samedi 29 août 2020

சிந்துப்பா மேடை - 13

சிந்துப்பா மேடை - 13
  
பல்லவி - 2
  
திரையிசையில் மலர்ந்த சிறப்புடைய பல்லவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்லவியைப் பாடுவோம்.
  
சிலையெடுத் தான்ஒரு சின்ன பெண்ணுக்கு!
கலைகொடுத் தான்அவள் வண்ணக் கண்ணுக்கு!
    
[கவியரசர் கண்ணதாசன், சர்வர் சுந்தரம்]
  
சிலையெடுத்தான், கலைகொடுத்தான் என்று தலையாகு எதுகையைப் பெற்றுள்ளது.
  
தான்ஒரு, தான்அவள் இரண்டாம் சீரும் எதுகை பெற்றது.
  
சின்ன, வண்ண என முன்றாம் சீரும் எதுகை பெற்று ஓசை ஒன்றி வந்தது.
  
பெண்ணுக்கு, கண்ணுக்கு என இயைபு அமைந்தது.
  
[சிலை - சின்ன] [கலை - கண்ணுக்கு] மோனை பெற்றது.
  
பண்கொடி மின்னிடப் பாடிப் படைத்தேன்!
தண்கொடி பின்னிடத் தாடி அடைத்..தேன்!
  
[பாட்டரசர்]
  
விரும்பிய பொருளில் இவ்வாறு ஒரு பல்லவி பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
28.08.2020

சிந்துப்பா மேடை - 12

சிந்துப்பா மேடை - 12
  
பல்லவி
  
திரையிசையில் மலர்ந்த சிறப்புடைய பல்லவியை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல்லவியைப் பாடுவோம்.
  
தரைமேல் பிறக்க வைத்தான். - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான் ...
கரைமேல் இருக்க வைத்தான். - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான் ...
  
[கவிஞர் வாலி, படகோட்டி]
  
மேலுள்ள பல்லவிபோல் திரையிசையில் மிக மிக அரிதாகவே பல்லவிகள் மலர்ந்துள்ளன.
  
தரைமேல் முதல் பிழைக்க வைத்தான் வரை ஓரடி. கரைமேல் முதல் குளிக்க வைத்தான் வரை மற்றோரடி. தரைமேல் கரைமேல் எனத் தலையாகு எதுகை பெற்று வந்தது.
  
ஒவ்வோர் அடியும் ஐந்தாம் சீர் மேனை பெற்றுள்ளது [தரை, தண்ணீர்] - [கரை,கண்ணீர்]
  
ஒவ்வோர் அரையடியும் வைத்தான் என்று இயைபு பெற்றது.
  
இரண்டடியிலும் ஐந்தாம் சீர்கள் தலையாகு எதுகையைப் பெற்றுள்ளன. [தண்ணீரில் கண்ணீரில்]
  
நான்கு அரையடிகளிலும் இரண்டாம் சீர்கள் ஓசையால் இயைபுபோல் ஒன்றுகின்றன.[ பிறக்க, பிழைக்க, இருக்க, குளிக்க]
    
தனிச்சொல்கள் ஐகாரம் பெற்று ஓசையால் ஒன்றிவந்தன [எங்களை, பெண்களை]  
  
கண்களைக் காட்டு கின்றாள் - மோதல்
கத்தியைத் தீட்டு கின்றாள்!
பண்களை மீட்டு கின்றாள் - காதல்
பக்தியைக் கூட்டு கின்றாள்!
  
வாட்டிடும் அன்ன நடையாள் - இன்பம்
வடித்திடும் சின்ன இடையாள்!
மூட்டிடும் பின்ன லுடையாள் - துன்பம்
முடித்திடும் கன்ன லடையாள்!
  
