vendredi 27 janvier 2017

கேட்டலும் கிளத்தலும்


  
ஐயா வணக்கம்!
  
நான்கு வகைப் பாக்களின் ஓசைகளைக் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.
  
சுமதி நடராசன் அன்பரசி பிரான்சு

--------------------------------------------------------------------------------------------------------------------------
  
பாட்டின் ஓசை இலக்கண விளக்கம்
  
வெண்பா செப்பல் ஓசை பெறும். ஆசிரியப்பா அகவல் ஓசை பெறும். கலிப்பா துள்ளல் ஓசை பெறும். வஞ்சிப்பா துாங்கல் ஓசை பெறும்.
  
1.
வெண்பாவின் செப்பலோசை ஏந்திசைச் செப்பல், துாங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும்.
  
"ஏந்திசைச் செப்பலும் துாங்கிசைச் செப்பலும்
ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா
செப்பல் ஓசை வெண்பா ஆகும்" [ சங்க யாப்பு]
  
"ஏந்திசை வெண்சீர்! இயற்சீர் துாங்கிசை!
ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்" [தொன்னுால் விளக்கம் 221]
  
"செப்பல் இசையன வெண்பா" [யா.கலம் 57]
  
"செப்பல் ஓசையில் சிறக்கும்வெண் பாவே" [முத்து வீரியம் யாப்பு - 12]
  
"அதுதான்
ஏந்திசை துாங்கிசை ஒழுகிசை எனவொரு
மூன்ற வகைப்படும் மொழியுங் காலை" [முத்து வீரியம் யாப்பு - 13]
  
ஏந்திசைச் செப்பல்!
  
"வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு - 14]
  
வெண்பாவின் ஈற்று வாய்பாட்டுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் அனைத்தும் காய்ச்சீராக அமைவது ஏந்திசைச் செப்பல் ஆகும்.
  
எடு.கா
மண்ணழகு பூத்தாடும்! மாண்பழகு கூத்தாடும்!
விண்ணழகு கோத்தாடும் பெண்ணழகே! - கண்ணழகு
தண்ணழகு காத்தாடும்! தண்டமிழின் சீரேந்திப்
பண்ணழகு மூத்தாடும் பார்!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
துாங்கிசைச் செப்பல்
  
"இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
துாங்கிசைச் செப்பல் என்பனார் புலவர்" [சங்க யாப்பு]
  
"இயற்சீர் வெண்டளை யான்வரும் பாவே
துாங்கிசை யாமெனச் சொல்லப் படுமே" [முத்து வீரியம் யாப்பு - 15]
  
வெண்பாவின் ஈற்றுச் சீரைத் தவிர மற்றச் சீர்கள் அனைத்தும் ஈரசைச் சீராக அமைவது துாங்கிசைச் செப்பல் ஆகும்.
  
எடு.கா
  
கொடியினைக் காத்த குமரனைச் சாற்றும்!
இடியினை ஏந்துரை ஆற்றும்! - கொடியெனப்
பூக்கும் புகழினைப் போற்றும்! மனமுறும்
ஆக்கம் அனைத்தும் அடைந்து!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒழுகிசைச் செப்பல்
  
"வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்" [சங்க யாப்பு]
  
"வெண்சீர் இயற்சீர் விரவி ஒழுகுவது
ஒழுகிசை என்மனார்உணர்ந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 16]
  
காய்ச்சீரும், ஈரசைச் சீரும் கலந்து அமைவது ஒழுகிசை செப்பல் ஆகும்.
  
எடு.கா
மாலை மணவீசும்! மாவழகு பாப்பேசும்!
மாலை தொழுதமனம் மாண்பேந்தும்! - மாலையிலே
பொன்னாதி கேசவனை அட்ட புயகரனை
என்னாவி சேரும் இணைந்து!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
-------------------------------------------------------------------------------------------------------------------------
  
2.
ஆசிரியப்பாவின் அகவலோசை ஏந்திசை அகவலோசை, துாங்கிசை அகவலோசை, ஒழுகிசை அகவலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும்,
நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும்,
ஆயிரு தளையும் ஒத்து ஆகிய அகவலும்,
ஏந்தல் துாங்கல் ஒழுகல் என்றிவை
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப" [யா.கா. 21 மேற்]
  
"அகவல் இசையன அகவல்" [யா.கலம். 49]
  
"அகவல் ஏந்திசை அகவல், துாங்கிசை
அகவல், ஒழுகிசை அகவல் மூவகைப்படும்" [முத்து வீரியம் யாப்பு - 30]
  
ஏந்திசை அகவலோசை!
  
"நேர் ஒன்று ஆசிரி யத்தளை யான்வரல்
நேரிசை அகவல் எனப்படும் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 31]
  
நேர் ஒன்றிய ஆசிரியத்தளையால் அமைந்த பாடல் ஏந்திசை அகவலோசை பெறும்.
  
எடு. கா
வண்ணம் காட்டும் கண்கள் கண்டேன்!
எண்ணம் சீறி விண்ணில் செல்லும்!
பாக்கள் என்னும் பூக்கள் பூக்கும்!
ஏக்கம் தீர்த்தல் எந்நாள் பெண்ணே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
துாங்கிசை அகவலோசை
  
"நிரையொன்று ஆசிரியத்தளை யான்வரல்
துாங்கிசை அகவல் எனச்சொலப் படுமே" [முத்து வீரியம் யாப்பு - 32]
  
நிரை ஒன்றிய ஆசிரியத் தளையால் அமைந்த பாடல் துாங்கிசை அகவலோசை பெறும்.
  
எடு.கா
சிரித்திடும் இதழெழில் பறித்திடும் உளத்தினை!
தரித்திடும் கனவினை! தழைத்திடும் தமிழினை!
மலைமகள் உருவினள்! அலைமகள் அருளினள்!
கலைமகள் மொழியினள்! கனிந்திடும் கவிகளே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒழுகிசை அகவலோசை
  
"இவ்விரு தளையும் பிறவும் மயங்கி
வருவது ஒழுகிசை யாம்வழுத் திடினே" [முத்து வீரியம் யாப்பு - 33]
  
நேர் ஒன்றிய ஆசிரியத்தளையும், நிரை ஒன்றிய ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து அமைந்த பாடல் ஒழுகிசை அகவலோசை பெறும்.
  
