samedi 30 juillet 2016

மாலை மாற்று
மாலை மாற்று!
  
அணியிலக்கண நுால்களில் தொன்றுதொட்டு வழங்கப்படும் சித்திரப்பாடல் மாலை மாற்று ஆகும். ஒரு மாலைக்கு அமைந்த இரண்டு தலைப்புகளில் எதனை முதலாகக் கொண்டு நோக்கினும் அம்மாலை ஒரே தன்மை உடையாதாய்த் தோன்றுமாறுபோல், ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும், முடிவிலிருந்து நோக்கினாலும் அப்பாடலே அமைவதாகும்.
  
ஒருசெயுண் முதலீ ஈரைக்கினும் அஃதாய்
வருவதை மாலை மாற்றென மொழிப
- மாறனலங்காரம்
  
இறுதி முதலாக வெடுத்து வாசிப்பினும்
மதுவே யாவது மாலை மாற்றாகும்
- முத்து வீரியம்
  
ஒரு பாட்டு இறுதியதாய்
இரையினும் அப்பாட்டாதல் மாலை மாற்று
- சுவாமிநாதம்
  
குறட்டாழிசை
  
பூவே! நாமாதே! தா!தா! வா!வா!
வா!வா! தா!தா! தேமா! நாவேபூ
  
விளக்கம்
  
பூவே! என் நாவில் அமர்ந்து கவிகொடுக்கின்ற கலைமகளே! எனக்கருள் புரிய என்னிடம் வருவாய். உன் நாவால் இனிக்கின்ற தேமாச் சொற்களையும், மதுவூறும் மலர்க்கவிதைகளையும் தருவாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.07.2016

mardi 26 juillet 2016

சட்கோண பந்தம்
சட்கோண பந்தம்!

தென்னன்!மின் மன்னன்!பொன் வண்ண வெழிலென 
என்னு ளிருக்கு மிறையவன்! - இன்ப
அமுதை அளிக்கு மழகனவன்! பொங்கும்
தமிழை அணிவான் தலை!

பாட்டரசர் கி.  பாரதிதாசன்
26.07.2016

(வெண்பா 60 எழுத்துகள். படத்தில் 55 எழுத்துகள்)

jeudi 21 juillet 2016

திரு.வி.கதிரு.வி.க
இன்னிசைச் சிந்தியல் வெண்பா

1.
பெண்ணின் பெருமையை மண்ணில் உரைத்திட்ட
அண்ணல்! அருந்தமிழ்த் தென்றல் திரு.வி.க
பொங்கும் தமிழின் பொழில்!

2.
ஓடைக் குளிர்காற்றாய் ஓங்குதமிழ்ப் பாக்களை
மேடை மணந்திடவே மீட்ட திரு.வி.க
கொஞ்சும் தமிழின் குடில்!

3.
வாடி வதங்கும் தொழிலாளர் வாழ்வேங்க  
ஈடிலா நல்லுழைப்பை ஈந்த திரு.வி.க
துாய தமிழின் சுடர்!

4.
அரும்பால் சுவையாக அன்புமழை யாகத்
திருமால் அருள்வேட்டல் செய்த திரு.வி.க
பண்ணார் தமிழின் பயிர்!

5.
எங்கும் எதிலும் இனியதமிழ் வேண்டுமெனப்
பொங்கும் உணர்வினை போந்த திரு.வி.க
அன்னைத் தமிழின் அணி!

6.
வெள்ளைக் கதராடை! கொள்ளைத் தமிழ்ப்பற்று!
பிள்ளை எழிலுள்ளம் பெற்ற திரு.வி.க
இன்பத் தமிழின் எழில்!

7.
என்கடன் நற்பணி ஈந்து கிடப்பதே!
நன்மனக் கொள்கை நவின்ற திரு.வி.க
வாழ்க்கை தமிழின் வளம்!

8.
நவசக்தி ஏட்டில் நறும்பக்தி  தந்து
சிவசக்தி சீருரைத்த செம்மல்! திரு.வி.க
வண்ணத் தமிழின் வரம்!

