dimanche 29 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 13
29.12.2019
  
தைம்மகளே! தங்கத் தமிழ்மகளே! கண்ணழகு
மைம்மகளே! வண்ண மலர்மகளே! - கைம்மணக்கும்
பாட்டளிப்பாய்! பார்மணக்கும் பண்பளிப்பாய்! பாவலரின்
கூட்டளிப்பாய் மேன்மை குவித்து!
  
தொண்டுளம் தந்திடுவாய்! துாய குறணெறியின்
பண்டுளம் தந்திடுவாய்! பண்ணமுதைக் - கண்டுளம்
ஓங்கவே தந்திடுவாய்! ஒப்பில் உயர்தமிழே!
தாங்கவே தந்திடுவாய் சால்பு!
  
தோன்றும் கதிர்நீயே! துாய மழைநீயே!
ஊன்றும் புகழ்நீயே! ஒண்டமிழே! - ஆன்ற
நிலம்நீயே! தீநீயே! நற்காற்றும் நீயே!
வளம்நீயே! வாழ்வே வழங்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

samedi 28 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 12
28.12.2019
  
தென்மொழியே! செம்மொழியே! தேவர்மகிழ் தொன்மொழியே!
பொன்மொழியே! பொங்கும் புகழ்மொழியே! - மென்மொழியே!
வன்மொழியே! வாழ்வின் வளமொழியே! வண்டமிழே!
நன்வழியே நானோங்க நல்கு!
  
தேன்மொழியே! என்னெஞ்சத் தேற்றொளியே! ஆண்டபுகழ்க்
கோன்மொழியே! கோலக் குலமொழியே! - கான்மொழியே!
வான்மொழியே! நுண்ணறிவு மாண்மொழியே! வண்டமிழே!
நோன்வழியே நானுற நோக்கு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

jeudi 26 décembre 2019

காலை வெண்பா

இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 11
27.12.2019
  
துணையானாய்! நெஞ்சச் சுடரானாய்! காக்கும்
அணையானாய்! அன்பாம்..தே னானாய்! - பிணையானாய்
பாடும் படைப்பினிலே! பைந்தமிழே! பண்ணமுதே!
கூடும் புகழே கொழித்து!
  
துாயவளே! தொன்மைத் தொகையவளே! பல்சந்த
மாயவளே! காக்கும் மரைமகளே! - நேயவளே!
சேயவளே! சீரொளிரும் தென்னவளே! என்னுயிர்த்
தாயவளே தாராய் தகை!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mercredi 25 décembre 2019

திருக்கர்த்தர் திருநாள்


திருக்கர்த்தர் திருநாள் வாழ்த்து!
  
மண்ணின் சுமையைச் சுமந்திட்ட
   விண்ணின் வேந்தன் திருநாளைக்
கண்ணின் மணியே! கட்டழகே!
   காதல் கொண்டே போற்றிடுவோம்!
பெண்ணின் பெருமை காட்டியவர்!
   பேற்றை யள்ளி யூட்டியவர்!
பண்ணின் இனிமை நம்கா்த்தர்!
   பாடி யாடிப் பணிந்திடுவோம்!
  
ஒன்றே இறைவன் 'உண்மையொளி'
   உலகம் எங்கும் ஒளிரட்டும்!
நன்றே வாழ 'அன்பினொளி'
   நலமாய் எங்கும் பரவட்டும்!
குன்றே உருகத் திருமகனார்
   கொண்ட காட்சி! அருளாட்சி!
இன்றே வாழ்த்தி வணங்கிடுவோம்!
   இதயம் ஒன்றி மகிழ்ந்திடுவோம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
25.12.2019

lundi 23 décembre 2019

காலை வெண்பா


இனிய வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 மார்கழி 8
24.12.2019
  
தாயே! தவச்சுடரே! உன்னழகைச் சாற்றுமென்
வாயே மணக்கும் வளத்துடனே! - சேயே..நான்
ஓங்கக்கண் காட்டு! உயர்தமிழே! நற்புகழைத்
தாங்கப்பண் கூட்டு தழைத்து!
  
தித்திக்கும் செம்மொழியே! சித்திக்கும் தென்மொழியே!
எத்திக்கும் உன்போல் இனிப்பில்லை! - புத்திக்குள்
சூழும் சுடர்த்தமிழே! தொன்மொழியே! உன்னடியில்
ஆழும் அடியேன் அகம்!
  
தீட்டும் கவியாவும் மூட்டும் எழுச்சியை!
நாட்டும் இனத்தின் நலக்கொடியை! - காட்டும்
கமிழ்நெறியை! கன்னல் கனித்தமிழே! காப்பேன்
சமநெறியை அன்பே தழைத்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

dimanche 22 décembre 2019

பிரிந்தெதிர் செய்யுள்


பிரிந்தெதிர் செய்யுள்
  
பிரிந்து எதிர்வனவே பிரிந்து எதிர்செய்யுள்
[மாறன் அலங்காரம் - 290]
  
நிறைவுற்ற ஒரு செய்யுளின் ஈற்றெழுத்துத் தொடங்கி எதிரேறாக நடந்து வேறொரு செய்யுளாக நிகழ்தல் பிரிந்து எதிர்செய்யுளாம்.
  
மேகமே வா..வா!
வேகமா வா!கா!
வாகனே வா..மா
வேகனே வா..வா!
  
இச்செய்யுளின் ஈற்றெழுத்தில் தொடங்கி முதல் எழுத்தில் நிறைவுறும் செய்யுளைக் கீழ்க்காண்க.
  
வா..வா னேகவே
மா..வா னேகவா!
காவா மாகவே
வா..வா மேகமே!
  
கா - காத்தல்
வாகன் - அழகன்
ஏகன் - ஒருவன்
வான் - நன்மை, வானம்
காவு - காவாம் - சோலை
  
முதல் செய்யுளின் பொருள்
  
மழைதரும் மேகமாய் வாராய்.. வாராய். வேகமாய் வந்து எம்மைக் காப்பாய். அழகனே வாராய்! பெருமை நிறைந்த ஒருவனே வாராய்.. வாராய்.
  
எதிரேற்றின் பொருள்
  
வாராய் நன்மையை நடத்தவே, அழகிய வானுலகை ஆளுகின்ற ஒருவனே. மண்ணுலகம் பூஞ்சோலையாய் ஆகவே, மேகமாய் வாராய்.. வாராய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.12.2019

samedi 21 décembre 2019

மார்கழிப் பெண்ணே


மார்கழிப் பெண்ணே
[மார்கழியைக் காதலியாக எண்ணிப் பாடிய வெண்பா மாலை]
  
1.
மார்கழிப் பெண்ணே! மதுமலர்க் கண்ணே!உன்
சீர்பொழி பேரழகில் சிக்குண்டேன்! - ஊர்பொழில்
ஆடை தரிக்கும்! அமுதே..உன் பார்வையால்..பா
வோடை சுரக்கும் உளத்து!
  
2.
வையத்துப் பேரழகே! வாழ்கவி என்னெஞ்ச
மையத்துப் பேரொளியே! மாங்குயிலே! - ஐயத்[து]
இடமின்றிச் சொல்வேன் இசைத்தேன்..நீ! பொன்னார்
குடமொன்றிக் கொள்வேன் குளிர்!
  
3.
ஓங்கி யொளிர்பவளே! ஒண்டமிழை உள்ளத்துள்
தாங்கித் தழைப்பவளே! தண்கொடியே! - ஏங்கி..நான்
நிற்கின்றேன்! நீள்விழி நேரிழையே! நின்னுருவில்
கற்கின்றேன் காதல் கவி!
  
