dimanche 21 février 2021

நாலடி ஆனந்தக் களிப்பு

 

நாலடி ஆனந்தக் களிப்பு

 

தந்தன தந்தன தானாo - oசிவன்

         தந்தது தந்தது தண்டமிழ்த் தேனாo

ஆடிய நெஞ்சத்தைக் கட்டிo - oஅதன்

         ஆணவப் போக்குறும் ஈனத்தை வெட்டிo

தேடிய பெண்ணெழில் குட்டிo - oவந்து

         தீட்டிய ஆசையைக் கூட்டியே கொட்டிo

நாடிய தீவினைச் சட்டிo - oஅதன்

         நாற்றத்தை நீக்கிட வைத்தேனே எட்டிo

பாடிய நற்பொருள் சுட்டிo - oஈசன்

         பார்வையே தீர்த்தது வாழ்வுற்ற வட்டிo!

                                                        [தந்தன]

 

பொய்யுறும் பாழகம் மாற்றிo - oமின்னும்

         பொன்னுறும் வண்ணத்தில் இன்வழி சாற்றிo

மெய்யுறும் வாழ்க்கையைப் போற்றிo - oஅன்பு

         மேலுறும் தொண்டினைச் சால்புற ஆற்றிo

நெய்யுறும் நல்லொளி ஏற்றிo - நன்றே

         நெஞ்சுறும் ஞானத்தை விஞ்சியே கூட்டிச்o

செய்யுறும் நற்பயன் சூட்டிo - oஈசன்

         சீருறும் என்னகம் பேரிசை மீட்டிo

                                                        [தந்தன]

 

எத்தனை எத்தனைத் துன்பம்o - oஎல்லாம்

         இன்றோடு நீங்கிட அன்பூறும் இன்பம்o

முத்தியை முத்தியைப் பாடும்o- oசிவ

         மூர்த்தியைப் போற்றியே கூத்தினை யாடும்o

சித்தமே முற்றுமே ஓங்கும்o -oமுன்னைச்

         செய்வினை நீங்கியே மெய்யருள் தாங்கும்o

மத்தெனச் சுற்றுமே வாழ்வுo - oசிவ

         மங்கலம் சூடினேன்! இங்கிலை தாழ்வுo

                                                        [தந்தன]

 பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.02.2021

ஆனந்தக் களிப்பு

 


வாராயோ வெண்ணிலாவே!

[ஆனந்தக் களிப்பு]

 

எடுப்பு

 

வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்

தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!

                                             [வெண்மதி]

 

முடிப்பு

 

பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே

   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!

என்னகக் காதலை மூட்டி - நாளும்

   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!

                                             [வெண்மதி]

 

அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்

   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!

கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி

   கம்பனின் சொற்களில் காதலைக் கண்டாள்!

                                             [வெண்மதி]

 

பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்

   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!

பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்

   பித்தேற வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!

                                             [வெண்மதி]

 

எத்தனை எத்தனை எண்ணம் - வானில்

   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!

தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்

   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!

                                             [வெண்மதி]

 

 

மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்

   வாடிக் கிடப்பதும் வாஞ்சையால் தானோ?

ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்

   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?

                                             [வெண்மதி]

 

கண்களில் வண்டுகள் மேயும் - தினம்

           கண்டதும் கற்பனை வெள்ளமாய்ப் பாயும்!

பெண்களின் உள்ளங்கள் சாயும் - அவள்

           பேரெழில் தேனுடன் ஒன்றாகித் தோயும்!

                                             [வெண்மதி]

 

சிந்தனை ஓடுமே தேடி - அவள்

           செவ்விதழ்ப் புன்னகைச் சீரெழில் பாடி!

கந்தனை வேண்டுமே ஓடி - அவள்

           கைகளில் உள்ளன சொர்க்கமே கோடி!

                                             [வெண்மதி]

 

ஆசைகள் நெஞ்சத்தைத் துாண்டும் - இந்த

           அண்டத்தைத் துள்ளியே எண்ணங்கள் தாண்டும்!

ஓசைகள் பற்பல பூண்டும் - பாடி

           ஓங்காரி சிங்காரி நல்லருள் வேண்டும்!

                                             [வெண்மதி]

 

நல்லிருள் வந்துயிர் வேகும் - இன்ப

           நற்கனாக் கண்டுளம் புண்ணாக ஆகும்!

நில்லிருள் காதலை ஏகும் - முல்லை

           நேரிழை பல்லெழில் பார்த்துடன் சாகும்!

                                             [வெண்மதி]

 

பொங்கியே கூத்திடும் ஏக்கம் - புலமை

           தங்கியே பூத்திடும் தண்டமிழ் ஆக்கம்!

தங்கமே கொண்டகம் பூக்கும் - என்றன்

           அங்கமே துாளாக ஆசைகள் தாக்கும்!

                                             [வெண்மதி]

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
29.02.2020.

ஆனந்தக் களிப்பு

சிந்துப்பா மேடை - 15


 

நீர்மேல்கு மிழிஇக் காயம் - இது

நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்

பற்றாதி ருந்திடப் பண்ணும்உ பாயம்.

                                            

[கடுவெளிச்சித்தர்]

 

இஃது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா.  ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'நீர்மேல் ' என்பது முதல்  'மாயம்'  என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன் சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா்.  எட்டாம் சீரும்  இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு  நீண்டு இசைக்கிறது.

 

இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து, ஒவ்வோர் அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காயம், மாயம், நேயம், பாயம், என இயைபு அமைந்து வருதல் சிறப்பு.    

 

ஆனந்தக் களிப்பின் இலக்கணம்

 

கும்மி போல மும்மையில் வரினும்

அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்

தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது

ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 43 ஆம் நுாற்பா]

 

கடுவெளிச் சித்தரின் 'பாபம் செய்யாதிரு மனமே', தாயுமானாரின் 'சங்கர சங்கர சம்பு', வடலுார் வடலுார் வள்ளலின் 'ஞான மருந்து', 'சிவசிவ சோதி', 'சோதியுள் சோதி', மகாகவி பாரதியாரின் 'வந்தே மாதரம் என்போம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை',  'ஆதி சிவன் பெற்று விட்டான்' பாவேந்தரின் 'தலைவாரிப் பூச்சூடி உன்னை' குமுதம் திரைப்படத்தில் 'கல்லிலே கலைவண்ணம் கண்டான்' ஆகிய பாடல்கள் ஆனந்தக் களிப்புகளே. அவற்றைப் பலமுறை பாடி ஆனந்தக்களிப்பின் ஓசை அமைதியை உணரலாம்.

 

விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

21.02.2021.