எடு.கா
  
கொத்து மலரே! கொஞ்சுங் கிளியே!
செத்துப் பிழைக்கிறேன்! செந்தேன் தருவாய்!
முத்தம் ஒன்று முகிழ்த்தால் என்ன?
சொத்துக் குறையுமா? சொல்லடி செல்லமே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]

---------------------------------------------------------------------------------------------------------------------------
  
3.
கலிப்பாவின் துள்ளலோசை ஏந்திசைத் துள்ளலோசை, அகவல் துள்ளலோசை, பிரிந்திசைத் துள்ளலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின்,
வெண்டளை தன்தளை என்றிரண்டும் இயையின்
ஒன்றிய அகவல் துள்ளலென்று ஓதுப,
தன்தளை பிறதளை என்றிவை அனைத்தும்
பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்" [பழைய இலக்கணம்]
  
"துள்ளல் ஓசை கலிஎன பொழிப" [தொல். பொ. 395]
  
"துள்ளல் இசையன கலிப்பா, மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே" [யா.கலம் - 78]
  
"துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
என மூவகைப்படும் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு - 44]
  
ஏந்திசைத் துள்ளலோசை
  
"ஏந்திசைத் துள்ளல் இயையின் கலித்தளை" [முத்து வீரியம். யா.செ. 45]
  
கலித்தளை மட்டும் வந்தால் ஏந்திசைத் துள்ளலோசை பெறும் [காய் முன் நிரை வரும்.] [புளிமாங்காயும், கருவிளங்காயும் வரும்]
  
எடு.கா
பொழிலோங்கும் திருமலையில் புகுந்தாடும் பொறிவண்டே!
எழிலோங்கும் மலர்மார்பன் இடம்சென்றே எனைச்சொல்வாய்!
வழியோங்கும் நிலையின்றி வனிதைமனம் படுந்துயரை
விழியோங்கும் அழகனிடம் விரிவாக உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
பிரிந்திசைத் துள்ளலோசை
  
"வெண்டளை தன்தளை விரவி வருவது
பிரிந்திசைத் துளலெனப் பேசப் படுமே" [முத்து வீரியம் யாப்பு 46]
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை பெறும்.
  
எடு.கா
  
பொன்மேவும் திருமலையில் பூத்தாடும் மதுமலரே!
துன்மேவும் நானுன்னைத் துாதாக விடுகின்றேன்!
மின்மேவும் பேரழகன்! விழியழகன் இடஞ்சென்றே
என்மேவும் ஆசைகளை இசையாக உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அகவல் துள்ளலோசை
  
"இவ்விரு தளையும் பிறவும் மயங்கித்
தொடருவது அகவல் துள்ளலாம் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 47]
  
கலித்தளையும், வெண்டளையும், பிற தளையும் கலந்து வருவது அகவல் துள்ளலோசை பெறும்.
  
எடு.கா
வளமார் திருமலையில் வாழ்கின்ற தீங்கனியே!
குளமார் மலரழகன் கொண்ட குடில்நாடி
அளமார் கனவுகள் ஆளும் துயரத்தை
உளமார் வகையறிந்து உண்மை உரைப்பாயே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
--------------------------------------------------------------------------------------------------------------------------
  
4.
வஞ்சிப்பாவின் துாங்கலோசை ஏந்திசைத் துாங்கலோசை, பிரிந்திசைத் துாங்கலோசை, அகவல் துாங்கலோசை என்று மூன்று வகைப்படும்.
  
"ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்,
ஒன்றாத வஞ்சித் தளையே வரினும்,
என்றிவை இரண்டும் பிறவும் மயங்கினும்
ஏந்தல் அகவல் பிரிந்திசைத் துாங்கலென்று
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப" [பழைய இலக்கணம்]
  
"துாங்கல் ஓசை வஞ்சி ஆகும்" [தொல்.பொ - 369]
  
"வஞ்சிக்கு ஓசை வழங்கும் துாங்கலே" [தொன்னுால் விளக்கம் - 237]
  
"துாங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 54]
  
ஏந்திசைத் துாங்கலோசை
  
"ஒன்றிய வஞ்சித் தளையான் ஒழுகுவது
ஏந்திசைத் துாங்கல் எனப்படும் எனலே" [முத்து வீரியம் யாப்பு - 55]
  
ஒன்றிய வஞ்சித் தளையால் வருவது ஏந்திசைத் துாங்கலோசை ஆகும் [கனி முன் நிரை வரும்]
  
எடு.கா
புலமையின்வளம் பொலிகின்றஊர்!
கலைகளின்வளம் கமழ்கின்றஊர்!
அலைகளின்வளம் அணைக்கின்றஊர்!
குலைகளின்வளம் கொளும்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
பிரிந்திசைத் துாங்கலோசை
  
"ஒன்றாத வஞ்சித் தளையான் வருவது
பிரிந்திசைத் துாங்கல் எனப்பெயர் பெறுமே" [முத்து வீரியம் யாப்பு - 56]
  
ஒன்றாத வஞ்சித்தளையால் வருவது பிரிந்திசைத் துாங்கலோசை ஆகும் [ கனி முன் நேர் வரும்]
  
எடு.கா
வல்லபுலவர் வாழ்கின்றஊர்!
நல்லமறவர் சூழ்கின்றஊர்!
வெல்லமொழியர் ஆள்கின்றஊர்!
கல்விஇனியர் சீர்ப்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அகவல் துாங்கலோசை
  
" இவ்விரு தளையும் பிறவும் விரவித்
தொடருவது அகவல் துாங்கல் எனலே" [முத்து வீரியம் யாப்பு 57]
  
ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் கலந்து வருவன அகவல் துாங்கலோசை ஆகும்
  
எடு.கா
பாவேந்தரின் படைகொண்டஊர்!
நாவேந்தரின் நடைகொண்டஊர்!
காவேந்திடும் கவிகொண்டஊர்!
தேவேந்திடும் எம்புதுவையே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை என்று சில இலக்கணநுால் உரைக்கின்றன. அகவல் துள்ளலோசை என்றும் சில இலக்கண நுால்கள் உரைக்கின்றன. இதுபோன்றே வஞ்சியின் துாங்கலோசையில் மாறுமட்டு இலக்கணம் உரைக்கப்பட்டுள்ளது. இதைக் குறித்து உரையாசிரியர்கள் எண்ணியதாக நான் அறியவில்லை.
  
