்று [கல்]
உயிர்நெடில் ஒற்று [ஆல்]
உயிர்மெய் நெடில் ஒற்று [கால்]
 
மேல்லுள்ள பாடலில் ஒவ்வொரு சீரிலும் இசைப்பா அசைகள் நான்கு வந்துள்ளன..
 
[மண்/ணு/ல/கை] [வாட்/டு/து/யர்] [ஏன்/./././ ]- [././கண்/ணா/]
[வன்/கி/ரு/மித்/ [துன்/பொ/ழி/ய] [இன்/றெ/ழு/வா/] [யே/./././]
 
சிலர் முகநுாலில் நொண்டிச்சிந்துவின் சீர்கள் ஒற்று நீக்கி மூன்றெழுத்து வரும் எனப் பிழையாகப் பாடம் உரைத்தனர். இசைப்பாவில் ஒற்றுகள் அளபெடுக்கும் என்பதால் ஒற்று நீக்கி என்று சொல்வது பிழையாகும். நொண்டிச்சிந்துவின் சீர்கள் நான்கு அசைகளைப் பெற்று வரும்.
 
நெஞ்ஞ்சுபெ றுக்குதில்லை யேஎஎஎ எஎ-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்ல்ல்ல்!
அஞ்ஞ்சியஞ் சிஇச்சாஅ வாஅஅஅ அஅர் - இவ[ர்]
அஞ்ஞசாத பொருளில்லை அவனியி லேஎஎஎ!
 
[மகாகவி பாரதியார்]
 
மகாகவியின் பாடலில் பல சீா்களில் ஒற்றுகள் அளபெடுத்து நாலசைகளைச் சீர்கள் பெற்றுள்ளன.
 
பாடும்போது இசை நீளும் இடங்களைப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும்போது இப்புள்ளிகள் இடுவதில்லை. கற்போர் உணரும் பொருட்டு மேலுள்ள பாடலில் அசை நீளும் இடங்களில் புள்ளியிட்டுள்ளேன்.
 
விரும்பிய பொருளில் ' நாலடி நொண்டிச் சிந்து' ஒரு கண்ணி பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
01.05.2020.

மேதினம்


உரிமைத் திருநாள்!
 
மேதினம்!
உழைப்பால் பூத்த
மலர்வனம்!
 
வியர்வை முத்து!
வென்ற
புகழ்ச்சொத்து!
 
பாடுபடும் பாட்டாளி
பட்ட தொல்லை - நீக்கிப்
பழுத்த கொல்லை!
 
இரும்புருக்கு ஆலை
முதலாளியின்
இதயத்தை உருக்கிய நாள்!
 
செங்கொடி!
சூட்டிய திருநாள்! - இன்பம்
மீட்டிய பெருநாள்!
 
தொழிலாளர்
போராட்டம்! - பெற்ற
தேரோட்டம்!
 
உப்பு,
சருக்கரையாய்
இனித்த சுவைநாள்!
 
துயர்விளைத்த
தொழிலகம்!
எழிலகம் ஆனனாள்!
  
வாடிய நெசவாளர்
வலியே நீங்க
வழியே வகுத்தநாள்!
  
ஆளுவார்க்கம்
புரிந்த கொடுமை - ஒழிந்து
பொலிந்த பொதுமை!
 
உழைப்பாளர்
உலகின் முதுகெலும்பு!
உணர்த்திய நன்னாள்!
 
உரிமைக்குரல்
முழங்கிய தோழர் - பெருமை
வழங்கிய வன்னாள்!
 
சுற்றிய மாடெனத் - துயர்
முற்றிய மாந்தர் - நலம்
பற்றிய புகழ்நாள்!
 
வெந்து நொந்த
வேதனை நீங்கி - நலச்
சாதனை தந்தநாள்!
 
கடும்பணியாளர்
வேலி உடைந்தநாள் - நற்
கூலி அடைந்தநாள்!
 
அடிமையென வேலை
ஆற்றும் மக்கள் - வென்று
போற்றும் புவிநாள்!
 
அன்பே தெய்வம்!
உழைப்பே தெய்வம்!
உணர்வாய் மனமே!
 
உண்மை வாழி!
உயர்ந்தோர் வாழி!
உழைப்போர் வாழி!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம் பிரான்சு,
தொல்காப்பியர் கழகம் பிரான்சு.
01.05.2020