9.
எளிமை! இனிமை! எழுத்துலகம் போற்றும்
வளமை! பகைவிரட்டும் வன்மை! திரு.வி.க
ஆலைவாழ் தோழர் அரண்!

10.
எழுத்தின் எரிமலை! எண்ணங்கள் யாவும்
பழுத்த படைப்பாளி! பண்பார் திரு.வி.க
நாட்டின் நலமாம் நவில்!

18.07.2016

வினாதாலும் விடுத்தலும்வினாதாலும் விடுத்தலும்

தே+கொடி = தேங்கொடியா
தேன்+கொடி= தேங்கொடியா

வள்ளிமுத்து

வணக்கம்

அல்வழி, வேற்றுமை ஆகிய இருவழிகளிலும் 'தேன்' என்ற சொல்லின் முன்னர் வல்லினமெய், மெல்லினமெய், இடையினமெய் என்னும் மூன்றும் வரின் இயல்பாகும்.

மெல்லினம் வரின் 'ன்' இயல்பாதலே அல்லாது கெடும்.

வல்லினம் வரின் 'ன்' இயல்பாதலன்றிக் கொட்டு, வல்லினமேனும் அதற்கினமான மெல்லினமேனும் மிகும்.

தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை
மேவின் இறுதி அழிவும், வலிவரின்
ஈறுபோயி வலிமெலி மிகலுமாம் இறுவழி
நன்னுால் - 214

அல்வழி
தேன் + கடிது = தேன்கடிது
தேன் + மாண்டது = தேன்மாண்டது
தேன் + யாது = தேன்யாது

அல்வழியில் மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்

தேன் + மொழி = தேன்மொழி
தேன் + மொழி = தேமொழி

மெல்லினம் வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், கொடுதல்

தேன் + குழம்பு = தேன்குழம்பு
தேன் + குழம்பு = தேக்குழம்பு
தேன் + குழம்பு = தேங்குழம்பு

வல்லினம் வர அல்வழியில் 'ன்' இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்

வேற்றுமை

தேன் + கடுமை = தேன்கடுமை
தேன் + மாட்சி = தேன்மாட்சி
தேன் + யாப்பு = தேன்யாப்பு

வேற்றுமையில் மூவின மெய்களும் வர 'ன்' இயல்பாதல்.

தேன் + மலர் = தேன்மலர்
தேன் + மலர் = தேமலர்

மெல்லினம் வர வேற்றுமையில் 'ன்' இயல்பாதல், கொடுதல்.

தேன் + குடம் = தேன்குடம்
தேன் + குடம் = தேக்குடம்
தேன் + குடம் = தேங்குடம்

வல்லினம் வர வேற்றுமையில் 'ன் 'இயல்பாதல், மிகுதல், மெலிமிகுதல்.

தேனென்னும் சொல்லின் சிறந்த இலக்கணத்தை
வானென்னும் வண்ணம் வடித்துள்ளார்! - மீனென்னும்
சொல்லும் இயல்பும் மிகுதலுமாம்! துாயதமிழ்
வெல்லும் உலகை விரைந்து

18.07.2016

கட்டளை வெண்பாகட்டளை வெண்பா

[அடிதோறும் எழுத்தெண்ணிக்கை ஒன்றிவருவது கட்டளை வெண்பா.  வெண்பாவின் முதல் முன்று அடிகளில் 12 அல்லது 13 அல்லது 14 எழுத்து வரும்படி பாடலாம். ஈற்றடியில் 8 அல்லது 9 அல்லது 10 எழுத்துகள் வரும்படி பாடலாம்]

[கீழுள்ள மூன்று வெண்பாக்கள் முதல் மூன்று அடிகள் 12 எழுத்துகளையும் ஈற்றடி 8 எழுத்துகளும் பெற்றுள்ளன. இறுதி வெண்பா முதல் மூன்று அடிகள் 13 எழுத்துகளையும் ஈற்றடி 9 எழுத்துகளும் பெற்றுள்ளது]

வண்ண மயிலாக வஞ்சிக் கொடியாக
எண்ணம் பறித்திட்ட ஏந்திழை - பண்ணிசை
பாடும் குரல்கேட்டுப் பாவலன் உள்ளத்துள்
கூடும் இனிமையின் கூத்து!