4.
ஆழிபோல் சுற்றுதடி அன்பே நினைவலைகள்!
மேழிபோல் பற்றுதடி மேனியை! - ஊழிபோல்
என்னை யுருட்டாதே! ஏற்றருள்வாய்! உன்னுறவு
முன்னைத் தவத்தின் முளைப்பு!
  
5.
மாயனைச் சேர்ந்த திருமகள்போல், பாட்டரசு
நேயனைச் சேர்ந்த நிறைமதியே! - தாயனைந்த
பொன்மகளே! பொங்கும் புகழ்மகளே! நன்மணிகள்
மின்மகளே தாராய் விருந்து!
  
[தொடரும்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்

dimanche 15 décembre 2019

மூவின வெண்பா - 3

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வெண்பா மேடை - 152
  
மூவின வெண்பா - 3
  
கனியகமே! வாகணியே! கண்வேத மாயா!
பனியகமே! யாகமுரை,பா ணா..வா! - தனியா!
கனவே கணியகமே! வாகைனர் தேனார்
கனிவே! தமிழே கமழ்!
    
பண்வகைநல் கும்..வா! பணிவகை நல்கும்..வா!
கண்வகைநல் கும்..வா! கமழ்தமிழ் - தண்வகை
நல்கும்..வா! தேனே..வா! பாநாவு பொன்வகை
மல்கும்..வா! காநல்கும் வா!
      
கண் - அறிவு
கா - சோலை
    
இவ்வெண்பாவில் வல்லினவெழுத்தைத் தொடர்ந்து மெல்லினவெழுத்தும், அதைத்தொடந்து இடையினவெழுத்தும் என மாறி மாறி வெண்பாவின் தொடக்கத்திலிருந்து ஈற்றுவரை அமையவேண்டும்.
    
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.12.2019

vendredi 13 décembre 2019

மூவின வெண்பா - 2


வெண்பா மேடை - 151   
மூவின வெண்பா - 2
  
காதல் நலங்கூட்டும்! யாழின் களிப்பூட்டும்!
நாத வகைநாட்டும்! கண்கமழும் - மாதவமாய்
விந்தைச் சுவையூட்டும்! நற்கவிதை வாழ்வோங்கச்
சிந்தை மரபூட்டும் வார்த்து!
  
வெண்பாவின் முதல் சீர் தொடக்கம் வல்லினத்திலும், இரண்டாம் சீர் தொடக்கம் மெல்லினத்திலும், மூன்றாம் சீர் தொடக்கம் இடையினத்திலும், இவ்வாறே மாறி மாறி ஈற்றுச்சீர்வரை அமையவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
13.12.2019


mercredi 11 décembre 2019

மூவின வெண்பா - 1




வெண்பா மேடை - 150
  
மூவின வெண்பா - 1
  
தண்பொழில் பூத்தொளிரும்! தங்குசுவைத் தேன்கனிகள்
கண்ணெழில் கோத்தொளிரும்! காப்பொளிரும்! - பண்ணெழில்
சந்தமொழிக் கூத்தொளிரும்! தண்டமிழே! பார்மணக்க
வந்தவழி மூத்தொளிரும் வாழ்ந்து!
  
வெண்பாவின் அனைத்துச் சீர்களிலும் தமிழின் மூவினம் பயின்று வரவேண்டும் [வல்லினம், மெல்லினம், இடையினம்]
  
விரும்பிய பொருளில் 'மூவின வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
11.12.2019

dimanche 8 décembre 2019

ஈற்று விடைக் குறள்


வெண்பா மேடை - 149
    
ஈற்று விடைக் குறள்
  
தொடுக்கும் கேள்வியின் ஈற்றில் பதில் அமையும் வண்ணம் பாடப்படும் குறள்.
  
1.
நன்றே தரும்தாய்பால் என்னென்று நற்சபையில்
முன்னே உரைத்தாய் மொழி?
  
மொழிதல் - சொற்களைத் தெளிவாகச் சொல்லுதல்
  
விடை: தாய்மொழி
  
2.
தண்மலரே! சான்றநுால் காக்கும்! தகைகூறும்!
ஒண்மலரே என்ன உரை?
  
உரைத்தல் - பொருளுடன் சொல்லுதல்
  
விடை : நுாலைக் காப்பது - மேலுரை
தகைகூறுவது - விளக்கவுரை
  
3.
மாரனே! நாமாடும் மாண்பு விளையாட்டு
வீரனே! சொல்வாய் விடை?
  
விடை: காளைமாடு [ஏறுதழுவும் விளையாட்டு]
  
4.
கலையேற்கும்! மின்னும் கணியேற்கும்! கோவில்
சிலையேற்கும் தேர்ந்ததைச் செப்பு?
  
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
  
விடை: செப்புக்கம்பி
  
5.
ஆற்றுக் குளதாம்! அழகே! அணிமொழியாய்!
காற்றுக் கிலையாம் கரை?
  
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
  
கரை: நீர்க்கரை, எல்லை
ஆற்றுக்கு கரையுண்டு,
காற்றுக்குக் கரையில்லை
  
6.
ஆட்டுக் கடைக்கே அதிகாலை செல்கின்றேன்
கூட்டிப் பொருள்களைக் கூறு?
  
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
  
விடை: ஆட்டுக்கறி ஒரு கூறு வேண்டும்
  
7.
உன்னுடை ஏற்கும்! உறங்க இடமிருக்கும்
அன்புடை நண்பா அறை!
  
அறைதல் - வன்மையைாய் மறுத்துச் சொல்லுதல்
  
விடை: வீட்டின் அறை
  
8.
போரேந்தும் அண்ணல் புகழேந்தும்! பேரழகாய்ச்
சீரேந்தும் வார்த்த சிலை!
  
விடை: சிலை - வில்
அண்ணல் இராமனின் புகழேந்தும் வில்லுடையவன்.
  
9.
வெண்மதி காண்பிறையைத் தாங்கும் முகத்தழகை
நுண்மதி யாளே நுதல்
  
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
  
விடை: நுதல் [பெண்ணின் நெற்றி]
  
10.
தேருணர முன்னொளிக்கும்! ஈற்றொளிக்கும்! தேவியே
பாருணரப் பாடிப் பறை
  
பறைதல் - அனைவரும் அறிய வெளிப்படுத்துதல்
  
விடை: பறைமேளம்
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
08.12.2019

jeudi 5 décembre 2019

குறில் நெடில் வெண்பா


வெண்பா மேடை - 148
  
குறில் நெடில் வெண்பா
  
பொன்மேவு பூஞ்சிட்டே! மின்மேவு சீர்ப்பட்டே!
இன்மேவு தேன்கட்டே! எந்நாளும் மோகமே
உள்ளூற, ஆசையால் சொல்லுாற, தேவியே!
கள்ளூறக் காட்டுவாய் கண்!
    
நெடில் குறில் வெண்பா
    
பாடவே கண்காட்டு! பாவையே பண்மாலை
சூடவே இன்பூட்டு! தோழியே எந்நாளும்
ஆடியே அன்பூட்டு! ஆசையே! என்மார்பில்
கூடியே நன்காடும் கூத்து!
  
