lundi 31 décembre 2012

குறளரங்க வாழ்த்துதிருமிகு சு. மதிவாணன் கீதா

இணையரின் இல்லத்தில் நடைபெற்ற

குறளரங்க வாழ்த்து மலர்நதிவாணான்! ஞான நிதிவாணன்! அன்பின்
துதிவாணன்! தூயநெறி வாணன்! - உதிக்கும்
மதிவாணன்! நன்றே மணக்கும் பணியின்
கதிவாணன் என்றே கருது!

கம்பன் கழக அன்பெரெலாம்
    காதல் கொண்ட குறளரங்கம்!
நம்மின் இராமன் திருவருளால்
    நலமே நல்கும் நட்பரங்கம்!
செம்பொன் தமிழின் சீரேந்திச்
    சிந்தை மயக்கும் கவியரங்கம்!
இம்மண் போற்ற மதிவாணன்
    இல்லம் இன்று சிறந்ததுவே!

இரண்டே அடிகள்! அரும்வாழ்வில்
    ஏற்றும் படிகள்! செல்வமெலாம்
திரண்டே வந்து நமைக்கூடும்!
    திசைகள் நான்கும் புகழ்பாடும்!
விருந்தே யாகும்! மண்காக்கும்
    மருந்தே யாகும்! குறள்வழியில்
இருந்தே வாழ்க மதிவாணன்!
    இனிதே வாழ்க மதிவாணன்!

அன்பிற் கனிந்து நெஞ்சொளிர!
    அமுதைப் பொழிந்து சொல்லொளிர!
இன்பிற் கலந்து செயலொளிர!
    இதயம் இணைந்து குறளொளிர!
என்புள் நுழைந்து தமிழொளிர!
    என்றும் ஓங்கிக் குடியொளிர!
பொன்னின் கீதா மதிவாணன்
    பொலிக! பொலிக! பல்லாண்டு!

குறளைத் தந்த வள்ளுவனார்!
    கொழிக்கும் வாழ்வைச் சூட்டுகவே!
உறவைத் தேனின் கூட்டாக்கி
    உயர்ந்த கண்ணன் ஊட்டுகவே!
பறவை போன்றே தொண்டுலகில்
    பறக்க ஈசன் காட்டுகவே!
அறிவை! அன்பை! மதிவாணன்
    ஆண்டு வாழ்க பல்லாண்டு!

29.12.2012

dimanche 30 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 6]மீண்டுமோர் ஆசை


பெண்ணும் பொன்னும் ஓரினமோ?
     பெருகும் போதை அவள்சொத்தோ?
விண்ணும் மண்ணும் சோ்ந்தாலும்
     விழியின் அழகுக் கீடாமோ?
பண்ணும் பாட்டும் அவள்எழிலைப்
     பார்த்துப் பார்த்துப் பயனுறுமே!
கண்ணும் கண்ணும் கவ்வுகிற
     காட்சி காண மீண்டும்ஆசை!

அன்னம் பயிலும் நடையழகை!
     அமுதைப் பொழியும் மொழியழகை!
மின்னும் முத்துப் பல்லழகை!
     மீட்டும் வீணை உடலழகை!
பின்னும் நீண்ட சடையழகை!
     பித்தை ஊட்டும் உடையழகை!
இன்னும் பிறக்கும் பிறவிகளில்
     என்கண் பார்க்க மீண்டும்ஆசை!


மீண்டுமோர் ஆசை [பகுதி - 5]
மீண்டுமோர் ஆசை

வண்ணத் தோகை அசைந்தாடும்!
     சின்ன மீன்கள் சிரித்தாடும்!
எண்ணக் தோகை விரித்தாடும்!
     இளமை உயிரைப் பறித்தாடும்!
பண்ணப் பண்ணச் சிலிப்பூட்டும்
     பாங்காய்ப் பார்வை படா்ந்தாடும்!
உண்ண உண்ணப் பசிபெருகும்
     ஒண்கண் பார்க்க மீண்டும்ஆசை!

காதல் கணையை வீசுகிற
     கண்கள் கவிதைக் கருவூலம்!
மோதல் புரிந்து விழிநான்கும்
     முழுகும் சொர்க்கக் கடல்ஆழம்!
ஈதல் இனிமை! அவள்பார்வை
     இன்பப் பெருக்கின் கலைக்கூடம்!
சாதல் வரும்முன் அவள்விழியைச்
     சற்றே பார்க்க ஓா்ஆசை!

