jeudi 31 décembre 2015

தமிழண்ணல் கையறுநிலை




முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து
நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ்
அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக்
கண்ணீர்க் கடலெனக் காண்!

ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத்
தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா
நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து
பாடுகுயில் தேடும் பறந்து!

ஆழ்ந்த உரையளித்துத் தாழ்ந்த நிலைதுடைத்துச்
சூழ்ந்த பகையொழித்துத் தொண்டீந்தார்! - வீழ்ந்துயிர்
அக்கக்காய் ஆகிடவே அய்அய்யோ எங்குற்றார்?
இக்கெட்டில் வாடும் இனம்!

அயற்சொல் அகற்றிடுவீர்! அந்தமிழ் நம்மின்
உயிர்கொள் எனவுரை ஓர்ந்தார்! - உயர்வனைத்தும்
தந்த தமிழண்ணல்! எந்த உலகுற்றார்?
சிந்தை அழுமே சிதைந்து!

தாய்மொழிக் கல்வி தழைத்திட வேண்டியே
ஓய்வின்றி நாளும் உழைத்தவர்! - சாய்வின்றி
வாழும் வழியளித்த வள்ளல் பிரிந்ததுமேன்?
சூழும் இருளே தொடர்ந்து!

கோயில் தலமெங்கும் கோலத் தமிழ்மணக்க
வாயில் வடித்த தமிழண்ணல்! - சேயவரைத்
தாயிங்குத் தேடுகிறாள்! போயுள்ள ஊரெதுவோ?
வாயிங்குக் கத்தும் வறண்டு!

உண்ணா துறங்கா துழைத்தவர்! எந்நாளும்
மண்ணார் மடமையை மாய்த்தவர்! - திண்ணமுடன்
இன்னும் பல..பகைவர் இங்குள்ளார்! ஏன்பிரிந்தார்?
மன்னும் துயரால் மனம்!

அண்ணல் பிரிவாலே இன்னல் பலகோடி
நண்ணும் நமதினமே! நற்றாயே! - திண்ணமுடன்
பொன்னை நிகர்த்தகவி பூத்தவர் போனதுமேன்?  
என்னையினிக் காப்பார் எவர்?

பொன்னுால் அடைந்திடும் பூந்தமிழ் வாணரை!
நன்னுால் அடைந்திடும் நாவலரை! - தொன்னுால்
அடைந்திடும் துாயவரை! அண்ணலே நானிங்[கு]
அடைந்திடும் பாதை அறை!

பண்கள் அடைந்திடும் பாவலரை! பைந்தமிழ்
எண்கள் அடைந்திடும் ஏற்றவரை! - மண்ணுலகில்
நானெவரை நாடிடுவேன்? அண்ணலே மீள்பிறக்க
வானவரை வேண்டும் மனம்!

31.01.2015

samedi 26 décembre 2015

கர்த்தர் திருத்தாலாட்டு!




கர்த்தர் திருத்தாலாட்டு!
(கலித்தாழிசை)

கண்ணே! மணியே! கமழும் மலர்க்காடே!
விண்ணே! ஒளியே! விளைந்த பசும்வயலே!
மண்ணே மணக்க வரம்தரும் மாமறையே!
தண்ணே தழைக்கும் தவமகனே தாலேலோ!
   தமிழாய் இனிக்கும் தவமகனே தாலேலோ!

அன்பின் சுரப்பே! அருட்கடலே! ஆண்டளிக்கும்
இன்பின் சுரப்பே! இறைமகனே! என்மனத்
தொண்டின் சுரப்பே! சுடர்வடிவே! மேன்மைதரும்
பண்பின் சுரப்பே! பரம்பொருளே தாலேலோ!
   பசுந்தமிழ் ஊற்றே! பரம்பொருளே தாலேலோ!

ஓலைக் குடிற்பிறந்த ஒப்பில் மறையவனே!
காலைக் கதிரே! கனிந்த கனிக்குலையே!
சோலை புகுந்துவரும் துாய மணக்காற்றே!
பாலை நிகர்த்த பசுஞ்சுவையே தாலேலோ!
   படர்தமிழ் நல்கும் பசுஞ்சுவையே தாலேலோ!

விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயல்புரிந்தாய்!
கண்மீன் களிக்கக் கலையென நீ..மலர்ந்தாய்!
பெண்ணின் துயரகற்றிப் பேணும் நலமளித்தாய்!
பண்மீன் எனக்குள் படைத்தவனே தாலேலோ!
   பைந்தமிழ்த் தேனைப் படைத்தவனே தாலேலோ!

கண்ணீர் பெருகிவர மண்ணின் சுமையுற்றாய்!
புண்ணீர் மனத்தார் புகன்ற மொழிபொறுத்தாய்!
நுண்ணீர் உயிர்முதல் நின்சீர் படைப்பன்றோ?
விண்ணீர் அருளே! வியனரசே தாலேலோ!
   வெல்லுதமிழ்ப் பாகே! வியனரசே தாலேலோ!