கட்டளைக் கலித்துறைபோல் ஒற்றுகளை நீக்கி இவ்வெண்பாவைக் கணக்கிடவேண்டும். குறில் பின்னே நெடில் வரவேண்டும். நெடில் பின்னே குறில் வரவேண்டும் [இடையில் ஒற்று வரலாம். வராமலும் இருக்கலாம்] வெண்பா குற்றெழுத்தில் தொடங்கினால் குறில் நெடில்.. குறில் நெடில் என வரவேண்டும். நெட்டெழுத்தில் தொடங்கினால் நெடில் குறில்.. நெடில் குறில் என வரவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'குறில் நெடில் வெண்பா' அல்லது 'நெடில் குறில் வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.12.2019

mardi 3 décembre 2019

முதற்சீர் பிறழடி வெண்பா


வெண்பா மேடை - 147
  
முதற்சீர் பிறழடி வெண்பா
  
வானே யெனப்புகழ் வார்க்கின்ற வண்டமிழே!
மானே யெனத்துள்ளும் என்மனமே! - கானே..நீ
வேய்நீந்தி மேவும் வியனிசையாய், என்னுடைய
வாய்நீந்திச் செந்தேனே வா!
  
கான் - மணம்
வேய் - புல்லாங்குழல்
  
தாதுருவி வாசமிகு சாந்திழைத்து, தேன்கலந்து
வா..துருவிச் சீரேந்தி! வண்டமிழே! - மாதுருவில்
கொண்ட இறைவன் குணமொழியே! நான்மகிழத்
தண்டமிழே பாவிருது தா!
  
தாது - பூவிதழ்
உருவி - உருவுதல்
துருவி - ஆராய்தல்
மாதுருவில் - மாதை உருவில் கொண்ட
  
பிறழ்தல் - மாறுதல்
  
வெண்பாவின் முதற்சீரில் உள்ள எழுத்துக்கள் தலைகீழாய், வெண்பாவின் ஈற்றில் அமையவேண்டும். மேலுள்ள முதல் வெண்பாவில் 'வானே' என்று வந்த முதல் சீர் ஈற்றில் 'னே..வா' என்று வந்தது. இரண்டாம் வெண்பாவில் 'தாதுருவி' என்று வந்த முதல்சீர் 'விருது..தா' என்று வந்தது.
  
விரும்பிய பொருளில் முதற்சீர் பிறழடி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
12.12.2019

dimanche 1 décembre 2019

சித்திரப்பா

சித்திரப்பா - 2
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா. யாப்பருங்கலம் இதனைச் சித்திரக்கா என்றே கூறும்.
  

பத்தாகிய சித்திரப்பா
  
முக்கண் முதல்வனை வேண்டு!
[ஆசிரியப்பா]
  
ஓரிறை! முக்கண்! ஈருடல்! நான்மறைச்
சீரிசை யான்!இரு வினைதீர் நாற்பா
வுடையான்! ஒன்றுள் மூன்றுடை மொழியான்!
சுடரான்! முத்தொழில் முதலான்! நாற்பயன்
ஈவான்! இருமை காப்பான்! நற்றேன்
ஆவான்! நால்வர் அருந்தமிழ் உண்டான்!
இருசபை கொண்டான்! ஈசனைக் கூத்தனை
அருளனை வேண்டு! முப்பொறி ஒன்றுமே!
  
இதனைப் பதினாறு அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கி ஈற்றறையுள் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல், கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பத்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
இறைவன் ஒருவன். முக்கண் உடையவன். மங்கையோர் பாகத்தால் ஈருடல் கொண்டவன். நான்கு மறைகளின் சீரினை உடையவன். நம்முடைய இருவினையைத் தீர்க்கும் நான்குவகைப் பாக்களை யுற்றவன். தமிழென்னும் மொழியுள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் பெற்றான். காலைக்கதிராய் எழுகின்றவன். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வன். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்பயனையும் தருபவன். இம்மையும் மறுமையும் காப்பவன். தேன்போல் இனிப்பவன். சமய குரவர் நால்வர் அருளிய தமிழை உண்டவன். சிற்சபை, பொற்சபை கொண்டான். ஈசனை, தில்லைக் கூத்தனை, அருளனை வேண்டித் தொழுகவே. அவனருளால் மனம், வாக்கு, காயம் ஒன்றாகுமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.12.2019

சித்திரப்பா

சித்திர கவி மேடை - 8
  
சித்திரப்பா
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா.
  
பதினைந்தாக வரும் சித்திரப்பா
  
ஐங்கரனே அருள்வாய்
[நேரிசை வெண்பா]
  
ஈரடியால் என்றன் எழுகுற்றம் நீக்கிடுக!
சீரடியால் ஆறிடுக! ஓரகத்துள் - பேரார்எண்
நாட்டிடுக! முத்தமிழ் நாற்பா நவமணியாய்க்
கூட்டிடுக ஐங்கரனே கோத்து!
  
ஏழு குற்றங்கள் - அகங்காரம், கருமித்தனம், சிற்றின்ப வேட்கை, பேருணவில் ஆசை, முன்கோபம், பகை, சோம்பல்.
ஆறு - வழி
எண் - அறிவு
நாற்பா - அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  
இதனை ஒன்பது அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கிச் சுற்றிவந்து மையத்தில் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல்,கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பதினைந்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
ஐந்து கைகளை உடைய ஆனைமுகத்தானே, உன்றன் இரண்டு திருவடிகளால் என்றன் ஏழு குற்றங்களை நீக்கிடுவாய். உன்றள் சீரடியால் வாழும் வழியைக் காட்டிடுவாய். வேறு நினைவின்றி உள்ள என்னுடைய ஒருமையுளத்துள் அறிவை நாட்டிடுவாய். முத்தமிழின் நான்கு பாக்களை நவமணிபோல் ஒளிருகின்ற வண்ணம் கோத்து அளித்திடுவாய்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.11.2019

lundi 25 novembre 2019

மாலைச் சித்திர கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மாலை ஓவியக்கவிதை
  
உயிரின் வலிமை
[நேரிசைச் சிந்தியல் வெண்பா]
  
குலமே கனிய நலமே தருக!
நிலமே கனிய நிறைக - புலனே!
பணிமுறை தானே பலம்!
  
குலம் - இனம்
புலன் - அறிவு
பணிமுறை - செயலொழுக்கம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.11.2019

dimanche 24 novembre 2019

மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை


மாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை
  
வாழ்கதிர் வேணி யதி!மல்மகா வாகே!நா
வாழ்காழே! யானே தமனேகாண்! கானே
மதனே!யா ழே!காழ்..வா! நாகே..வா! கா..மல்
மதியணி வேர்திகழ் வா!
  
அருஞ்சொற்பொருள்

வேணி - வானம்
அதி - அதிகம்
மல் - வளம்
வாகு - அழகு
நா - பொலிவு
காழ் - ஒளி, முத்து
தமன் - வேலையாள்
கான் - பூ
மதன் - அழகு
நாகு - இளமை
கா - சோலை
  
கருத்துரை
  
இறைவனின் அழகைப் போற்றியும், தன்னை இறைவனின் வேலையாளாகவும், காக்க வரவேண்டுமென்றும் வெண்பா உரைக்கிறது.
  
நிலையாக இருக்கின்ற கதிர் வானே. மிகுவளமான பெருமையுடைய பேரழகே. பொலிவாக ஆழ்கின்ற ஒளியே. யான் உன்னுடைய வேலையாள் காண்க. பூவழகனே, யாழிசைபோல் இனிப்பவனே, முத்தே, வாராய். இளமையாய் ஒளிர்பவனே வாராய். சோலைபோல் வளமுடைய அறிவணிவேர் திகழ வாராய்!
  