"துள்ளல் இசையன கலிப்பா, மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே" [யா.கலம் 78]
  
"துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
என மூவகைப்படும் என்மனார் புலவர்" [முத்து வீரியம் யாப்பு 44]
  
"துாங்கல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே" [முத்து வீரியம் யாப்பு - 54]
  
மேலுள்ள நுாற்பாக்களில் முதலில் ஏந்திசையும், இரண்டாம் நிலையில் பிரிந்திசையும், மூன்றாம் நிலையில் அகவலும் சொல்லப்பட்டுள்ளதால் இவ்வகையிலேயே ஓசையின் வகையை ஏற்றல் சிறப்பாகும்.
  
வெண்டளையும் கலித்தளையும் கலந்து வந்தால் பிரிந்திசை துள்ளலோசை என்றும், கலித்தளையும், வெண்டளையும், பிற தளையும் கலந்து வந்தால் அகவல் துள்ளலோசை என்றும், ஒன்றாத வஞ்சித்தளை வந்தால் பிரிந்திசைத் துாங்கலோசை என்றும், ஒன்றிய வஞ்சித்தளையும், ஒன்றாத வஞ்சித்தளையும் கலந்து வந்தால் அகவல் துாங்கலோசை என்றும் கொள்க.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.01.2017

ஏந்திசைச் செப்பல் வெண்பா

வெண்பா மேடை - 37
    
ஏந்திசைச் செப்பல் வெண்பா
  
மண்ணழகு பூத்தாடும்! மாண்பழகு கூத்தாடும்!
விண்ணழகு கோத்தாடும் பெண்ணழகே! - கண்ணழகு
தண்ணழகு காத்தாடும்! தண்டமிழின் சீரேந்திப்
பண்ணழகு மூத்தாடும் பார்!
  
வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பாவில் அமையும் ஓசை ஏந்திசைச் செப்பல் ஆகும். [ஈற்றுச்சீர் அல்லாதன யாவும் காய்ச்சீர்களாக வரவேண்டும்]
    
ஏந்திசைச் செப்பலோசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.01.2017

mercredi 18 janvier 2017

மும்மண்டில வெண்பா!




வெண்பா மேடை - 36
  
மும்மண்டில வெண்பா!

1.
கண்ணா! கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை
என்..நா மடல்மின்ன என்றும்..தா! - மன்னா!
சுடர்மிகு தொன்னெறியும் சூட்டு! சுவைகள்
நடமிடும் நன்னெறியும் நாட்டு!

கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை என்..நா
மடல்மின்ன என்றும்..தா! மன்னா! - சுடர்மிகு
தொன்னெறியும் சூட்டு! சுவைகள் நடமிடும்
நன்னெறியும் நாட்டு..கண் ணா!

கன்னல் கருத்துகளை என்..நா மடல்மின்ன
என்றும்..தா! மன்னா! சுடர்மிகு - தொன்னெறியும் 
சூட்டு! சுவைகள் நடமிடும் நன்னெறியும் 
நாட்டு!..கண் ணா!கடல்வண் ணா!

2.
பொங்குமலர் பூத்தவனம்! பொன்னழகு போந்தவொளி!
இங்குநலம் ஈர்த்தருளும் இன்றமிழே!! - எங்குமினிக்
காத்திடும் கன்னல்நெறி! கங்குகரை காணாமல்
சேர்த்திடும் புண்ணியச் சீர்!

பூத்தவனம்! பொன்னழகு போந்தவொளி! இங்குநலம்
ஈர்த்தருளும் இன்றமிழே! எங்குமினிக் - காத்திடும்
கன்னல்நெறி! கங்குகரை காணாமல் சேர்த்திடும்
புண்ணியச்சீர் பொங்கு மலர்!

பொன்னழகு போந்தவொளி! இங்குநலம் ஈர்த்தருளும்
இன்றமிழே! எங்குமினிக் காத்திடும் - கன்னல்நெறி!
கங்குகரை காணாமல் சேர்த்திடும் புண்ணியச்சீர்
பொங்குமலர் பூத்த வனம்!

இலக்கண விளக்கம்
  
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து. முதல் சீரை இரண்டாம் வெண்பாவின் ஈற்று சீராகவும், இரண்டாம் சீரை மூன்றாம் வெண்பாவின் ஈற்றுச் சீராகவும் வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்! [ மூன்று வெண்பாவிலும் எதுகையும், மோனையும், பொருள் சிறப்பும் அமைய வேண்டும்]
  
மும்மண்டிலத்தை எளிதாகப் பாடுவதற்கான வழிகள்.
  
பொதுவாக வெண்பாவில் அமையும் எதுகை, மோனை இலக்கணத்துடன் கீழ்வரும் நெறிகள் அவ்வெண்பாவில் அமையவேண்டும்.
  
வெண்பாவின் முதல் இரண்டு சீர்களில் ஈற்றசை நாள், மலர், காசு, பிறப்பு என்று வருமாறு அமையவேண்டும் [வண்டுக்கண், பூத்தவனம், என்னாடு, தேன்கொடுத்து, கண்மணியே]
  
முதலடியை முற்றும் மோனையாக அமைத்தல் வேண்டும். [கண்ணா! கடல்வண்ணா! கன்னல் கருத்துகளை]
  
இரண்டாம் அடியில் இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மோனை பெறவேண்டும். [என்..நா மடல்மின்ன என்றும்..தா! - மன்னா!]
  
