dimanche 31 mars 2013

மொழியும் நாடும்


மொழியும் நாடும்

ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்நாட்டின் மொழியை அழித்துவிடு, பின்னே அந்நாடு தானாகவே அழிந்துவிடும் என்றார் அறிஞா் ஒருவா். ஒரு நாட்டின் மொழியை அழித்து விட்டால் அந்நாடு அழிந்து விடுமா? என்ற ஐயம் சிலருக்கு எழலாம். மொழிக்கும் நாட்டிற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியைக் கூடச் சிலர் கேட்கலாம்.

   நாட்டில் மொழி வளர்ச்சி அடையவில்லையெனில், அந்நாட்டில் மற்றத் துறைகள் வளருதல் இயலா, மொழியின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்பதைச் சிந்தித்து உணருதல் வேண்டும். மொழியைக் காத்தும், வளர்த்தும் வருகின்ற நாடுகள் உலகில் வல்லரசாகத் திகழ்வதைக் காண்க. அரசு பணியகத்தில் பிரஞ்சு மொழியுடன் பிற மொழி கலந்து எழுதுதல் குற்றமெனப் பிரஞ்சு அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. சப்பான் நாடு தன் மொழியின் வழியாகவே வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளது.

   தாய் மொழியைக் காக்காதவர்கள் அவர்கள்தம் பண்பாட்டையும், கலைகளையும், முன்னோர்கள் பாடுபட்டீட்டிய அறிவுச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள். நாம் யார்? என்பதை மொழியின் வழியாகவே அறியப்படும்.

   தாய்மொழி வழியாகச் சிந்திக்காத எவனும் அறிவியலிலோ பிற கலை இயல்களிலோ மேம்பட்டு விட்டதாகவும் பயன் விளைத்து விட்டதாகவும் வரலாறு இல்லை என்று மொழியறிஞர் . அருளி கூறியுள்ளார்.

   ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுத் தமிழர் பட்ட தொல்லைகளைவிட, ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டுத் தமிழ் இளைஞர் படும் தொல்லைகள் மிகுதியாக உள்ளன. இதற்குக் காரணம் ஆங்கிலேயர் அல்ல, ஆங்கிலமும் அல்ல, தமிழ்ப் பற்று இல்லாத தமிழர்க்கு உள்ள ஆங்கில மோகமே கரணமாகும்.

   ஆங்கிலம் மற்றவர்களுக்குப் பயன் தரும் கருவியாக உள்ளது. தமிழர்க்கோ தடைப்படுத்தும் கருவியாக உள்ளது. மற்றவர்கள் அரைக் குறையாகவே அதைக் கற்று உலக மதிப்பைப் பெற்று உயர்ந்து வாழ்கின்றனர். தமிழரோ அதை ஆங்கிலேயரைப் போலவே பேசவும் எழுதவும் பாடுபட்டு முழுவதும் கற்று முயன்று தோல்வியுற்றுச் சீரழிகின்றனர்.

செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான். செய்யத் தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். செய்ய வேண்டிய கடமையாகும் தாய் மொழியைக் காப்பது.

   மொழியின் உயிர் புலவரிடம் இல்லை, பொது மக்களின் உள்ளத்தில்தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குமே அந்த மொழிதான் மக்கள் மொழியாக விளங்கும். நேற்றுத் தோன்றிய கொச்சை மொழியாக இருந்தாலும் அரசியல் மொழியானால், அது ஓங்கி வாழ முடியும். உலகம் தோன்றிய நாளில் தோன்றிய பண்பட்ட மொழியாக இருந்தாலும் அரசியல் மொழியாக விளங்கவில்லையானால் வாழ வழி இல்லை.

   ஆகவே தமிழ் நாட்டின் ஆட்சி தமிழில் நடைபெற்றால்தான் தமிழர் தமிழைக் கற்றுப் போற்றுவார்கள்.

வேறு வேறு பாசைகள் கற்பாய் - நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ! போ! போ!

