mardi 15 octobre 2019

வெண்பா மேடை - 146  


வெண்பா மேடை - 146
 
130 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
 
ஈர்ப்புணர்ந்தேன்! பார்த்துயிர்ப்பின் வேர்ப்புணர்ந்தேன்! சீர்த்தமிழ்ச்சொல்
சேர்ப்புணர்ந்தேன்! தேர்ப்புகழ்த்தென் தீர்ப்புணர்ந்தேன்! - கூர்ப்புணர்ந்தேன்!
ஆர்ப்புணர்ந்தேன்! மெய்ம்மலர்த்தேன் வார்ப்புணர்ந்தேன்! மண்ணுயிர்ப்பாழ்ந்[து]
ஓர்ப்புணர்ந்தேன் மெய்த்தமிழ்ச்சால்[பு] ஊர்ந்து!
 
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் ஐந்து ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 130 எழுத்துக்களைப் பெறும்.
 
விரும்பிய பொருளில் 130 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.10.2019

dimanche 6 octobre 2019

ஆழ்ந்த இரங்கல்


ஆழ்ந்த இரங்கல்
 
அக்கா மலர்ஆதி லட்சுமியார் ஏன்பிரிந்தார்?
சொக்கா! கொடுமை துணிந்தாயே! - எக்காலும்
நின்றுழைத்த நெஞ்சத்தை என்றினிக் காண்பேனோ?
துன்பளித்த கூற்றே..நீ சொல்லு!
 
கம்பன் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து
அதன் உயர்வுக்கு உழைத்திட்ட
பாவலர் ஆதிலட்சுமி வேணுகோபால் அவர்கள்
இன்று மாலை இறைவனடி சேர்ந்தாரெனும் செய்தியை
ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
 
கம்பன் கழகம் பிரான்சு
06.10.2019

கம்பன் காட்டும் அழகியல்


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
 
பகுதி - 2
 
கம்பன் காட்டும் அழகியல்
 
நடையழகு ஓங்கிவரும்!
குடையழகு தாங்கிவரும்!
தொடையழகுக் கம்பனவன் பாட்டு - அது
கொழித்தகனி தேனமுதக் கூட்டு!
 
படையழகு துள்ளிவரும்!
பணியழகு அள்ளியிடும்!
உடையழகு உத்தமனைப் போற்றும் - கம்பன்
உரைத்தகவி சால்புகளைச் சாற்றும்!
 
இடையழகு மின்னிவரும்!
இசையழகு பின்னிவரும்!
அடையழகு ஏந்துசுவை நிற்கும் - அதை
அறிஞரினம் ஆழ்ந்துமனம் கற்கும்!
 
ஊரழகு கண்மேவும்!
உறவழகு பண்மேவும்!
தேரழகு கொண்டதமிழ்க் கூத்து! - நுாலில்
திருராமன் சீர்மணக்கும் பூத்து!
 
நாட்டழகு நற்காட்சி!
நறுந்தமிழின் பொன்மாட்சி!
பாட்டழகு நெஞ்சத்தை அள்ளும்! - சந்தக்
கூட்டழகு மானாகத் துள்ளும்!
 
தோளழகை வில்..காட்டும்!
தொண்டழகைச் சொல்..காட்டும்!
தாளழகைத் தாமரையே ஏற்கும்! - விருத்தத்
தமிழழகை நம்கண்கள் ஈர்க்கும்!
 
வேலழகு... கண்ணழகு!
பாலழகு... பெண்ணழகு!
காலழகுச் சீதையினைக் கண்டு - அன்னம்
கால்..அழகு என்றேங்கும் நின்று!
 
மரகதமோ? மாகடலோ?
மழைமுகிலோ? மாலழகு!
அருளொளியோ? அன்பமுதோ? பாடல் - கம்பன்
அளித்ததமிழ் இன்பத்தின் கூடல்!
 
மூக்கழகுச் சூர்ப்பணகை!
முன்னின்று செய்த..பகை!
நாக்கழகு கம்பனையே தாக்கும்! - அவள்
நடையழகு பாக்கோடி யாக்கும்!
 
அலையழகு நல்லீழம்!
ஆணழகு வல்வீரம்!
கலையழகு மாமன்னன் ஆட்சி! - புகழ்க்
கம்பனவன் காவியமே சாட்சி!
 
காலணியும் ஆண்ட..கதை!
காலத்தை வென்ற..கதை!
மாலணியும் வாலணியும் கூறும்! - இதை
மார்பணியும் மாந்தர்நலம் ஏறும்!
 
ஆழியெனக் கருத்தழகு!
அரங்கனவன் கருத்தழகு!
வாழியெனப் வாழ்த்தியுளம் பூக்கும்! - கம்பன்
வடித்தகவி வண்டமிழைக் காக்கும்!
 
தொடரும்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

vendredi 4 octobre 2019

வெண்பா மேடை - 145


வெண்பா மேடை - 145
 
116 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா!
 
எண்ணுணர்ந்தேன்! இன்னிதழ்த்தேன் தண்ணுணர்ந்தேன்! மெய்ப்புகழ்சேர்
மண்ணுணர்ந்தேன்! செய்ந்நலஞ்சேர் மாண்புணர்ந்தேன்! - விண்ணுணர்ந்தேன்!
சிந்துணர்ந்தேன்! சீர்புணர்ந்தேன்! தென்சுடர்ப்..பாப் பேர்தொடர்ந்தேன்!
செந்தமிழ்த்தாய் செம்மலர்த்தாள் சேர்ந்து!
 
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் நான்கு ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 116 எழுத்துக்களைப் பெறும்.
 
விரும்பிய பொருளில் 116 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.10.2019