முன்றாம் அடியை முற்றும் மோனையாக அமைக்க வேண்டும். [சுடர்மிகு தொன்னெறியும் சூட்டு! சுவைகள்]
  
நான்காம் அடியின் இரண்டாம் சீர், முதல் அடியின் முதல் சீரின் மோனை பெற வேண்டும். [ எடுத்துக்காட்டு இரண்டாம் மும்மண்டிலத்தில் பொங்கு, புண்ணிய சீர்களைக் காண்க]
  
முதல் அடியின் இரண்டாம் சீரும் இரண்டாம் அடியின் இரண்டாம் சீரும் மூன்றாம் அடியின் முதல் சீரும் ஓரெதுகை பெற வேண்டும். [ முதல் மும்மண்டிலத்தில் கடல்வண்ணா, மடல்மின்ன, சுடர்மிகு]
  
முதல் அடியின் மூன்றாம் சீரும், இரண்டாம் அடியின் முன்றாம் சீரும், மூன்றாம் அடியின் இரண்டாம் சீரும், நான்காம் அடியின் இரண்டாம் சீரும் ஓரெதுகை பெறவேண்டும். [முதல் மும்மண்டிலத்தில் கன்னல், என்றும்தா, தொன்னெறியும், நன்னெறியும் காண்க]
  
மூன்றாம் அடியின் மூன்றாம் சீர், முதல் அடியின் முதல் சீரின் எதுகை பெற வேண்டும். [இரண்டாம் மும்மண்டிலத்தில் பொங்குமலர், கங்குகரைச் சீர்களைக் காண்க] அல்லது மூன்றாம் அடியின் மூன்றாம் சீரும் நான்காம் அடியின் மூன்றாம் சீரும் எதுகை பெற வேண்டும். [முதல் மும்மண்டிலத்தில் சூட்டு, நாட்டுச் சீர்களைக் காண்க]
  
மோனை அமையா அடிகளில் எதுகை அமையலாம்.[ கண்டுச்சொல் ஊன்புடைக்கும் எண்ணமிகும் ஒண்மதியே!, இவ்வடியில் மோனை அமையவில்லை, மோனை வருமிடத்தில் எதுகை வந்துள்ளதைக் காண்க]
  
மும்மண்டில வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.01.2017

பாட்டரங்கம் தொடர்ச்சி


ஏறு தழுவல்
  
துள்ளிப் பாயும் சல்லிக் கட்டுத் - தமிழ்த்
தொன்மை விளையாட்டு! - உடல்
வன்மை விளையாட்டு!
தள்ளிப் பாயும் சல்லிக் கட்டுப் - பண்டைத்
தமிழர் விளையாட்டு! - ஆடு
தாளம் பலபோட்டு!
  
அஞ்சா நெஞ்ச மஞ்சி விரட்டுப் - பே
ராண்மை விளையாட்டு! - மணக்
கேண்மை விளையாட்டு!
விஞ்சிப் பறக்கும் வீரக் காளை - ஓங்கி
வெற்றிப் பறைசூட்டு - புகழ்
முற்றி நிலைநாட்டு!
  
ஏறித் தாவி ஏறு தழுவல் - புவியில்
எங்கள் விளையாட்டு! - திண்தோள்
தொங்கல் விளையாட்டு!
சீறித் தாவிச் செல்லும் காளை - மேவிச்
சீர்மை மறங்காட்டு! - தமிழ்ச்
செம்மை அறங்கூட்டு!
  
கொல்லே[று] என்று குதித்தே ஓடும் - கூரிய
கொம்பு விளையாட்டு! - உயிர்த்
தெம்பு விளையாட்டு!
சொல்லேர் புலவர் சூடி மகிழும் - நெஞ்சத்
துணிவின் அரும்பாட்டு! - கேட்டுப்
பிணியாம் பகையேட்டு!
  
முட்டித் தள்ளி மோதும் காளை - எம்
முன்னை விளையாட்டு! - மண்
அன்னை விளையாட்டு!
தட்டித் தொடையைத் தாவும் காளை - புகழ்
தங்க இசைமீட்டு! - தைப்
பொங்க வளமூட்டு!
  
மலைபோல் தோளும் வான்போல் மார்பும் - கொண்ட
மாட்சி ஒளிருகவே - தமிழ்
ஆட்சி மலருகவே!
அலைபோல் பொங்கும் அருமைத் தமிழர் - உற்ற
ஆற்றல் வளருகவே - உலகு
போற்ற உயருகவே!
  
ஆண்டு தொடக்கம் அரும்..தைம் மாதம் - என்றே
கூவி முழங்குகவே! - ஒற்றுமை
மேவி இயங்குகவே!
கண்டு களித்துக் காணும் பொங்கல் - போன்றே
காலம் கமழுகவே - தைக்
கோலம் குலவுகவே!
  
காளை அடக்கும் காளை இடத்தில் - நற்
காதல் தொடர்ந்ததுவே - விழி
மோதல் நடந்ததுவே!
வாளைக் குமரி பாளைச் சிரிப்பில் - பன்
மாயம் நிகழ்ந்ததுவே! - மன
நேயம் நிறைந்ததுவே!
  
வெள்ளை யம்மா வீரக் காளை - துள்ளி
விரைந்து வந்ததுவே - இன்பம்
நிறைந்து தந்ததுவே!
பிள்ளை மொழியும் கொள்ளைச் சிரிப்பும் - மனப்
பித்தம் அளித்தனவே - இதழ்
முத்தம் விளைத்தனவே!
  
சாதிப் பேயைச் சமய வெறியை - நன்றே
மோதி விரட்டுகவே! - நல்
நீதி புகட்டுகவே!
ஆதித் தமிழன் அளித்த நுாலைத் - தினம்
ஓதி உணருகவே! - அருட்
சோதி சுடருகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.01.2017

பாட்டரங்கம்


தலைப்பு : ஏறு தழுவல்
  
தமிழ் வணக்கம்!
  
சீரோங்கும் சொல்லேந்திப் பேரோங்கும் நடையேந்திச்
செவ்வாழைத் தமிழே..நீ வருக!
செழிப்போங்கும் உரமேந்தி விழிப்போங்கும் வரமேந்திச்
சிங்காரத் தமிழே..நீ வருக!
தேரோங்கும் அழகேந்தித் தாரோங்கும் அடியேந்தித்
தேனோங்கும் தமிழே..நீ வருக!
தென்னாட்டுப் பண்பேந்தி இன்பூட்டும் அன்பேந்தி
என்..நாவில் தமிழே..நீ வருக!
பாரோங்கும் பாட்டேந்திப் படர்ந்தோங்கும் புகழேந்திப்
பயனோங்கும் தமிழே..நீ வருக!
பாவேந்தன் பெயரேந்திக் காவேந்தும் மணமேந்திப்
படையோங்கும் தமிழே..நீ வருக!
நீரோங்கும் வளமாக ஏரோங்கும் நிலமாக
நெஞ்சுக்குள் தமிழே..நீ வருக!
கூரோங்கும் மதிவேண்டி நேரோங்கும் கவிவேண்டிக்
கும்பிட்டேன் அணியாவும் தருக!
  
