Affichage des articles dont le libellé est தமிழீழம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est தமிழீழம். Afficher tous les articles

mercredi 26 novembre 2014

மாவீரர்



மாவீரா்

1.
மாவீரர் தம்மை மனமெண்ணச் சொல்லெல்லாம்
பாவீரம் சூடிப் படைநடத்தும்! - வா..வீரர்
சோதியைக் கையேந்தி! தோழா! பகைக்கூட்டம்
பேதியைக் காணும் பிரண்டு!

2.
நாட்டின் விடுதலையை மூட்டிய மாவீரர்!
ஈட்டியின் கூர்மையை ஏந்தியவர்! - காட்டினில்
அஞ்சா திருக்கும் அரிமா அதிர்ந்தோடும்!
பஞ்சாய்ப் பறக்கும் பகை!

3.
தன்மானம் குன்றித் தமிழன் கிடப்பதுவோ?
பொன்வானக் கீற்றாய்ப் புறப்பட்டார்! - நன்மான
மாவீரர்! வானதிரும் வன்மை நடைகண்டு
நாவீரர் போனார் நசிந்து!

4.
பாயும் கொடியேந்தித் தாயின் நிலங்காக்க
ஓயும் நொடியின்றி ஓடியவர்! - சாயுங்கால்
போர்க்களத்தை வீசும் புகழ்க்களமாய் ஆக்கியவர்!
போ்..மறத்தைச் சொல்லும் பிணைந்து!

5.
கல்வேலி கட்டிக் கணித்தே அடைத்தாலும்!
பல்வேலி கட்டிப் படைத்தாலும்! - சொல்..வேலி
நீக்கிச் சுரப்பதுபோல் நீடுபுகழ் மாவீரர்
தாக்கித் தகா்த்தார் தடை!

6.
எண்ணில் அடங்கா எழிலுடைய மாவீரர்
மண்ணில் விளைந்திடுவார் மாண்பேந்தி! - கண்ணின்
மணியானார்! காக்கும் அரணானார்! வாழ்வின்
அணியானார் என்றும் அவா்!

7.
செங்களம் ஆடிச் சிரித்திட்ட மாவீரர்
எங்குள போதும் எமைக்காப்பார்! - சிங்களா்
கொட்டம் அடக்கிக் கொடுமைத் தலையொடிப்பார்!
கொட்டும் முரசைக் குவித்து!

8.
பிறப்பதுவும் பின்னே இறப்பதுவும் உண்மை!
சிறப்பதுவே வாழ்வு! சிதைந்து - சிறைக்குள்ளே
வாடுவதோ? வன்வேங்கை மாவீரர் ஈகைக்கே
ஈடெதுவோ? தோழா இயம்பு!

9.
அஞ்சாப் புலிநிகா்த்தார்! பேராண்மை வான்நிகா்த்தார்!
துஞ்சா துழைத்துத் துயர்துடைத்தார்! - நெஞ்சேந்தித்
தன்னேர் இலாத தலைவன் வழிநடந்தார்!
பொன்னோ்..மா வீரரைப் போற்று!

10.
ஈடில்லாத் தம்முயிரை ஈந்தனரே! நாமுற்ற
பீடில்லா வாழ்வைப் பிழிந்தனரே! - நாடெல்லாம்
கூடி எதிர்த்தாலும் குன்றாத மாவீரர்!
பாடித் தொழுவேன் பணிந்து!

26.11.2014

lundi 25 novembre 2013

தமிழ்ச்தேசியத் தலைவா்




தமிழ்ச்தேசியத் தலைவா்

எடுப்பு

தமிழொளி பாயுது கதிர்போலே! – எம்
தலைவனின் மறமொளிர் மதியாலே!

தொடுப்பு

அழகொளிர் தமிழே! செம்மொழியே! – புக
ழார்பிரபா கரனின் கண்ணொளியே!

முடிப்புகள்

நான்பெரிது! நீபெரிது! இனிப்போதும்! – நம்
நாடுபெரி தெனக்கொண்டால் புகழ்மோதும்!
வான்பெரிது! கடல்பெரிது! கவியோதும்! – வளர்
வண்டமிழின் சுவைபெரிது! இணையேதும்?

தமிழென இனித்திடும் வன்மறவன்! – பெற்ற
தாயென அணைத்திடும் அன்பிறைவன்!
இமையெனக் காத்திடும் நற்றலைவன்! – உயிர்
இனமென வாழ்ந்திடும் பொன்னிலவன்!

சிங்களப் பேய்களை ஓட்டினனே! – தன்
சிந்தையில் பெருங்கனல் மூட்டினனே!
பொங்கிடும் புகழ்வழி தீட்டினனே! – புவிக்குப்
பூந்தமிழ் வீரத்தைக் காட்டினனே!

