lundi 7 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 6


கலிவிருத்தம் () கனிவிருத்தம் 

26.
காத்திருந்து காத்திருந்து கண்ணிரண்டும் ஏங்குதடி!
பூத்திருந்து பூத்திருந்து புகுந்தாசை புரட்டுதடி!
சேர்த்திருந்து சேர்த்திருந்து சிந்தனைகள் சிணுங்குதடி!
கூத்திருந்து காட்டிடவா! குளிர்நிலவே! குருத்தழகே!

27.
பைத்தியமாய் இருக்கின்றேன்! பாவையுன்றன் பார்வையொளி
வைத்தியமாய் எனைக்காக்கும்! வான்மழையாய் வளஞ்சேர்க்கும்!
வாத்தியமாய் உன்மேனி வண்ணங்கள் காட்டுதடி!
சாத்தியமாய் இடம்கண்டோம்! தளிர்க்கொடியே! தண்மலரே!

28.
வீரப்..பண் பாட்டிசைத்து வியப்பிலெனை ஆழ்த்துவதேன்?
ஓரக்..கண் காட்டுவதேன்? உணர்வுகளை மூட்டுவதேன்?
பாரம்..என் நெஞ்சத்துள் பன்மடங்காய்க் கூட்டுவதேன்!
ஆரப்பொன் சூடிவரும் ஆரணங்கே! ஆருயிரே!

29.
தொட்டஇடம் மணக்குதடி! தேவியுன்றன் திருவடிகள்
பட்டஇடம் சிறக்குதடி! பார்வையினால் இன்பத்தை
நட்டஇடம் செழிக்குதடி! நம்காதல் கோயிலினைக்
கட்டஇடம் தந்தவளே! கட்டழகே! கவிக்குயிலே!

30.
உடன்இருந்த சிலநொடிகள் உலகத்தை நான்மறந்தேன்!
கடன்இருந்த முத்தத்தைக் கணக்கெடுத்து நான்மகிழ்ந்தேன்!
உடல்இருந்த நிலைமாறி உருகுகின்ற நிலையடைந்தேன்!
மடல்இருந்த மொட்டழகே! மாதுளமே! மாங்கனியே!

தொடரும்

14 commentaires:


  1. காதல்தேன் சொட்டும்! கவிதைகளைத் தாம்படித்துக்
    காதில்தேன் சொட்டும்! கமகமக்கும்! - மாதுருகும்
    கண்ணன் குழலிசைபோல் வண்ணம் வடிக்கின்ற
    அண்ணன் தமிழை அருந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வான்கொட்டும் நன்மழைபோல் வண்ணத் தமிழினிக்கத்
      தேன்சொட்டும் பாக்களைத் தீட்டுகிறேன்! - நான்கட்டும்
      இன்ப விருத்தங்கள் என்றும் மணக்கின்ற
      அன்பின் விருத்தங்கள்! ஆடு!

      Supprimer
  2. கவித்தேன்!
    சுவைத்தேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குவித்தேன் இருகைகள்! கொஞ்சும் தமிழில்
      கவித்தேன் கருத்தினைக் கண்டு!

      Supprimer
  3. கவிதையைப் படித்த சில நொடிகளில் உலகை நான் மறந்தேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உலகை மறந்தே உவக்கின்ற பாடல்
      நிலவை அழைக்கும் நிலத்து!

      Supprimer
  4. உங்கள் வரிகளில் நாங்களும் மயங்கி விட்டோம் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மயக்கும் மதுவென வார்த்த கவிதை
      இயக்கும் உயிரை இழுத்து!

      Supprimer
  5. கொட்டும் அருவியாய் வார்த்தைகள் அப்பப்பா வியப்பே மேலிடுகிறது.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொட்டும் மழையாய்க் குவித்த கவிதைகள்
      கட்டும் கருத்தைக் கவா்ந்து!

      Supprimer
  6. இப்படியெல்லாம் உங்களைப் படுத்திப் பாடவைக்கும்
    அவள் (?) வாழ்க!!

    அருமை.
    த.ம. 8

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடிப் பறக்கும் பசுங்கிளியாள் வாழ்கவே!
      கோடிக் கவிகள் குவித்து!

      Supprimer
  7. கவித்தேன்.... சுவைத்தேன்... மலைத்தேன்... ரசித்தேன்....

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவித்தேன் குடித்துக் கருத்துரைத்தீா்! கைகள்
      குவித்தேன் தலைமேல் குளிா்ந்து!

      Supprimer