கண்ணே! கனிச்சாறே! காதல் மழைதரும்
விண்ணே! வியன்மலரே! வேல்விழி - கொண்ட
படைக்கல மே!பாப் படைக்கின்ற உன்னுள்
அடைக்கல மே!என் அகம்!

திருமகள்! செல்வத்தின் சீர்மகள்! அன்பின்
பெருமகள்! தேன்கவி பேசித்  - தருவாள்
நிறைந்தோங்கும் இன்பத்தை! நெஞ்சத்துள் நாளும்
அறைந்தோங்கும் காதல் அலை!

குயிலே! மயிலே!சீர் கூட்டுகின்ற காதல்
பயிரே! படைக்கின்ற பார்வை! - உயிரே!பே
ரின்பத்தை ஈந்துவக்கும்! ஈடில் தமிழாகத்
துன்பத்தைத் போக்கும் தொடர்ந்து!

விருந்தளிக்கும் வேல்விழி! மேவுமென் நோய்க்கு
மருந்தளிக்கும் செவ்வாய்! மனத்துள் - இருந்து
விளையாடும் பெண்ணே! வியப்பளிக்கும் பாட்டாய்ச்
சுளைசூடும் உன்றன் தொடர்பு!

19.07.2016

dimanche 17 juillet 2016

கனாக் கண்டேன் தோழீ!கனாக் கண்டேன் தோழீ..நான்!
[கலிவிருத்தம்]

ஈழம் மலர்ந்தே இனிய தமிழாட்சி
வேழம் நிகர்நடை வீரர் அணிகாக்க
ஆழம் அகலம் அறிந்து தமிழ்கற்றோர்
சூழ இருக்கக் கனாக்கண்டேன் தோழீநான்!

எங்கும் எதிலும் எழிலார் தமிழ்மின்ன!
பொங்கும் புலமை பொலிந்து புகழ்மின்ன!
தங்கத் தலைவன் சமைத்த நெறிமின்ன!
சங்கம் தழைக்கக் கனாக்கண்டேன் தோழீநான்!

மண்ணை உயிரென எண்ணிய மாவீரர்
விண்ணை அடைந்தும் வியனருள் செய்கின்றார்!
பெண்ணை நிகரெனப் பேணிடும் சட்டங்கள்
கண்ணைப் பறிக்கும் கனாக்கண்டேன் தோழீநான்!

ஆங்கில மோகம் அறவே இலையென்பேன்!
பூங்குயில் கூவும் பொழில்கள் பலவென்னே்!
தேங்கொடி மீட்டும் இசையைத் தினம்உண்பேன்!
ஈங்கிணை இல்லாக் கனாக்கண்டேன் தோழீநான்!

கொஞ்சிக் களித்துக் குலவும் குயில்கள்..பார்!
விஞ்சும் நடனம் விளைக்கும் மயில்கள்..பார்!
வஞ்சியர் காதலும் பஞ்சியை வெல்லும்..பார்!
நெஞ்சம் நெகிழக் கனாக்கண்டேன் தோழீநான்!

சாதிகள் நீங்கிச் சமத்துவம் தானோங்கும்!
நீதியை நெஞ்சாய் நிலமகள் கொண்டோங்கும்!
ஆதியின் நுால்களை ஓதுயிர் நன்றோங்கும்!
சோதியாய்த் துாய கனாக்கண்டேன் தோழீநான்!

கையூட் டிலையே! கயவர்கள் இல்லையே!
பையூட் டிலையே! பழிகளும் இல்லையே!
மையூட் டழகில் மனமுறும் தொல்லையே!
தையூட்டுத் தண்மைக் கனாக்கண்டேன் தோழீநான்!

