mardi 4 septembre 2012

வாழ்வுண்டோ?




மண்ணை இழந்து மனையைத் துறந்து
               வருந்தியும் வாழ்வுண்டு!
பொன்னை இழந்து பொருளைத் துறந்து
               புழுங்கியும் வாழ்வுண்டு!
கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து
               கலங்கியும் வாழ்வுண்டு!
உன்னை இழந்தால் தமிழே உலகில்
               ஒருநொடி வாழ்வுண்டோ?

இன்பத் தமிழே! இயக்கும் இறையே!
               இனிமை படைத்தவளே!
துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக்
               துயரைத் துடைத்தவளே!
அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை
               அளிக்கும் அருந்தமிழே!
உன்றன் புகழை உலகில் பரப்ப
               ஒருநாள் மறவேனோ!

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்!
               உயர்மிகு நன்மொழியை
அன்றே அளித்த அருமைத் தமிழே!
               அழகொளிர் பூக்காடே!
நன்றே புரியவும் நன்மைகள் செய்யவும்
               நல்லருள் செய்வாயே!
என்றும் என்கை எழுதும் எழுத்தில்
               இருந்து மகிழ்வாயே!

முல்லை மலர்தனில் மொய்த்திடும் வண்டென
               மோகமே கொண்டேனே!
கொள்ளை கொடுத்துக் குலவும் அழகினில்
               கொஞ்சியே நின்றேனே!
எல்லை இலதோர் புகழில் கமழும்
               எனதுயிர்ச் செந்தமிழே!
பிள்ளை புரியும் பிழைகள் கலைத்துப்
               பெருமையைத் தந்தருளே!

குடிக்கக் குடிக்கத் திகட்டா மதுவைக்
               கொடுக்கும் தெளிதமிழே!
வடிக்க வடிக்க வளமாய்ப் பெருகி
               மணக்கும் வளர்தமிழே!
தொடுக்கத் தொடுக்க மனத்தை மயக்கிச்
               சுடரும் உயர்தமிழே!
எடுக்க எடுக்கச் சுரக்கும் இனிய
               எழில்தமிழ் வாழியவே!

2 commentaires:

  1. ஓங்கி முழங்கும் உயர்கவியே! உன்கவியைத்
    தாங்கி முழங்கும் தலையுற்றேன்! - தூங்கிவிழும்
    இந்தத் தமிழினம் என்று விழித்திடுமோ?
    முந்தும் பழியை முடித்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      ஒற்றுமை இல்லை! உயர்தமிழ் அன்னையிடம்
      பற்றமைய வில்லை!! பழிச்சுமை - பெற்றுழலும்
      போக்கை ஒழித்திடுவோம்! போர்க்கவி பாவேந்தர்
      வாக்கைத் தரித்திடுவோம் வா!

      Supprimer