இவ்வெண்பா 53 எழுத்துக்களைப் பெற்று மாலை மாற்றாகச் சிலுவையில் வந்துள்ளது. சிலுவையின் அடியில் இடப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி வலப்பக்கத்தில் வெண்பா முடிவதுபோல், வலப்பக்கத்தில் தொடங்கி மேலேறிச் சுற்றி இடப்பக்கத்திலும் முடியும். வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் ஒன்றி வருவதே இச்சிலுவைப் பாடலின் அழகாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.11.2019

jeudi 21 novembre 2019

சிலுவைச் சித்திர கவிதை


சிலுவை ஓவியக் கவிதை
  
வானரசே வாராய்!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
  
வானே! கோனே.. வா!பாரே!
தேனே! தேரே! பாவா..வா!
கானே! கா!வா வாகே..நீ
தானே சீரே தருவாயே!
  
அருஞ்சொற்பொருள்
  
கோன் - அரசன்
பார் - உலகம்
பாவன் - கவிஞன்
கான் - மணம்
வாகு - ஒளி
  
கருத்துரை
  
வானாகத் திகழ்கின்ற இறைவனே, எங்கள் அரசனே, வாராய்! புவியாய்ச் சுழல்பவனே, தேனாய் இனிப்பவனே, தேரழகு கொண்டவனே, உயிர்களின் வாழ்வைத் தீட்டும் பாவலனே, வாராய்! பூஞ்சோலையாய் மணப்பவனே, என்னைக் காப்பாய்! இருளீக்கும் பேரோளியே, வாராய்! நான் கேட்கும் முன்னே என் மனமறிந்து வாழ்வோங்கும் சீரைத் தருவாய்!
  
இவ்வஞ்சி விருத்தம் 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, சென்ற வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.11.2019

mercredi 20 novembre 2019

சிலுவைச் சித்திர கவி


சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
  
கண்ணீர்மண் காண்!புண்காண்! மன்மன மன்மதி!
எந்நீர் கழுவு[ம்] இனி?
  
மன் - இழிவு
  
கண்ணீர் மழையில் நனைந்த நிலத்தைக் காண்க. ஆறாத புண்ணைக் கொண்ட உளத்தைக் காண்க. கழிந்த மனத்தை, இழிந்த மதியை எந்நீராலும் இனிக் கழுவ முடியா.
  
இக்குறள் வெண்பா 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, வந்த வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019

mardi 19 novembre 2019

சிலுவை ஓவியக்கவிதை


சிலுவை ஓவியக்கவிதை
[குறள் வெண்பா]
  
சிந்தை யுருகுமே! சீர்மை சுடருமே!
எந்தை யடிக்கே[து] இணை?
  
சிலுவை வரைபடத்தில் அமையும் இக்குறள் 23 எழுத்துகளைப் பெறும். குறளின் 5 ஆம் எழுத்தும் 13 ஆம் எழுத்தும் ஒன்றி வரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
19.11.2019

dimanche 17 novembre 2019

மாலை மாற்றும் சிவலிங்கமும்

மாலை மாற்று சிவலிங்க ஒவியக்கவிதை
  
1.
கண்கூட்டி டும்..வடிவாய்க் கார்கூட்டும் வாழ்வாய்க்..காப்
பண்படைக்க ஈசனை,மா வல்லையாய்த் - தண்ணொளியாய்த்
தங்க மொளிர்தகையாய் மண்காக்கும் பொங்கன்பாய்க்
கங்கைத் தலைவனைக் காட்டு!
  
2.
மேடுமிடு! கூர்வேன் மதிவிளை! மூலமே
தேடு! மிகவு யதிபுகழ் வாழ்க!
புதிய வுகமிடு! தேமேல மூளை
விதிமன்வேர் கூடுமிடு மே!
  
மாலையாக அமைந்துள்ள வெண்பா இடச்சுழியாகவும் வலச்சுழியாகவும் படிக்கலாம்.
    
அருஞ்சொற்பொருள்

வல்லை - வலிமை
மேடு - பெருமை
வேன் மதி - வேல் மதி
மூலம் - முதன்மை
மிகவு - மிகுதி
யதி - துறவி
உகம் - பூமி
தே - தெய்வம்
வேலவன் - அறிஞன்
விதி - உண்மை
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.11.2019

mardi 12 novembre 2019

மீன் ஓவியக் கவிதை



மீன் ஓவியக் கவிதை
  
உயிரே...வா!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
  
சீரே! உயிரே! தேரே..வா!
தாரே! சாரே! இன்வேரே!
வாரே! வேயார் வாகே..வா!
பேரே! பேறே! பேட்பருளே!
  
அருங்சொற்பொருள்
  
தார் - மாலை
சார் - அழகு
வேர் - மூலம்
வார் - நேர்மை
வேய் - மூங்கில்
வாகு - அழகு
பேர் - பெருமை
பேறு - செல்வம்
பேட்பு - விருப்பம்
  
கருத்துரை
  
என் வாழ்வின் சீரே! என்னுயிரே! வணங்கும் தேர்போல் வாராய்! மணக்கும் மாலையே வாராய்! அழகே வாராய்! இன்பத்தின் மூலமே வாராய்! நேர்மையே வாராய்! மூங்கிலைப்போல் பளபளக்கும் மேனியளே வாராய்! பெருமையை, பேறுகளை விருப்பமுடன் அருள்வாய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
11.11.2019

dimanche 10 novembre 2019

விளக்கு ஓவியக்கவிதை


காமாட்சியம்மன் விளக்கு ஓவியக் கவிதை
  
மனமே விளக்கு!
[நேரிசை யாசிரியப்பா]
  
வெளியின் பெருவொளி! வேதத் திருவொளி!
களிப்பின் கருவொளி! கருணை கமழொளி!
உலகே பாடித் தொழுமொளி! உயிரொளி!
நிலமே யுறுவெறி நீக்குந் தகையொளி!
தாளச் சபையிற் றேமா வணங்கு
கோலக் குங்குமங் கூட்டிய நோக்கொளி!
அன்பொளி வாழ்வின் வளத்தொளி! பண்பொளி
இன்பொளி! அறிவி லெழுமொளி சீரொளி!
தாயே! நீலி! வேணியே! தீமே!
தேயா வாறு தேனே மா..தா!
மானே! தேறு வாயா தேமே
தீயேணி வேலி நீயே தா..தா!
வினைவிளை விதியை மாற்றி யெனைக்..கா!
உனையே மகிழ வோது கின்றேன்!
புனலே! என்றன் பொன்..மா
மனமே விளக்கு! மாதா வெழுகவே!
  
அருஞ்சொற்பொருள்
  
தேமா வணங்கு - தேமாவாக இனிக்கும் அணங்கு
நோக்கு - அழகு
நீலி - பார்வதி
வேணி - வானம்
தீம் - இனிப்பு
தீ - அறிவு, விளக்கு
தேம் - மணம்
மா - பெருமை, அழகு
தேறு - தெளிவு
புனல் - ஆறு, குளிர்ச்சி
  
கருத்துரை
  
ஒளியின் சிறப்பினைப் போற்றியும், உயிரொளியைச் சாற்றியும், மனமே விளக்காக ஏற்றியும் இப்பாடல் ஒளிர்கிறது.
  