திருமால் வணக்கம்!
  
திருவாழும் மலர்மார்பா! தேன்வாழும் குழல்மாயா!
திகழ்மாட அரங்கத்துத் தேவா!
சீர்வாழும் ஆழ்வாரின் ஊர்வாழும் கவிதைக்குள்
சிறந்தோங்கிச் செழிக்கின்ற செல்வா!
அருள்வாழும் மலைமேவி அணிவாழும் எழில்மேவி
அன்பேந்தி வாழ்கின்ற அழகா!
அறம்வாழும் மனங்கொண்டும் மறம்வாழும் தோள்கொண்டும்
அடியாரைக் காக்கின்ற பரமா!
பொருள்வாழும் கவிகம்பன் புகழ்வாழும் வண்ணத்தில்
பொன்வாழும் உருக்கொண்ட இராமா!
புவிவாழும் பேற்றோடு கவிபாடத் தொழுகின்றேன்
புலமைக்குள் நின்றாடு கண்ணா!
இருள்வாழும் இடமின்றி மருள்வாழும் தடமின்றித்
தெருள்வாழும் இன்பாக்கள் தா..தா!
எந்நாளும் உன்தாளில் மன்றாடும் சிறுபிள்ளை
என்..நாவில் அமுதுாற வா..வா!
  
அவையடக்கம்
  
தமிழோதும் இடமெங்கும் அமுதுாறும் என்றெண்ணித்
தகையோடு வந்தோரே வணக்கம்!
சான்றோரே! பெரியோரே! ஆன்றோரே! அறிவோரோ!
சமைக்கின்ற என்பாட்டு மணக்கும்!
குமுதாடும் குளமாகக் குணமாடும் பெண்டீரே!
கும்பிட்டுச் சொல்கின்றேன் வணக்கம்!
குரலுக்குள் குயில்கொண்டு குளிர்ந்தாடும் மயில்கொண்டு
கொடுக்கின்ற என்..பா..தேன் வடிக்கும்!
இமையாக மொழிகாக்க எந்நாளும் இனங்காக்க
எழுந்துள்ள இளையோரே வணக்கம்!
இனிப்போங்கும் பொருள்யாவும் இணைந்தோங்கும் என்பாடல்
இதயத்தை மழைபோன்று நனைக்கும்!
உமையாளின் அருள்கொண்டே எமையாளும் தமிழ்ச்சங்கம்!
உயர்ந்தோரே உரைக்கின்றேன் வணக்கம்!
உயிரோங்கும் வளமாகப் பயிரோங்கும் உரமாக
ஓதும்..பா சீர்அள்ளி இணைக்கும்!
  
வெண்கலிப்பா
  
மொழியென்றும் விழியென்று முன்வந்து அமர்ந்தவர்க்குப்
பொழிகின்றேன் முதல்வணக்கம்! பொங்கல் திருநாளைக்
கொண்டாடி மகிழ்கின்ற குளிர்தமிழ்ச் சங்கத்து
நண்பர் அனைவருக்கும் நவில்கின்றேன் நல்வணக்கம்!
பத்துத் தேரோட்டும் பாங்குடைய நம்தலைவர்
சொத்துத் தமிழாகும்! சூட்டுகின்றேன் சுவைவணக்கம்!
முடியப்ப நாதரின் முத்தமிழ்ப் பண்பறிந்து
அடிதொட்டு அளிக்கின்றேன் அணியொளிரும் அருள்வணக்கம்!
என்னுடைய இன்நண்பர் கோகுலன் பணியறிந்து
பொன்னுடை மலர்சூவிப் புனைக்கின்றேன் புகழ்வணக்கம்!
இலங்கை வேந்தனின் எழிற்பணி ஓங்கிடவே
நலங்கள் படைத்திடவே நவில்கின்றேன் நறும்வணக்கம்!
தொல்காப் பியஆய்வில் தோய்ந்திட்ட ழான்லுய்க்குப்
பல்லாண்டு பாடிப் பகர்கின்றேன் பசும்வணக்கம்!
அண்ணா மலையென்னும் அழகொளிர் நண்பருக்குப்
பண்ணார் தமிழில் படைக்கிறேன் பணிவணக்கம்!
படக்கலையைப் பயின்ற பயமறியாக் கணேசருக்குச்
சுடர்மனத்தோ[டு] இசைக்கின்றேன் இனிய தமிழ்வணக்கம்!
தளிஞ்சை முருகையா தங்கக் குணத்திற்கு
விளைத்தேன் வியன்வணக்கம்! வீரமொளிர் ஈழத்தை
ஆழமாய் எண்ணுகின்ற அன்பலன் ஆனந்தன்
சூழும் பணியறிந்து சொல்கின்றேன் சுடா்வணக்கம்!
முனைவர்அரும் தேவராசு முற்றிய தமிழ்யெண்ணிப்
புனைந்தேன் புகழ்வணக்கம்! பொழிந்தேன் மதுவணக்கம்!
புரட்சித் தலைவர் புகன்ற வழிஏற்று
அரும்பணி யாற்றும் பெருமுருகு பத்மநாபம்
ஏற்று மகிழ்ந்திடவே இயம்புகின்றேன் எழில்வணக்கம்!
நற்புதுவை வேலுவின் நல்ல தமிழ்போற்றிப்
பற்றுடன் பாங்குடன் பாடியேன் பால்வணக்கம்!
அன்பரசு ஆளுகின்ற பொன்னரசு புலவருக்குப்
பண்பரசு பாட்டரசன் படைக்கின்றேன் பனிவணக்கம்!
என்றன் கவிபருகி இன்பம் அடைந்திங்கு
நன்றே கை..தட்டும் நடராசர்க் கென்வணக்கம்!
மாமல்லன் என்ற மணித்தமிழ் நெஞ்சருக்குப்
பாமல்லன் பாரதிநான் படைக்கின்றேன் படர்வணக்கம்!
ஆசிரியப் பாவையும் ஆசிரியர் பாவையும்
பூசிக்கும் கோபால் புகல்கின்றேன் பொன்வணக்கம்!
கோலமொழி மலர்வாணி! கோதையெழில் அன்பரசி
காலமொளிர் கவிபாடக் கணிக்கின்றேன் கலைவணக்கம்!
அருமைப் பெண்மணி அமல்ராசு எலிசபெத்தின்
பெருமை செயற்கண்டு பிணைகின்றேன் பெருவணக்கம்!
என்னோடு தமிழ்ப்பணி ஏற்ற அனைவருக்கும்
அன்போடும் பண்போடும் அளிக்கின்ற அருள்வணக்கம்!
கம்பன் உறவுக்கும் கவிதை உறவுக்கும்
செம்மை வணக்கங்கள் செப்பி மகிழ்கின்றேன்!
வணங்கும் பணிநிறைத்து வண்ணக் கவிதையினை
மணக்கப் படைப்பேன் மகிழ்ந்து!

