dimanche 30 septembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 3]

நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள் 

வணக்கம்!
 
மல்லன் அளித்த மணிக்கவிதை என்னெஞ்சை
அல்லும் அழகை அளித்ததுவே! - வெல்லெமெனச்
சொல்லும் சுவையைச் சுரக்கின்ற செந்தமிழைச்
செல்லும் வழியெலாம் செம்பு!

16.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சின்னச் சின்னச் சிதறல்கள்
            செந்தேன் மழையைப் பொழிந்தனவே!
என்ன என்னக் கற்பனைகள்
            எண்ண எண்ணச் சுவைபெருகும்!
பின்னப் பின்னச் சரமாகும்
            பீடாய் அகிலா கவிகண்டேன்
தன்ன தான தானதன
            தமிழே மகிழ்ந்து விளையாடு!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பெண்ணின் பார்வை வரமன்றோ!
      பேசும் விழிகள் பேறன்றோ!
கண்ணின் கணைகள் பட்டவுடன்
      கன்னல் கவிஞன் உயிர்பெறுவான்!
மண்ணின் செல்வம் அத்தனையும்
      மங்கை அழகுக் கீடாமோ?
விண்ணின் மழைபோல் கவிபாடும்
      கவிஞா் விச்சு விஞ்சுகவே!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தனிமரம் என்றே எண்ணித்
            தவித்திடும் நெஞ்சே கேளாய்!
கனிமரம் அன்றோ உன்றன்
            கவிமணம் பூக்கள்! தோழா
இன்மரம் செடிஎன் றெண்ணி
            ஏங்கிட வேண்டாம்! காலைப்
பனிமரம் போன்றே வண்ணப்
            பறவைகள் பாட வாழக!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பக்கைக் கூண்டு பார்த்ததுண்டு!
      பொக்கை வாயைப் புகழ்ந்துண்டு!
சுக்கைக் காய்ச்சிக் குடித்ததுண்டு!
      சுவைத்தேன் கதைகள் படித்ததுண்டு!
தக்கைச் செயல்கள் புரிபவரைத்
      தடுத்துத் திருந்த வைத்ததுண்டு!
அக்கை என்று சிலபேரை
      அன்பாய் அழைத்து மகிழ்ந்ததுண்டு!
கொக்கைக் கண்டு! குயில்கண்டு
      கோலக் கவிதை படைத்ததுண்டு!
சக்கை யாக என்னுயிரைச்
      சரியாய்ப் பிழிந்த பெண்ணுண்டு!
எக்..கை என்னை எதிர்த்தாலும்
      எலும்பை முறித்து எறிந்ததுண்டு!
மெக்கைப் பதிவா? தமிழ்பூக்கும்
      மொக்கை நிகா்த்த படைப்பன்றோ!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சிட்டுக் குருவி தான்என்று
      சிரித்த வண்ணம் உள்வந்தேன்!
கட்டுக் கட்டாய்ச் சரவெடிகள்
      காக்கும் வலையின் திறம்கண்டேன்!
முட்டும் பகையைத் துாளாக்கி
      முன்னைத் தமிழா முன்னேறு!
விட்டுப் போக மனமின்றி
      விரும்பி விருத்தம் படைக்கின்றேன்!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இருளை அகற்றிச் சிறுவொளியை
      இதயம் பெற்றால் துயரோது?
மருளை அகற்றும் மதியொளியை
      வார்க்கும் துாயோன் திருவடியே!
அருளைப் போற்று! அகமொளிரும்!
      அன்பை ஊட்டு! இறைத்தொண்டு!
உருளை போன்று பிறவிவரும்!
      உயர மலிக்கா தமிழ்காண்க!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இயன்றதைச் செய்வோம்! என்றே
            எழுதிய சொற்கள் கண்டேன்!
உயா்ந்ததைச் செய்யும் மோகன்
            உருவினில் மாற்றம் ஏனோ?
பயந்ததை நோக்கும் பார்வை
            பசுந்தமிழ் வாழ்வில் உண்டோ?
நயந்ததை எண்ணிப் பாராய்!
            நறுந்தமிழ் நம்மின் வாழ்வு!
20.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழ்வண்ண நற்றிரட்டைச் சற்றேநான் பார்த்தேன்!
உமியென நம்பகையை ஊதுகின்ற பக்கங்கள்!
ஈழ நிலமெங்கும் வீரவிதை! மீண்டும்நாம்
சூழ எழுவோம் சுடா்ந்து

20.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அழகிய மரணம் என்றே
      அளித்துள கவிதை கண்டேன்!
பழகிய நாளாய் நானும்
      பார்த்திடா அடிகள்! தேனில்
முழுகிய தமிழை உண்டு
      முணுங்கிடும் விருத்தம்! சீா்கள்
விழுமிய வலையைக் கட்டும்
      நெற்கொழு தாசன் வெல்க!

20.09.2012

4 commentaires:

  1. நல்ல தொகுப்பு ஐயா...

    படிக்கும் போதே அந்த தளம் கண் முன்னே வருகிறது... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படிக்கும் பொழுதே படைத்தவலை கண்டீா்!
      வடிக்கும் வகையை வகுத்து!

      Supprimer

  2. தேடி படித்துத் திளைத்துள்ளம் தேன்கவிகள்
    பாடிப் படைக்கின்ற பாவலனே! - ஓடி
    வருகின்றேன்! உன்றன் வளா்தமிழை உணடு
    தருகின்றேன் வெண்பா தமிழ்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னும் வலைகளில் மீட்டிய பாக்களைப்
      பின்னும் படித்துப் பெருமையற! - என்வலையில்
      கொட்டிப் பரபு்புகிறேன்! தட்டி வரவேற்பீா்!
      ஒட்டி உறவாடி ஓது!

      Supprimer