கற்பகப் பூவே! கருணைப் பெருங்கடலே!
நற்றவத் தேனே! நலமருள் தந்தையே!
அற்புத சீரே! அமுதுாறும் நற்சுனையே!
பெற்புற என்னுள் புகுந்தனையே தாலேலோ!
   பூந்தமிழாய் மின்னிப் புகுந்தனையே தாலேலோ!

மலைமேல் பொழிந்த மணியுரையை என்னென்பேன்!
அலைமேல் நடந்த அருஞ்செயலை என்னென்பேன்!
கலைமேல் சுரக்கும் கனியமுதை என்னென்பேன்!
தலைமேல் தரித்து வணங்குகிறேன் தாலேலோ!
   தண்டமிழ் பாடி வணங்குகிறேன் தாலேலோ!

முள்ளணி சூடியவா! முல்லை அகத்தழகா!
வள்ளணி ஏற்றுயிர் வாடி வதங்கியவா!
உள்ளணி நானுற உன்றன் திருவடிக்குச்
சொல்லணி சூடித் தொழுகின்றேன் தாலேலோ!
   துாயதமிழ் பாடித் தொழுகின்றேன் தாலேலோ!

சிலுவை சுமந்து..நீ சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உயர்நெறி தந்ததுவே!
வலமை வழிகாண வந்துன்னைப் போற்றுகிறேன்
நிலவை நிகர்த்தவனே! நெஞ்சுருகித் தாலேலோ!
   நீடுதமிழ் போன்றவனே நெஞ்சுருகித் தாலேலோ!

வெள்ளிப் பணம்வேண்டிக் காட்டிக் கொடுத்தவனை
அள்ளி அணைத்த அரும்பெருஞ் சோதியனே!
கொள்ளிப் பிசாசுகளின் கொட்டம் ஒழித்தவனே!
பள்ளி கிடத்தியுனைப் பாடுகிறேன் தாலேலோ!
   பைந்தமிழ்ப் பாரதிநான் பாடுகிறேன் தாலேலோ!

25.12.2015

lundi 14 décembre 2015

குன்றேந்திக் காப்பாய்!




குன்றேந்திக் காப்பாய்!

இன்பம் அளிக்க இறங்கிவரும் நல்லமுதம்
துன்பம் கொடுத்துத் தொடருவதேன்? - அன்றுலகைக்
குன்றெடுத்துக் காத்தவனே! கோகுலத்து நாயகனே!
இன்றெடுத்துக் காப்பாய் எமை!

கொட்டும் மழையென்று கூறுவதால் தேள்போன்று
கொட்டும் துயரைக் கொடுப்பதுவோ? - கட்டின்றி
நீர்புகுந்து ஓங்குவதோ? நின்னைச் சரணடைந்தேன்!
ஊர்புகுந்த ஊழை ஒழி!

தழைத்தோங்கும் தண்மைநலம் தந்துவக்கும் நன்னீர்
இழைத்தோங்கும் பேரின்னல் ஏனோ? - அழைத்தோங்கும்
என்குரல் கேட்காமல் எங்குற்றாய் ஒண்கண்ணா!
உன்னருள் வேண்டும் உடன்!

தாயென வந்து தழைப்பூட்டும் தண்மழை
பேயென ஆட்டம் பிடித்ததுமேன்? - மாயவனே!
ஆநிரை காத்திட அன்று விரைந்தனையே!
பூநிறை துன்பத்தைப் போக்கு!

வள்ளல் மழையின்று வாட்டுவதேன்? எம்மண்ணின்
உள்ளம் உடைத்தே ஒழுகுவதேன்? - வெள்ளத்துள்
இல்லம் முழுகுவதோ? என்றன் எழிற்கண்ணா!
அல்லல் அனைத்தும் அகற்று!

பொல்லார் புகுந்து புரட்டும் அரசியலால்
நில்லா திறங்கும் நெடுமழையே! - நல்லார்
குரல்கேட்(டு) உடன்வரும் கோவிந்தா! எங்கள்
இருளோட்ட வா..வா எழுந்து!

கொள்ளை அடிப்போர் குவிந்துள்ள காரணத்தால்
பிள்ளை மனம்நீங்கிப் பெய்கிறதோ? - வெள்ளத்துள்
பள்ளி கிடக்கும் பரம்பொருளே! எம்துயரை
அள்ளி உடனே அகற்று!

ஓதும் மறையாளர் சூது மனங்கொண்டு
மோதும் உணர்வேந்தி முன்னின்றார்! - போதுமெனப்
பொங்கிப் பொழிந்ததுவே? புட்கொடி நாயகனே!
எங்கள் துயரை எடு!

பண்பட்டு வாழ்ந்தவர் புண்ணுற்றுப் போனதனால்
விண்கெட்டுத் துன்பம் விளைந்ததுவோ? - கண்கெட்டு
நிற்கின்றோம்! மாதவனே! நின்னிடத்தில் எம்முயிரை
விற்கின்றோம் காப்பாய் விரைந்து!

தொடரும் பெருமழை தொல்லை அகலச்
சுடரும் கதிரொளி சூழச் - படர்பசுமை
எங்கும் செழித்தொங்க என்னுயிர் மாயவனே!
இங்குன் அருளை எழுது!

14.12.2015