[பாட்டரசர்]
  
விரும்பிய பொருளில் இவ்வாறு ஒரு பல்லவி பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.08.2020

இரட்டித்து வந்த இலாவணி


சிந்துப்பா மேடை - 11
                                             
இரட்டித்து வந்த இலாவணி

1.
பொய்யுரையை வீசிடுவான்! நெய்யொழுகப் பேசிடுவான்!
பூவையுடன் கொண்டிடுவான் கூட்டு கூட்டு...!
பொன்னுடையை நாடிடுவான்! மின்னகையைச் சூடிடுவான்!
போலியுருச் சாமிகளை ஓட்டு ஓட்டு...!
மெய்யுரையை மூடிடுவான்! மொய்யுணர்வில் கூடிடுவான்!
மேடைகளில் பாடிடுவான் பாட்டு பாட்டு...!
வீடுகளை வாங்கிடுவான்! கேடுகளில் ஓங்கிடுவான்!
வேசர்களைக் கம்பியெண்ணப் பூட்டு பூட்டு!

2.
கூத்திடுவான் பத்தியென! பூத்திடுவான் முத்தியென!
கோடிகளைச் சேர்ப்பவனா ஞானி ஞானி...?
கொஞ்சுகின்ற காமவெறி விஞ்சுகின்ற துன்துறவி
கொண்டவுளம்  நாறுகின்ற சாணி சாணி...!
காத்திடுவான் பொய்யெனவே! ஆற்றிடுவான் தொண்டெனவே!
கள்ளமிடும் தாடிகளா சாமி சாமி...?
கன்னியரின் பித்தர்களைப் புண்ணியராய்ப் போற்றுவதோ?
கடல்பொங்கி அழியட்டும் பூமி பூமி...!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

இலாவணியின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை 9 ஆம் பகுதியில் கண்டோம். இலாவணியின் ஓரடி 8 சீர்களைப் பெற்றுவரும். அவ்வடி இரட்டித்து 16 சீர்களைப் பெற்று வருவதுண்டு.

மேலுள்ள இலாவணி முதல் கண்ணி 'பொய்யுரையை' என்பது முதல் 'ஓட்டு' என்பது வரையில் ஓரடி.  ஒவ்வொரு அரையடியும் பொழிப்பெதுகைப் பெற்றுள்ளது [பொய் - நெய்] [பொன் - மின்] [மெய் - மொய்] [விடு - கேடு]

ஒவ்வொரு அரையடியின் முடிவும் அடுக்குத்தொடராக இயைபினைப் பெற்றுள்ளது. [கூட்டு கூட்டு, ஓட்டு ஓட்டு, பாட்டு பாட்டு, பூட்டு பூட்டு]

இரண்டு அரையடிகள் ஓர் இயைபையும், அடுத்த இரண்டு அரையடிகள் மற்றோர் இயைபையும் பெற்று வருவதுண்டு. மேலுள்ள இரண்டாம் கண்ணி இதற்குச் சான்றாகும்.

இவ்வாறு16 சீர்களைப் பெற்று வந்த இரண்டு அடிகள் ஓரெதுகையில் அமைவது இரட்டித்த இலாவணியில் ஒரு கண்ணியாகும். [பொய்யுரையை - மெய்யுரையை]

விரும்பிய பொருளில் ' இரட்டித்து வந்த இலாவணி' யில் ஒரு கண்ணி பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
27.05.2020.

விருத்த மேடை - 41 

விருத்த மேடை - 41
  
எழுசீர் விருத்தம் - 4
வெண்டளையால் அமைந்து
  
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
   வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
   சங்கிழக் கும்வழக் குண்டே,
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
   பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னியெப் போது மிருந்து விரைந்தென்
   பவளவா யன்வரக் கூவாய்!
  