கன்னியர் காத்திடும் கற்பின் கனல்கண்டேன்!
மின்னியல் ஓங்கிடும் விந்தைத் திறங்கண்டேன்!
தன்னுயிர் தாயெனத் தாங்கும் தலைகண்டேன்!
என்னுயிர் இன்பக் கனாக்கண்டேன் தோழீநான்!

உணர்ந்தேன்! உழைப்போர் உலகின் உயிர்நாடி!
துணிந்தேன்! தொடரும் நலங்கள் பலகோடி!
அணிந்தேன் அறங்கள் அருமைக் குறள்பாடி!
இணைந்தேன் தமிழுள் கனாக்கண்டேன் தோழீநான்!

புலியின் கொடியைப் புவியே புகழ்ந்தேத்த!
மலையின் தொடரென மக்கள் இணைந்தோங்க!
அலையின் வளங்கள் நிலையாய் நிறைந்தோங்க!
கலையின் களமாய்க் கனாக்கண்டேன் தோழீநான்!

இலக்கண விளக்கம்

ஓரடிக்கு நான்கு சீர்கள் வரவேண்டும். நான்கடிகள் ஓரெதுகை பெறவேண்டும்.  வெண்டளை கொண்டிருக்க வேண்டும். ஓரடி முடிவும் அடுத்த அடி தொடக்கமும் உள்ள இடத்தில் வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் அவ்விடத்தில் மா முன் நேர் மட்டும் வரக்கூடாது.  விளங்காய்ச் சீர்கள் இப்பாட்டில் வரக்கூடாது. 

17.07.2016 

mardi 12 juillet 2016

முதன்மொழியே!
முதன்மொழியே!

நலமே புரிவாய்! நறும்பேர் தமிழே!
நிலமே அருள்வாய்! நிறைசீர் தமிழே!
பலமே தருவாய்! பயன்சேர் தமிழே!
இலையே இணையே! எனைக்..கா தமிழே!

கலைமா மகளே! கவிவான் ஒளியே!
மலைமா மகளே! மலர்த்தேன் சுவையே!
அலைமா மகளே! அருங்கான் அழகே!
தலைமா மொழியே! தமிழே! அருள்வாய்!

உனைநான் தொழுதேன்! உயர்வே கொடுப்பாய்!
மனைநான் உழுதால் வளமே விளைப்பாய்!
முனைநாள் சிறப்பாய் எனை..நீ வளர்ப்பாய்!
சுனைபோல் குளிர்சூழ் சுடரே! தமிழே!

அணியே! அமுதே! அறமே! அரணே!
மணியே! மணமே! மறமே! வரமே!
துணிவே! துணையே! தொகையே! துறையே!
பணியே புரிவேன்! படர்நாள் வரையே!

பொழியே! புகழே! புவிமா மொழியே!
எழிலே! இசையே! இறைமா வடிவே!
விழியே! விருந்தே! விரைந்தே தினம்..பாத்
தொழிலே தொடர்வேன் வழியே புனைவாய்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.07.2016

mercredi 6 juillet 2016

படமும் பாட்டும்தாமரைக் காடு!

1.
பெண்ணின் திருவருளைப் பெற்றிடவே, தாமரை
தண்ணீரில் செய்யும் தவம்!

2.
தண்ணீரில் தத்தளிக்கும் தாமரைக்குக் கை..கொடுத்துப்
பெண்ணே..நீ தீர்ப்பாய் பிணி!

3.
குளங்காதல் கொண்டதுவோ? கோதைக்குப் பூ..தந்[து]
உளங்கூடச் சொல்லும் உவந்து!

4.
தாமரைப் பூக்களைத் தள்ளாடச் செய்யும்!உன்
மாமரைக் கண்ணின் மது!

5.
தாமரைப் பூவெல்லாம் தாவணிச் சீர்கண்டு
பாமரை பாடும் பணிந்து!

6.
செம்மைக் கரம்பற்றச் செந்தா மரையேங்கும்
உம்மை உறவாய் உணர்ந்து!