   தாய்மொழியைக் கற்காமல் மற்ற மொழிகளைக் கற்பவனே போ! போ! போ! என்று பாடிய பாரதியின் முழக்கத்தை உணர்வீர்!

   தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்றுமொழிக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் இல்லையெனக் கூறலாம்!

   காக்கா, குயில், சேவல்,,, இவை ஒவ்வொன்றும் தன் குரலிலேயே கத்தும். காக்கா குயில் போல் கூவாது. சேவல் காக்கா போல் கரையாது. ஆனால் தமிழன் மட்டும் தன் மொழியில் பேசுவதை விடப் பிறமொழியில் பேசுவதை விரும்புகின்றான். அயல்மொழி மேல் அடிமையாய்க் கிடக்கின்றான்.

   இரண்டு ஆங்கிலயர்கள் சந்தித்தால் ஆங்கிலத் தில்தான் பேசுவார்கள். இரண்டு சப்பானியர் சந்தித்தால் சப்பான் மொழில்தான் பேசுவார்கள். ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அயல்மொழில்தான் பேசுவார்கள்.

   தாய்மொழிப் பற்றில்லாத இடத்தில் முன்னேற்ற முயற்சி எங்ஙனம் உருக்கொள்ளும். முன்னேற்றத்திற்கு உயிர் தாய்மொழி அன்றோ. அதன் மீது கவலை செலுத்தாதிருப்பின் நாட்டின் கவலை எவ்வாறு நீங்கும். தாய்மொழி வளராத நாடு ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய்மொழியை ஓம்பும் முயற்சியே. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்த வேண்டுமெனத் தமிழ்த்தென்றல் திரு.வி.. இடித்துரைத்தும் தமிழர் மாறியதாகத் தெரியவில்லை.

   பல நூற்றாண்டுகளாய் இசையைக் கூடத் தமிழன் வேற்றுமொழி வழியாகவே அனுபவித்து வந்தான். பாடுகின்ற பாட்டின் பொருள் தெரியாமலேயே தலையை ஆட்டித் தாளம் போடுதல் சரியோ? 'நமக்குத் தெரியாத மொழியில் இசையை அனுபவிக்க எண்ணுவது மனைவியிடம் வக்கில் வைத்துப் பேசுவதற்கு ஒப்பாகும் என்றார் கவிஞர் தாகூர்'.

   பிள்ளைகளுக்குப் பல மொழி கற்றுக் கொடுக்கலாம். அது தவறல்ல. தாய்மொழியைக் கற்றுக் கொடுக்காமல் இருப்பதே பெரும் தவறாகும். நம்முடைய பிள்ளைகளுக்குத் தமிழில் பேசவும் எழுதவும் தெரியவில்லை என்றால், பிற்காலத்தில் அவர்கள் யார்? எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்வி எழும்.

   முன்பு இல்மொரீசுக்குச் சென்ற தமிழர்கள் தம்மின் தாய்மொழியைக் காக்க மறந்ததனால், இன்று அவர்கள் யார் என்று அறிய முடியாமல், புதிய கலப்பு இனமாக வாழ்கின்றார்கள். நாங்கள் தமிழர்கள் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. நாங்கள் பிரஞ்சுகாரர்கள் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. நாங்கள் இல்மொரீசர்கள் என்று அவர்களால் சொல்ல முடிய வில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் வாழ்கின்றனர். பிரஞ்சு நாட்டில் வாழும் நம்முடைய பிள்ளைகளுக்கு இந்நிலை வராமல் காத்தல் நம்முடைய முதல் கடமையாகும்.
  
   பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தால், பள்ளியில் பிரஞ்சுமொழியைச் சரியாகப் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் இந்தியத் தமிழர்களிடத்தில் உள்ளது. இவ்வெண்ணம் அறியாமையால் உண்டானதாகும். இளம் வயதில் பல மொழிகளைக் கற்பது எளிதாகும். தாய்மொழி வழியாக அயல்மொழியை விரைவில் கற்க முடியும். பிரஞ்சு மொழியைப் படிக்கும் நம் பிள்ளைகள் ஆங்கில மொழியைக் கற்க வில்லையா? சர்மனி மொழியைக் கற்க வில்லையா? பல மொழிகளைக் கற்பதினால், பிரஞ்சு மொழியறிவில் நம் பிள்ளைகள் குறைந்து விட்டார்களா? சிந்திப்பீர்!          

