jeudi 29 novembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 18]

ஏக்கம் நுாறு [பகுதி - 18]
 
முத்தமொன்று நான்கேட்டு முன்னே நிற்க
     முல்லையவள் பின்னோக்கி நகா்ந்து நின்றாள்!
சத்தமொன்றும் இல்லையடி! சற்றே வாராய்!
     சத்தியமாய்த் தீங்கேதும் செய்ய மாட்டேன்!
சுத்தமென்று சொல்வதுபோல் சும்மா நீயும்
     துாண்டியெனை வாட்டாதே! அன்பே பொல்லாக்
குத்தமொன்றும் இல்லையடி! இளமைக் கென்றும்
     குளிர்காலம் தொலை்லையடி! அழகே வாராய்! 78

ஏக்கம் நுாறு [ பகுதி 17]ஏக்கம் நுாறு [பகுதி - 17]
 
தோள்கண்டார் தோளேகண்டார் நிலையைப் போன்று
     தோகைவிழி எழிற்கண்டு நின்றேன்! மாயோன்
தாள்கண்டார் தாளேகண்டார் நிலையைப் போன்று
     தமிழவளின் விரலழகில் மயக்கம் கொண்டேன்!
வாள்கண்டார் பிழைத்திடலாம்! பாய்ந்து தாக்கும்
     வரிப்புலியை வென்றிடலாம்! காதல் நோயுள்
நாள்கண்டார் உரைத்திட்ட கவிதை யாவும்
     நான்கண்டு வாடுகிறேன்! ஏங்கும் நெஞ்சம்! 76

மங்கையவள்! மலருமவள்! மனம் செழிக்கும்
     மழையுமவள்! மதுவுமவள்! கவியாய்ப் பாயும்
கங்கையவள்! கருணையவள்! கன்னல் முற்றிக்
     கனிந்தாடும் காடுமவள்! நிலவின் சின்ன
தங்கையவள்! தமிழுமவள்! என்றன் நெஞ்சின்
     தாகமவள்! உயிர்புகுந்து காதல் எந்திச்
சங்கையவள் ஊதுகிறாள்! கண்கள் நான்கும்
     தாம்கவ்வி இன்பமுறும்! தொடரும் ஏக்கம்! 77
                                         
                                      [தொடரும்]

mardi 27 novembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 16]
ஏக்கம் நுாறு [பகுதி - 16]
 
வெல்லுதடி உன்னழகு! தோற்றுத் தோற்று
     வீழுதடி என்னான்மா! நாளும் வந்து
கொல்லுதடி நீளிரவும்! மெல்ல மெல்லக்
     கொஞ்சுதடி உன்கனவும்! இறைமுன் நின்று
சொல்லுதடி நம்காதல் மலர வேண்டி!
     சொக்குதடி! சுரக்குதடி ஏக்கம் கோடி!
செல்லுதடி நீயமா்ந்த இடத்தை நாடி!
     சிரித்தமா்ந்து களிக்குதடி கவிதை பாடி! 71

அப்பப்பா அவளழகு அடியேன் மெய்யை
     அலக்கலக்காய்ப் பிரித்தெய்தும்! உணவில் போடும்
உப்பப்பா என்பதுபோல் உணா்வில் ஊறி
     உயிர்க்குருதி போலியங்கும்! நன்றே தேடி
ஒப்பப்பா என்றுரைக்க ஒன்றும் இல்லை!
     ஒண்டமிழும் அன்னவளும் ஒருதாய் பிள்ளை!
எப்பப்பா இரவுவரும்! காதற் கண்ணி
     இன்கனவு பெருகிவரும்! ஏங்கும் நெஞ்சே! 72

வாய்மலா்ந்து மணக்கின்ற சொற்கள் கேட்க
     மனமலைந்து கிடக்குதடி! கொஞ்சும் சின்ன
சேய்மலா்ந்து சிரிக்கின்ற அழகைக் கண்டு
     சிந்தனைகள் சிறக்குதடி! காதல் என்னும்
நோய்மலா்ந்து கொடுக்கின்ற துன்பம் கோடி!
     நோக்குமவள் பார்வைதரும் இன்பம் கோடி!
தாய்மலா்ந்து படைக்கின்ற அமுதைப் போன்று
     தமிழ்சுரந்து இனிக்குதடி! சந்தப் பெண்ணே! 73