(தொடரும்)

samedi 29 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 4]
மீண்டுமோர் ஆசை

பள்ளிக் கூடம் செல்லுகையில்
     படித்து முடித்துத் திரும்புகையில்
துள்ளிக் குதிக்கும் மீன்விழியின்
     துாதை அறிய மனமெண்ணி
வள்ளி கோயில் அருகினிலே
     வந்து நிற்பேன்! காந்தவிழிக்
கள்ளி காட்டும் காட்சிகளைக்
     காண மீண்டும் ஓா்ஆசை!

பார்க்கா நிலைபோல் பார்க்கின்ற
     பார்வை வித்தை! என்னன்பைச்
சோ்க்கா நிலைபோல் நடித்திங்குச்
     சோ்த்துத் தைத்த இளந்தையல்!
கோர்க்கா திருந்தால் அழகேது?
     கோவை நுால்கள் பேரின்பம்!
வோ்க்கா திருக்கும்! உளம்வேகும்!
     மீண்டும் காண ஓா்ஆசை!

                        (தொடரும்) 

vendredi 28 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 3]
மீண்டுமோர் ஆசை [பகுதி - 3]

முன்னே நடந்து செல்கின்றாள்!
     பின்னே தொடா்ந்து போகின்றேன்!
என்னே அவளின் பின்னழகும்!
     ஏதோ ஏதோ செய்கிறது!
பெண்ணே! மெல்ல முகம்திருப்பி
     என்னை இழுத்த இருவிழிகள்!
கண்ணே மீண்டும் அக்காட்சி
     காணத் துடிக்கும் ஓா்ஆசை!

வேலும் வாளும் பாயம்பும்
     விழியின் முன்னே தோற்றோடும்!
மாலும் மாதை மார்பேந்தி
     மகிழும் விந்தை அறிகின்றேன்!
தோலும் சிலிர்க்கும்! என்றனிரு
     தோளும் புடைக்கும்! அவள்பார்வை
மேலும் மேலும் வேண்டுமென
     மீண்டும் பொங்கும் ஓா்ஆசை!

(தொடரும்)

காய் எங்கே?


தமிழ் உறவுகளே வணக்கம்!

மீண்டுமோர் ஆசை [பகுதி - 2] இல்


பெண்ணின் பெருமை பேசுகிற
     பெருநுால் உண்டு! அவள்கொண்ட
கண்ணின் பெருமை பேசுகிற
     கவிஞன் நான்!என் கவியெல்லாம்
விண்ணின் பெருமை விஞ்சிடவே
     வேண்டி அசையும் அவள்விழி!
மண்ணின் பெருமை மொழிகின்ற
     மலா்க்கண்  பார்க்க மீண்டுமாசை!

 இந்த விருத்ததிற்குக் கருத்துரை இட்ட நண்பா்
வேண்டி அசையும் அவள்விழி!

காயைக் காணோம்.

என்ற கேள்வியைத் தொடுத்துள்ளார்!

மிகக் கூா்மையாகப் படித்துக் குறையைச் சுட்டிக்காட்டியமைக்கு 
மிக்க நன்றி!

மரபுக்கவிதை பாட விருப்பமுடையவா் இலக்கணத்தைத்
அறிந்துகொள்ள உதவும் என எண்ணி என் பதிலைப் பதிவாக்குகிறேன் 


காய்வரும் இடத்தில் முற்றல்
கமழ்விளம் வரலாம்! என்றன்
தாய்தரும் சொற்கள்! பாட்டில்
தழைத்திடும் இன்பம் நல்கும்!
போய்..வரும் காலம் தன்னில்
புலம்பிய கவிகள்! காதல்
நோய்தரும்! மரபைக் கற்போர்
நுண்ணிய புலமை ஏற்பார்!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

காய்ச்சீா் வரவேண்டிய இடத்தில் அவள்விழி என்று
விளா்ச்சீா் வந்துள்ளது

காய்வரும் இடத்தில் விளா்ச்சீா் வரலாம் என்பது
யாப்பிலணக்க விதி!

கூவிளம் வரலாம் என்றாலும்
கவிதை நுட்பம் அறிந்தோர்
கருவிளச்சீரையும், கருவிளாச் சீரையும் அமைத்து எழுதுவார்!

நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!
நரகத்தில் இடா்ப்படோம்! நடலை இல்லோம்!
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்!
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
அப்பா் தேவாரம்

இடா்ப்படோம், இன்பமே
காய்வரும் இடத்தில் விளம் வந்துள்ளதைக் கண்டுணா்க!

இந்தக் கவிதையை எமுதும்பொழுது அவள்விழிகள்
என்றே நான் எழுதினேன்!
அவள்விழிகள் என்பதே சிறந்த ஓசையை அளிக்கும்.

பல இலட்ச கவிதைகளை எழுதியுள்ள நான்
ஒருநாளைக்கு ஒரு கவிதையாவது வலையேற்ற வேண்டும்
என்பது என் விருப்பம்.

இரவு 1.00 மணிக்கு ஒவ்வொருநாளும் வலையேற்றம்
செய்யக் காலம் வாய்க்கிறது.

துாக்கம் என்கண்களைத் தழுவ
என் கைகள் தமிழைத் தழுவ
வலையேற்றம் நிறைவுறும்!

மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க நிமிடம் இன்றிப்
படுக்கையில் விழுந்துவிடுவேன்!

பதிவுப்பிழை காண்போர் எடுத்துரைக்கவும்!
திருத்திப் படிக்கவும்!

குறளரங்கம் - 24


jeudi 27 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 2]மீண்டுமோர் ஆசை

சீதை இராமன் நோக்கியதைச்
     சிறிய தென்று சொல்லிடுவேன்!
கோதை கொண்ட குளிர்விழிகள்
     கொள்கை மறவன் எனைநோக்கப்
போதை யேறி நான்பெற்ற
     புதுமை உணா்வு! கவிபாடும்
பாதை காட்டும் பார்வையினைப்
     பார்க்க மீண்டும் ஓா்ஆசை!

பெண்ணின் பெருமை பேசுகிற
     பெருநுால் உண்டு! அவள்கொண்ட
கண்ணின் பெருமை பேசுகிற
     கவிஞன் நான்!என் கவியெல்லாம்
விண்ணின் பெருமை விஞ்சிடவே
     வேண்டி அசையும் அவள்விழி!
மண்ணின் பெருமை மொழிகின்ற
     மலா்க்கண்  பார்க்க மீண்டுமாசை!

(தொடரும்)

mercredi 26 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 1]மீண்டுமோர் ஆசை

கம்பன் கழகம் நடத்தும் திங்கள் கவியரங்கம்
தலைமைக் கவிதை


தாயே! தமிழே! உன்னுடைய
    தயவால் ஏதோ இருக்கின்றேன்!
நாயே என்று நானிருந்த
    நலிவை மாற்றி நலங்கொடுத்தாய்!
காயே என்று நான்கொடுத்த
    கவியைக் கன்னல் என்றுண்டாய்!
சேயே என்று எனைத்தாங்கிச்
    செய்த நன்மை மறப்பேனா?

இருபத் தொன்றாம் குறளரங்கம்!
    ஈடில் தமிழின் கலையரங்கம்!
அரும்முத் தொன்றை அடைந்ததுபோல்
    ஆடும் பாடும் நம்கழகம்!
பெரும்சொத் தென்று காத்திடுவோம்!
    பெருமை உரைத்துக் கூத்திடுவோம்!
வரும்சொத் தெல்லாம் ஒருபொருட்டா?
    வண்ணத் தமிழே உயிர்ச்சொத்து!

கம்பன் கழகம் கவிக்கோட்டை!
    கழகத் தலைவா் கவியரசா்!
நம்மின் தொண்டா் தமிழ்மலரின்
    நற்றேன் பருகும் கவி..ஈக்கள்!
செம்மண் சேரும் மழைநீா்போல்
    செழித்த தமிழில் உயிர்கலக்கும்!
கும்மென் றிருக்கும் பேரழகாய்க்
    கொஞ்சும் கவிதை அணிவகுக்கும்!

கம்பன் கழகக் கவியரங்கக்
    கதவை மெல்லத் திறக்கின்றேன்!
நம்மின் கம்பன் புகழ்போற்றி!
    நன்றே தமிழின் நலம்போற்றி!
இம்மென் றுரைக்கும் முன்னாலே
    இன்றேன் கவிதை மழைபொழியும்!
உம்மென் றிருந்தால் சுவையுண்டோ?
    உங்கள் கைகள் ஒலிக்கட்டும்!