தொடரும்....

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

samedi 14 janvier 2017

பொங்கல் வாழ்த்து




தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

1.
பொங்கும் திருநாளைப் போற்றி மகிழ்ந்திடுவீர்!
எங்கும் தமிழின் எழிலுரைப்பீர்! - தங்குநலம்
சூழும்! சுவையேங்கும்! சூடுகிறேன் வாழ்த்துப்பா!
வாழும் வளங்கள் வளர்ந்து!

2.
பற்றுடன் பைந்தமிழைப் பாடி மகிழ்ந்திடுவீர்!
பொற்புடன் வாழ்வைப் புனைந்திடுவீர்! - நற்றவதால்
ஊரும் உயர்ந்தோங்கும்! ஓதுகிறேன் வாழ்த்துப்பா!
சீரும் சிறந்தோங்கும் சேர்ந்து!

3.
ஒற்றுமை வேண்டும்! உறவாடி இன்புறுவீர்!
நற்றுணை வேண்டும்! நலம்புரிவீர்! - கற்றோர்..போ்
ஓங்கிடவே வேண்டும்! உரைக்கின்றேன் வாழ்த்துப்பா!
தேங்கிடவே வேண்டும் செழிப்பு!

4.
இனங்காக்க வேண்டும்! இணைந்திங்கு வாழ்வீர்!
மனங்காக்க வேண்டும்! மகிழ்வீர்! - வனங்காக்கும்
பேரழகு வேண்டும்! பிணைக்கின்றேன் வாழ்த்துப்பா!
தாரழகு வேண்டும் தழைத்து!

5.
ஏறு தழுவுதலை ஏத்திப் பறையடிப்பீர்!
பேறு தழுவுதலைப் பேணிடுவீர்! - ஆறு..தரும்
பன்னலம் பெற்றிடுவீர்! பாடுகிறேன் வாழ்த்துப்பா!
பொன்னலம் காண்பீர் பொலிந்து!

6.
பொங்கலோ பொங்கலெனப் பொங்கிப் புகழ்ந்திடுவீர்!
திங்களோ திங்களெனத் தேரிழுப்பீர்! - மங்களம்
சூடி சுடர்ந்திடுவீர்! சொல்கின்றேன் வாழ்த்துப்பா!
பாடிப் படைத்திடுவீர் பண்பு!



7.
அன்பாம் அமுதருந்தி ஆடிக் களித்திடுவீர்
நன்றாம் நெறிகளை நாட்டிடுவீர்! -  குன்றாகத்
தோள்வலிமை காண்பீர்! தொகுக்கின்றேன் வாழ்த்துப்பா!
நீள்வலிமை காண்பீர் நிலைத்து!

8.
சாதிமதச் சண்டைகளைத் நீக்கி அகம்தெளிவீர்!
நீதிநெறி ஆய்ந்து நிலையுணர்வீர்! - ஆதிநெறி
வள்ளுவனின் நுால்கற்பீர்! வார்க்கின்றேன் வாழ்த்துப்பா!
உள்ளத்துள் ஏற்பீர் ஒளி!

9.
வடலுார் வழியேற்று வாழ்வை வடிப்பீர்!
உடலுார் உணர்வால் உயர்வீர் - சுடர்கின்ற
நெஞ்சம் அடைவீர்! நெகிழ்ந்துரைதேன் வாழ்த்துப்பா!
தஞ்சம் அடைவீர் தமிழ்!

10.
அருளார் தமிழ்த்தேனை அள்ளிஉளம் உண்பீர்!
பொருளார் பணிகள் புரிவீர்!  - பெருங்கம்பன்
தீட்டும் மொழியேற்பீர்! செப்புகின்றேன் வாழ்த்துப்பா!
கூட்டும் புகழைக் குவித்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2017

jeudi 12 janvier 2017

தேனுாற்றுப் பொங்குதடி

தேனுாற்றுப் பொங்குதடி!
அரிசி நீயடி! வெல்லம் நானடி! - அமுதப்
பொங்கல் பொங்குதடி!
தரவு நீயடி! இசையும் நானடி! - தமிழ்
தழைத்துப் பொங்குதடி!
  
விழியும் நீயடி! மொழியும் நானடி! - படித்து
விந்தை பொங்குதடி!
பொழிலும் நீயடி! புலவன் நானடி! - கவிதை
பூத்துப் பொங்குதடி!
  
கரும்பு நீயடி! எறும்பு நானடி! - காதல்
கமழ்ந்து பொங்குதடி!
அரும்பு நீயடி! சுரும்பு நானடி! - ஆசை
அலைபோல் பொங்குதடி!
  
மஞ்சள் நீயடி! மாலை நானடி! - மாட்சி
மணந்து பொங்குதடி!
நெஞ்சம் நீயடி! நினைவு நானடி! - உணர்வு
நெகிழ்ந்து பொங்குதடி!
  
மாவும் நீயடி! கோலம் நானடி! - இன்ப
வாயில் பொங்குதடி!
கூவும் குயிலடி! குரலும் நானடி! - உயிர்
கூடிப் பொங்குதடி!
  
காலை நீயடி! கதிரும் நானடி! - எழில்
காட்சி பொங்குதடி!
மாலை நீயடி! மதுவும் நானடி! - இரவு
மயங்கிப் பொங்குதடி!
  
குளிரும் நீயடி! போர்வை நானடி! - உறவு
கொழித்துப் பொங்குதடி!
கிளியும் நீயடி! கீற்று நானடி! - தைக்
கீர்த்தி பொங்குதடி!
  