உளம்வாட, உயிர்வாடக் கண்ணைக் காட்டி
     ஒயிலாகச் செல்பவளே! பகையை நோக்கிக்
களமாட அஞ்சாத கவிஞன் என்னைக்
     கைதாக்கிக் கொண்டவளே! காதல் பூத்து
வளம்பாட நீருற்று! செந்தேன் பொங்கி
     வழிந்தோட முகம்காட்டு! கவிதை பாடி
விளையாட மொழியூட்டு! கனவில் இன்ப
     விருந்துட்டு! வியப்பூட்டு! விரைந்து நன்றே! 74

கன்னியுனை எதிர்ப்பார்த்துக் காலை மாலை
     காத்திருத்தல் சுகமன்றோ! பெருகும் ஆசை
பின்னியெனை வாட்டுவதும் இன்ப மன்றோ!
     பின்தொடா்ந்து வருவதுவும் இனிமை யன்றோ!
மின்னியெனைக் கண்ணழைக்கப்! பேசும் சொற்கள்
     மீட்டுகின்ற இசைகொடுக்கப் போதை ஏறும்!
சன்னியெனைப் பிடித்ததுபோல் உளறும் உள்ளம்!
     பொன்னிநதி பூஞ்சோலைப் பொழிலே வாராய்! 75
                                           [தொடரும்] 

ஏக்கம் நுாறு [ பகுதி - 15]
ஏக்கம் நுாறு [பகுதி - 15]

மையூறும் விழிக்கடலில் மாதே என்றன்
     மனமூறிக் கிடக்குதடி! இதயம் என்னும்
பையூறிச் சுரக்கின்ற ஏக்கம் கோடி
     படா்ந்துாறி என்னுயிரை உடலை வாட்டும்!
கையூறித் துடிக்குதடி! கண்ணே காதல்
     கனியூறும் தேன்எடுக்க! வாழ்வில் இன்பத்
தையூறிச் செழிப்பதுபோல் உன்னைக் கண்டால்
     தமிழூறித் தழைக்குதடி! அழகின் சொத்தே! 68

பாவையவள் முகத்தழகைப் பார்த்துக் கொண்டே
     இருந்திடலாம்! உடல்நெகிழ்ந்து பாயும் இன்பம்!
தேவையவள் பிறக்கின்ற நொடிகள் தோறும்!
     தேன்றமிழே தீட்டென்று மெல்லச் கூறும்!
கோவையவள் உதடுகளில் குலவும் பூக்கள்
     கோகுலத்துப் பெண்களிடம் உண்டோ சொல்வீா்!
பூவையவள்! புதுமையவள்! புலவன் என்றன்
     பூமியவள்! புகழுமவள்! பொலியும் வாழ்வே! 69

வகைவகையாய் விழிகாட்டும் சாலம்! நாளும்
     வளவளமாய் மொழிதீட்டும் கோலம்! இன்ப
நகைநகையாய் இதழூட்டும் பூக்கள்! சந்த
     நடைநடையாய்த் தமிழ்சூட்டும் பாக்கள்! முந்திப்
பகைபகையாய்த் தீயூட்டும் உணா்வு! அன்பே
     படைபடையாய் எனைவாட்டும் கனவு! வாழ்வில்
தொகைதொகையாய் நலஞ்சூட்டும் பெண்ணே! உன்றன்
     சுடரடியால் மணக்குதடி இந்த மண்ணே! 70

lundi 26 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]


நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

விண்கவா் மீன்கள் போன்றே
     மண்கவா் மலா்கள் கண்டேன்!
பெண்கவா் விழிகள் போன்றே
     பெருகிடும் இன்பப் போதை!
கண்கவா் பூக்கள் காட்சி!
     கவிஞனின் கவிதை ஆட்சி!
பண்கவா் விருத்தம் பாடிப்
     பதிவினைச் செய்தேன்! வாழி!