நிகரிலா நெஞ்சனைப் பாடுகிறோம்! – எம்
நினைவெலாம் தலைவனைச் சூடுகிறோம்!
அகமெலாம் ஈழமே...! ஆடுகிறோம்! – வீரம்
ஆர்த்தெழப் புலிநடை போடுகிறோம்!

தமிழ்த்தேசியத் தலைவா் பொன்விழா மலா் 2004

lundi 24 juin 2013

மாவீரர் மறைவாரோ?





மாவீரா் மறைவாரோ?

நாவீரம் படைத்தவர்கள் நடிங்கி ஓட
     நரிமனத்துக் கொடியவர்கள் கொட்டம் வீழ
தாவீரம் என்றோதித் தமிழை வாழ்த்தித்
     தம்தலைவர் வழியேற்றுப் போர் புரிந்த
மாவீரர் மறைவாரோ? தமிழர் நெஞ்சுள்
     மறமூட்டி ஒளிர்கின்றார்! அவர்தம் சீரைப்
பாவீரப் பாவலரே பாடிப் பாடிப்
     பைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர்!

புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றாய்க் கூடிப்
     புகழ்கொண்ட மாவீரர் மேன்மை போற்றி
உளம்நிறைந்த அஞ்சலியைச் செலுத்து கின்றார்!
     உலகுக்குத் தமிழ்நெறியை ஓது கின்றார்!
பலம்நிறைந்த போர்மறவர் கொள்கை ஏற்றுப்
     பறைசாற்றி முழங்குவதால் ஈழம் பூக்கும்!
வளம்நிறைந்த நல்வாழ்வைத் தமிழர் காண
     வழிவகுத்த தமிழ்த்தலைவர் வாழ்க! வாழ்க!!

மண்ணுரிமை மொழியுரிமை இழந்து விட்டால்
     வரலாற்றில் இடமின்றி மறைந்து போவோம்!
பெண்ணுரிமை பறிக்கின்ற அரசு, பொல்லாப்
     பேயுலவும் காடாக இருளே சூழும்!
முன்னுரிமை பெற்றவரைக் கீழே தள்ளி
     முதுகொடிக்க நினைத்திட்ட பகைவர் வீழ,
தன்னுரிமைப் போர்தொடுத்த தமிழன் என்று
     சான்றோர்கள் உரைக்கின்றார்! வெற்றி காண்போம்!

பனைமரத்துக் காடெல்லாம் நினைவில் ஆட,
     படரன்பு நட்புகளை எண்ணி வாட,
எனைமறந்து நிற்கின்றேன்! காலஞ் செய்த
     இழிவுகளை மாய்த்திடவே கடமை யெண்ணி
அணைதிறந்து பாய்தோடும் வெள்ளம் போன்றே
     அணிதிரண்டு போராடி ஒளி கொடுத்தார்
மனஞ்சிறந்த மாவீரர் தாள்கள் தம்மை
     மதியேந்தி வணங்கிடுவோம் வாரீர்! வாரீர்!

வளர்ந்துவரும் சமுதாயம் சிறந்து நிற்க,
     வன்கவிநான் உழைத்திடுவேன்! நன்மை செய்வேன்!
தளர்ந்துவரும் இளைஞர்தம் உள்ளம் தேடிச்
     சால்புகளை விளைத்திடுவேன்! தீமை சாய்த்து
மலர்ந்துவரும் பொதுவுடைமை மணக்கும் வண்ணம்
     மதியொளியை வீசிடுவேன்! வயலில் நன்றே
விளைந்துவரும் பயிருக்கு உரத்தைப் போன்று
     விளங்கிடுவேன் தமிழுயர! தாயே காப்பாய்!


(மாவீரா் நினைவு மலர் - 2003 பிரான்சு)  
     

jeudi 22 novembre 2012

கண்ணன் குழலோசை







கண்ணன் குழலோசை

எடுப்பு

வண்ணக் குழலோசை - அது
வானில் மிதக்குதடி!
கண்ணன் குழலோசை - என்
காதில் இனிக்குதடி!
                                   (கண்ணன்)

உடன் எடுப்பு

உள்ளம் துடிக்குதடி - என்றன்
உடலும் சிலிர்க்குதடி!
வெள்ளம் போலெண்ணம் - ஏனோ
விரைந்து ஓடுதடி!
                         (கண்ணன்)

தொடுப்பு

அலைகடல் ஓரத்தில் - அன்றொருநாள்
நிலைதடு மாறிநின்றேன்!
கலைகளைத் தாமுடைய - மாய
கண்ணனை நான்கண்டேன்!
                         (கண்ணன்)

முடிப்பு

அன்ன நடைநடந்தேன்!
பின்னல் அவிழ்ந்ததென்றான்!
இன்னும் நாணமேனோ?
இங்கே வாடியென்றான்!
கன்னல் மொழிபேசி..
வண்ண மலர்சூடி..
கண்ணன் எனையணைத்துக்
காதல் சடைமுடித்தான்!
                         (கண்ணன்)