தாயே! நீயே வெளியின் பெருவொளியாகவும், வேதத்தின் திருவொளியாகவும், இன்பத்தின் கருவொளியாகவும், உலகைக் காக்கும் கருணையொளியாகவும், மக்கள் பாடித் தொழுமொளியாகவும், உயிரொளியாகவும், நிலமுறும் வெறியை நீக்கும் தகையொளியாகவும், திகழ்கின்றாய்.
  
ஆடற்கூத்தனுடன் அரங்கில் ஆடும் அணங்கே! உன் குங்கும வொளியே அழகின் பேரொளியாக மிளிர்கின்றது.
  
அன்பொளியே வாழ்வின் வளத்தொளியாகும். பண்பொளியே இன்பொளியாகும். அறிவொளியே சீரொளியாகும்.
  
பார்வதியே! வானே! இனிப்பே! தேனே! வாழ்வு தேயாத வண்ணம் பெருமையை எனக்குத் தருவாய்.
  
மானே! தேறுகின்ற நல்லுரை வழக்கும் என் வாய்மொழி மலராக மணக்க, அறிவேணியும் காக்கின்ற வேலியும் அளிப்பாய்.
  
முன்வினையால் விளையும் விதியை மாற்றி என்னைக் காப்பாய். உன்னை மகிழ்ந்து ஓதுகின்றேன். உயிர்களின் தாகத்தைத் தீர்க்கும் ஆறே! தமிழைப் படித்துப் படித்துப் பொன்னாக மின்னுகின்ற என்னுடைய அழகிய மனத்தை விளக்காக ஏற்றுகிறேன். தாயே! என்னிதயக் வீட்டில் எழுந்தொளிர்கவே.
  
காமாட்சியம்மன் விளக்கு அடிப்பகுதி 17 கட்டங்களும், அதற்கு மேலே 15, 13, 11, 9, 7, என்ற கணக்கில் கட்டங்களும், மீண்டும் 9, 11, 13, 15, 17 என்ற கணக்கில் கட்டங்களும், மேற்பகுதியில் அரை வட்டமாக உள்ள விளிம்பினைப் பக்கத்திற்கு 12 கட்டங்களும், மேல் அரை வட்டத்தைத் தாங்கும் இடத்தில் 4 கட்டங்களும் கொண்டு இவ்வோவியம் அமையும்.
  
இப்பாடல், விளக்கின் அடியின் இடப்பக்கத்தில் தொடங்கி நேரே சென்று மேலேறி, நேரே சென்று மறுபடியும் மேலேறி, நேரே சென்று இவ்வாறே இடப்பக்கம் வலப்பக்கம் என மாறி மாறி மேலேறி விளக்கின் சுடரொளிரும் மேற்பகுதியில் வலப்பக்க இறுதிக் கட்டத்தை அடைந்து, அங்கிருந்து மீண்டும் வந்த வழியே திரும்பி மேல் கட்டங்களின் இடது இறுதிக் கட்டத்தை அடைந்து, விளக்கின் அரைவட்டத்தைச் சுற்றி, பாடலின் இறுதியடியின் முதல் எழுத்து விளக்கின் மேல் நுனியிலும், இரண்டாம் எழுத்துச் சுடரிலும், அடுத்துள்ள எழுத்துக்கள் கீழே இறங்கி இறுதிவரை உள்ள கட்டங்களில் அமைவதைக் காணலாம். செய்யுள் 203 எழுத்துக்களைப் பெறும், ஓவியம் 171 எழுத்துக்களைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.11.2019

samedi 9 novembre 2019

குதிரைச் சித்திர கவிதை


குதிரை ஓவியக்கவிதை
  
தலைக்கனம் ஏனோ?
[வஞ்சித்துறை] [காய் +
விளம்]
  
ஆடுவதோ? அழிவதோ?
ஓடுவதோ? வதைவதோ?
கேடுந்தே டுமுளமே!
சூடுஞ்சே டறிகவே!
  
சேடு - அழகு
  
கருத்துரை
  
தலைக்கனம் கொண்டு ஆடுகின்ற போக்கை எடுத்துரைத்துத் திருந்தி நல்வழி செல்லும் அழகைக் இவ்வஞ்சித்துறை வேண்டுகிறது.
  
செருக்குற்று ஆடுவதோ? தீயதை நாடி அழிவதோ? ஓடுவதோ? துயரடைவதோ? அழிவைத் தேடிச் செல்லும் மனமே, வாழ்வின் அழகை அறிகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

யானை ஓவியக்கவிதை



யானை ஓவியக்கவிதை
  
யானை முகத்தானை நாடு!
வஞ்சி விருத்தம்
[தேமாங்காய்+தேமா+கூவிளம்]
  
கோ..மேவு கோ..நா மேவுமே!
நே..மேவு தீவு மேவுமே!
பா..மேவு மே!கா மேவுமே!
நீ..மேவு யானை நாதனை!
  
அருங்சொற்பொருள்
  
கோ - பூமி, தலைமை, மேன்மை
மேவுதல் - அடைதல், விரும்புதல், ஓதுதல், அமர்தல், பொருந்துதல்,
நா - நாக்கு, சொல்
நே - அன்பு
தீவு - சுவை
பா - பாட்டு
கா - சோலை
யானைநாதன் - பிள்ளையார்
  
கருத்துரை
  
யானை முகத்தலைவனை அடைந்து போற்றித் தொழுதால், பூமியில் வாழும் மக்களை வாழ்விக்கும் நல்லுரை வழங்கும் தலைவனின் நாவைப் பெறலாம், அன்பை அடையலாம். சுவையை அடையலாம். பாடுகின்ற புலமையைப் அடையலாம். பாக்களில் சோலை பொருந்துமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.11.2019

சேவல் சித்திர கவிதை


சேவல் ஓவியக்கவிதை
  
நேரிசை வெண்பா
  
கோலமிகு சேவலே! கூவியே பாடுவாய்!
காலமுணர் மாமணி யாவாய்..நீ! - காலையின்
தண்சூடு வாய்!உணர்ந்தென் னெஞ்சேவாழ்ந் திங்கெழுவாய்
கண்வாடு பாயே கழித்து!
  
அருங்சொற்பொருள்
  
தண் - குளிர்ச்சி
பாய் - படுத்திறங்கும் பாய்
  
இவ்வொண்பா சேவலின் தலையில் தொடங்கி உடல் வழியாகச் சென்று இறகு தொடங்கு இடத்தில் 'வா' என்ற எழுத்தில் நின்று அங்கிருந்து கீழிறகில் சென்று அதன் மேலிறகின் வழியாக 'வா' எழுத்தை அடைந்து, இவ்வாறே மேலுள்ள இறகுகளில் சென்று இறுதியாக வா எழுத்தை அடைந்து உடல் வழியாகக் காலடைந்து பாடல் நிறைவுறும். செய்யுள் 64 எழுத்துக்களைப் பெறும். ஓவியம் 57 எழுத்துக்களைப் பெறும்.
  
கருத்துரை
  
விடியலைக் கூவி வரவேற்கும் சேவலின் செயலைத் தன் நெஞ்சிக்கு எடுத்தோதுகிறது இவ்வெண்பா.
  
அழகிய சேவலே, மக்கள் விழிப்புறக் காலை விடியலைக் கூவிப் பாடுவாய். நீ காலத்தை உணர்ந்த மாமணியாவாய். காலை தருகின்ற குளிர்ச்சியைச் சூடுவாய்!
  