                 உலகில் தோன்றி மொழிகளிலே மிகவும் இனிமையுடையதும், இன்பம் படைப்பதும் தமிழேயாகும். தமிழ்ப் புலவர்களும், தமிழ்ச் சான்றோர்களும் தமிழ் மொழியை உயிராக எண்ணிப் போற்றுவதின் காரணம் என்ன? உடலில் உயிர் இருக்கின்ற வரை இவ்வுடல் இயங்குகிறது. உயிர் பிரிந்துவிட்டால் இயக்கம் நின்றுவிடுகிறது. இச்செயல்போல் ஓர் இனத்தின் மொழி இருக்கின்ற வரைதான் அவ்வினம் இருக்கும் இனத்தின் மொழி அழிந்துவிட்டால்  இனமும் அழிந்துவிடும் என்பதை உணருதல் வேண்டும்.

    நண்பர் ஒருவர் பிரான்சில் வளரும் பிள்ளைகளுக்கு ஏன் தமிழ் கற்றுத் தர வேண்டும். அவர்கள் பிரஞ்சு மொழி மட்டும் படித்தால் போதுமே என்று என்னிடம் வாதாடினார். நிறைய விளக்கங்களை யான் எடுத்துச் சொல்லியும் நண்பரின் உள்மனம் யான் சொல்லிய கருத்தை ஏற்றுக்கொண்டாலும் வெளியே ஒப்புக்கு மறுத்தே பேசினார்.

   நண்பரின் பிள்ளைகளுக்குத் தமிழில் பேசவோ, எழுதவோ தெரியாதாம். நண்பர், தம் பிள்ளைகள் குழந்தையாக இருக்கும் போதே தமிழில் பேசக் கூடாதென்று வீட்டில் சட்டம் போட்டாராம். குழந்தைகள் தெரியாமல் தமிழில் பேசினால் நண்பரும் அவரின் மனைவியும் குழந்தைகளை அடிப்பார்களாம்.

   உலகிலேயே தாய்மொழியைப் பேச வேண்டாம் என்று சொல்லுகின்ற இழிநிலை தமிழினத்திலே இப்பொழுது காணப்படுகிறது. பிள்ளைகளைத் தமிழ் பேசாமல் செய்ததும், அடித்ததும் நண்பர் அறியாமல் செய்த தவறாகும். நன்கு சிந்திக்காமல், மொழி வரலாற்றை அறியாமல் செய்த தவறாகும்.

   நண்பரின் பிள்ளைகள் நன்றாகப் பிரஞ்சு பேசுகின்றனர். ஆனால் அவர்கள் தாய் நாட்டிற்குச் சென்றால் அங்குள்ள உறவினரிடம் பேச முடியாமல் தவிக்கின்றனர். பெற்றோர்கள் இந்நிலையை எண்ணுதல் வேண்டும்.

   இருபது ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்கின்ற தமிழர்தம் பிள்ளைகள் பிரஞ்சு மொழியொடு ஐரோப்பிய மொழிகள் சிலவற்றை நன்றாகப் பேசுவதையும் எழுதுவதையும் காண்கிறேன்.

   பிரஞ்சு மொழியொடு ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக் கொண்ட தமிழ்ப்பிள்ளைகள் தாய் மொழியாகிய தமிழைக் கற்றால் அறிவில் குன்றிவிடுவார்கள் என்று எண்ணுவது சரியோ? 'ஒரு மொழி கற்றவன் ஒரு மனிதன், இரண்டு மொழி கற்றவன் இரண்டு மனிதருக்குச் சமமாவான் என்ற முழுமொழியை உணர்க'.