[ஆண்டாள், நாச்சியார் திருமொழி - 51]
    
மிடிமையில் அழிந்திடேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
வறுமை வளர்ந்து வதைத்த பொழுதும்
   வழியை மதியால் வடிப்பாய்!
சிறுமை மனத்தோர் சிரித்த பொழுதும்
   செயல்களை நன்றே முடிப்பாய்!
பொறுமைக் குணமும் புதுமை மனமும்
   புனைந்து புகழைப் படைப்பாய்!
வெறுமை யகற்றி நறுமை புதுக்கி
   வினைகளை வென்று நடப்பாய்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த எழுசீர் விருத்தம் இயற்சீர் வெண்டளையால் அமைந்துள்ளது. தேமாங்காயும் புளிமாங்காயும் அருகி வரும். ஆண்டாள் பாடலில் [குருக்கத்தி - புளிமாங்காய் வந்துள்ளது] நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராக அமையும். அடியின் ஈற்றிலிருந்து அடுத்த அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. நேரசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கினால் 21 எழுத்துக்களும் பெற்றுவரும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
22.08.2020

விருத்த மேடை - 40   



விருத்த மேடை - 40
  
எழுசீர் விருத்தம் - 3
  
மா + மா + மா + மா
மா + மா + மா
  
கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
   கமழ்பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளைவா யுகிரிற் கிள்ளித்
   திலகந் திகழப் பொறித்துத்
தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
   திருநீர் நுதலின் னப்பி
உள்ளம் பருகி மதா்த்த வாட்கண்
   உருவம் மையிற் புனைந்தாள்
  
[சீவக சிந்தாமணி, இலக்கணையாரிலம்பகம் - 62]
  
மானம் போற்று! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
   உடலைக் காக்கும்! நம்மின்
கண்ணும் கையும் கருணை கமழக்
   கவலை போக்கும்! சிந்தை
எண்ணும் எண்ணம் ஏந்தும் மானம்
   இன்பம் பூக்கும்! அமுதப்
பண்ணும் பாட்டும் பகரும் தமிழே
   பண்பைச் சேர்க்கும்! தோழா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுமாச்சீர்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.08.2020

vendredi 28 août 2020

விருத்த மேடை - 39

விருத்த மேடை - 39
  
எழுசீர் விருத்தம் - 2
  
விளம் + விளம்+ விளம் + மா
விளம் + விளம் + மா
  
சீரணி திகழ்திரு மார்பில்வெண் ணுாலர்
   திரிபுரம் எரிசெய்த செல்வர்!
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்!
   மான்மறி ஏந்திய மைந்தர்!
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல்
   கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
   பாம்புர நன்னக ராரே!
  
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 437]
  
போர்த்தொழில் பழகு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
பாரெழில் காத்திடப் படையெழில் போற்று!
   பாரதி பாக்களைச் சாற்று!
பேரெழில் நம்மொழி! பிறப்பெழில் ஓது!
   பெருந்தமிழ் மொழிக்கிணை யேது?
காரெழில் பொழிலெனக் கவியெழில் ஓங்கும்!
   கல்வியே கண்ணெழில் தாங்கும்!
சீரெழில் பூத்திடும் போர்த்தொழில் காப்பு!
   திண்ணுரம் செழித்திடும் தோப்பு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + விளம் + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு. [மேலுள்ள விருத்தத்தில் மார்பில்வெண், எரிசெய்த என மாங்காய்ச்சீர்கள் வந்தன]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
          
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.08.2020

விருத்த மேடை - 38

விருத்த மேடை - 38
  
எழுசீர் விருத்தம் - 1
  
விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா
  
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
   ஆயஎம் மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
   இடவெந்தை யெந்தை பிரானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
   மானவேல் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
   பழவினை பற்றறுப் பாரே!
  
[பெரிய திருமொழி 2-8-10. திருமங்கையாழ்வார்]
  
பெரிதினும் பெரிதுகேள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
ஓங்கிய வண்ணம் உயர்வுறும் எண்ணம்
   உனக்கிணை யிலையெனும் வாழ்வு!
தாங்கிய கொள்கை தரணியை யாளத்
   தனிப்பெரும் புகழொளிர் மாட்சி!
வீங்கிய மறமும் விரிகதிர் அறமும்
   விளைந்திட வெற்றிமேல் வெற்றி!
ஏங்கிய நிலையேன்? என்னுயிர்த் தோழா!
   ஏறிடும் படிநிலை காண்க!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + மா + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.07.2020

வெண்பா மேடை - 186


வெண்பா மேடை - 186
  
திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து!
  