என் நெஞ்சமே! சேவலின் செயலை உணர்ந்து வாழ்வாய். காலைப்பொழுதின் கடமை மறந்து கண்சோர்ந்து பாயில் உறங்குகின்ற வினை நீக்கி இங்கெழுவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.11.2019

dimanche 3 novembre 2019

எட்டாரச் சக்கரம்


எட்டாரச் சக்கரம்
[ஆசிரியப்பாவில் அமைந்த எட்டாரச் சக்கரத்துள் ஒளிரும் குறட்பா]
  
தேவநாதா போற்றி!
[ஆசிரியப்பா]
  
தேனே! பேணிப் பேயாரி[ன்] அகமே
தானே செம்பே ரோதின் முதல்வா
வானா ராகு பேரேவு மளித்த
தாதா..தா செய்தி யுற..வண் மாரே!
பாமொழி பேசு! செம்மாக் காவே!
தா..மொழிப் பாத்து! நுானா ணயமே!
வேதத் தாகிய சீரே! குருவே!
தாதன் புனைதேரில் கானை யேகு!
தேவநா தா..வல்ல வாசுதே வா!போற்றி!
பாவ மகற்றும் வேங்கடா! பரமா!
வாகொளிர் வாழ்வோ ரேகுமூர்க் கோவே!
மேக மெய்யனே! மிகுமடி தருகவே!
  
அருஞ்சொல் விளக்கம்
  
பேயார் - பேயாழ்வார் [ஆழ்வார் பன்னிருவரில் ஒருவர்]
பேர் - பெயர், பெருமை
செய்தி - ஒழுக்கம்
ஆறு - வழி
பாத்து - ஐம்புலவின்பம்
நுானாணயம் - நுால் நாணயம்
நாணயம் - நேர்மை, கட்டுப்பாடு
தாதன் - அடியவன்
கான் - பூங்காட்டு மணம்
வாகு - அழகு
மிகுமடி - நீண்ட திருவடி
  
கருத்துரை
  
உலகைப் படைத்துக் காத்தருளும் வைகுந்தவாசனின் பொன்னுலகைப் போற்றி, அவ்வுலக வாழ்வினை வேண்டி இப்பாடல் அமைந்துள்ளது.
  
தேன்போல் இனிப்பவனே, உன்னைப் போற்றிப் பாடிய பேயாழ்வாருக்கு அகமாக நீயே இருந்தாய். செம்மைதரும் உன்பெயைரைத் தானே ஓதச் செய்தாய் முதல்வனே! அவருக்கு விண்ணுலக வாழ்வளித்தாய் தந்தையே! நான் ஒழுக்கமுற வண்மார்பை எனக்கும் தருவாய்! ஆழ்வார்கள் பாடிய பாமொழியை என்னோடு பேசுவாய்! அகமலர்ச்சியை அளிக்கின்ற பூஞ்சோலையைப் போன்றவனே! நான் பாடும் கவிதையுள் ஐம்புலவின்பத்தைத் தருவாய்! மரபு மணக்கும் நுால்களைத் தருவாய்! வேதம் உரைக்கின்ற சீரே! குருவே! அடியேன் புனைகின்ற சித்திரத்தேரில் மலர்மணத்தை ஏகுவாய்! தேவநாதா, வல்ல வாசுதேவா போற்றி! என் பாவமகற்றும் திருவேங்கடவா, பரமா, அழகொளிர வாழ்வோர் ஏகும் விண்ணுாரின் மன்னனே! கார்நிற மேனியனே! விண்ணளந்த திருவடியைக் காணும் அருளைத் தருவாய்!
  
இஃது எட்டாராய், குறட்டின் நடுவே 'தா' நின்று, எட்டெழுத்துக் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஒன்பதெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] ஐம்பத்தாறு எழுத்துப்பெற்று வந்த ஆசிரியப்பா.
  
இச்செய்யுளில்,முதலிரண்டடிகள் சேர்ந்து 23 எழுத்துக்களைப் பெற்றன. இவ்வாறே [3 - 4] [5 - 6] [7 - 8] ஆகிய அடிகளும் 23 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 14 எழுத்துக்களைப் பெறும். செய்யுளில் 148 எழுத்துக்கள் வந்தன. சித்திரத்தில் 137 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின்முனை தொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலிரண்டடி முற்றி. அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யதனெதிர் கீழாரின்முனை இறுதி சென்று மூன்று நான்காமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்துக் கீழாரின்முனை தொடங்கி யதனெதிர் ஆரின் இறுதிமுனை சென்று ஐந்து ஆறாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யெதிர்நின்ற மேலாரின் முனையிறுதி சென்று ஏழு எட்டாமடி முற்றி, முதலடி தொடங்கிய 'தே' எழுத்திலிருந்து வட்டைவழியே யிடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் முற்றியவாறு காண்க.
  
செய்யுள் தொடங்கி ஆரில் குறித்துள்ள 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறட்பா பிறக்கும்.
  
பேராழிக் தண்ணனைப் பேசுகின்ற நுால்யாவும்
சீரோதித் தேனளிக்கும் செப்பு!
  
தண்ணன் - குளிர்ந்தவன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.11.2019

samedi 2 novembre 2019

எட்டாரச் சக்கரம்


சித்திர கவிதை
எட்டாரச் சக்கரம்
  
திருமலை வேந்தன் மலரடி மேவுகவே!
[ஆசிரியப்பா]
  
மலர்திகழ் மாமனமே உயர்வே காண்க!
சிலையுரு வன்!கோல னவுசன்! சந்தனன்!
புகழ்மலைப் பரனகம் பூத்த மாமலை!
மிகுமலைபோல் கூடினவே வேந்தன் பெருமை!
மன்னன் சிறப்பே புவியுறு மிடமது!
கண்ணனின் சீர்மலை கண்டிமை மூடுமோ?
  
அருஞ்சொல் விளக்கம்
  
சிலை - வில்
கோலன் - அழகன்
அவுசன் - ஒழுங்கன்
பரனகம் - திருமால் வாழும் இடம்
  
கருத்துரை
  
நெடியவன் குடிகொண்ட வடவேங்கடமலையின் சீரினைப் போற்றியும், அவனழகைச் சாற்றியும் இப்பாடல் அமைந்துள்ளது.
  
வில்லுடைய, பேரழகுடைய, உலகின் ஒழுங்கைக் காக்கும் ஒளியுடைய, சந்தனக் காப்புடைய, புகழை மலையாக உடைய திருமாலின் வீடு பூத்தொளிரும் உயா்மலை. உலகை ஆளும் வேந்தனவன் பெருமை தொடர்ந்துவரும் கடலலையெனப் பெருகினவே. நமையாளும் மன்னனின் சிறப்பைப் புவியோர் கண்டுவக்கும் மலையது. கண்ணனின் சீர்மலையைக் கண்ட என் கண்ணிமை மூடுமோ? [திருமாலின் வடிவழகு நிலையாகக் கண்புகுந்து வாழ்கின்றது.] திருமாலின் மலரடியைக் கண்டு மணக்கின்ற என்றன் பெரிய மனமே, உயர்வைக் காண்பாய்!
  
இஃது எட்டாராய், குறட்டின் நடுவே 'ன' நின்று, எட்டெழுத்துக் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] முப்பத்திரண்டு எழுத்துப்பெற்று வந்த ஆசிரியப்பா.
  