04.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முட்டைக் கோசு சட்னியைச்செய்
           
முறையை மெல்ல நான்படித்தேன்!
அட்டை போன்ற நாக்கின்மேல்
           
ஆசை மேவி நீரூறும்!
கட்டைத் துறவி இவ்வலையைக்
           
கண்டால் உண்டு சுவைத்திடவே
பட்டை கொட்டை தாம்நீக்கிப்
           
படித்த வண்ணம் சமைத்திடுவான்!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

வண்ண மின்னும் அவள்முகத்தில்
     வடிவாய் ஆடும் முத்தணிகள்!
கண்ண தாசன் பாடிடுவான்
     கன்னி காதை கேள்வியென!
உண்ணத் தெவிட்டாச் செந்தமிழில்
     ஓங்கும் வெற்றி வேல்கவிஞா்
எண்ணம் இனிக்கப் படைத்திட்ட
     எழுத்தைக் கண்டு வியக்கின்றேன்!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மாற்றி எண்ணும் சிந்தனைகள்
     மனமே உணா்க! வீசுகின்ற
காற்றில் பறக்கும் சருகன்று!
     கருத்தை ஆய்ந்து தெளிவுறுக!
ஆற்றில் குளித்து மகிழ்ந்திடலாம்!
     அங்கே பிழைப்பும் நடத்திடலாம்!
ஊற்றின் சுரப்பாய் என்பக்க
     உரைகள் மேலும் தொடருகவே!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வால்காட்டும் நபரெல்லாம் என்றன் பக்கம்
           
வந்திடவே அஞ்சிடுவார்! பகைவா் ஓடக்
கால்காட்டும் வன்மறவன்! கவிஞன் என்முன்
           
கண்ணுறங்கி வாலாட்டும் பூனை ஒன்று!
சேல்காட்டும் அவள்விழியின் அழகைப் போன்று
           
சிந்தனையைப் பறிக்கின்ற காட்சி! சொற்கள்!
பால்காட்டும் வண்ணமுக மாதை வென்று
           
படங்காட்டும் மலா்ப்பூனைப் பாப்பா வாழ்க!

17.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நான்என்ன தவறுகளைச் செய்தேன் என்று
     நன்காய்ந்து தெளிந்திட்டால் துன்பம் இல்லை!
தேன்என்ன? சுளையென்ன? விஞ்சி நிற்கும்!
     திருநாளாய் மனமினிக்கும் பேசும் சொற்கள்!
வான்என்ன? கடலென்ன? சுற்றம் நட்பு
     வாழையடி வாழையென வளா்ந்தே ஓங்கும்!
மீன்என்ன நீந்துவது? கவிஞன் யானும்
     மின்றமிழில் நீந்துகிறேன் கதைப டித்தே!

21.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நம்பள்கி நெஞ்ச நினைவலையை நான்படித்து
எம்மின் இதயம் இடும்பதிவு! - செம்மொழியின்
சீா்படைத்த ஆசானின் போ்படைத்த சொல்லெல்லாம்
நோ்படைத்த வாழ்வின் நெறி!

22.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கயிறுகளின் முடிச்சன்று! காதல் பின்னும்
           
கண்முடிச்சு! கவிமுடிச்சு! இறுகக் கட்டும்
பயிருகளின் முடிச்சன்று! பருவம் மீட்டும்
           
பண்முடிச்சு! பொன்முடிச்சு! குவித்து வைத்த
துயருகளின் முடிச்சன்று! துன்பம் போக்கித்
           
துணிவேந்தும் வன்முடிச்சு! சோ்த்த சொத்தின்
உயிலுகளின் முடிச்சன்று! ஆம்..ஆம் காதல்
           
உயி்ர்முடிச்சு! உயிர்முடிச்சு! உயிர் முடிச்சு!!

18.11.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

களவாடப் பட்ட கனவுகளை எண்ணி
உளம்வாடத் தந்தகவி ஓங்க! - வளத்தை
வழங்குக வண்டமிழ்! வெற்றிவேல் நாளும்
முழங்குக காதல் மொழி!

25.11.2012

------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்

பிரான்சு கம்பன் கழகத்தில் ஒவ்வொரு மாதமும் கவியரங்கம் நடைபெறுகிறது. 24.11.2012 அன்று நடைபெற்ற கவியரங்கின் தலைப்பு இரவின் புன்னகை!

கழக கவிஞா்கள் எழுவா்  இரவின் புன்னகையை இனிய தமிழில் வழங்கினா்!

இவ்வார இறுதியில் அனைத்துக் கவிதைகளும் என்னுடைய மின்வலையில் புன்னகை புரியும்!

படித்து மகிழுக! பைந்தமிழ்த் தேனைத்
குடித்து மகிழுக! நற்சுவையில் நெஞ்சம்
தடித்து மகிழுக! தன்னோ் கருத்தை
வடித்து மகிழுக வந்து!

26.11.2012
------------------------------------------------------------------------------------------------------