[ஈசுவரமுனிவர் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்]
  
ஆசை அலைபாயும்! அல்லல் நிறைந்தாடும்!
ஓசை குறுகி உயிர்வாடும்! - வேசையுறும்!
மந்தியாய்த் துள்ளும்! மதிசாயும்! ஏனென்று
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
28.08.2020

வெண்பா மேடை - 185



  
எங்கள் கதியே! இராமா னுசமுனியே!
சங்கைகெடுத் தாண்ட தவராசா! - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையா யிரமனைத்தும்
தங்குமனம் நீயெனக்குத் தா!
  
[எம்பார் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்]
  
அருட்சுடரே! எங்கள் அருளமுதே! பாடும்
பொருட்சுடரே ஓங்கப் புனைவாய்! - பெருஞ்சுடரே
பொங்குமனம் பூக்கப் புகழ்தருவாய்! சன்மார்க்கம்
தங்குமனம் நீயெனக்குத் தா!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தங்குமனம் நீயெனக்குத் தா " ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
20.08.2020

வெண்பா மேடை - 184




வெண்பா மேடை - 184
  
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்[று]
ஈண்டிய சங்கம் எடுத்துாத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று!
  
[பெரியாழ்வார் திருமொழி தனியன்]
  
பாழ்பட்டுப் போகாமல் பண்பட்டு வாழ்ந்திடவும்,
ஆழ்பட்டுச் செந்தமிழை ஆண்டிடவும், - ஊழ்பட்டுப்
பேதங்கள் நீங்கிடவும், பேறளித்த பேராளன்
பாதங்கள் யாமுடைய பற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"பாதங்கள் யாமுடைய பற்று" ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.08.2020

வெண்பா மேடை - 183

வெண்பா மேடை - 183

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி! 
  
[சரசுவதி அந்தாதி]
  
வெல்லும் விழியுடையாள்! வெள்ளை யுளமுடையாள்!
சொல்லும் சுவையுடையாள்! தொன்மொழியாள்! - மல்லிகையாள்!
செல்லுமிடம் சீருடையாள்! செந்தமிழாள்! என்..மனக்
கல்லும்சொல் லாதோ கவி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"கல்லும்சொல் லாதோ கவி" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
07.08.2020

வெண்பா மேடை - 182

வெண்பா மேடை - 182
  
ஓங்க லிடைவந்[து] உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்[து] இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோ் தனியாழி வெங்கதிரொன்[று] ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
  
[தண்டியலங்கார வுரைமேற்கோள்]
  
எங்கும் பரவி எழில்மணக்கும்! எந்நாளும்
பொங்கும் புகழ்மணக்கும்! பூமணக்கும்! - சங்கமருள்
பொன்னேர் சுவடிகள் போற்றும் நெறிமணக்கும்!
தன்னேர் இலாத தமிழ்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"தன்னேர் இலாத தமிழ்" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.08.2020

வெண்பா மேடை - 181

வெண்பா மேடை - 181
  
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமவை
நாலுங் கந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து துாமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
  
[ஓளவையார், நல்வழி]
  
தோப்பழகும், துாய சுனையழகும், மாமலைபோல்
காப்பழகும், காலைக் கதிரழகும், - பூப்பழகும்,
தங்கப் பொலிவழகும் சார்ந்தெழுத என்..குருவே!
சங்கத் தமிழ்மூன்றுந் தா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
"சங்கத் தமிழ்மூன்றுந் தா" என ஈற்றடி அமையும் வண்ணம் நேரிசை வெண்பா ஒன்று பாடுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
24.07.2020