கவிதைத் தலைவன்
21.
நடிப்பென்னும் நற்கலையின் சிகர மாக
நன்குயர்ந்த சிவாசியும், மக்கள் நெஞ்சத்
துடிப்பென்னும் வண்ணத்தில் கவர்ந்து நின்ற
துணிவுடைய நம்.எம்.சி. ஆரும், ஆடை
பிடிப்பென்னும் வண்ணத்தில் மகிழ்ச்சி கொள்ளப்
பிறந்தகவி அத்தனையும் காலம் வெல்லும்!
வெடிப்பென்னும் பெருந்துயரில் வீழ்ந்த போதும்
விரைந்தெழும் கவியரசர் கண்ண தாசர்!
22.
ஆண்டியிடம் ஓடிருக்கும்! அதுவும் இன்றி
அரசாண்ட பெருந்தலைவர் காம ராசர்!
வேண்டிவரும் உறவுகளாய் இருந்த போதும்
விளைத்தநெறி மாறாமல் பணிகள் செய்தார்!
தோண்டிதரும் குளிர்நீராய் ஆட்சி கண்டார்!
தூயவரின் தொண்டுளத்தைக் கண்டு பாடித்
தாண்டிவரும் விளையாட்டாய்த் தமிழில் சந்தம்
தாங்கிவரும் கவியரசர் கண்ண தாசர்!
23.
கால்பிடித்தே வாக்கெய்தும் உலகம்! ஆட்சிக்
கட்டில்மேல் அடிமையெனக் கிடக்கும்! உண்மைக்
கோல்பிடித்தே எழுதுகின்ற கவிதை மன்னர்
கீழ்விழுந்து வணங்குவதை மறுத்து விட்டார்!
வால்பிடித்தே வாழுவதும் வாழ்க்கை யாமோ?
கோள்முடித்தே வாழுவதும் மேன்மை யாமோ?
பால்குடித்தே வளர்கின்ற குழந்தை போன்று
பாக்குடித்தார் கவியரசர் கண்ண தாசர்!
24.
வேல்பிடித்துப் போராடும் மறவர் போன்றும்
சால்பிடித்து நீர்பாய்ச்சும் உழவர் போன்றும்
சேல்பிடித்து விழியிரண்டில் கொண்ட பெண்கள்
நூல்படித்து வாழ்வுபெற உழைத்தோர் போன்றும்
ஆல்பிடித்துத் தாங்குகிற விழுதைப் போன்றும்
மேல்படித்துப் பயன்கொடுக்கும் மேலோர் போன்றும்
மால்பிடித்து மனம்பதித்த ஆழ்வார் போன்றும்
வாழ்வளித்த கவியரசர் கண்ண தாசர்!
25.
கோலமெனும் சொல்லுக்குச் சான்றாய் மின்னும்
கொஞ்சுதமிழ் மாண்புரைத்தார்! மகிழ்வ ளித்தார்!
ஆலமெனும் வேலமெனும் வன்மை கொண்ட
அருந்தமிழில் அமுதேந்தும் பாக்கள் ஈந்தார்!
காலமெனும் ஆழியினைப் புயலாய் வீசும்
காற்றுமழை ஊழியினை வென்று வாழ்ந்தார்!
ஞாலமெனும் புவிப்பந்து வணங்கி வாழ்த்தும்
நல்லதமிழ்க் கவியரசர் கண்ண தாசர்!
தொடரும்
RépondreSupprimerகன்னல் கவியரசர்! கண்ணனின் தாசன்சீா்
மின்னும் விருத்தத்தை மீண்டும்நான் - பன்முறை
பாடி மகிழ்ந்தேன்! பசுந்தமிழ் நல்லணியைச்
சூடி மகிழ்ந்தேன் சுடா்ந்து!
Supprimerவணக்கம்!
பொன்மறை தந்த புகழ்க்கண்ண தாசனைப்
பன்முறை ஓதிப் பயனுறுக! - நன்முறை
கற்று கவிதைகள் பாடுக! செந்தமிழ்ப்
பற்றுப் படா்க பணைத்து!
ஞாலமெனும் புவிப்பந்து
RépondreSupprimerஎந்நாறும் போற்றும் கவிஞர்
கண்ணதாசன்
நன்றி ஐயா
Supprimerவணக்கம்
காலத்தை வெல்லும் கவிபடைத்தாா்! என்றென்றும்
ஞாலத்தில் வாழ்வார் நவில்!
ஒவ்வொரு வரியும் சிறப்பு ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கவ்வும் கருத்தேந்தும் கன்னல் சுவையேந்தும்
ஒவ்வொரு சீரும் ஒளிா்ந்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
காலத்தால் அழியாத நாயகனுக்கு.. கரம்கோர்த்து தட்டச்சு செய்த கவிதை சிறப்பு ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
ஞாலத்தை நாளும் படித்து நறுந்தமிழால்
காலத்தை வென்ற கவி
கண்ணதாசன் காவியம் கருத்தில் நிற்கும் வண்ணம் அருமையாக செல்கிறது! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கவிதையாய் வாழ்ந்து கருத்தைக் கவா்நது
புவியில் புனைந்தாா் புகழ்!
அருமை.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தத்துவப் பாவலன் தந்த கவியாவும்
முத்தென மின்னும் முதிா்ந்து!
வணக்கம் நண்பர்களே
RépondreSupprimerஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
Supprimerவணக்கம்!
அன்பீா் வணக்கம்! அளித்தீா் தொழில்நுட்பம்!
நன்றி நவின்றனன் நான்!
கவியரசர் கண்ணதாசனை கருத்தில் கொண்டு கவிதை தந்தது இனிமை! அழகு!
RépondreSupprimerவாழ்த்துக்கள் ....!
Supprimerவணக்கம்!
கவிதை இனிமை! கவிஞன் இனிமை!
புவியே இனிமைப் பொழில்!