முதலடி தொடங்கிக் குறட்டில்விடும் எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கத் 'மலரடி மேவுகவே' என்னும் பெயரும், குறட்டினின்றும் ஐந்தாம் அறைகளில் இடஞ்சுற்றிப் படிக்கப் 'திருமலை வேந்தன்' என்னும் பெயரும் வந்தன.
  
முதற்கண் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற இரண்டடிகள் ஒவ்வொன்றும் 16 எழுத்துக்களைப் பெற்றன. செய்யுளில் அமையும் எழுத்துக்கள் 100. சித்திரத்தில் அமையும் எழுத்துக்கள் 89.
  
இது, மேலாரின்முனை தொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யதனெதிர் கீழாரின்முனை இறுதி சென்று இரண்டாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்துக் கீழாரின்முனை தொடங்கி யதனெதிர் ஆரின் இறுதிமுனை சென்று மூன்றாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யெதிர்நின்ற மேலாரின் முனையிறுதி சென்று நான்காமடி முற்றி, முதலடி தொடங்கிய மகரத்தினின்று வட்டைவழியே யிடஞ்சுற்றி ஐந்தாமடி ஆறாமடிகள் முற்றியவாறு காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.11.2019

mercredi 30 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
[ஈற்றடி மாலை மாற்றாய் அமைந்தது]
  
கல்வியே கண்!
[நேரிசை வெண்பா]
  
வண்ணணெறி கற்கவே யேகுக!வாழ்வின்ப
மண்ணெறி வாகே!மால் வேகமுறு! - தண்ணென்ப
பண்பணிகள்! தேவிவேண் டிப்..படி! நீசேம
வண்மண் படி!படி..பண் மண்!
  
அருஞ்சொல் விளக்கம்
  
வாகு - அழகு
மால் - காற்று
தண் - குளிர்
சேமம் - காவல், இன்பம்
வண் - வண்மை
பண் - இசைப்பாட்டு
  
இஃது ஆறாராய், குறட்டின் நடுவே 'வே' நின்று, 'கல்வியே கண்' என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] பன்னிரண்டு எழுத்துப்பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது. இந்நேரிசை வெண்பாவின் முதல் மூன்றடிகள், ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றது. ஈற்றடி 12 எழுத்துக்களைக் கொண்டது. செய்யுட்கண் 63 எழுத்துக்கள் உள்ளன. சக்கரத்தில் 55 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின் முனைதொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்துள்ள இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி இறங்கி இரண்டாமடி முற்றி, அடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வடப்பக்கத்தாரின் மேலேறி மூன்றாமடி முற்றி, செய்யுள் தொடங்கி எழுத்தில் நான்காமடி தொடங்கி வட்டை வழியிடஞ்சுற்றிச் சென்று நான்காமடி முற்றியது. வட்டத்தில் அமைந்த அவ்வடி மாலை மாற்றாய் அமைந்தது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.10.2019

dimanche 27 octobre 2019

நான்காரச் சக்கரம்


நான்காரச் சக்கரம்
  
அகமே அடங்கு!
[ஆசிரியப்பா]
  
சென்ம மறிக! மேவு பணியின்
தன்னடை வேதனின் மனையை யேறு!
அரணி யாகவே கரணி சேரின்
தரணி யேயுன் கரனளி யழகே!
கேணி வட்டம்! தோணி வட்டம்!செவ்
வாதி, பூமி, ஆழி வட்டம்!
அகமே அடங்கு! ஆசை யகற்று!
இகமே சுழியே! ஊது சங்கே!
  
இது நான்காராய்க் குறட்டின் நடுவே 'த' என்ற எழுத்து நின்று, குறட்டைச் சூழ நான்கு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் பத்து எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல்[வட்டம்] நாற்பத்தெட்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
செய்யுளில் முதல் இரண்டடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், மூன்று நான்காமடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், ஐந்து ஆறாமடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும் பெற்றன. செய்யுட்கண் 98 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 92 எழுத்துக்கள் வந்தன.
  
இதுச்செய்யுள், மேலாரின் முனைதொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதல் இரண்டடிகள் முற்றி, இடப்பக்கத்து ஆரின் முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி சென்று மூன்றாமடியும் நான்காமடியும் முற்றி, மறித்தும் அம்முனைநின்ற 'கே' தொடங்கி வட்டை வழியே இடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் சென்று தொடங்கிய 'கே' எழுத்தில் பாடல் நிறைவுறும்.
  
ஆரத்தில் 1 முதல் 20 வரை எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
மணியை யறிக! மனமே கனிக!
பணிவே யுயிரி[ன்] அணி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
நடை - ஒழுக்கம்
வேதன் - மறையின்வழி வாழ்பவன்
அரணி - கவசம்
கரணி - செய்பவன்
தரணி - பூமி
கரன் - நிலையுள்ளவன்
கேணி - கிணறு
தோணி - ஆற்றைக் கடக்க உதவும் பரிசல்
செவ்வாதி - சூரியன்
ஆழி - கடல்
இகம் - இப்புறப்பு
சுழித்தல் - சுழலுதல்
  
கருத்துரை:
  
உயிர்களின் பிறப்பு இறப்புச் சுழற்சியை உணர்த்தும் வண்ணம் இப்பாடல் அமைந்துள்ளது. பிறப்பை அறிவாய். ஒழுக்கமுடன் தன் பணிகளைச் செய்கின்ற நீதியாளனின் இடத்தை அடைவாய். அரண் அளிப்பவன் இடமடைந்து நிலையாக வாழ்கின்ற உன்னால் இப்புவி அழகைப்பெறும். கிணறு, பரிசல், சூரியன், பூமி, கடல் அகியவை வட்டமாக அமைந்துள்ளன. அகத்தை அடக்கு, ஆசையை அகற்று இப்புறப்பும் வட்டமாகச் சுழலும் என்பதை உணர்ந்து சங்ககெடுத்து ஊதுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.10.2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
  
கண்ணா தருவாய் கவி!
[ஆசிரியப்பா]
  
மாதவ மனமே யெழுதகை தா..தா!
மாதாய்! ஏக வான் வாமம்..தா!
அரண்..தா! வாழென அருள்..தா தா!
வருக கண்ணா! மயில மாடு
வண்ண மினிநீக்கா வாழ்வே..தா!
தண்விண் ணா! நுாழை யாரெ ழாலே!
மாண்பே! வளமே! தா..அன்பே!தா!
ஆண்ட வன்மை ஆறே தா..தா!
தாதே! தீதே தீய விடு!பா
வோதிடப் பாலே ஊட்டுக தேவே!
  
இஃது ஆறு ஆராய், குறட்டின் நடுவே 'தா' என்ற எழுத்தும் நின்று, குறட்டைச் சூழ ஆறு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் ஒன்பது எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல் [வட்டம்] நாற்பத்திரண்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
முதல் இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், பின் இரண்டடிகள் 21 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 21 எழுத்துகளையும் பெற்றன. செய்யுட்கண் 111 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 103 எழுத்துக்கள் வந்தன.
  
இச்செய்யுள், இடப்பக்கத்தின் முனைநின்று தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி மேலேறி முதல் இரண்டடிகள் முற்றி, அடுத்த கீழாரின் முனைநின்று மேலாரின் முனையிறுதி மேலேறி மூன்று நான்காம் அடிகள் முற்றி, அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஐந்து ஆறாம் அடிகள் முற்றி, ஈற்று நான்கடிகள் செய்யுள் தொடங்கி இடப்பக்க எழுத்தில் தொடங்கி வட்டைவழி இடஞ்சுற்றிப் பாடல் நிறைவுறும்.
  