பண்ணும் நீயடி! பரதம் நானடி! - கலைப்
பார்வை பொங்குதடி!
மண்ணும் நீயடி! மரமும் நானடி! - செழித்து
வாழ்க்கை பொங்குதடி!
  
வயலும் நீயடி! உழவன் நானடி! - விளைந்து
வளமே பொங்குதடி!
பயிரும் நீயடி! உரமும் நானடி! - தைப்
பசுமை பொங்குதடி!
  
வண்டி நீயடி! மாடு நானடி! - ஊர்
வலமே பொங்குதடி!
தண்ணீர் நீயடி! தாகம் நானடி! - ஏக்கம்
தலைமேல் பொங்குதடி!
  
வஞ்சி நீயடி! இஞ்சி நானடி! - நல்
வாசம் பொங்குதடி!
பஞ்சி நீயடி! பாயும் நானடி! - நம்
பருவம் பொங்குதடி!
  
அறமே நீயடி! மறமே நானடி! - தமிழ்
ஆண்டு பொங்குதடி!
உடலும் நீயடி! உயிரும் நானடி! - தேன்
ஊற்றுப் பொங்குதடி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.01.2017

dimanche 8 janvier 2017

வண்ணக ஒத்தாழிசை

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
[ஒரு தரவு + மூன்று தாழிசை + அராகம் + அம்போதரங்கம் + தனிச்சொல் + சுரிதகம்]
  
திருமகளே!
  
தரவு

மாலவனின் மணிமார்பில் மகிழ்ந்திருக்கும் மலர்மகளே!
காலழகின் எழிற்கண்டு கவிகோடி பிறக்குதடி!
கோலவிழி குடிகொண்டு குதித்தாடும் இருமீன்கள்
காலமெலாம் மயக்கத்தைக் கணக்கின்றிக் கொடுக்குதடி!
ஞாலத்தின் தலைமகளே! நறுந்தமிழாய் இனிப்பவளே!
ஆலத்தின் வலிமையினை அருட்பார்வை அளிக்குதடி!
சேலத்துக் கனியாகச் செயல்யாவும் சுவைத்திடவே
சீலத்தைக் குவிப்பவளே! திருமகளே! அலைமகளே!
  
தாழிசை
அரங்கனவன் அருந்திடவே அலையமுதில் பிறந்தவளே!
தரங்கமதில் அழகனுடன் தவத்துயிலில் அமர்ந்தவளே!
சுரங்கமெனச் சுடர்ச்செல்வம் சுரக்கின்ற உயர்மகளே!
சரணடைந்தேன் உனதடியைத் தயவளித்து நலம்புரிவாய்! [1]
  
காட்டினிலே திருராமன் கருத்தேந்தி நடந்தவளே!
நாட்டினிலே அடியவர்கள் நலங்காணச் சிரித்தவளே!
வீட்டினிலே பெருஞ்செல்வம் விளைந்தாடச் செழித்தவளே!
பாட்டினிலே உனைத்தொழுதேன்! பழிபோக்கி அருள்புரிவாய்! [2]
  
குழல்மீட்டும் திருக்கண்ணன் குழல்தழுவி மகிழ்ந்தானே!
பொழில்கூட்டும் மதுவருந்திப் போதையினை அடைந்தானே!
எழில்கூட்டும் இளையவளே! எனைக்காக்கும் இறையவளே!
நிழல்ஊட்டும் இடமளிப்பாய்! நெடும்புகழாம் வரமளிப்பாய்! [3]
  
அராகம்!
திருவுனை விழைமனம் பெருநிலை அடையுமே!
தினைதரும் சுவையுடன் திறம்பல அணியுமே! [1]
அருளுனை விழைமனம் அணியென மிளிருமே!
அமுதென வரும்மொழி அழகுற ஒலிருமே! [2]
பொருளுனை விழைமனம் புகழ்வழி புனையுமே!
புலவரின் பொலியுளம் புவிநலம் பொழியுமே! [3]
தெருளுனை விழைமனம் வருந்துயர் ஒழியுமே!
திசையுறும் வகையினில் திகழ்நலம் பெருகுமே! [4]
  
அம்போதரங்கம் பேரெண் [நாற்சீர் ஈரடி இரண்டு]
அணிமணிகள் பூண்டொளிரும் அழகொளிரும் உன்னுருவை
அகமேந்திக் களிக்கின்ற அடியவனைக் காத்திடுவாய்! [1]
பிணிவழிகள் நாடாமல் பிழைவழிகள் சேராமல்
பிறவியெனும் துயர்களைந்து பீடுநிலை அளித்திடுவாய்! [2]
  
அம்போதரங்கம் அளவெண் [நாற்சீர் ஓரடி நான்கு]
தண்பார்வைத் தளிர்கொடியே! தாமரைமேல் ஒளிர்பவளே! [1]
உன்பார்வை பட்டவுடன் என்பாவம் தீருமடி! [2]
வன்பார்வை கொண்டவெனைப் பொன்பார்வை மேவுமடி! [3]
புண்பார்வை எண்ணங்கள் புலம்நீங்கி ஓடுமடி! [4]
  
அம்போதரங்கம் இடையெண் [முச்சீர் ஓரடி எட்டு]
அடியவர்க்கு அருள்கின்ற கைப்போற்றி! [1]
அன்பமுதைப் பொழிகின்ற வாய்போற்றி! [2]
விடியலென ஒளிகின்ற விழிபோற்றி! [3]
விரிந்தமலர் மணக்கின்ற மனம்போற்றி! [4]
கருமேகம் குடிகொண்ட குழல்போற்றி! [5]
கனிமேவும் சுவைகொண்ட முகம்போற்றி! [6]
ஒருபொழுதும் எனைமறவாக் குணம்போற்றி! [7]
ஒப்பில்லாத் திருவடியின் எழில்போற்றி! [8]
  