7.
தாமரைக்குத் தாகமடி! தங்கமே உன்னமுத
நாமரை நீரினை நல்கு!

8.
சின்னவளே நீயழகா? செந்தா மரையழகா?
என்னவளே! நீயே எழில்!

9.
தங்கமே! உன்னழகால் தாமரை நெஞ்சுக்குள்
பொங்குமே ஏக்கும் புரண்டு!

10.
தலைவணங்கும் தாமரைகள்! தாரகையே! உன்றன்
கலைவழங்கும் கண்களைக் கண்டு!

11.
தாமரைக் காடே! தமிழ்தருவாய்! என்னுடைய
நாமரை மீது நடந்து!

12.
உடன்பிறப்பைக் கண்டுவக்க ஓடோடி வந்தாய்!
படரன்பைக் காட்டும் படம்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2016

mardi 5 juillet 2016

குகன் படகு பேசுகிறது - பகுதி 3புதுவைக் கம்பன் விழாக் கவியரங்கம்
குகன் படகு பேசுகிறது!

<
குகனின் படகு நான்
அகமுற்றுப் பேசுகிறேன்!
ஆற்றின் காற்றாகக்
சொற்களை வீசுகிறேன்!

தண்ணீரில் உள்ளதால்
என் பேச்சைத்
தள்ளிவிட வேண்டாம்!

கண்ணீரில் பேசுகிறேன்!

கடைசியில் வந்ததால்
கண்ணீரில் பேசுவதாய்க்
கற்பனை செய்ய வேண்டாம்!

கடல் செல்லும் என் மக்கள்
காணமால் போகின்றார்!
ஆதலால்
கண்ணீரில் பேசுகிறேன்!

<
காதலைக் காட்டும்
அகத்துறை!
மோதலைக் காட்டும்
புறத்துறை!
காதலையும் மோதலையும்
காட்டும்
படகுத்துறை!

<
இறைவனும் நானும் ஒன்று!
இறைவனும்
கரையேற்றுவான்!

நானும் கரையேற்றுவேன்!
அதனால்
இறைவனும் நானும் ஒன்று!

சிலேடை வெண்பா (படகும் பரமனும்)

கடல்தவழும்! கண்தவழும்! காதல் மணக்க
இடம்அருளும்! வாழ்நலம் ஏந்தும்! - திடமாக
நம்மைக் கரையேற்றும்! நல்ல எழிற்படகும்
செம்மைத் திருமாலும் செப்பு!

<
மக்களைப் படகாக்கி
அரசியல் வாதிகள்
கரையேறும் காலமிது!

அரசியல் கடலில்
சிலர் முழுகி முத்தெடுப்பார்!
சிலர் முழுகி - மக்களின்
மூச்செடுப்பார்!

<
படகு நான்
பேச்சுக் கலையில் சிறந்தவன்!
பைந்தமிழ்
ஆட்சிக் கலையில் உயர்ந்தவன்!
எப்படி?

இரண்டு நாக்குகளை வெட்டி
ஒன்றாய் ஒட்டி
வளைத்தால் - என்
உருவம் வரும்

நாவலரின் நாக்கின் மேல்
நடமாடும் தமிழன்னை
இன்றென்
வாக்கின் மேல் வலம் வருவாள்!

நாக்குகள் இரண்டை
நானுற்ற காரணத்தால்
பேச்சுக் கலையில்
சிறந்தவன் நானே!

இரு நாக்குப்
பேச்சென என்னை
எள்ளி விட வேண்டாம்!

என் நாக்கு
கருநாக்கு!
கடல் அலையின்
பெரும் நாக்கு!
கவி அலையின்
அரும் நாக்கு!

<
முப்படையில்
கப்பல் படை
என் வாரீசுகளே!

<
நாடுகளைக்
கண்டு பிடிக்க
என் வாரீசுகளே
தொண்டு புரிந்தனர்!