                         (தொடரும்)

mardi 25 décembre 2012

கிறித்துப் பிறந்தநாள் வாழ்த்து!கிறித்துப் பிறந்தநாள் வாழ்த்து!


ஆடுக! பாடுக! ஆனந்த இன்னிசையைச்
சூடுக! துாய மலரடியைக் - கூடுக!
பொன்மன யேசு புவியில் பிறந்தநாள்!
என்மனம் வாழ்த்தும் இனித்து!

உலகே மகிழ்வெய்த ஒண்குடில் வந்த
நிலவே! நிறைஞான தேவே! - மலரே!என்
நெஞ்ச நினைவுகளில் நீங்கா திருந்தென்றும்
கொஞ்சும் கவிகள் கொடு


lundi 24 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 8]
புதியதோர் உலகம் செய்க
ஒண்மை உள்ளம் இறைநினைவில்
    ஒன்றிக் கலந்து உவக்கட்டும்!
திண்மை உள்ளம் எத்திசையும்
    திளைக்கும் புகழைப் படைக்கட்டும்!
நுண்மை உள்ளம் நுாலாய்ந்து
    நோக்கும் வாழ்வை உரைக்கட்டும்
வண்மைக் கண்ணா! புத்துலகை
    உண்மை ஒளிர அமைத்திடுக!

தொடரும்

dimanche 23 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 7


புதியதோர் உலகம் செய்க!

கறுப்பு சிவப்பு நிறவெறியால் 
    கரைந்த கண்ணீர் பெருங்கடலோ!
மறுப்பு கூற வழியின்றி 
    வாடும் அடிமை  நிலையோனோ?
எறும்பும் எந்தத் தடையினையும் 
    ஏகிச் செல்லும்! இழிவின்றிச் 
சிறக்கும் வண்ணம் புத்துலகைச் 
    சிந்தை மணக்க அமைத்திடுக!

(தொடரும்)

samedi 22 décembre 2012

புதியதோர் உலகம் |பகுதி - 6]புதியதோர் உலகம் செய்க!

வீட்டுக் குள்ளே பெண்மணியைப்
    பூட்டி வைத்தால் உயா்வேது?
பாட்டுக் குள்ளே பாரதியும்
    பழமை ஒழிய நெருப்பிட்டான்!
காட்டுக் குள்ளே வாழ்விலங்கு
    நாட்டுக் குள்ளே உலவுவதோ?
கோட்டுக் குள்ளே புத்துலகைக்
    கோலக் கண்ணா அமைத்திடுக!

வடலுார் வள்ளல் வடித்திட்ட
    வல்ல மார்க்கம் மணக்கட்டும்!
உடலுார் உணா்வில் உயிர்க்கருணை
    ஓங்கி ஒளியை ஏற்றட்டும்!
கடலுார் மீன்போல் மொழிக்கடலில்
    கவிஞா் நெஞ்சம் களிக்கட்டும்!
மடலுார் மணமாய்ப் புத்துலகை
    மாய கண்ணா அமைத்திடுக!

(தொடரும்)

vendredi 21 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 5]
புதியதோர் உலகம் செய்க

தோட்டி பறையன் குறவனென
    வாட்டி வதைத்தல் பெருங்கொடுமை!
போட்டி போட்டு மதப்பேயைப்
    போற்றிக் களித்தல் துயா்மடமை!
ஈட்டி கூா்மைச் சொல்லேந்தி
    இருளை நீக்கு! வாழ்வினிமை!
ஆட்டி அசைக்கும் திருவரங்கா
    அறிவின் உலகை அமைத்திடுக!

(தொடரும்)

jeudi 20 décembre 2012

புதியதோர் உலகம் [பகுதி - 4]புதியதோர் உலகம் செய்க

நானோ உயா்ந்த பிறப்பென்று
    நீயோ தாழ்ந்த பிறப்பென்று
தானோ தீனோ புளுகெல்லாம்
    சாற்றும் நபரைப் படைக்காதே!
ஆணோ பெண்ணோ இருசாதி!
    ஓளவை தந்த நன்னீதி!
ஊணோ(டு) ஊறிப் பொதுவுடைமை
    ஒளிரும் உலகை அமைத்திடுக!

(தொடரும்)