   முன்பு உலகெங்கும் அகதியாக வாழ்ந்த யூதர்கள், இன்று செல்வச் செழிப்போடு வாழ்கின்றனர். இதற்குக் காரணமாக யான் எண்ணுவது யூதர்தம் தாய்மொழிப் பற்றும், தாய் மொழி வழியாகக் கற்கும் கல்வியுமே.

   பிரஞ்சு நாட்டில் தொழில் துறையில் சிறந்து விளங்கும் யூதர்கள், தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் தாய்மொழி வழியாகவே கல்வி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.           

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்  - பாவேந்தர்
                   
   தமிழ் நாட்டில், கற்றவரிடத்திலும், கல்லாதார் நெஞ்சிலும், ஏழை நினைவிலும், செல்வர் கனவிலும் அயல்மொழியைக் கற்றால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் வளந்தோங்கியுள்ளது. அன்றாடம் கூலி வேலை செய்யும் நபர் கூடத் தன் பிள்ளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். மேடைகளில் தமிழ்... தமிழ் என்று முழக்கமிடும் தமிழன்பர் பலர் தங்கள்  பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியிலேயே படிக்க வைக்கின்றனர்.

   ஆங்கிலம் படித்தால் அமெரிக்கா செல்லலாம் என்ற ஆசை தமிழர்தம் உள்ளத்துள் ஓங்கி வளர்ந்துள்ளது. ஆங்கிலப் பள்ளியில் படிக்கின்ற அனைவருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைப்பதில்லை. அயல் நாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கிறது. இந்நிலையை உணராமல் தமிழர்கள் ஆங்கில வழிக் கல்வியை நாடுதலும் தாய்மொழி கல்வியை வெறுத்தலும் அழிவை நோக்கிச் செல்வதாகும்.

   இந்திய அரசு தமிழ் நாட்டில் இந்தியைப் புகுத்தியபோது, அதனை எதிர்த்துத் தமிழ் நாடே போராடிய வரலாற்றை அனைவரும் அறிவர். ஏன் இந்தியை எதிர்த்தோம்? இந்தி மொழியால் தமிழ்மொழி குலையும், பின்னே இனம் அழியும். ஆங்கிலத்தாலும் இந்நிலை விளையும் என்பதைத் தமிழர்கள் உணராமல் வாழ்கின்றனர்;.
 
   இதுவரை தன்னை அழிக்க வந்த வேற்று மொழிகளை எதிர்த்து நின்று தமிழ்மொழி தன் மேன்மையை நிலைநிறுத்தியுள்ளது. இக்கருத்தை அறிஞர்  கால்டுவெல் அவர்கள் தம் நூலில் கூறுவதைக் காண்க. 'இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக, மிகப் பெரிய இனத்தவரும், ஆற்றலும், நன்கு மதிக்கப்படுபவரும், வழிபாட்டிற்கு உரியவருமான ஆரிய மக்களின் சமற்கிருத மொழியை எதிர்த்து நின்று தன் ஆட்சியை நிலை நாட்டி வந்துள்ள திராவிட மொழிகள் தம் இடத்தைப் பற்றவரும் வேறு எம்மொழி முயற்சியையும் இனிவரும் காலங்களில் எதிர்த்து அழித்துவிடும்'. இன்று அயல்மொழி மோகத்தால் தமிழனே தமிழ்மொழிக்கு எதிராகச் செயல்படுகின்றான். தன்னினத்திற்கு வரப்போகும் தீதை எண்ணாமல் வாழ்கின்றான்.

   செல்வத்தை நாடி அயல் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய் மொழியாகிய தமிழைக் கற்றுத் தரவில்லையெனில் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். மொழியையும் பண்பாட்டையும் காக்க மறந்தோர் அழிந்தனர் என்பதைக் காலம் காட்டுகிறது.
 