<
உலக முன்னேற்றத்திற்கு
என் வாரீசுகளே
வழி போட்டனர்! - பிள்ளையார்
சுழி போடட்டனர்!

<
வயல்வெளியில்
நீர் அள்ளும்
ஏற்றப் பாட்டுப்போல்..
கடல்வெளியில்
நீர் தள்ளும்
என் பாட்டும்
ஏற்றப் பாட்டு - ஆம்
தமிழரின் ஏற்றத்தைச்
சாற்றும் பாட்டு!

<
நான் மிதப்பது
தண்ணீரில்!
இந்த அரங்கம் மிதப்பது
தமிழ்ச்சீரில் - கம்பன்
கவிச்சீரில்!

<
நான்
நீரில் மிதக்கின்றேன்!
என்னையும் விடச் சிலர்
நீரில் மிதக்கின்றார் - மது
நீரில் மிதக்கின்றார்!

<
ஆற்றுக்கு அணையுண்டு
ஆசைக்கு அணையில்லை!
ஆற்றின் கரைபோன்று
ஆசைக்குப் கரையிட்டால்
அழிவுக்கு வழியில்லை!

காற்றின் திசையறிந்தே - என்
பயணம் சிறக்கும்!
வாழ்வில் - எதிர்
காற்றின் விசையறிந்தால்
வெற்றி கிடைக்கும்!

<
எடுப்பு, தொடுப்பு, முடிப்பு
இசைப்பாட்டு!
துடுப்பு - என்றன்
விசைப்பாட்டு!

தமிழா!
துணிவே வாழ்வின்
மிசைப்பாட்டு!

துணிவை இழந்தால்
காண்பாய்
வசைப்பாட்டு!

<
படகில்
நீர் புகுதல் ஆகாது!
வாழ்வில் - கெட்ட
பேர் புகுதல் ஆகாது!

கடலும் ஆறும்
ஊர் புகுதல் ஆகாது!

சாதிவெறி! சமயவெறி!
பார் புகுதல் ஆகாது!

<
இணைந்து கட்டிய
இரண்டு படகுகள்
இராமனும் இலக்குவனும்!

<
தண்ணீரில் ஆடும்
படகானான்
சுக்கிரிவன்!

<
ஆற்றின் ஆழம்
அறியாமல் இறங்கியவன்
வாலி!

<
காணமால் போன
படகைக்
கண்டுபிடித்த காவலன்!
சொல்லின் நாவலன்!
அனுமன்!

<
வண்ணப் படகாக
எண்ணம் பறித்தாள்
அன்னைத் சீதை!

<
கடலுக்குள்
சுழல் உண்டு!
காதல் கொண்ட
உடலுக்குள்
சுழல் உண்டு!

காதல் சுழலில்
சிக்கிய
இராமனும் சீதையும்
ஓடாத படகானார்!

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபொறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
(கம்பன் - 514)

<
துடுப்பிழந்த படகானான்!
போர்க்களத்தில்
இராவணன்!

<
கரையறியாப் படகானான்
பரதன்!

<
புயல் கொண்ட
படகானான்
தயரதன்!

<
உடைந்த படகானாள்
சூர்ப்பணகை!

<
நீரில் முழுகும்
படகானான்!
அன்பென்னும்
சீரில் முழுகும்
கும்ப கருணன்!

<
கரையேற்றும் படகாய்க்
இராமனைக் கொண்டான்!
வீடணன்!

<
சுனாமிபோல்
எழுந்தவன்
இந்திரசித்து!

<
படகின்
வளைவை நிகர்த்தது
கூனியின் முதுகு!

<
பிரிந்து சென்ற
காதலன் வரவுக்குக்
காத்திருக்கும்
காதலிபோல்
நான் காத்திருக்கிறேன்!
இராமன் மீண்டும்
வருவானென....

நல்லதோர் ஆட்சி
அமையுமெனக்
காத்திருக்கும்
தமிழகம்போல்
நான் காத்திருக்கிறேன்

இராமன் மீண்டும்
வருவானென....

பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.05.2016