இடப்பக்க ஆரில் 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
வண்ண மலரென வானின் மழையெனக்
கண்ணா தருவாய் கவி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
ஏகன் - கடவுள்
வாமம் - அழகு
நுாழையார் - நுண்மையர்
எழால் - யாழிசை
ஆறு - வழி
தாது - பூந்துாது
  
கருத்துரை:
  
கண்ணனிடம் வேண்டிக் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. கண்ணா! குளிர்ந்த வைகுந்தத்தில் வாழும் விண்ணா! தேவா! மாதவத்தால் விழிப்புறும் மனத்தழகைத் தருக..தருக..! என் அன்னையே! விண்ணுலகில் வாழும் வாழ்வைத் தருக! காவல் தருக! வாழ்கவென்று அருளைத் தருக..தருக..! தோகை விரித்தாடும் வண்ண வாழ்வை இனி நீக்காமல் தருக! கலைவல்லுநர் இசைக்கும் யாழமுதை, மாண்பை, வளத்தை, உன்னன்பைத் தருக..தருக..! ஆண்ட வன்மையின் வழியைத் தருக..தருக..! மலராக மணப்பவனே! என் தீய வினையை எரித்துவிடு. உன்னைப் போற்றிப் பாடிட ஆழ்வார்களுக்கு அளித்த தமிழ்ப்பாலை எனக்கும் ஊட்டுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.10.2019

mardi 15 octobre 2019

வெண்பா மேடை - 146   


வெண்பா மேடை - 146
  
130 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா
  
ஈர்ப்புணர்ந்தேன்! பார்த்துயிர்ப்பின் வேர்ப்புணர்ந்தேன்! சீர்த்தமிழ்ச்சொல்
சேர்ப்புணர்ந்தேன்! தேர்ப்புகழ்த்தென் தீர்ப்புணர்ந்தேன்! - கூர்ப்புணர்ந்தேன்!
ஆர்ப்புணர்ந்தேன்! மெய்ம்மலர்த்தேன் வார்ப்புணர்ந்தேன்! மண்ணுயிர்ப்பாழ்ந்[து]
ஓர்ப்புணர்ந்தேன் மெய்த்தமிழ்ச்சால்[பு] ஊர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் ஐந்து ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 130 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 130 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.10.2019

dimanche 6 octobre 2019

ஆழ்ந்த இரங்கல்


ஆழ்ந்த இரங்கல்
  
அக்கா மலர்ஆதி லட்சுமியார் ஏன்பிரிந்தார்?
சொக்கா! கொடுமை துணிந்தாயே! - எக்காலும்
நின்றுழைத்த நெஞ்சத்தை என்றினிக் காண்பேனோ?
துன்பளித்த கூற்றே..நீ சொல்லு!
  
கம்பன் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து
அதன் உயர்வுக்கு உழைத்திட்ட
பாவலர் ஆதிலட்சுமி வேணுகோபால் அவர்கள்
இன்று மாலை இறைவனடி சேர்ந்தாரெனும் செய்தியை
ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
  
கம்பன் கழகம் பிரான்சு
06.10.2019

கம்பன் காட்டும் அழகியல்


கம்பன் விழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை
  
பகுதி - 2
  
கம்பன் காட்டும் அழகியல்
  
நடையழகு ஓங்கிவரும்!
குடையழகு தாங்கிவரும்!
தொடையழகுக் கம்பனவன் பாட்டு - அது
கொழித்தகனி தேனமுதக் கூட்டு!
  
படையழகு துள்ளிவரும்!
பணியழகு அள்ளியிடும்!
உடையழகு உத்தமனைப் போற்றும் - கம்பன்
உரைத்தகவி சால்புகளைச் சாற்றும்!
  
இடையழகு மின்னிவரும்!
இசையழகு பின்னிவரும்!
அடையழகு ஏந்துசுவை நிற்கும் - அதை
அறிஞரினம் ஆழ்ந்துமனம் கற்கும்!
  
ஊரழகு கண்மேவும்!
உறவழகு பண்மேவும்!
தேரழகு கொண்டதமிழ்க் கூத்து! - நுாலில்
திருராமன் சீர்மணக்கும் பூத்து!
  
நாட்டழகு நற்காட்சி!
நறுந்தமிழின் பொன்மாட்சி!
பாட்டழகு நெஞ்சத்தை அள்ளும்! - சந்தக்
கூட்டழகு மானாகத் துள்ளும்!
  
தோளழகை வில்..காட்டும்!
தொண்டழகைச் சொல்..காட்டும்!
தாளழகைத் தாமரையே ஏற்கும்! - விருத்தத்
தமிழழகை நம்கண்கள் ஈர்க்கும்!
  
வேலழகு... கண்ணழகு!
பாலழகு... பெண்ணழகு!
காலழகுச் சீதையினைக் கண்டு - அன்னம்
கால்..அழகு என்றேங்கும் நின்று!
  
மரகதமோ? மாகடலோ?
மழைமுகிலோ? மாலழகு!
அருளொளியோ? அன்பமுதோ? பாடல் - கம்பன்
அளித்ததமிழ் இன்பத்தின் கூடல்!
  
மூக்கழகுச் சூர்ப்பணகை!
முன்னின்று செய்த..பகை!
நாக்கழகு கம்பனையே தாக்கும்! - அவள்
நடையழகு பாக்கோடி யாக்கும்!
  
அலையழகு நல்லீழம்!
ஆணழகு வல்வீரம்!
கலையழகு மாமன்னன் ஆட்சி! - புகழ்க்
கம்பனவன் காவியமே சாட்சி!
  
காலணியும் ஆண்ட..கதை!
காலத்தை வென்ற..கதை!
மாலணியும் வாலணியும் கூறும்! - இதை
மார்பணியும் மாந்தர்நலம் ஏறும்!
  
ஆழியெனக் கருத்தழகு!
அரங்கனவன் கருத்தழகு!
வாழியெனப் வாழ்த்தியுளம் பூக்கும்! - கம்பன்
வடித்தகவி வண்டமிழைக் காக்கும்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தலைவர்
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

vendredi 4 octobre 2019

வெண்பா மேடை - 145


வெண்பா மேடை - 145
  
116 எழுத்துக்களில் அமைந்த நேரிசை வெண்பா!
  
எண்ணுணர்ந்தேன்! இன்னிதழ்த்தேன் தண்ணுணர்ந்தேன்! மெய்ப்புகழ்சேர்
மண்ணுணர்ந்தேன்! செய்ந்நலஞ்சேர் மாண்புணர்ந்தேன்! - விண்ணுணர்ந்தேன்!
சிந்துணர்ந்தேன்! சீர்புணர்ந்தேன்! தென்சுடர்ப்..பாப் பேர்தொடர்ந்தேன்!
செந்தமிழ்த்தாய் செம்மலர்த்தாள் சேர்ந்து!
  
ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் யாவும் நான்கு ஒற்றுகளைப் பெற்றுவந்த கூவிளங்காயாகும். காசு வாய்பாட்டில் இரண்டு ஒற்றுகளைப் பெற்று ஈற்றுச்சீர் அமையவேண்டும். இவ்வகையில் அமையும் வெண்பா 116 எழுத்துக்களைப் பெறும்.
  
விரும்பிய பொருளில் 116 எழுத்துக்களில் அமைந்த வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.10.2019