   உலகில் சப்பானியர்தம் மொழிப்பற்றும், யூதர்தம் மொழிப்பற்றும் போற்றுதற்குரியது. சப்பானியர்கள் அவர்கள் தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைகளையும் நடத்துகின்றனர். உலகெங்கும் தொழில் தொடர்பைச் சப்பானியர் கொண்டிருந்தாலும் அயல் மொழிக் கல்வியை அவர்கள் விரும்புவதில்லை.

   உலகப் போர்களினால் பொருளாதார நலிவடைந்த நிப்பான் நாடு இன்று உலகத்தில் முன்னேறிய நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இம் முன்னேற்றத்திற்கு நிப்பானியர்களின் நாட்டுப் பற்றையும், தாய்மொழி வழிக் கல்வியையும் குறிப்பிடாமல் இருப்பதில்லை. நிப்பானின் அறிவியல் வளர்ச்சிக்கும், நுட்ப மேம்பாட்டுக்கும், தாய்மொழி வழிக் கல்வியே முக்கிய காரணம் எனலாம் கலைக்கல்வி, அறிவியல் கல்வி, தொழிற்கல்வி ஆகியவை நிப்பானில் நிப்பானிய மொழியிலேயே நடைபெறுகின்றன.

   பிரஞ்சு நாட்டில் வாழ்கின்ற தமிழர் சிலர், தங்கள் தாய்மொழி தமிழ் என்பதைச் சொல்ல விரும்பாமல் வாழ்வதைக் காண்கிறேன். அவர்களையெல்லாம் மனிதராக எண்ணுவதற்கில்லை, 

   நான் தமிழன், என் மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வதிலே யான் பெருமை அடைகின்றேன். இன்பம் அடைகின்றேன்.


samedi 30 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 68]



காதல் ஆயிரம் [பகுதி - 68]


671.
மெல்லக் கதைபேசி மேனி சிளித்திடவே
செல்லக் கதைபேசிச் செல்வதுமேன்? - உள்ளத்தை
அள்ளிக் கதைபேசி ஆருயிரே! ஆசைகளைத்
துள்ளிக் கதைபேசி தூண்டு!

672.
மணியான பெண்ணே! மணக்கும் கவிதை
அணியான பெண்ணே! அமுதே! - கனிகளுக்கு
இணையான பெண்ணே! இதய உணர்வுக்கு
அணையான பெண்ணே! அணை!

673.
எண்ணும் பொழுதெல்லாம் இன்பம் சுரக்குதடி!
கண்ணும் எழில்மூக்கும் மின்காதும் - கொண்டொளிரும்
பேரழகை! பெண்ணின் பெருந்தக்க யாவுள?
பாரழகை யாவும் படைத்து!

674.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் என்னுள்ளம்
பாடிக் கொடுத்த பசும்பாக்கள்! - கோடிமுறை
வந்து மயக்கும் மனத்தைப்! பொழுதெல்லாம்
தந்து மயக்கும் தமிழ்!

675.
ஆண்டாள் அளித்த அருந்தமிழாய் என்னகத்தை
ஆண்டாள்! அளந்தாள்! அமுதளித்தாள்! - தூண்டிலில்மீன்
மாட்டித் துடிக்கும்! மலரவள் பேரழகைத்
தீட்டித் துடிக்கும் திறம்

676.

எள்ளி நகையாடி என்னவனைப் பந்தாடிக் 
கள்ளி களிப்பாளோ? கண்ணாளா! – பள்ளியிலே 
அள்ளி அரவணைத்து ஆரமுதச் சூத்திரத்தைச் 
சொல்லிக் கொடுப்பாய் தொடர்ந்து!  


677.
இளைத்திருப்பாள் என்றே மனஞ்சோர்ந்து காளை
களைத்திருக்கும் காரணம் என்ன? - உளத்துள்
விளைந்திருக்கும் இன்பம்! விரித்திருக்கும் காதல்
நிலைத்திருக்கும் என்றும் நிறைந்து! 