அம்போதரங்கம் சிற்றெண் [இருசீர் ஓரடி பதினாறு]
பொற்கொடி போற்றி! [1]
பூவல்லி போற்றி! [2]
பொற்பொளி போற்றி! [3]
புகழ்நாச்சி போற்றி! [4]
அலைமகள் போற்றி! [5]
அருள்மகள் போற்றி! [6]
மலர்மகள் போற்றி! [7]
மதிமகள் போற்றி! [8]
மண்மகள் போற்றி! [9]
விண்மகள் போற்றி! [10]
பொன்மகள் போற்றி! [11]
இன்மகள் போற்றி! [12]
செண்பகம் போற்றி! [13]
அன்பகம் போற்றி! [14]
தண்ணகம் போற்றி! [15]
பண்ணகம் போற்றி! [16]
  
தாயே! [தனிச்சொல்]
  
சுரிதகம்
பலபல பிறவுகள் பற்றி இழிந்தேன்!
நலமெதும் இன்றி உளமிருள் கொண்டேன்!
துன்பம் தொடரத் துவண்டு கிடந்தேன்!
இன்பம் இன்றி இதுவரை நொந்தேன்!
இந்தப் பிறப்பில் வந்து பிடித்தேன்
சிந்தை தரித்தேன் செல்வியே உன்னை!
திருமலைத் தாயே! தேனே!
ஒருமுறை என்னைத் திருவிழி காண்கவே!
  
பாட்டரசன் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.01.2017

மயங்கிசைக் கொச்சகம்

இயன் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
[கலிப்பாவின் ஆறு உறுப்புகள் தமக்கு விதிக்கப்பட்ட இடமும் முறையும் மயங்கியும் மிகுதியாகவும் குறைவாகவும் வரும்.]
  
கண்ணுக்குக் கோயில் கட்டுவேன்!
  
தரவு

அலகில்லா விளையாட்டை அளிக்கின்ற விழியழகே!
நலமெல்லாம் இழந்திங்கு நலியுதடி என்னெஞ்சம்!
புலமெல்லாம் அடங்காமல் பொழுதெல்லாம் அலைபாயும்!
தலமெல்லாம் வணங்குகிறேன் தளிர்கொடியே உனையடைய! [1]
  
வாயளிக்கும் மொழியழகு வளரமுதை நிகர்த்ததடி!
சேயளிக்கும் சிரிப்பழகும், சிவந்துள்ள உதட்டழகும்,
நோயளிக்கும் அறிவாயோ? நுாலிடையின் அசைவெண்ணிப்
பாயளிக்கும் கனவுகளைப் பசுங்கிளியே உணர்வாயோ? [2]
  
தாழிசை
மொழியழகு மிகுந்துவர முனைப்புடனே கவிபாட
வழியழகு பலகாட்டும் மலர்முகத்து விழியழகு! [1]
  
தேனுாறி மனந்திளைக்கத் திரண்டுவரும் ஆசைகளில்
நானுாறி உயர்வடைய நடைகாட்டும் விழியழகு! [2]
விருத்தத்தின் விருந்தாக வியனிளமை மருந்தாக
வருத்தத்தைத் துடைக்குமடி மணிமுகத்து விழியழகு! [3]
  
பெண்ணழகு படர்ந்தொளிரப் பெருமையெலாம் நிறைந்தொளிர
மண்ணழகுப் பொழிலாக மணக்குதடி விழியழகு! [4]
  
காத்திருக்கும் மனத்துக்குள் கனவுகளைக் குவித்திங்குச்
சேர்த்தணைத்து உறவாடிச் சிவக்குதடி விழியழகு! [5]
  
ஏக்கத்தை அளிக்குதடி! ஆக்கமுறத் துடிக்குதடி!
துாக்கத்தை வெறுக்குதடி துாண்டிலிடும் விழியழகு! [6]
  
அராகம்
மதுநிறை குடமடி! மனமுறு தமிழடி!
புதுமலர் மணமடி! பனிபொழி திருவிழி! [1]
புவியினில் எழிலடி! புகழ்தரும் அவையடி!
கவியுறு கருவடி! கலைகமழ் திருவிழி! [2]
உயர்வுறு வழிதரும்! உணர்வுறு மதிதரும்!
துயரறு சுடருறு சுழலுறு திருவிழி! [3]
உடலுறும் உரமிடும்! உயிருறும் ஒளிதரும்!
கடலுறு கயலிரு களிநட திருவிழி! [4]
  
தாழிசை
கண்தீட்டும் கருமைநிறம் கவியென்னைக் கவுக்குதடி!
புண்ணுாட்டிப் பொழுதெல்லாம் புரட்டியெனைப் படுத்துதடி! [1]
  
சுமைதிரண்டு அழுத்துதடி! சுவைதிரண்டு பழுக்குதடி!
இமையிரண்டும் அசைந்தழகாய் இதயத்தை இழுக்குதடி! [2]
  
வேல்கொண்டு விளையாடி விழியாட்டம் நடத்துதடி!
கோல்கொண்டு கவிமனத்தைக் குளமாகக் குழப்புதடி! [3]
  
அம்பாக எனைத்தாக்கி அணுஅணுவாய் வதைக்குதடி!
வம்பாகக் கதைபேசி வளமாக நடிக்குதடி! [4]
  
கூர்கொண்ட முனைகொண்டு குறிபார்த்தே அடிக்குதடி!
ஏர்கொண்ட முனையாக எனதுயிரைக் கிழிக்குதடி! [5]
  
வண்டாகப் பறக்குதடி! மனம்அமர்ந்து குடிக்குதடி!
திண்டாட எனைவைத்துத் தினந்தோறும் அழைக்குதடி [6]
  
[தனிச்சொல்] கண்கள்
  
[இருசீரடி அம்போதரங்கம்]
தேனும் ஆகும்!
தென்றல் ஆகும்!
வானும் ஆகும்!
வண்ணம் ஆகும்!
மானும் ஆகும்!
மதுவும் ஆகும்!
மீனும் ஆகும்!
மின்னல் ஆகும்!
வண்டும் ஆகும்!
செண்டும் ஆகும்!
கண்டும் ஆகும்!
நண்டும் ஆகும்!
புலமை ஆகும்!
புதுமை ஆகும்!
வளமை ஆகும்!
வண்மை ஆகும்!
  
[தனிச்சொல்] அதனால்
  
அன்பே உன்னிரு அழகிய விழிக்குப்
பொன்னொளிர் கோயில் புவியில் கட்டுவேன்!
காதல் மறையெனக் காவியம் தீட்டுவேன்!
மோதல் தவிர்த்து மோகம் பொழிகவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2017