678.
நினைந்திருக்கக் காதல் கவிமழையில் நெஞ்சம்
நனைந்திருக்க நன்றே இனிக்க! - கனிந்து
பிணைந்திருக்க! எல்லாப் பிறவியிலும் உன்னை
இணைந்திருக்க ஏங்கும் இளைத்து!

679.
உன்னை மறப்பதா? ஒப்பில் தமிழ்கமழும்
பண்ணை மறப்பதா? பாவலனே! - பெண்ணுயிர்
தன்னை உணர்ந்திங்குச் சந்தத்தில் பாடிநம்
அன்னைத் தமிழை அளி!

680.
ஏதுமறி யாதவளாய் என்னையே பார்க்கின்றாய்!
சூதுமறி யாதவளாய்ச் சொல்கின்றாய்! - மாதவளே!
மோதுமடி உன்விழிகள்! மூடி மறைக்காதே!
போதுமடி உன்றன் புளுகு!

(தொடரும்)

vendredi 29 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 67]




காதல் ஆயிரம் [பகுதி - 67]


661.
நான்எழுதும் வண்ணங்கள் நல்ல தமிழூறும்
தேன்எழுதும் வண்ணங்கள்! தேவியே! - வான்எழுதும்
வானவில் நல்லழகாய் வந்து மிளிர்பவளே!
கானவில் கண்களைக் காட்டு!

662.
வீசுகின்ற காற்றே! விரிமலர்ச் சோலையில்
பேசுகின்ற பூங்குயிலே! பேரழகே! - வாச
மலர்ககூட்டம் வாடும்! உனைக்காணமல் என்றன்
உளத்தோட்டம் வாடும் உதிர்ந்து!

663.
என்று வருவாயோ? இன்னமுதை நான்பருக
நின்று தருவாயோ? நேரிழையே! - என்னுயிரை
வென்று களித்தவளே! இன்றெனை வாட்டுவதேன்?
நன்றுன் செயலா நவில்?

664.
தொலைபேசி மூலம் அனுப்புமுன் தூது
வலைவீசி என்னை மடக்கும்! - சிலைபோல்
கலைபேசும் கண்ணே! கவிஞன் மனத்தை
விலைபேசும் பெண்ணே விடு!

665.
நானெண்ணும் சிந்தனையை நன்றே செயலாக்கித்
தேனுண்ணும் செல்வச் செழும்பாவாய்! - மானெண்ணும்
வண்ண மலரெண்ணும் மங்கை உறவென்று
சின்ன குயிலெண்ணும் சேர்ந்து!

666.
கண்ணன் குழலிசையில் கட்டுண்ட கன்னியர்போல்
எண்ணம் இழந்தேன்! இசைவாணா! - பண்ணிசைக்கும்
மன்னா! மயக்கும் மணித்தமிழை உன்திருவாய்
சொன்னா சுரக்கும் சுகம்!

667.
அன்புக்(கு) அடித்தளம் ஆனவளே! என்வாழ்கை
இன்புக்(கு) அடித்தளம் இட்டவளே! - மின்னும்
அழகுக்(கு) அடித்தளம் ஆண்டவளே! என்றன்
எழுத்துக்(கு) அடித்தளம் ஈந்து!

668.
வசந்தம் வருகிறது! வானவில் வண்ணம் 
திசையெங்கும் மின்னும்! திகட்டா - இசையெங்கும்
மீட்டி விளைக்கும்! விருந்தாக இன்பத்தைக்
கூட்டி விளைக்கும் கொழித்து! 

669.
வசந்தம் வருகிறது வாழ்விலெனைத் தேடி! 
கசந்த துயர்போகும்! காதல் - உசுப்பும் 
அசைந்தாடும் சோலையென அன்பில் முழுகி
இசைந்தாடும் நெஞ்சம் இனி!

670.
பொருந்தியவா! என்னைப் புகழ்ந்தேத்தி இன்பம்
அருந்தியவா! நான்சற்(று) அகல - இருளாய்
வருந்தியவா! வஞ்சியின் நெஞ்சினிக்கப் பாதை
திருந்தியவா! நீ..என் திரு!

(தொடரும்)